Tuesday 21 August 2012
வால்காவிலிருந்து கங்கை வரை
மனித நாகரிக தோற்றம், வளர்ச்சி போன்றவற்றை தெரிந்து கொள்ள பலராலும் பரிந்துறைக்கப்படுவது ராகுல் சங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற புத்தகமே.1942 இல் சிறையில் இருந்த போது ராகுல்ஜியால் எழுதப்பட்ட இந்த நூலை, 1945 இல் பர்மாவில் யுத்தக்கைதியாக இருந்த கண.முத்தையா என்பவர் ராகுல்ஜியின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1949 இல் முதற்பதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 27 பதிப்புகள் (27ம் பதிப்பு 2007) கண்ட அரிய நூலாக கொள்ளப்படுகிறது. 20 கதைகளை உள்ளடக்கிய இப்புத்தகத்தின் ஒவ்வொரு கதைகளும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள்.
நூலைப்பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் குறிப்பிடும் போது ஒவ்வொரு கதைக்கும் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளார்.
நிஷா, திவா, அமிதாஸ்வன், புருகூதன் ஆகிய முதல் நான்கு கதைகளும் சரித்திரத்திற்கு முந்திய காலமான கி.மு 6000 தொடக்கம் 2500 வரையான சமூதாயத்தை பற்றி சொல்கின்றன. இந்து ஐரோப்பிய , இந்து ஈரானிய மொழிகளையும் அவற்றின் மூலங்களையும் ஆராய்ந்து கற்பனையும் கலந்து எழுதப்பட்டதே இந் நான்கு கதைகளும்.
அடுத்த நான்கு கதைகளான புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்பன வேதம், மகாபாரதம், பௌத்த கிரந்தமான அட்டகதா போன்றவற்றை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. கி.மு 2000 முதல் கி.மு 700 வரையான சமுதாய வளர்ச்சியை இக்கதைகள் சித்தரிக்கின்றன.
கி.மு 490 ஐ சித்தரிக்கும் ஒன்பதாவது கதையான 'பந்துலமல்லன்' பௌத்த நூல்களில் உள்ள செய்திகளை கொண்டு எழுதப்பட்டது. பத்தாவது நாகதத்தன் கதைக்கு சாணாக்கியனின் அர்த்த சாத்திரமும் கிரேக்கர்களின் யாத்திரைக் குறிப்புகளும் ஆதாரமாக உள்ளன. அடுத்த கதை அஸ்வகோஷ் எழுதிய புத்தசரித்திரத்தையும் சௌந்தரியானத்தையும் ஆதாரமாக கொண்ட 'பிரபா'. அடுத்தது சுபர்ணயௌதேயன் என்ற குப்த கால கதை. ரகுவம்சம், சாகுந்தலம், குமாரசம்பவம் போன்றவை இதற்கு ஆதாரமாக உள்ளது. பதின்மூன்றாவது துர்முகன் என்ற கதைக்கு ஹர்ஷ சரிதிரமும் காதம்பரியும் சீன யாதிரிகரான இத்சிங்கின் யாத்திரை வரலாறும் ஆதாரமாக உள்ளது. கி.பி 1200 ஐ கதைக்காலமாக சக்கரபாணி கதையின் அஸ்திவாரத்தை நைடதத்திலும், அக்கால சிலாசாசனன்ஹ்களிலும் காணலாம். 12 முதல் 20 வரையான நூற்றாண்டை சேர்ந்த அடுத்த ஆறு கதைகளுக்கும் தெளிவான சரித்திர ஆதாரம் ஊள்ளது.
புருதானன் என்ற கதையில் தான் முதலில் ஆரியர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் தெற்கில் இருப்பவர்களை கரிய நிறம் கொண்ட அழகற்ற அசுர இனத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கதைகளில் ஆரியர்களை உயர்வாகவும் ஒழுக்கமானவர்களாகவும் காட்டி அசுரர்களை கெட்டவர்களாக, ஏமாற்றுபவர்களாக காட்டப்படுவது வாசிக்கும் போது எரிச்சலை தருவதை தடுக்கமுடியவில்லை.இவ்விரு இனங்களுக்கிடையிலான போரையே தேவாசுர யுத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும் அசுரர்களின் இடம் சொர்க்க பூமியாக இருந்தது என்பதையும் அசுரர்களிடையே இருந்த எழுத்துகள் பற்றிய அறிவு பல காலங்களுக்கு பின் தான் ஆரியரிடம் வந்தது பற்றியும் சொல்ல தவறவில்லை.
36 மொழிகள் தெரிந்திருந்த ராகுல்ஜி 150 புத்தகங்கள் படைத்தவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment