Monday 22 April 2019

(79) மணிரத்னம் - படைப்புகள் ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்

           A.R.ரஹ்மானின் முன்னுரையுடன் வெளியாகியுள்ளது. 'ஸ்ப்ரெசதூரா'  என்ற இத்தாலிய வார்த்தையை தன் நண்பனிடம் கற்றதாகவும் , மிகவும் சிக்கலான விடயத்தை மிகவும் எளிதாக செய்து முடிக்க கூடிய விஷயமாக முன் வைத்தல் என்ற அர்த்தமுடைய அந்த வார்த்தை, மணிரத்னத்திற்கு பொருத்தமானது என எழுதியுள்ளார். தன்னுடைய வேலை மிகவும் எளிமையானது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தோற்றத்தை உருவாக்குபவர் என்றும் உண்மையில் அவரது வேலை சுலபமானது அல்ல, அதற்கு பின் கடுமையான உழைப்பு, செய் நேர்த்தி இருக்கிறது என்று ரஹ்மான் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.

மணிரத்தினம் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அல்ல. M.B.A படித்தவர். மூன்று நண்பர்கள் சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அது மிகவும் பிடித்ததாக இருக்க சினிமாவுக்குள் நுழைந்தார்.பல்லவி அனுபல்லவி,உணரு, பகல் நிலவு, இதயக்கோயில் போன்ற ஆரம்ப காலப் படங்களில் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். இதயக்கோயில் படத்தில் இளையராஜாவின் பாட்டை தவிர வேறு எதையும் தான் நினைவு வைத்திருக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார். பல்லவி அனுபல்லவி 1980 இல் எழுதி 1983 இல் வெளியானது. கன்னடத்தில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.அதற்குப் பின் தான் விரும்பியபடி எடுத்த படம் மௌனராகம் எனக் குறிப்பிடுகிறார். 

மௌனராகத்தில் பெண் விவாகரத்து கோருவதால் A சான்றிதழ் வழங்க வேண்டும் , அது வழக்கத்திற்கு மாறான காட்சி என சென்சார் சொன்னதால் அதிலிருந்து அவர்கள் என்ன சொன்னாலும் தான் ஆச்சரியப்படுவதில்லை என மணிரத்னம் கூறியிருப்பது சிரிப்பைத் தந்தாலும் ஒவ்வொரு இயக்குனர்களும் எவ்வளவு திண்டாடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. பிலிப்பைன்ஸ் - அமெரிக்கா இடையிலான Readers digest இல் வந்த ஒரு கட்டுரையே கன்னத்தில் முத்தமிட்டால் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறுகிறார். அது குழந்தையின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். முதலில் குடை என்றே அந்தப் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். குடை என்பது குடும்பம், உறைவிடம் எனப் பொருள் தரக் கூடியது. படத்திலும் குடை  முக்கிய காட்சியில் இடம் பெறுகிறது.அவரது ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனியான தலைப்புகளில் உரையாடல் இடம்பெற்றிருப்பது வாசிப்பதற்கு நன்றாகவும் படங்களை இன்னும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவியாகவும் இருந்தது. அனைத்துப் படங்களையும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும்.

(78) கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் - சு.கி . ஜெயகரன்

சு.கி . ஜெயகரன் எழுதிய இந்த நூல் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று. ஆராய்ந்து நுண்ணிய தகவல்களுடன் இந்த நூலை எழுதியுள்ளார். 
ஹிபாகுஷாக்கள் எனப்படும் அணுக்குண்டு தாக்குதலால் யப்பானில் பாதிக்கபட்டவர்கள் பற்றிய கட்டுரையில் இன்று வரையில் அவர்கள், அவர்களது  சந்ததிகள் அடைந்து வரும் துன்பங்கள் என்பவற்றை வாசிக்கும் போது இரண்டாம் உலகப்போரில் அணுக்குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடு என்பதைத்தவிர  பாடப்புத்தகத்திற்கு அப்பால் பெரிதும் தெரிந்து கொள்ளாமல் இருந்ததையிட்டு குற்ற உணர்வாக இருந்தது. ஒரு தம்பதியினர் 2 வயது பெண் குழந்தையுடன் ஒன்றரை கிலோமீற்றர் தள்ளி இருந்ததால் உயிர் பிழைத்தனர். 12 வயதானபோது  கழுத்திலும் காலைச்சுற்றியும் வீகமும் உடலில் நீலப்புள்ளிகளும் தோன்ற, கதிர் வீச்சால் உண்டான புற்று நோய் எனக்கண்டறியப்பட்டது.அவரின் மீது அக்கறை கொண்ட ஒருவர் 1000 நாரை மாலை (யப்பான் மொழியில் சென்பாசுரு)செய்யும் படி கூறியுள்ளார். நாரை நீண்ட ஆயுளின் சின்னமாக யப்பானில் நம்பப்படுவதால் ஒரிகாமி முறையில் நாரைகள் செய்து மாலையாக கோர்த்தால் பிணியுள்ளவர் குணமடைவார் என நம்பப்படுகிறது. சதாகோ என்ற அச்சிறுமி தானும் தன் போன்ற இளம் ஹிபாகுஷாக்களும் குணமாக வேண்டி காகித நாரைகளை உருவாக்கும் போது 644 ஆவது நாரை செய்து முடித்த அன்று அவர் இறந்தார்.அவரது நினைவிடத்தில் பல சென்பாசுரு குவிந்திருக்கின்றன. தன்னை மிகவும் பாதித்த நினைவுச் சின்னம் அது என எழுதுகிறார்.

அந்தமான் - நிகோபார் தீவுகளில் உள்ள பூர்வ குடிகள், எரிமலை வெடிப்பு ,சாவுப்பள்ளத்தாக்கு, சித்திரக்கதைகளில் காணப்படும் இனவெறி, ஆவுங் சான் சூசி, வங்காரி மாதய் போன்ற சமூகப் போராளிகள் பற்றி பல முக்கிய நிகழ்வுகளை இந்த நூலில் படிக்கலாம்.

(77) இஸ்தான்புல் - ஓரான் பாமுக்

"இஸ்தான்புல் -  ஒரு நகரத்தின் நினைவுகள்" துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் இன் புத்தகம். இது வரையில் அவர் எழுதியவற்றுள்  நாவல் அல்லாத அபுனைவு வகையைச் சேர்ந்த ஒரே ஒரு நூல் இதுவே. ஜி.குப்புசாமி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். பாமுக் தான் பிறந்து வளர்ந்த நகரத்தில் தனது நினைவுகளை அந் நகரின் வரலாற்றுடன் இணைத்து எழுதியுள்ளார். அவரது  சிறு வயது ஞாபங்கள் முதல் அவர் எழுத்தாளராவது என முடிவெடுத்த தருணம் வரை பயணிக்கும் கதையை மிகவும்  ரசிக்கும் படி எழுதியுள்ளார்.

பொதுவாக நான் இந்திய நாவல்கள் தவிர்த்து வேறு நாவல்கள் வாசிப்பதில்லை. இந்திய கலாச்சாரம் நான் மிகவும் அறிந்த, சிறு வயது முதலே படித்த , எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்பதால் இந்திய நாவல்கள் , கட்டுரைகள் விரும்பி வாசிப்பேன். வேற்று நாட்டு நூல்களை முயற்சிப்பது கூட நான் விரும்பாத ஒன்றாக இருந்தது. இணைய யுகத்தில் வாழ்வதால் வாசிப்பிற்கான பல வாசல்களை அதுவே திறந்து வைப்பது இன்றைய காலத்தில் ஒரு வரம். இணையத்தில் எங்கோ பாமுக் பற்றி படித்த‌ நினைவிலேயே நூலகத்தில் இருந்து 'பனி' என்ற அவரது நாவலை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பாதிப்பிலேயே 'இஸ்தான்புல்' என்ற இந்த புத்தகத்தையும் எடுத்து வந்தேன். ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு என்பது கூடுதல் நம்பிக்கையைத் தந்தது. புத்தகம் அவ்வளவு பிடித்துவிட்டது. இதில் மொழிபெயர்ப்பின் பணி முக்கியம் என நினைக்கிறேன். எந்த ஒரு இடத்திலும் வேற்று மொழி நூல் வாசிப்பது போன்ற உணர்வே வரவில்லை. மூலத்தில் கூட இவ்வளவு நன்றாக இருக்குமோ என பல வசனங்களை வாசிக்கும் போது சந்தேகம் வந்தது. 

வாசித்து முடித்த பின் துருக்கி, இஸ்தான்புல், பாஸ்ஃபரஸ் (Bosporus), ஆட்டமன் பேரரசு என இணையத்தில் தேடிப் படித்தேன். அதன் பின் புத்தகம் இன்னும் நெருக்கமாகியது.  பாஸ்ஃபரஸ் நீரிணை பாமுக்கோடு கலந்துவிட்ட ஒன்று. பாஸ்ஃபரஸில் வந்து செல்லும் கப்பல்களை ஜன்னலூடு பார்ப்பது இஸ்தான்புல் வாசிகளின் வேலைகளில் ஒன்று. பொஸ்போரஸ் நீரிணையானது  ஐரோப்பாவையும் ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருக்கிறது. இஸ்தான்புல் நகரானது  பொஸ்போரஸ் கடலால் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இஸ்தான்புல் இரு கண்டங்களில் அமைந்துள்ள  நகரமாக விளங்குகின்றது.இதனால் இஸ்தான்புல் வாசிகளிடம் இருந்து  பொஸ்போரஸ் நீரிணையை பிரித்து பார்க்க முடியாது.சர்வதேசக் கப்பல்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்த நீரிணை உள்ளதால் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 


  உலக வரலாற்றில், நான்கு பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமை இஸ்தான்புல் இற்கு இருக்கிறது.  1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, துருக்கியின் தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.  ரோமப் பேரரசு,  பைசண்டைன் பேரரசு, இலத்தீன் பேரரசு  ஓட்டோமான் பேரரசு ஆகியவற்றிற்கு தலைநகரமாக விளங்கிய நகரின் வீழ்ச்சி எவ்வளவு துயரானது. 


மிகப்பெரிய ஆட்டமன் பேரரசின் வீழ்ச்சியைப் பற்றிய துயரை இந்த நூலைப் படிப்பவர்கள் உணர முடியும். மேலைத்தேய மயமாக்கல் தொடர்பான பிரச்சினைகள் , மொழிச்சீர்திருத்தம், பழைய பாழடைந்த கட்டடங்கள் என இஸ்தான்புல் நகரம் சந்தித்த பிரச்சினைகளை தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.