Sunday, 28 August 2016

(58)புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணிபாரதிமணி ஐயாவின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகத்தைப் பற்றிய ஒரு சில விமர்சனங்கள் வாசித்த நாட்களில் இருந்து அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் கடை செல்லும் போது தேடுவது உண்டு. இலங்கையில் நினைத்த புத்தகத்தைப் பெறுவது கடினம். பின்னர்  அப்புத்தகம் இப்போது விற்பனையில் இல்லை என இணையம் மூலம் தற்செயலாக தெரிந்து கொண்டேன். சமீபமாக 'புள்ளிகள் கோடுகள் கோலங்கள்' என்ற பாரதிமணி ஐயாவின் புத்தக விமர்சனம் காண நேர்ந்தது. அது அவர் இதுவரை எழுதிய கட்டுரைகள், அவரைப்பற்றி பிறர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுப்பு என அறிந்து இணையம் மூலமாக (உடுமலை) பெற்றுக்கொண்டேன். இதுவே நான் இணையம் மூலம் இந்தியாவில் இருந்து வாங்கிய முதல்ப் புத்தகம். பத்து நாட்களில் புத்தகம் வரும் என்று சொன்னார்கள். சொன்னது போலவே வந்தடைந்த புத்தகத்தைப் பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம். (தற்போது ஜெயமோகனின் 'அறம்'  புத்தகமும் order பண்ணி உள்ளேன். நெடு நாளாக தேடிக் கிடைக்காத மற்றைய புத்தகம்.)

 சுவையான எழுத்து. தனது நீண்ட கால அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். டெல்லி வாழ்க்கை , நாடக அனுபவங்கள், சிறு வயது நினைவுகள், பல பெரியவர்களுடன் பழகிய நினைவுகள் போன்றவற்றை தன்னுடைய பாணியில் எழுதியுள்ளார். நேரு, அன்னை தெரேசா போன்றவர்களை சந்தித்த அனுபவங்களையும் எழுதியுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய கட்டுரை பல புதிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய கட்டுரை. தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு என்ற கட்டுரை அவர் ஒரு சிறந்த மனிதர் என்று உணர வைக்கிறது. அமிதாப் பச்சனிடம் கா. நா.சு கேட்ட கேள்வி என்ற கட்டுரையை நான் விரும்பி படித்தேன். புத்தகம் முடிந்துவிட்டதே என்று எண்ண வைக்கக்கூடிய எழுத்து இவருடையது. மீண்டும் ரசித்து வாசிக்க வேண்டும்.

Monday, 22 August 2016

(57) பாக்குத்தோட்டம் - பாவண்ணன்


 
  பாவண்ணனின் புத்தகங்கள் இரண்டு முன்பே வாசித்து இருக்கிறேன். அவரது எழுத்துக்களை நம்பி வாசிக்க முடியும். பாக்குத்தோட்டமும் ஏமாற்றவில்லை. சிறப்பான சிறுகதைகள் 10 இப்புத்தகத்தில் இடம்பெற்று உள்ளன.  கல்தொட்டி கதையின் கல்தொட்டி செய்பவர், ஒரு நாள் ஆசிரியர் கதையின் திருவட்செல்வர், நூறாவது படம் கதையின் குமாரசாமி என உன்னதமான கதாபாத்திரங்கள் அடங்கிய கதைகள். பாக்குத்தோட்டம் என்ற கதை எல்லாவற்றிற்கும் மகுடம். கர்நாடக மாநிலத்தின் நாட்டிய நாடகக் கலை வடிவமான யட்ச கானம் பார்க்க செல்லும் கதை நாயகன் பார்வையில் எழுதப்பட்ட கதை. யட்ச கானம் பற்றிய விபரிப்புகள் ஒரு தடவை வாசிப்பவரையும் யட்ச கானம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட வைக்கும். சூதாட்டம் மூலம் பாக்குத்தோட்டங்களை இழந்து வாழும் குடும்பத்தை சேர்ந்த சிறுவனுடன் கதை நாயகன் உரையாடும் இடங்கள் அற்புதமானவை.

(56) திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ.கிருஷ்ணன்   'திரும்பிச் சென்ற தருணம்' ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகும். எழுத்தாளர் அங்கோர்,எகிப்து, யார்க் தேவாலயம், அந்தமான் சிறைச்சாலை போன்ற இடங்களுக்கு சென்ற‌ போது பெற்ற அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். அத்துடன் நின்றுவிடாது அவ்விடங்களுடன்  தொடர்பான தகவல்களையும் தருகிறார். எகிப்து பற்றிய கட்டுரையில் பிரமிட்டுகள், எகிப்திய மொழி , அரசர்கள் பற்றி இவர் எழுதியவை எகிப்திய வரலாற்றை பாடப்புத்தகத்தில் கசப்புடன் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடியவை. அந்தமான் தீவில் ஜராவா பழங்குடியினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கட்டுரை சுற்றுலா என்ற பெயரில் பழங்குடியினரை பார்வையிடச் செல்பவர்களுக்கு ஒரு குட்டு.


மருது பாண்டியர்கள் பற்றிய கட்டுரை முக்கியமானது. அவர்களது குடும்பங்கள் முழுவதுமாக தூக்கில் இடப்பட்டது, சின்ன மருதுவின் மகன் துரைசாமி பினாங்கில் சிறை வைக்கப்பட்டது என பல விடயங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார்.

The bicycle thief உட்பட தனக்கு பிடித்த சில திரைப்படங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும் காந்தியப் போராளிகளான ஜெகந்நாதன் , கிருஷ்ணம்மாள் தம்பதிகளைப் பற்றிய கட்டுரைகளும்  முக்கியமானவை.


எழுத்தாளர் தான் பார்த்தவற்றையும், படித்தவற்றையும் சொற்களினூடாக கொண்டுவருவதில் வெற்றியடைந்துள்ளார்.

திருப்புகழ் - 2


திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு ...... மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் ...... வரவேநின்

அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் ...... வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள ...... மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை ...... விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் ...... மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் ...... பெருமாளே.