Monday 30 December 2019

(82) மனம் கொத்திப் பறவை - சாரு நிவேதிதா

விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வணிக எழுத்தின் வாசகர்கள் சிலரையாவது அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் சென்றிருக்கும் இந்தக் கட்டுரைகள்.பல விடயங்களை கலந்து விகடன் வாசகர்களுக்கும் ஏற்றது போல் எழுதியுள்ளார். அவருக்குப் பிடித்த லத்தீன் அமெரிக்கா, உணவு , புத்தகங்கள், திரைப்படங்க
ள்,இசை , அரசியல் எல்லாமே உள்ளது.

(81) காடு - ஜெயமோகன்

ஜெயமோகனின் இணையத்தளம் நான் தவறாமல் ஒவ்வொரு நாளும் வாசிப்பேன். ஒவ்வொரு நாளும் முதன் முதலில் செல்லும் தளம் அது தான். புதிதாக வரும் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து விடுவேன். (வெண்முரசு தவிர. வெண்முரசு ஆரம்பித்த காலங்களில் ஒவ்வொரு நாளும் வாசித்தாலும் இடையில் வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் அப்படியே விடுபட்டுவிட்டது. கட்டாயம் வாசிக்க வேண்டும்)
விஷ்ணுபுரம் தவிர்ந்த அவரது நாவல்களை வாசித்ததில்லை. வாசிக்க கடினமாக இருக்கும் என்ற தயக்கத்தினால் தான். காடு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவமாக இருந்தது. அடுத்த வருடம் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

Sunday 12 May 2019

(81) குறுகிய வழி - ஆந்த்ரே ழீடு

மொழிபெயர்ப்பு - க. நா.சு

காவ்யா பதிப்பகம் தொகுத்த  க. நா.சு மொழிபெயர்ப்பு நாவல்கள் அடங்கிய தொகுதியில் மொத்தம் 6 நாவல்கள் உள்ளன. விலங்குப் பண்ணை நாவல் தந்த உற்சாகத்தில் அதே எழுத்தாளரின் மற்றொரு நாவலான 1984 வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் கால்ப்பகுதி கூட என்னால் வாசிக்க முடியவில்லை. நாவல் எனக்கு அந்நியமாகவே இருந்தது.அதனால் நிறுத்தி விட்டு ஆந்த்ரே ழீடுவின் 'குறுகிய வழி' நாவலை வாசித்தேன். 

ஜெரோமின் நிறைவேறாக் காதலை சொல்லும் நாவல் என்று மட்டும் தட்டையாக  சொல்ல முடியாது. ஜூலியட்டின் காதலும் கூட நிறைவேறவில்லை. ஜெரோமும் அலிஸாவும் காதலிக்கிறார்கள். ஆனால் அலிஸா ஜெரோமைத் திருமணம் செய்து கொள்வதை விட  மதத்தை தீவிரமாக விரும்புகிறாள். உண்மையான மகிழ்ச்சி என்பது மதத்தில் சொன்னவற்றை பின்பற்றுவதே என எண்ணும் அலிஸா தனது தங்கை ஜெரோமை விரும்புவது தெரிந்து தான் தனது காதலை தியாகம் செய்ய விரும்புகிறாள். ஆனால் தங்கை ஜூலியட் வேறு ஒருவரைத் திருமணம் செய்து தனது காதலைத் தியாகம் செய்கிறாள். நாவலின் இறுதிப் பகுதி அலிஸாவின் நாட்குறிப்புகளினூடாக‌ சொல்லப்படுகிறது.அலிஸா இறந்து 10 வருடங்களின் பின் ஜெரோமும் ஜூலியட்டும் சந்திப்பதில் நாவல் நிறைவடைகிறது. அப்போது ஜூலியட்டுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்து இருக்கிறது. பெண் குழந்தை. பெயர் அலிஸா.

Saturday 11 May 2019

(80) விலங்குப் பண்ணை- George Orwell

தமிழ் மொழிபெயர்ப்பு - க. நா.சு

புரட்சியைக்(ரஷ்ய‌) கிண்டல் செய்து  எழுதப்பட்ட நாவல். க. நா.சு மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது. மூல நாவலை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது கிடைக்காத இன்பம் க. நா.சு வின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.பல வசனங்களைத் தமிழில் ரசித்து வாசித்து விட்டு, பின் ஆங்கிலத்தில் அவ்வசனங்களை வாசிக்கும் போது  தமிழ் மொழிபெயர்ப்பின் தரத்தை உணர முடிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், நாவலை உயிர்ப்புடன் தமிழில் தந்திருக்கும் க. நா.சு உண்மையிலேயே தமிழுக்கு கிடைத்த ஒரு கொடை தான். காவ்யா பதிப்பகம் அவரது படைப்புகளைத் தொகுத்துள்ளது. அவரது விமர்சனங்கள் மூலமே நான் பல நாவல்களை அறிந்திருக்கிறேன்.


திரு. ஜோன்ஸ் இன் பண்ணையிலேயே புரட்சி நடக்கிறது.  கிழ‌ட்டுத்தளபதி என மற்ற மிருகங்களால் அழைக்கப்படும் பன்றி ஒரு நாள் புரட்சி பற்றி தான் கண்ட கனவை மற்ற விலங்குகளுக்கு விளக்கிவிட்டு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது. புரட்சி எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே ஒரு நாள் புரட்சியும் நடந்து விடுகிறது. நெப்போலியன், ஸ்னோபால் ஆகிய இரு பன்றியும் தான் ஏனைய விலங்குகளை வழி நடத்துகிறது.  குதிரைகளான பாக்சர், க்ளோவர், கழுதை பெஞ்சமின், Mollie என்ற தற்பெருமையுடைய குதிரை, ஸ்குவீலர் என்ற பேச்சாற்றல் மிக்க பன்றி(இது கறுப்பையே வெள்ளை என்று தன் பேச்சால் நிரூபித்து விடும்) மோசஸ் என்ற காகம் , கோழிகள் , பூனைகள் என பண்ணையின் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. 


புரட்சியின் பின் ஏழு விதிகளை உருவாக்கும் புரட்சிக்கு தலைமை வகிக்கும் பன்றி நெப்போலியன் இறுதியில் ஒவ்வொன்றாக விதிகளை மீறி வருவதை அழகாக நாவலில் விபரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 'எல்லா மிருகங்களும் சமம்' என்ற விதியை ' எல்லா மிருகங்களும் சமனானவை ஆனால் சில மிருகங்கள் வேறு சில மிருகங்களை விட அதிக சமனானவை' என மாற்றிவிட்டது. ஸ்னோபால் பன்றிக்கு துரோகி பட்டம் கொடுத்து பண்ணையை விட்டுத் துரத்திவிடும் நெப்போலியன் பின்னர் நடக்கும் அநீதி முழுவதையும் ஸ்னோபால் தலையிலேயே கட்டிவிட்டுவிடும். இறுதியில் புரட்சியால் எந்த பலனும் கிடைப்பதில்லை. முன்னர் இருந்த நிலையை விட கீழ் நிலைக்கே உழைப்பாளர்கள் தள்ளப்படுவார்கள்,புரட்சியாளர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வசனம் பேசி, நியாயப்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை நாவல் சொல்கிறது.அந்தப் பண்ணையில் நடப்பவற்றை இன்று கூட நாம் அரசியலில், நமது தொழில் புரியும் இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.




Monday 22 April 2019

(79) மணிரத்னம் - படைப்புகள் ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்

           A.R.ரஹ்மானின் முன்னுரையுடன் வெளியாகியுள்ளது. 'ஸ்ப்ரெசதூரா'  என்ற இத்தாலிய வார்த்தையை தன் நண்பனிடம் கற்றதாகவும் , மிகவும் சிக்கலான விடயத்தை மிகவும் எளிதாக செய்து முடிக்க கூடிய விஷயமாக முன் வைத்தல் என்ற அர்த்தமுடைய அந்த வார்த்தை, மணிரத்னத்திற்கு பொருத்தமானது என எழுதியுள்ளார். தன்னுடைய வேலை மிகவும் எளிமையானது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தோற்றத்தை உருவாக்குபவர் என்றும் உண்மையில் அவரது வேலை சுலபமானது அல்ல, அதற்கு பின் கடுமையான உழைப்பு, செய் நேர்த்தி இருக்கிறது என்று ரஹ்மான் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.

மணிரத்தினம் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அல்ல. M.B.A படித்தவர். மூன்று நண்பர்கள் சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அது மிகவும் பிடித்ததாக இருக்க சினிமாவுக்குள் நுழைந்தார்.பல்லவி அனுபல்லவி,உணரு, பகல் நிலவு, இதயக்கோயில் போன்ற ஆரம்ப காலப் படங்களில் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். இதயக்கோயில் படத்தில் இளையராஜாவின் பாட்டை தவிர வேறு எதையும் தான் நினைவு வைத்திருக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார். பல்லவி அனுபல்லவி 1980 இல் எழுதி 1983 இல் வெளியானது. கன்னடத்தில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.அதற்குப் பின் தான் விரும்பியபடி எடுத்த படம் மௌனராகம் எனக் குறிப்பிடுகிறார். 

மௌனராகத்தில் பெண் விவாகரத்து கோருவதால் A சான்றிதழ் வழங்க வேண்டும் , அது வழக்கத்திற்கு மாறான காட்சி என சென்சார் சொன்னதால் அதிலிருந்து அவர்கள் என்ன சொன்னாலும் தான் ஆச்சரியப்படுவதில்லை என மணிரத்னம் கூறியிருப்பது சிரிப்பைத் தந்தாலும் ஒவ்வொரு இயக்குனர்களும் எவ்வளவு திண்டாடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. பிலிப்பைன்ஸ் - அமெரிக்கா இடையிலான Readers digest இல் வந்த ஒரு கட்டுரையே கன்னத்தில் முத்தமிட்டால் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறுகிறார். அது குழந்தையின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். முதலில் குடை என்றே அந்தப் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். குடை என்பது குடும்பம், உறைவிடம் எனப் பொருள் தரக் கூடியது. படத்திலும் குடை  முக்கிய காட்சியில் இடம் பெறுகிறது.அவரது ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனியான தலைப்புகளில் உரையாடல் இடம்பெற்றிருப்பது வாசிப்பதற்கு நன்றாகவும் படங்களை இன்னும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவியாகவும் இருந்தது. அனைத்துப் படங்களையும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும்.

(78) கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் - சு.கி . ஜெயகரன்

சு.கி . ஜெயகரன் எழுதிய இந்த நூல் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று. ஆராய்ந்து நுண்ணிய தகவல்களுடன் இந்த நூலை எழுதியுள்ளார். 
ஹிபாகுஷாக்கள் எனப்படும் அணுக்குண்டு தாக்குதலால் யப்பானில் பாதிக்கபட்டவர்கள் பற்றிய கட்டுரையில் இன்று வரையில் அவர்கள், அவர்களது  சந்ததிகள் அடைந்து வரும் துன்பங்கள் என்பவற்றை வாசிக்கும் போது இரண்டாம் உலகப்போரில் அணுக்குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடு என்பதைத்தவிர  பாடப்புத்தகத்திற்கு அப்பால் பெரிதும் தெரிந்து கொள்ளாமல் இருந்ததையிட்டு குற்ற உணர்வாக இருந்தது. ஒரு தம்பதியினர் 2 வயது பெண் குழந்தையுடன் ஒன்றரை கிலோமீற்றர் தள்ளி இருந்ததால் உயிர் பிழைத்தனர். 12 வயதானபோது  கழுத்திலும் காலைச்சுற்றியும் வீகமும் உடலில் நீலப்புள்ளிகளும் தோன்ற, கதிர் வீச்சால் உண்டான புற்று நோய் எனக்கண்டறியப்பட்டது.அவரின் மீது அக்கறை கொண்ட ஒருவர் 1000 நாரை மாலை (யப்பான் மொழியில் சென்பாசுரு)செய்யும் படி கூறியுள்ளார். நாரை நீண்ட ஆயுளின் சின்னமாக யப்பானில் நம்பப்படுவதால் ஒரிகாமி முறையில் நாரைகள் செய்து மாலையாக கோர்த்தால் பிணியுள்ளவர் குணமடைவார் என நம்பப்படுகிறது. சதாகோ என்ற அச்சிறுமி தானும் தன் போன்ற இளம் ஹிபாகுஷாக்களும் குணமாக வேண்டி காகித நாரைகளை உருவாக்கும் போது 644 ஆவது நாரை செய்து முடித்த அன்று அவர் இறந்தார்.அவரது நினைவிடத்தில் பல சென்பாசுரு குவிந்திருக்கின்றன. தன்னை மிகவும் பாதித்த நினைவுச் சின்னம் அது என எழுதுகிறார்.

அந்தமான் - நிகோபார் தீவுகளில் உள்ள பூர்வ குடிகள், எரிமலை வெடிப்பு ,சாவுப்பள்ளத்தாக்கு, சித்திரக்கதைகளில் காணப்படும் இனவெறி, ஆவுங் சான் சூசி, வங்காரி மாதய் போன்ற சமூகப் போராளிகள் பற்றி பல முக்கிய நிகழ்வுகளை இந்த நூலில் படிக்கலாம்.

(77) இஸ்தான்புல் - ஓரான் பாமுக்

"இஸ்தான்புல் -  ஒரு நகரத்தின் நினைவுகள்" துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் இன் புத்தகம். இது வரையில் அவர் எழுதியவற்றுள்  நாவல் அல்லாத அபுனைவு வகையைச் சேர்ந்த ஒரே ஒரு நூல் இதுவே. ஜி.குப்புசாமி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். பாமுக் தான் பிறந்து வளர்ந்த நகரத்தில் தனது நினைவுகளை அந் நகரின் வரலாற்றுடன் இணைத்து எழுதியுள்ளார். அவரது  சிறு வயது ஞாபங்கள் முதல் அவர் எழுத்தாளராவது என முடிவெடுத்த தருணம் வரை பயணிக்கும் கதையை மிகவும்  ரசிக்கும் படி எழுதியுள்ளார்.

பொதுவாக நான் இந்திய நாவல்கள் தவிர்த்து வேறு நாவல்கள் வாசிப்பதில்லை. இந்திய கலாச்சாரம் நான் மிகவும் அறிந்த, சிறு வயது முதலே படித்த , எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்பதால் இந்திய நாவல்கள் , கட்டுரைகள் விரும்பி வாசிப்பேன். வேற்று நாட்டு நூல்களை முயற்சிப்பது கூட நான் விரும்பாத ஒன்றாக இருந்தது. இணைய யுகத்தில் வாழ்வதால் வாசிப்பிற்கான பல வாசல்களை அதுவே திறந்து வைப்பது இன்றைய காலத்தில் ஒரு வரம். இணையத்தில் எங்கோ பாமுக் பற்றி படித்த‌ நினைவிலேயே நூலகத்தில் இருந்து 'பனி' என்ற அவரது நாவலை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பாதிப்பிலேயே 'இஸ்தான்புல்' என்ற இந்த புத்தகத்தையும் எடுத்து வந்தேன். ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு என்பது கூடுதல் நம்பிக்கையைத் தந்தது. புத்தகம் அவ்வளவு பிடித்துவிட்டது. இதில் மொழிபெயர்ப்பின் பணி முக்கியம் என நினைக்கிறேன். எந்த ஒரு இடத்திலும் வேற்று மொழி நூல் வாசிப்பது போன்ற உணர்வே வரவில்லை. மூலத்தில் கூட இவ்வளவு நன்றாக இருக்குமோ என பல வசனங்களை வாசிக்கும் போது சந்தேகம் வந்தது. 

வாசித்து முடித்த பின் துருக்கி, இஸ்தான்புல், பாஸ்ஃபரஸ் (Bosporus), ஆட்டமன் பேரரசு என இணையத்தில் தேடிப் படித்தேன். அதன் பின் புத்தகம் இன்னும் நெருக்கமாகியது.  பாஸ்ஃபரஸ் நீரிணை பாமுக்கோடு கலந்துவிட்ட ஒன்று. பாஸ்ஃபரஸில் வந்து செல்லும் கப்பல்களை ஜன்னலூடு பார்ப்பது இஸ்தான்புல் வாசிகளின் வேலைகளில் ஒன்று. பொஸ்போரஸ் நீரிணையானது  ஐரோப்பாவையும் ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருக்கிறது. இஸ்தான்புல் நகரானது  பொஸ்போரஸ் கடலால் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இஸ்தான்புல் இரு கண்டங்களில் அமைந்துள்ள  நகரமாக விளங்குகின்றது.இதனால் இஸ்தான்புல் வாசிகளிடம் இருந்து  பொஸ்போரஸ் நீரிணையை பிரித்து பார்க்க முடியாது.சர்வதேசக் கப்பல்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்த நீரிணை உள்ளதால் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 


  உலக வரலாற்றில், நான்கு பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமை இஸ்தான்புல் இற்கு இருக்கிறது.  1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, துருக்கியின் தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.  ரோமப் பேரரசு,  பைசண்டைன் பேரரசு, இலத்தீன் பேரரசு  ஓட்டோமான் பேரரசு ஆகியவற்றிற்கு தலைநகரமாக விளங்கிய நகரின் வீழ்ச்சி எவ்வளவு துயரானது. 


மிகப்பெரிய ஆட்டமன் பேரரசின் வீழ்ச்சியைப் பற்றிய துயரை இந்த நூலைப் படிப்பவர்கள் உணர முடியும். மேலைத்தேய மயமாக்கல் தொடர்பான பிரச்சினைகள் , மொழிச்சீர்திருத்தம், பழைய பாழடைந்த கட்டடங்கள் என இஸ்தான்புல் நகரம் சந்தித்த பிரச்சினைகளை தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.