Friday, 27 June 2014

(16) மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்

மதில்கள்வைக்கம் முகமது பஷீர் (மலையாளம்)
தமிழில்:  சுரா

பஷீரின் 'மதில்கள்' 38 பக்கங்கள் மாத்திரமே கொண்ட குறு நாவல் ஆகும். எழுத்தாளர் பஷீரே கதையின் நாயகனாக வருகிறார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட  பஷீருக்கு நாராயணி என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ஆண், பெண் சிறையை பிரிக்க ஒரு மதிலே இருக்கிறது.மதிலுக்கு அந்த பக்கம் இருக்கும் பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணியும் பஷீரும் கதைத்துக்கொள்கிறார்கள். முதலில் சிறையில் இருந்து தப்பி செல்ல நினைக்கும் பஷீர் நாராயணியுடன் கதைக்க தொடங்கிய பின் அந்த எண்ணத்தை கைவிடுகிறார். சுவருக்கு அப்பால் கம்பு தெரிந்தால் மதிலுக்கு அப்பால் நாராயணி நிற்பதாக அர்த்தம். இருவரும் வார்த்தைகளை பரிமாறுகிறார்கள். இருவரும் சந்தித்து கொள்ள வைத்தியசாலை மட்டுமே ஒரு இடமாக இருப்பதால், ஒரு குறித்த நாளை சொல்லி அன்று எப்படியாவது அங்கு வருமாறு பஷீரிடம் நாராயணி சொல்கிறாள். இருவரும் சந்திக்கும் போது ,  நாராயணி  முகத்தில் மச்சம் இருப்பதை வைத்தும்  பஷீர் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பதைக்கொண்டும்   ஒருவரை ஒருவர் அடையாளம் காண  நினைக்கிறார்கள். பஷீரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அன்று எதிர்பாராமல் அவர் சிறையில் இருந்து விடுதலையடைகிறார். சிறையிலிருந்து விடுதலையாக யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர் சொல்கிறார்.  வை  ஷூட் ஐ பி ஃப்ரீ?ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?

விடுதலை, யாருக்கு வேண்டும் இந்த விடுதலைபஷீர் சிறையை விட்டு வரமுன் ஒரு ரோஜாவை பறித்துக்கொள்கிறார். ஜெயிலின் கதவு பின்னால் மூடிக்கொள்கிறது.

இது உண்மையில் நடந்த கதையா தெரியவில்லை. பஷீர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என படித்திருக்கிறேன்.


நான் வாசித்த புத்தகத்தை  சுரா மொழிபெயர்த்திருக்கிறார். இணையத்தில் கிடைத்த படத்தில் சுகுமாரன் மொழிபெயர்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நாவல் மம்முட்டி நடிப்பில், ஆடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. Poster இல் இருக்கும் மலையாளம் விளங்கவில்லை. ஆனால் கையில் ரோஜா செடியுடன் இருப்பதால் மதில்கள் பட  Poster ஆக தான் இருக்க வேண்டும். 

Thursday, 26 June 2014

(15) பால்யகால சகி - பஷீர்

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் (மலையாளம்)
தமிழில்: குளச்சல் மு. யூசுப் 


மலையாள இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் பஷீரின் நாவல்கள் வாசிப்பதற்கு எளிமையானவை. பஷீரின் இளம் பருவ தோழி பற்றிய கதையாகவே இந்த நாவல் சொல்லப்படுகிறது. வெறும் 80 பக்கங்கள் மாத்திரமே கொண்ட "பால்யகால சகி" நாவல் தரும் உணர்வுகளோ அதிகம். பால்யகால சகி என்ற பெயரிலேயே ஒரு கவர்ச்சி ஒட்டிக்கொண்டு விடுகிறது. 

 மஜீதுவும் சுகறாவும்  நண்பர்கள். அவர்களது சிறு வயது நட்பு என்னவோ மோதலில் தான் தொடங்கியது. சுகறாவின் வீட்டில் அருகில் இருக்கும் மாமரத்தில் இருந்து பழம் விழும் சத்தம் கேட்டு அவள் வருவதற்கு முன்னரே மஜீது எடுத்து அதை சாப்பிட தொடங்கியிருப்பான். மஜீது மேல் கோபம் அதிகரித்து ஒரு நாளில் தனது நகங்களால் அவனை பிராய்ந்து விட்டாள்.  அதற்கு அவன் சற்று பயப்படவே அதை அவள் தொடரவும் செய்கிறாள். அவளது நகத்தை வெட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த மஜீது "சிலரு சும்மா என்னை பறண்டவும் நுள்ளவும் செய்யுதாங்க. அவங்களுக்கு இது ஒரு சுகம். இனி நான் மரிச்சு போனா அவுங்க சொல்லுவாங்களா இருக்கும், அந்த பாவப்பட்ட மஜீது இருந்தா ஒரு நுள்ளாவது குடுக்கலாமேன்னு" என்ற வசனம் மூலம் நகத்துக்கு ஒரு முடிவு கட்டிவிடுகிறான்.

சுகறா படிப்பில் கெட்டிக்காரி. மஜீது படிப்பில் மொக்கு. ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று கேட்டதற்கு 'கொஞ்சம் பெரிய ஒன்று ' என்று சொல்லி  அதுவே அவனது பெயராகவும் போகிறது. மஜீதின் அப்பா அந்த ஊரின் பணக்காரர்களில் ஒருவர். சுகறாவின் அப்பாவோ பாக்கு விற்கும் ஏழை. சுகறாவின் அப்பா இறந்து விட அவளது படிப்பும் நின்றுவிடுகிறது. வீட்டில் ஏற்படும் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு செல்லும் மஜீது பத்து வருடங்களின் பின் சுகறாவை திருமணம் செய்யும் ஆசையில் திரும்பிவர வீட்டில் எல்லாமே தலைகீழாகி இருக்கிறது. மஜீது வீட்டிலோ கடன் சுமை கூடி கஷ்டப்படுகிறார்கள். சுகறாவோ இரண்டாம் தாரமாக‌, திருமணம் செய்து சென்று விடுகிறாள்.அங்கு அவளுக்கு சித்திரவதை தான்.


பால்ய கால நண்பர்கள் இருவரும் நீண்ட காலத்துக்கு பின் சந்தித்து கொள்கிறார்கள். நிறைய கதைத்துக்கொள்கிறார்கள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காகவும் சுகறாவை திருமணம் செய்வதற்காகவும் மஜீது ஏதாவது உழைக்க வேண்டும் என எண்ணி வீட்டை விட்டு கிளம்புகிறான். கிளம்பும் வேளையில் சுகறா ஏதோ சொல்ல வந்தும் சொல்லமுடியாமல் போய்விடுகிறது.

பல இடங்கள் அலைந்து ஒரு வேலை பெற்று வீட்டிற்கு  பணம் அனுப்பும் மஜீதுவுக்கு விபத்து ஒன்றில் ஒரு கால் போய்விடுகிறது. அதன் பின் அந்த வேலையில் தொடர முடியாததால் வேறு வேலை தேடி அலைகிறான். இறுதியில் எச்சில் பாத்திரம் கழுவும் வேலை கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்து செய்யும் வேலை தானே. அப்போது சுகறா இறந்த செய்தியை தாங்கிய அவனது அம்மாவின் கடிதம் வருகிறது. வீட்டை விட்டு கிள‌ம்பும் போது அவள் கடைசியாக சொல்ல வந்தது என்ன என்ற வினாவுடன் நாவல் நிறைவடைகிறது.


இந்த நாவல் மம்முட்டி நடிப்பில் திரைப்படமாக வந்திருக்கிறது. பார்க்க வேண்டும்.
 


Monday, 16 June 2014

(14) 1084 ன் அம்மா - மகாசுவேதா தேவி

1084 ன் அம்மா - மகாசுவேதா தேவி (வ‌ங்காளம்)
தமிழில் -  சு.கிருஷ்ணமூர்த்தி


நக்ஸலைட் எழுச்சி கல்கத்தாவில் மேலோங்கி இருந்த காலத்தை பின்னணியாக கொண்ட கதை. பொலிஸ் ஆவணங்களில் 1084 என்ற சடல எண்ணாக அடையாளப்படுத்தப்பட்ட ப்ரதீ என்ற இளைஞனைப் பற்றிய அவனது அம்மாவின் நினைவுகள் தான் நாவல். ப்ரதீ இறந்தும் குடும்ப கௌரவத்திற்காக அவனது நினைவை கூட அண்டவிடாது வாழும் அவனது அப்பா, அக்காக்கள்,அண்ணா, அண்ணி போன்றோருடன் அவனது தாய் சுஜாதாவுக்கு பிரியம் எதுவும் பெரிதாக இல்லை. ப்ரதீயின் நண்பனின் அம்மா, அவனது நண்பி என பலருடன்  கதைப்பதன் மூலம் ப்ரதீ பற்றி  மேலும் அறிந்து கொள்ள முயல்கிறார்.

நாவலில் மகாசுவேதா தேவி, மேல்தட்டு மக்களின் பொருளாசை, ஆழமற்ற கலையார்வத்தை பார்த்து பழக வேண்டியுள்ள ஒரு புத்திசாலிப் பெண்ணின் அவதியை சித்தரிக்கிறார்.வங்க தேச விடுதலைக்காக கண்ணிர் விடும் வங்கக்கவிஞன் கல்கத்தாவில் சுட்டு கொல்லப்படும் இளைஞர்களுக்காக ஒரு மணித்துளியும் செலவளிக்கமாட்டார்கள் என சாடுகிறார். இரத்தபலி மூலமேனும் சமுதாய மாசுகளை களைய நினைக்கும் பெரும்பாலான அரசை போலவே வங்க அரசும் நடந்து கொள்கிறது. பல்வேறு அரசியல் சூழலில் பாலஸ்தீனத்தில், இலங்கையில், அயர்லாந்தில் என அரசின் வன்மத்திற்கு பலியான  மகன்களுக்கும்  அவர்களது தாய்க்கும் இடையிலான குறியீடாக இந்த நாவலை சொல்லலாம்.

"ஆரோக்கிய நிகேதனம்" வாசித்த பின் வங்க நாவல்களில் ஒரு பிரியம். அதன் தொடர்ச்சியாக வாசித்த இந்த நாவலும் என்னை ஏமாற்றவில்லை.

ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல் வங்கத்தில் 12 பதிப்புகள் கண்டுள்ளது. இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த நிகலானியின் இயக்கத்தில் "ஹஜார் சௌராஸிகீமா" (Hazaar Chaurasi Ki Maa) என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.13. எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முஹம்மது பஷீர்

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முஹம்மது பஷீர்
(மலையாளம்) 
தமிழ் மொழிபெயர்ப்பு  - குளச்சல் மு. யூசுப் 


குஞ்ஞுபாத்துமாவின் அம்மா நிறைய வெற்றிலை போடுவார். தரையில் கால் பதிக்காமல் மிதியடி மீது நடப்பார்.அந்த மிதியடிகள் யானைக்கொம்பால் செய்யப்பட்டவை.குஞ்ஞுபாத்துமாவிற்கு அவளது அம்மா அடிக்கடி சொல்லும் வசனம்

"ஒனக்கெ உப்பப்பாக்கொரு ஆனெயிருந்துது. ஒரு பெரீய கொம்பானெ" . 


பழம் பெருமை பேசி வாழும்  நபர்களில் ஒருவர்  தான் அவளது அம்மா குஞ்ஞுதாச்சும்மாவும்.

முஸ்லியார்கள் இரவுப் பிரசங்கத்தில் சொல்லிக் கொடுப்பது போல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எழுத்து அறிவு கிடையாது. கிரந்தங்கள் அரபு மொழியில் இருக்கின்றன. முஸ்லியார்கள் அரபு தெரிந்தவர்கள். எனவே அவர்கள் சொல்வதை  கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். அவர்களை பொறுத்தவரை இபுலீஸ் எனும் பகைவன் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். இபுலீஸ் தலையில் ஏறி அமர்ந்து கொள்வான் என்று தொப்பி அணிந்து கொள்கிறார்கள்.

குஞ்ஞுபாத்துமாவின் அப்பா வழக்கில் அனைத்து சொத்துக்களையும் இழந்துவிட , அவர்கள் பழைய செங்கல்லாலான வீட்டிற்கு குடியேறுகிறார்கள். பழைய வீட்டில் இருந்து அவளது அம்மா அந்த மிதியடிகளை மட்டும் கொண்டுவந்துவிடுகிறார். "ஆனை மக்காருக்கு செல்ல மவளாக்கும்" என்று சொல்லி எந்த வேலையும் செய்யாது வெற்றிலை மட்டும் போட்டு மிதியடியில் நடந்து திரியும் அம்மாவுடன் அப்பாவுக்கு அடிக்கடி சண்டை. வாட்டனடிமை என்று கம்பீரமாய் ஊரை வலம் வந்த பிரமுகரான தன் கணவர்  நிலை தாழ்ந்து செம்மீனடிமையாக சொத்துக்களை எல்லாம் இழந்து  ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய்  குடிசை வீட்டில்  தம்மை வாழ கூட்டி வந்தது அவளை துன்புறுத்துகிறது.

பக்கத்து வீட்டிற்கு குடிவரும் நிஸார் அகமதுவுக்கும் குஞ்ஞுபாத்துமாவுக்கும் காதல். அவர்களுக்கு திருமணம் நடக்கிற‌து. குஞ்ஞுபாத்துமா வீட்டிற்கு வரும்போது அவளது அம்மா இரு கைகளையும் தலையில் வைத்துகொண்டு உட்கார்ந்து இருக்கிறார். தன்னைக் கேலி செய்யும்  அயல் குழந்தைகளின் பேச்சில் பெரிதும் காயப்பட்டு கண்ணிருடன் சொல்கிறார்

"ஒனக்ககெ உப்பப்பாக்கெ ...பெரீய கொம்பானே ...குழியானேயாம் புள்ளே. குழியானேயாம்!

Wednesday, 4 June 2014

12. ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்த்யோபாத்யாய‌

ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்த்யோபாத்யாய‌ (வங்காளி)
தமிழ் மொழியாக்கம் : த. நா . குமாரஸ்வாமி


'ஆரோக்கிய நிகேதனம்'  என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய் யின் மகன் ஜீவன் மாஷாயின் வயோதிப காலத்தில் கதை ஆரம்பித்து அவரது முன்னைய தலைமுறை, இளமைக்காலம், அவரது மகன் என கதை விரிவடைகிறது.இவர்கள் நாடி பிடித்து ஆயுள் சொல்லக்கூடியவர்கள், ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுபவர்கள். அந்த காலத்தில் பிரபலமகி வந்து கொண்டிருந்த ஆங்கில மருத்துவம், நாட்டு வைத்தியம்  தொடர்பாக  மக்களது அபிப்பிராயங்கள், பரம்பரையாக மருத்துவத்தை தந்தையிடம் பயிலும் போது எடுக்கும் சிரத்தை, ஆங்கில மருத்துவத்தில் கொண்டுள்ள மோகம், ஆங்கில மருத்துவம் படிப்படியாக மக்களிடம் அறிகுகமாகிய முறை என பலவற்றை பற்றி நாவல் சொல்கிற‌து.

டாக்டர் பிரத்யோத் ஆங்கில மருத்துவர். ஜீவன் மாஷாய் நாடி பிடித்து நோயளியின் நாளை குறிப்பதை அறிந்து கோபம் கொள்கிறார். வைத்தியம் என்பது நோயில் இருந்து நிவாரணம் பெறுவதாக இருக்க வேண்டுமே தவிர இறுதி நாளை பற்றி தெரிவிக்கும் முறை அல்ல என்பது அவர் வாதம். ஜீவன் மாஷாய் இன்னும் சில மாதங்களே வாழுவார்கள் என நாள் குறித்த நோயாளிகளை தான் காப்பாற்றுவதாக சவால் விடுகிறார். தாந்து கோஷால்  என்பவன் வயிற்று புண் காரணமாக மருந்து எடுப்பதற்கு ஜீவன் மாஷாயிடம் வருகிறான்.அவனது உணவுப்பழக்கம் மாறாத வரை அவனது நோய் மாறாது என சொல்லி அவனுக்கு நாள் குறிக்கிறார். இதனால் தாந்து கோபம் கொண்டு பிரத்யோத்திடம் சென்று காட்டுகிறான். பிரத்யோத் அவனது வருத்தத்தை மாற்றுவதாக சவால் விட்டு மருத்துவமனையிலேயே அவனை வைத்து பார்க்கிறார். ஆனால் உணவுப்பழக்கத்தை மாற்றமுடியாத அவன் மருத்துவமனையில் உணவை திருடி சாப்பிட்டு மரணமடைகிறான்.

ஜீவன் மாஷாய் இளமையில் ஆங்கில மருத்துவம் படிக்கவே விரும்புகிறார். ஆனால் காதல் பிரச்சினையில் ஏற்பட்ட கைக்கலப்பு காரணமாக அவரால் அப்படிப்பை தொடரமுடியவில்லை. அவர் காதலித்த பெண் மஞ்சரியும் நாட்டு வைத்தியனை மணக்க விருப்பம் இல்லாமல் வேறு ஒருவணை திருமணம் செய்கிறாள். அதன் பின் அவர் ஆத்தர்- பௌ என்பவளை திருமணம் செய்கிறார். ஆனால் அவர்களது உற‌வும் திருப்திகரமாக இருக்கவில்லை. ஆத்தர்- பௌ எப்போது ஏதாவது திட்டியபடியே இருக்கிறார். தனது மகனுக்கும் நோயின் போது நாடி பிடித்து பார்த்து, இறந்துவிடுவான் என்று சொன்னதால் கல் நெஞ்சக்காரன் என நினைக்கிறாள். ஊரிலும் அதைப்பற்றி கதைக்கிறார்கள். ஏழைகள், வயதானவர்கள்   ஜீவன் மாஷாயிடமே தமது நோயை காட்ட வருகிறார்கள். அவர் யாரிடமும் கறாராக பணம் வசூலிப்பதில்லை. நோயாளிகளிடம் இருந்து வர வேண்டிய கடனே பல ஆயிரங்கள் இருக்கிறது.  சில வருத்தங்களுக்கு ஆங்கில மருத்துவம் தான் சிறந்தது என சொல்லி நோயாளிகளை அனுப்பிவிடுகிறார்.

பிரத்யோத் டாக்டரின் மனைவிக்கு நோய் வந்த போது, அவர்  ஜீவன் மாஷாயிடம் உதவி கேட்கிறார். இரத்த பரிசோதனை முடிவு அடுத்த நாளே வரும் என்பதால் நாடி பிடித்து என்ன வருத்தம் என்பதை மட்டும் கண்டு கூறும்படி கேட்கிறார். அதை வைத்து மனைவிக்கு மருத்துவம் பார்க்கிறார். நாடி பிடித்து அவர் சொன்ன உடல் வெப்பனிலை கருவியில் காட்டிய வாசிப்புக்கு சரியாக இருப்பது அவருக்கு ஆச்சரியம் அழைக்கிறது. ஜீவன் மாஷாய் நாடி பார்த்து சொல்வதை நேரில் கேட்ட போது அவருக்கு ஜீவன் மாஷாய் மீது மதிப்பு வருகிறது.


சசாங்கனின் மனைவி, ரானா, ஜீவன் மாஷாயின் குரு ரங்லால், சசி என பல முக்கிய கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.


ஆயுர்வேதம் மரணத்தை பிங்கலநிற கூந்தலுடன் துயரங்களிலிருந்து விடுதலை தர வரும் தேவதையாக, ‘பிங்கல கேசினி’யாகப் பார்க்கிறது. வாழ்வின்  இறுதியில் மரணத்திற்கு அடிபணிந்தே ஆக  வேண்டும். வாழ்வை மருத்துவம் மூலம் செம்மைப்படுத்தலாம். ஆனால் மருத்துவம் மூலம் மரணத்தை வெல்ல  முடியாது. மரணத்தைக் கண்டுவிட்ட பிறகு மனநிம்மதியுடன்  அதை எதிர் கொள்வதே முக்கியமானது. இதையே ஜீவன் மாஷாய் மருத்துவத்தில் குறிப்புகள் மூலம், நேரடியாக சொல்கிறார். மதியின் அம்மாவிடம் 'கங்கை போய்வரலாமே'  என்பது அவர் மரணத்தை நினைவு கொள்ள கொடுத்த குறிப்பு. இதை உணர்ந்த போது பிரத்யோத்திற்கும் அவர் மீது மதிப்பு வருகிறது.

ஆரோக்கிய நிகேதனம் முக்கியமான இந்திய   நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.