Monday 16 June 2014

(14) 1084 ன் அம்மா - மகாசுவேதா தேவி

1084 ன் அம்மா - மகாசுவேதா தேவி (வ‌ங்காளம்)
தமிழில் -  சு.கிருஷ்ணமூர்த்தி


நக்ஸலைட் எழுச்சி கல்கத்தாவில் மேலோங்கி இருந்த காலத்தை பின்னணியாக கொண்ட கதை. பொலிஸ் ஆவணங்களில் 1084 என்ற சடல எண்ணாக அடையாளப்படுத்தப்பட்ட ப்ரதீ என்ற இளைஞனைப் பற்றிய அவனது அம்மாவின் நினைவுகள் தான் நாவல். ப்ரதீ இறந்தும் குடும்ப கௌரவத்திற்காக அவனது நினைவை கூட அண்டவிடாது வாழும் அவனது அப்பா, அக்காக்கள்,அண்ணா, அண்ணி போன்றோருடன் அவனது தாய் சுஜாதாவுக்கு பிரியம் எதுவும் பெரிதாக இல்லை. ப்ரதீயின் நண்பனின் அம்மா, அவனது நண்பி என பலருடன்  கதைப்பதன் மூலம் ப்ரதீ பற்றி  மேலும் அறிந்து கொள்ள முயல்கிறார்.

நாவலில் மகாசுவேதா தேவி, மேல்தட்டு மக்களின் பொருளாசை, ஆழமற்ற கலையார்வத்தை பார்த்து பழக வேண்டியுள்ள ஒரு புத்திசாலிப் பெண்ணின் அவதியை சித்தரிக்கிறார்.வங்க தேச விடுதலைக்காக கண்ணிர் விடும் வங்கக்கவிஞன் கல்கத்தாவில் சுட்டு கொல்லப்படும் இளைஞர்களுக்காக ஒரு மணித்துளியும் செலவளிக்கமாட்டார்கள் என சாடுகிறார். இரத்தபலி மூலமேனும் சமுதாய மாசுகளை களைய நினைக்கும் பெரும்பாலான அரசை போலவே வங்க அரசும் நடந்து கொள்கிறது. பல்வேறு அரசியல் சூழலில் பாலஸ்தீனத்தில், இலங்கையில், அயர்லாந்தில் என அரசின் வன்மத்திற்கு பலியான  மகன்களுக்கும்  அவர்களது தாய்க்கும் இடையிலான குறியீடாக இந்த நாவலை சொல்லலாம்.

"ஆரோக்கிய நிகேதனம்" வாசித்த பின் வங்க நாவல்களில் ஒரு பிரியம். அதன் தொடர்ச்சியாக வாசித்த இந்த நாவலும் என்னை ஏமாற்றவில்லை.

ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல் வங்கத்தில் 12 பதிப்புகள் கண்டுள்ளது. இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த நிகலானியின் இயக்கத்தில் "ஹஜார் சௌராஸிகீமா" (Hazaar Chaurasi Ki Maa) என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment