Wednesday, 30 December 2015

(46) சொல்லொணாப்பேறு - நரசய்யா

நரசய்யா ஒரிசாவில் பிறந்தவர். இந்திய கடற்படையில் வேலை செய்தவர். இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்தவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆலவாய் , கடலோடி என்பன அவரது சில முக்கிய நூல்கள் ஆகும்.


"சொல்லொணாப்பேறு" என்ற புத்தகமே நான் வாசித்த இவரது முதல் புத்தகம். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. 21 சிறுகதைகள் உள்ளன.  கதைகளுக்கு வரையப்பட்ட கோட்டோவியங்கள் கதையை மேலும் அழகாக்குகின்றன‌.  அவரது  சிறு வயது அனுபவங்கள் , வேலை அனுபவங்கள் என்பவற்றை இவரது சிறுகதைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. காந்தி மீது அதிக ஈடுபாடு அவருக்கு இருக்க வேண்டும். அவரது கதைகளில் காந்திய சிந்தனைகளை அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றன. ஒரு சில கதைகள் bore ஆக இருந்தாலும் ஏனையவை வாசித்து ருசிக்க வேண்டியவை. ஒளியின் வழியில், பற்றற்று , வாழ்க நீ எம்மான் , சொல்லொணாப்பேறு ஆகிய கதைகள் மிக சிறப்பானவை.

Tuesday, 22 December 2015

(45) பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன்

வண்ணதாசன் கதைகள் அழகியல் உடையவை. அவரது கதை மாந்தர்கள் கதைக்கும் வசனங்கள் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டிருக்கும். அப்படிக் கதைப்பவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படியானவர்கள் ஒரு வேளை எங்காவது இருந்தால் அவர்களுடன் பழகக் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அவசர உலகில் இப்படி ரசித்து ரசித்துக் கதைப்பவர்கள் , வாழ்பவர்கள் இருந்தால் அவர்கள் தான் உண்மையிலேயே அதிஷ்டசாலிகள்.

 வண்ணதாசன் சிறுகதை எங்கு தொடங்கும் , எங்கு முடியும் என்று என்னால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. ஏதோ தலைப்பு இருப்பதால் அங்கு தானே தொடங்க வேண்டும். திடீரென்று முடிந்தது போல இருக்கும். ஆனால் இந்த இடத்தில் கதை முடிவது தான் சரியாக இருக்கும் என்றும் தோன்றும்.

சிதம்பரம் சில ரகசியங்கள் , ஒரு ஞானி ஒரு முட்டாள், பெய்தலும் ஓய்தலும் , ஒரு முயல் குட்டி இரு தேநீர் க் கோப்பைகள், அணில் நிறம் அல்லது நிறங்கள், மிகவும் முக்கியமான பார்வையாளர்கள் , தத்தளிப்பு , கூடு விட்டு , ஒருவர் இன்னொருவர் , உப்புக் கரிக்கிற சிறகுகள் , உயரம் , சிநேகிதிகள் என கதைகள் உள்ளன.  

இப்புத்தகத்தில் உள்ள கதைகள் உயிரெழுத்து, விகடன் , கல்கி , புதிய பார்வை போன்ற இதழ்களில் எழுதியவை.  அனைத்துமே சிறப்பானவை.

(44) இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்


 
        தமிழில் பயணக் கட்டுரைகளை    சிறப்பாக
எழுதுபவர்களாக எஸ்.ரா, ஜெயமோகனை சொல்லலாம். ஜெயமோகன் அவரது இணையத்தளத்தில்  எழுதியுள்ள பயணக்கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதே போல எஸ். ராமகிருஷ்ணனும் பயணம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார். பயணத்தில் மிகுந்த விருப்பம் உடையவர். அவரது தேசாந்த்திரி அவ்வாறான ஒரு புத்தகம். அது மட்டும் அல்லாது அவரது கட்டுரைகளில் அவரது பயண அனுபவங்களை யும் பல வேளைகளில் இணைத்திருப்பார்.  அவரது பயண அனுபவங்களை கூறும் இன்னொரு புத்தகம் "இலக்கற்ற பயணி" .

கனடாவில் ஒன்டாரியோ, சிம்கோ ஏரிகளையும் நயகரா நீர்வீழ்ச்சியையும் பார்த்த அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். தனியாக பயண அனுபவங்களை மட்டும் எழுதாமல் அதனுடன் தொடர்பான கதைகள், சம்பவங்களை எழுதும் போது அக்கட்டுரைகள் இன்னும் அழகுறுகின்றன. திருக்கோகர்ணத்து ரதி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்  முக்கிய ரதி, மன்மதன் சிலைகளைப் பற்றி எழுதியுள்ளார். நானும் இந்தியக்கோயில்களில் ரதி மன்மதன் சிலைகளைப் பார்த்திருந்தாலும் எஸ். ராமகிருஷ்ணனைப் போல இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பார்க்கவில்லை. இந்த புத்தகம் வாசித்த பின் இனி நான்  பார்க்கப் போகும் சிலைகளை  அணுகும் முறை நிச்சயமாக வேறாகத்தான் இருக்கும். 

  போர்ஹே சொற்பொழிவாற்றிய இடத்திற்கு சென்றதையும் ,ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே விசேட அரங்கு அமைத்து நடாத்தப்படும் அவரது நாடக‌த்தை கனடாவில் பார்த்ததையும் பற்றிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  எஸ்.ராவுக்கு சிலப்பதிகாரத்தில் நிறைய ஈடுபாடு இருக்கிறது .கண்ணகி நடந்த பாதையில் நடந்த அனுபவத்தை "கொற்கையில் கடல் இல்லை" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். கபிலர் , மருதனார் பற்றிய கட்டுரை அருமையான ஒன்று. அடுத்த தடவை இந்தியா போகும் போது கபிலர் குன்று பார்க்க வேண்டும்.

பழையகாலத்தில் தமிழ் மரபில் இருந்த நவகண்டம் என்ற முறை பற்றி ஒரு கட்டுரை உள்ளது.  நவகண்டம் என்பது தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் நிகழ்வு ஆகும். ஜெயமோகனும் இது பற்றி எழுதியுள்ளார்.

தனுஷ்கோடி , கோடைக்கானல் , ஸ்ரீரங்கப்பட்டின ஆறு, தயா ஆறு, ஹம்பி  பற்றிய கட்டுரைகளும் வாசிக்க இன்பம் தருவன. கூட்ஸ் வண்டிப் பயண அனுபவமும் லொறியில் (3000 km ) பயணம் செய்த அனுபவங்களும் நாமும் அவருடன் கூடவே பயணம் செய்த அனுபவத்தை தருகின்றன. மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்.

Wednesday, 16 December 2015

(43) உயரப்பறத்தல் - வண்ணதாசன்

வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு. இதுவே நான் வாசித்த முதல் வண்ணதாசன் புத்தகம். அவரை மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது இந்த புத்தகம். "சிறுகதை என்றாலே கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்" என்று அண்மையில் வாசித்த வரி எனக்கு வாசிப்பின் புதிய கோணத்தைக் காட்டியிருக்கிறது. நானும் சிறுகதை என்றால் அதில் கதை என்ன என்று தேடியே  வாசித்திருக்கிறேன். கதை என்று பெரிதாக எதுவும் இல்லாமல் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக சிறுகதை இருக்க முடியும் என்று இப்புத்தகத்தை வாசிக்கும் போது தெரிந்தது. என்ன ஒரு நுணுக்கமான சித்தரிப்புகள். அப்படியே மனதில் பதிந்து போகக்கூடியவை.

நாம் வாழ்க்கையை இப்படியெல்லாம் ரசிக்கவில்லையே என எண்ண வைக்கும் படி வர்ணனைகளை அமைத்திருக்கிறார். கதைகளை வாசிக்கும்போது நானும் மாறிவிடுவது போல தோன்றுகிறது. அவர் வாழை மரத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று எழுதியதை வாசிக்கும் போது எமக்கும் தொட வேண்டும் என்ற ஆசையை அவர் எழுத்துக்கள் கொண்டுவந்துவிடுகின்றன. மொத்தமாக 17 கதைகள். எல்லாமே சிறப்பானவை தான்.

(42) அபிதா - லா.ச.ரா

இலக்கிய வாசிப்பினுள்  நுழைந்த ஆரம்ப நாட்களிலேயே "அபிதா" என்ற பெயர் அறிமுகமாகிவிட்டிருந்தது. இருந்த போதும் இப்போது தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அபிதகுசாம்பாள் என்றால் உண்ணாமுலையம்மன். அபிதா - உண்ணா, அதிலிருந்து அபிதா என்றால் ஸ்பரிசிக்க இயலாத என்ற அர்த்தத்தை  தானே எடுத்ததாக லா.ச.ரா (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) குறிப்பிடுகிறார். ஒரு ஆணின் (அம்பி)  வாழ்க்கையில் ஒன்றித்துப்போன மூன்று பெண்களைப் பற்றியே நாவல் பேசுகிறது.சாவித்திரி-மனைவி, பணக்கார வீட்டு பெண். பணத்தையும் கொடுத்து பெண்ணையும் கொடுக்கிறார் சாவித்திரியின் அப்பா.

சகுந்தலை - சிறுவயது சிநேகிதி , கரடி மலையில், அவனது ஊரில் வாழ்ந்த காலத்தில் சகுந்தலையின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கிறான்.

அபிதா - சகுந்தலையின் மகள். நீண்ட நாட்களுக்கு பின் கரடி மலைக்கு வரும் அவன் சகுந்தலை இறந்துவிட்டதை அறிகிறான். அபிதாவில் சகுந்தலையை காண முயல்கிறான்.

பலரும் சொல்வது போல லா.ச.ராவின் நடை கவித்துவம் உள்ளது என்பதை வாசிக்கும் போது உணரக்கூடியதாக இருந்தது. மீள் வாசிப்பின் போது வேறுவிதமான அனுபவத்தை தரக்கூடியது என்றும் சொல்கிறார்கள். எனது முதல் வாசிப்பில் சில இடங்கள் வாசிக்க அயர்ச்சி தருவதாக இருந்தது. சில இடங்கள் கவித்துவம் மிக்கவையாக இருந்தது. அம்பி என்ற பாத்திரத்தை மையப்படுத்தியே கதை நகர்கிறது. மகள் போன்ற உறவுமுறை உடைய அபிதாவை சக்கு என்னும் சகுந்தலையாகவே அம்பி பார்க்கிறான். அம்பியின் மனவோட்டத்தையே நாவல் சித்தரிக்கிறது.

நாவல் அபிதா இறப்பதுடன்  முடிவடைகிறது .

 ‘‘அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாதகமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர்போல் அபிதா மலைமேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின் - ஒன்று, இரண்டு, மூன்றாவது படிமேல் உதிர்ந்து மலர்ந்தாள்.
இப்போ கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை.
 மரத்திலிருந்து பொன்ன‌ரளி ஒன்று நேரே அவள் மார் மேல் உதிர்ந்தது.
 சற்று எட்ட மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது".
என நாவல் முடிவடைகிறது.

அபிதா ஸ்பரிசிக்க இயலாதவள்.

Sunday, 13 December 2015

(41) நண்டு - சிவசங்கரி

நண்டு மணலில் குறித்த ஒரு இடத்தினூடாக தலையை நீட்டும் நண்டைப் பிடிக்க முயல்கையில் அது உட் சென்று வேறு ஒரு இடத்தினூடாக எட்டிப்பார்க்கும். அதைப்பிடிக்க சுற்றியுள்ள பிரதேசத்தை அப்படியே அகழ்ந்து எடுக்க வேண்டும். சில வேளைகளில் அப்போது கூட அகப்படாமல் போய்விடும். அதன் வளையானது சிக்கல் தன்மையுடையது. நண்டு எவ்வாறு மணலில் வளைகளை உருவாக்கி அகப்பட முடியாமல் வாழ்கிறதோ அதே தன்மையைப் புற்று நோயும் கொண்டுள்ளது.   இதனால் தான் புற்று நோய்க்கான சின்னமாக நண்டு வைக்கப்பட்டுள்ளது. நண்டு இலத்தின் மொழியில் cancer என்று குறிப்பிடப்படுகிறது.


தற்காலத்தில் இலங்கையில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கிருமி நாசினி அதிகம் பாவிக்கப்பட்ட மரக்கறிகள் , யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட த‌டை செய்யப்பட்ட ஆயுதங்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
"நண்டு" நாவலும் அவ்வாறான நோயின் கொடூரத்தை விபரிக்கும் ஒரு நாவல். சீதா என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியும் அவளது வட நாட்டு கணவன் ராம்குமாரின் அன்பு, அன்பான நண்பி சுமித்திரா , சுய நலம் மிக்க அக்கா கணவர் மூர்த்திக்கு இடையில் கதை பின்னப்பட்டுள்ளது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படும் சீதாவின் கதையூடாக நோயின் கொடூரம் , சுற்றியுள்ளவர்கள் அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், அதற்கான சிகிச்சை என்பன பற்றி எழுதப்பட்டுள்ளது. நோயைப்பற்றி ஒருவிதமான பயத்தை, சிறிய விழிப்புணர்வை உருவாக்குமாறு நாவல் எழுதப்பட்டுள்ளது.

(40) நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன்

எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் கட்டுரைத்தொகுப்பு.

நாஞ்சில் நாடனுக்கு சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களுடன் இருந்த நெருக்கத்தை பற்றி சிறப்பான இரு கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுந்தரராமசாமி தனது நாவலான "தலைகீழ் விகிதங்கள்" இற்கு மதிப்புரை எழுதியது பற்றியும் நாஞ்சில் நாடனுக்கும் நீல. பத்மநாபனுக்கும் பொதுவான குணங்களைக் குறிப்பிட்டது பற்றியும் சுவையாக எழுதியுள்ளார். வண்ணதாசன் பற்றிய கட்டுரையில் அவரது கதைகள் அன்பு பற்றியதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சிறுகதைகளின் சிறப்புக்கள், அவற்றின் மீது கூறப்படும் விமர்சனங்கள் பற்றியும் குறிப்பிட்டுளார்.

தனது எழுத்துக்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றின் பின்புலங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் நாஞ்சில் வட்டார வழக்கில் இருப்பதால் வாசிக்க கடினமானது என‌ விமர்சிப்பவர்கள் உண்டு. அது தொடர்பான தனது கருத்துக்களைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மது தொடர்பாக எழுதப்பட்ட  "நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று" என்ற கட்டுரை வாசிப்பவர்களுக்கு புன்னகையையும் அதே நேரத்தில் கவலையையும் தரக்கூடியது. அத்துடன் சுவடு, வன்மம், நீலகிரி அடுகுகளில் மூன்று நாட்கள்  என மொத்தமாக 17 கட்டுரைகள் உள்ளன.