Thursday, 2 September 2010

பார்த்திபன் கனவு

புத்தகம் : பார்த்திபன் கனவு
ஆசிரியர் : கல்கி
கல்கியின் முதலாவது வரலாற்றுப் புதினம் 'பார்த்திபன் கனவு' (1941 ). தமிழ் வரலாற்று புதின ஆசிரியர்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர் கல்கி. ஒப்பீட்டள‌வில் இவர் எழுதிய வரலாற்று புதினங்கள் எண்ணிக்கையில் சிறிது எனினும் தரத்தில் சிறந்தவை. பொன்னியின் செல்வனுக்கு நிகராக தமிழில் வேறு நாவல்கள் இல்லை எனலாம். கல்கியின் நாவல்களில் பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக பார்த்திபன் கனவு தான் சிறந்தது என சொல்வேன். சிவகாமியின் சபதம் இதற்கு பிறகு தான்.

ஒரு காலத்தில் கரிகால் சோழன், கிள்ளிவளவன், என புகழ் பூத்திருந்த சோழ ராட்சியம் பிற்காலத்தில் பல்லவர் ஆட்சி ஓங்க சிற்றரசாகிறது. மீண்டும் விஜயாலய சோழன் காலத்தில் ஓரளவு எழுச்சி பெற்றாலும் இடைப்பட்ட காலத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இந் நாவல் நரசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் சிற்றரசனாக கப்பம் கட்டி அரசாண்ட பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவைப்பற்றியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நுணுக்கமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டிருக்கிறது. இமயம் சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் சோழன் போன்ற புகழ் பூத்த சோழர்கள் பயன் படுத்திய வாளை கப்பம் கட்டி ஆட்சி செய்யும் சிற்றரசனான தான் பயன்படுத்த கூடாதென பத்திரப்படுத்தி வைத்தது மட்டுமல்லாது சோழர்கள் மீண்டும் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறான். தனது ஆசைகளை சித்திரமாகவும் தீட்டி வைக்கிறான். இவனது மனைவி சேர வம்சத்து அருள்மொழி தேவி. இவர்களது மகன் விக்ரமன்.

வாதாபிப்போரில் பல்லவர்களுடன் இணைந்து போரிட சம்மதித்தும் அதற்கு பதிலாக சோழர்களை கப்பம் செலுத்தாத சுதந்திர அரசாக்க வேண்டும் என கோரி நரசிம்ம பல்லவனுக்கு ஓலை அனுப்புகிறான். ஆனால் நரசிம்மபல்லவன் பதிலே அனுப்பவில்லை. இதனால் அவன் போரில் கலந்து கொள்ளாததுடன் கப்பம் செலுத்தவும் மறுக்கிறான். வாதாபியை வென்ற பல்லவப் பெரும் படையுடன் தோல்வி ஏற்படும் என தெரிந்தே சிறு படையுடன் சென்று மோதி வீர மரணம் அடைகிறான். (தென் நாட்டு சிற்றரசர்கள் சிலர் பல்லவர்களை வெறுத்ததால் அவர்கள் வாதாபிப்போரில் புலிகேசி சார்பாக போரிட்டார்கள் என்றும் பார்த்திபன் வட நாட்டவருடன் இணைய விருப்பமில்லாததால் போரில் கலந்துகொள்ளவில்லை எனவும் சிவகாமியின் சபதத்தில் வாதாபிப்போர் பற்றி குறிப்பிடும் போது பார்த்திப சோழன் பற்றிய குறிப்பு வருகிறது.)பல்லவர்கள் தமது எருது கொடியை வாதபி வெற்றியின் பின்னர் சிங்கமாக மாற்றி விட்டார்கள்.பல்லவர்களது கொடியின் சின்னம் எது என்பதில் எனக்கு குழப்பம் நாவல் வாசித்த போது தான் தீர்ந்தது.

இன் நாவலை வாசிப்பவர்களுக்கு பார்த்திபன் மீது பெரு மதிப்பு வரும் என்பது நிச்சயம். புலிக்கொடிக்கு அவமானம் நேரலாகாது என்பதற்காக தோல்வி நிச்சயம் என்று தெரிந்து போரிடுகிறான். சுதந்திர வேட்கை மிக்கவனாக அவனது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இந் நாவலின் முக்கிய பாத்திரங்களாக படகோட்டி பொன்னன், அவனது மனைவி
வள்ளியை சொல்லலாம். இவர்கள் பொன்னியின் செல்வன் பூங்குழலி, மந்தாகினிக்கு ஒப்பானவர்கள். சிவகாமியின் சபதத்தில் வரும் பரஞ்சோதி, நாகநந்தி எனப்படும் நீலகேசி போன்றவர்களையும் காண்லாம்.

தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நரபலி கொடுக்கும் கொடிய சமயக்கொள்கைகளை இல்லாது ஒளித்தமை, நீதி தவறாது ஆட்சி செய்தமை, மாறு வேடம் பூணும் திறமை என பேரரசர் நரசிம்மரின் பெருமைகள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளது. சிவனடியாராக மாறுவேடம் பூண்டு விக்கிரம சோழனுக்கும் உதவுகிறார். விக்ரமனும் தந்தை போலவே சுதந்திர வேட்கை உடையவனாக இருக்கிறான். நரசிம்மரின் மகள் குந்தவியை காதல் மணம் புரிகிறான். சுதந்திர சோழ அரசை சிறப்பாக ஆட்சி செய்கிறான். எனினும் பார்த்திபனின் ஆசையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சூரியனுக்கு முன் மற்றய கிரகங்கள் ஒளி மங்கி விடுவது போல இவனது புகழ் பரவ நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழ் தடையாக இருந்தது. வழி வழியாக சோழ அரசர்கள் தமது புதல்வர்களுக்கு பார்த்திப சோழனின் கனவையும் வீர மரணத்தையும் சொல்லியே வளர்க்கிறார்கள். 300 வருடங்களின் பின் வந்த ராஜராஜர், ராஜேந்திரர் காலத்திலேயே பார்த்திப சோழன் கனவு முழுமையாக நிறைவேறுகிறது.


பார்த்திபன் கனவு: சிறந்த வரலாற்று நாவல்.

(VERY GOOD)

Wednesday, 1 September 2010

வேங்கையின் மைந்தன்

புத்தகம் : வேங்கையின் மைந்தன்
ஆசிரியர்: அகிலன்
பொன்னியின் செல்வன் பாதிப்பால் அதில் வரும் வந்தியதேவன், குந்தவை போன்றவர்களை மீண்டும் காணும் ஆர்வத்தால் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாவல் அகிலனின் 'வேங்கையின் மைந்தன்'. இதன் ஆசிரியர் அகிலனுக்கு இந் நூலுக்காக சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. பொன்னியின் செல்வரின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தை பற்றி பேசுகிறது இந்நாவல். ராஜராஜசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் (பொன்னியின் செல்வனில் வானதி)பிறந்தவரே ராஜேந்திரன். ராஜேந்திர சோழன் 50 வயதளவிலேயே முடி சூடிக்கொண்டதால் அவரது முதுமைக்காலத்தை பற்றியே நாவல் பேசினாலும் அக் காலத்திலேயே ஈழம் சென்று மணிமுடி கைப்பற்றியமை , கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தமை போன்ற அவரது சாதனைகள் இடம்பெற்றமையால் வாசிக்க சுவையாக உள்ளது. இந் நாவலில் வந்தியதேவன் கிழவராக வருகிறார். ராஜேந்திரனுக்கு அரசியலில் ஆலோசனைகள் சொல்வதுடன் இளங்கோவுடன் ஈழம் சென்று மணிமகுடம் கைப்பற்ற உதவுகிறார்.


பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் போல வேங்கையின் மைந்தனில் இளங்கோ என்பவனே நாயகன். சோழப்பேரரசுக்காகவே தம் வாழ் நாட்களை அர்ப்பணித்த கொடும்பாளூர் வேளிர் குலத்தை சேர்ந்தவன். ராஜராஜசோழன் காலத்தில் ஈழப்போரில் மாண்ட பூதி விக்ரமகேசரி இவனது பெரிய பாட்டனார் ஆவார். ராஜேந்திரனுக்கு அருள்மொழி நங்கை, அம்மங்கை தேவி என இரு புதல்விகள். மூத்த புதல்வியான அருண்மொழி நங்கையையும் ரோகண இளவரசி ரோகினியையும் இளங்கோ திருமணம் செய்கிறான். அழகு, அறிவு, ஆற்றலில் சிறந்தவளான அருள்மொழியும் பேரழகியாக ரோகிணியும் என இரு நாயகிகள். பாண்டியர்கள் ஈழ மன்னரிடன் ஒப்படைத்த பாண்டிய மணிமுடியை கைப்பற்ற ராஜராகசோழன் காலத்திலேயே முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. ராஜேந்திரன் ஆட்சியில் இளங்கோ ஈழம் சென்று அம் முடியை கைப்பற்றுகிறான். ஈழ அரசனின் மகளான ரோகினியும் இளங்கோவும் காதலிக்கிறார்கள். ரோகிணி மூலமே மணிமுடி ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரிய வருகிறது. எதிரி நாட்டு வீரனை காதலிக்கும் ரோகிணி, தந்தைக்கும் , தம்பி காசிபனுக்கும் , நாட்டுக்கும் துரோகம் செய்கிறோமோ என துடிப்பதும் இளங்கோ மீது கொண்ட காதலில் இருந்து விடுபட முடியால் தவிப்பதுமாக இருக்கிறாள். ரோகிணி, இளங்கோ காதலே நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது பல இடங்களில் வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது.ஈழ நாட்டவர்களது உதவி இல்லாது தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் மணிமுடியை கைப்பற்றி இருக்க முடியாது.அதற்கு எதிரி அரசனின் மகளே உதவினாள் என்பது அதீத கற்பனையாகவே தோன்றுகிறது. சிங்கள அரசர்கள் பாண்டியர்களுடன் திருமண தொடர்புகள் வைத்திருந்ததாக வரலாற்றிலுள்ளது. சோழருக்கும் ஈழ மன்னர்களுக்கும் பாண்டிய மணிமுடி தொடர்பான போர் நீண்டகாலம் இருந்து வந்த நிலையில், எதிரி நாட்டு வீரனை ஈழ இளவரசி காதலித்தாள் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் போலவே உள்ளது. பொன்னியின் செல்வனில் சோழ நாட்டுக்காகவே வாழும் குந்தவை மதிப்பு மிக்க பெண்ணாக போற்றப்படுகிறார். அவள் எடுக்கும் முடிவுகள் சோழ சாம்ராட்சியங்களுக்காகவே இருக்கிறது. வேங்கையின் மைந்தனில் கூட அருள்மொழி நங்கை தனது நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய தன்னிகரற்ற பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள். அப்படி இருக்க ஈழ நாட்டு ரோகிணி மட்டும் காதலுக்காக நாட்டையும் தந்தை, தம்பியையும் இழக்க நினைக்கும் பெண்ணாக காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இலங்கை வரலாற்றைப்பொறுத்தவரை, அரச குடும்ப பெண்கள் பல சந்தர்ப்பங்களில் போரில் வெற்றி பெற துணையாக நின்றுள்ளனர். நியாயமற்ற வழியாக இருந்தாலும் கூட . துட்டகைமுனு , எல்லாளன் போரை உதாரணமாக கொள்ளலாம். அப்படியிருக்க மகிந்தரின் மகள் எவ்வாறு எதிரி வீரனை காதலித்து தனது தந்தையின் ஆட்சி வீழ காரணமாக இருந்திருப்பாள். உண்மையில் மணி முடி கைப்பற்ற துணை புரிந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்.

ஈழ அரசன் மகிந்தனின் அமைச்சர் கீர்த்தி பற்றி குறிப்பிட வேண்டும் .சிறந்த ராஜதந்திரியாகவும் தமிழர்களை வெறுப்பவராகவும் இருக்கிறார். அடுத்து சுந்தர பாண்டியன், பாண்டியர்கள் சோழ ராட்சியத்தை வீழ்த்த செய்யும் சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜேந்திரன் இச்சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ராஜ ராஜனின் கனவாக இருந்த பாண்டிய மணிமுடி ராஜேந்திரனாலேயே நிறைவேறுகிறது.ராஜேந்திரர் காலத்தில் சோழ ராட்சிய விரிவாக்கம் அதிகம் இடம்பெறுகிறது. ஈழம் மட்டுமல்லாது கடாரம் வரை சென்று வெல்கிறான்.

இந் நாவல் சோழ ரட்சிய விரிவு, ஈழப்போர்,தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைமை மாறியமை போன்றவற்றை முதன்மையாக பேசுகிறது. பொன்னியின் செல்வன் வந்தியதேவன் போல் அல்லாது இளங்கோ தனியாக நின்று வீர சாகசங்கள் செய்கிறான். அதனால் யதார்த்தத்தன்மை குறைவான உணர்வை தருகிறது. இளங்கோ, ரோகிணி காதல் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. மற்றும்படி ராஜேந்திர சோழன் ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நாவல்.


வேங்கையின் மைந்தன்: வரலாற்று ஆவலர்கள்வாசிக்க வேண்டிய நாவல்.

(GOOD)

Monday, 30 August 2010

அ.முத்துலிங்கம் கதைகள்

அ.முவின் எழுத்துக்கள் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் , எப்பொழுதும் எனது விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களில் அவர் இடம்பெறுவார்.எப்படி இப்பிடியெல்லாம் யோசித்து எழுதுகிறார் என பல தடவைகளில் வியந்திருக்கிறேன். அவரது அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி , மகாராஜாவின் ரயில் வண்டி போன்ற சிறுகதைத்தொகுப்புகளை நூலகத்தில் எடுத்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அப்புத்தகங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆவலில் பல கடைகள் ஏறியிறங்கியும் பலன் கிடைக்கவில்லை. புதிய பதிப்புகள் வரவில்லை போல என மனதை தேற்றி விட்டாலும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் போல தோன்றும் சுவை மிக்க அவரது கதைகள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் தீரவில்லை. வேறு வேலையாக புத்தகக்கடைக்கு சென்ற போது தற்செயலாக என் கண்ணில் கண்ட 'அ.முத்துலிங்கம் கதைகள்' என்ற‌ புத்தகத்தை உடனடியாக வாங்கி விட்ட பின் தான் நிம்மதியாக உணர முடிந்தது.

குறிப்பிட்ட சில கதைகளை தேர்ந்தெடுத்து மீள்வாசிப்பு செய்தேன். முன்னுரையில் தொலைந்து போன ஓரிரண்டு கதைகளை தவிர தான் எழுதிய 75 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளது என குறிப்பிட்டிருக்கிறர். உள்ளடக்கத்தில் தேடிய போது நான் மிகவும் எதிர்பார்த்த ஈழப்போராட்டம் பற்றி (?)அவர் எழுதிய கிட்டுவின் குரங்கு, பொற்கொடியும் பார்ப்பாள் ஆகிய இரு கதைகளையும் காணவில்லை. (உண்மையில் போராட்டத்திற்கும் கதையிற்கும் தொடர்பே இல்லை) அவ்விரு கதைகள் மாத்திரம் ஏன் தொலைந்தது என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவரது பூமியின் பாதி வயது என்ற தொகுப்பில் கிட்டுவின் குரங்கு என்ற கதையும் அமெரிக்கக்காரி என்ற தொகுப்பில் பொற்கொடியும் பார்ப்பாள் என்ற கதையும் இடம்பெற்றிருப்பதை அவற்றை வாசித்த போது தான் தெரிந்து கொண்டேன்.

எனக்கு 'அ.முத்துலிங்கம் கதைகள் ' என்ற சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒரு பொக்கிஷம் போல தான். நான் ஒருவருக்கும் அதை இரவல் கொடுக்க விரும்புவதில்லை. அடிக்கடி புத்தகத்தை எடுத்து ஏதாவது ஒரு கதையை வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த விடயம். பல நாடுகளில் பணி புரிய நேர்ந்ததால் அங்கு அவருக்கு கிடைத்த புதிய அனுபவங்கள், அதை எதிர் கொண்ட விதம் என கற்பனைகளையும் சேர்த்து அவரது சுவாரகசியமான எழுத்துக்களில் கதைகளாக்கியுள்ளார்.இவரது கதைகளின் சிறப்பே அவர் கையாளும் நகைச்சுவை தான்.


அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு 'வரவீணாவை' பிரபலப்படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷ’ பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.
- எலுமிச்சைஒருவரை அறிமுகப்படுத்தும் போது அவரை வர்ணிக்கும் முறை வித்தியாசமானதாக இருக்கும். இதைபோன்ற நகைச்சுவைத்தன்மையை வேறு எழுத்தாளர்களிடம் நான் கண்டதில்லை.

சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.
-வடக்கு வீதி


விஞ்ஞான, கணித, புவியியல், உயிரினங்கள் தொடர்பான தகவல்களையும் இவர் கதைகளில் கொண்டுவந்துவிடுவார்.

டோடோ, டோடோ என்று ஒரு சாதிப் பறவை. உருண்டையான உடம்பும் சின்ன கால்களுமாய் அந்தப்பறவை லட்சக்கணக்காய் ஒருகாலத்தில் இருந்தது. பறக்கக் கூடத்தெரியாது அந்த அப்பாவிப்பறவைக்கு. அதை மனிதன் விளையாட்டுக்காகச் சுட்டுச்சுட்டே கொன்றுவிட்டான். அந்தப் பறவை இனமே அழிந்துவிட்டது. ஒரு பறவை கூட இல்லை. படங்களில் பார்த்தால் தான் உண்டு.
-குதம்பேயின் தந்திரம்
அத்தொகுப்பில் அறியாமையால் கொல்லப்படும் நாய் பற்றிய 'எலுமிச்சை' என்ற கதை எனக்கு பிடித்தமான ஒன்று. ஊர் மக்கள் விசர் நாயென எண்ணி அடித்து கொன்று விடுவார்கள். அதை தாட்ட இடத்தில் இது வரை காய்க்காமல் இருந்த எலுமிச்சை மரம் அந்த வருடம் முதன் முதலில் காய்த்து தள்ளியது என கதையை முடித்திருப்பார். அக்கதையை வாசித்த போது எமது ஊரிலும் அவ்வாறு கொல்லப்பட்ட நாயின் குரல் தூரத்தில் கேட்டது.

புராணக்கதைகளையும் தேவைக்கு ஏற்றது போல் சொல்ல தவறுவதில்லை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்களாக என்ற குறிப்புடன் எழுதப்பட 'குந்தியின் தந்திரம்' என்ற கதையில் நான்கு கணவர்களை கொண்டவள் என்ற பழிச்சொல்லில் இருந்து தன்னைக்காப்பாற்ற திரௌபதியை தனது ஐந்து மகன்களுக்கும் மணம் செய்விக்க குந்தி செய்த தந்திரம் பற்றி மாற்றுப்பார்வையுடன் எழுதியுள்ளார்.


உயிரினங்கள் மீது அவர் கொண்ட அன்பை அவரது கதைகளில் காணலாம். புத்த்கத்தையே தன் நண்பனால் வேட்டையாடப்பட்ட காகத்திற்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கும் தான் சமர்ப்பிக்கிறார். எஸ்.ரா தனது கதாவிலாசம் என்ற நூலில் முத்துலிங்கம் பற்றி அறிமுகம் செய்யும் போது இத்தொகுப்பில் உள்ள‌ 'துரி' என்ற கதை பற்றி கூறியுள்ளார். வாசித்து சுவைக்க எண்ணற்ற விடயங்களையும் அபூர்வமான தகவல்கலையும் உள்ளடக்கிய சிறுகதைத்தொகுப்பு.அ.முத்துலிங்கம் கதைகள்: வாசித்து சுவைக்க வேண்டிய புத்தகம்.

(VERY GOOD)

Saturday, 28 August 2010

துணையெழுத்து

புத்தகம்: துணையெழுத்து
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன்
இணையம் மூலமாகவே எஸ்.ராவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் கட்டுரைத்தொகுப்புகள்,சிறுகதைகள், நாவல்கள் என ஓரளவு அவரது எழுத்துக்களின் அறிமுகம் இருக்கிறது. நாவல்களில் உபபாண்டவம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. இதிகாசங்கள் மீதான புதிய பார்வை பெற காரணமாயிருந்தது. அவரது சிறுகதைகளை விட கட்டுரைகளே எனக்கு பிடித்தவை. இவரது எழுத்துக்கள் எளிமைமையும் ஆழமும் கொண்டவை.

விகடன் பிரசுரமாக வெளிவந்த துணையெழுத்து தமிழில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.பல்வேறு இடங்களில் கிடைத்த அனுபவங்களையும் , தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள், ஊர்கள், நகரங்கள் போன்றவைகளை பதிவு செய்துள்ளார். எந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் கவனிக்க தவறிய விடயங்கள் பலவற்றை எவ்வளவு ஆழமாக அவதானித்திருக்கிறார் என்பது வியப்பாகவும் அதே நேரத்தில் எம் மீது ஒரு வித‌ குற்ற உணர்வையும் வரவைக்கிறது. மனிதர்கள் தான் எவ்வளவு விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் அழுக்குகளை வெளி வேஷங்களால் நாம் மறைத்து வைத்து நல்லவர்களாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் எம்மையறியாமலே எமது உண்மையான முகங்கள்வெளிப்படுவது உண்டு. அடுத்தவர்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக்கொள்கிறோம். தேவையான போது அரவணைத்துக்கொள்கிறோம். தேவை முடிந்த பின் தூக்கி வீசி விடுகிறோம். இக்கட்டுரைகளில் அறிமுகமாகும் கதாபாத்திரங்களினூடு எம்மையும் எம்மைச் சூழ்ந்துள்ளவர்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

எதையுமே ஆழமாக நோக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அன்றாட வாழ்க்கையில் அழகான சிறு விடயங்கள் பலவற்றை கூட எனது அவசரமான வாழ்க்கையில் அனுபவிக்க தவறிவிட்டிருக்கிறேன். அழகான பொழுதுகள் கூட நினைவில் இருப்பதில்லை.ஒவ்வொரு நாட்களும் ஒரே மாதிரியே இருப்பதாகவே தோன்றும். ஒவ்வொரு பொழுதையும் அழகாக்கிக்கொள்ள முடியுமாக இருந்தாலும் அவற்றை விட்டு ஒரு சலிப்பான வாழ்க்கையையே வாழப்பழகிக்கொண்டு இருக்கிறோம். நிசப்தமான இரவு கூட எவ்வளவு அற்புதமானது, ரசிப்பதற்கு பல வண்ணங்களை தன்னுள் கொண்டுள்ளது . ஆனால் நாமோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆசிரியரின் அனுபவங்களினூடு நாம் இழந்து விட்ட , ரசிக்க தவறிய பொழுதுகளை மீட்டிப் பார்க்கக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சையை தருகிறது. வாழ்க்கையை சுவாரகசியமாக அனுபவித்து வாழ வேண்டும் , அதற்கான சந்தர்ப்பங்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் புத்தகங்களில் ஒன்று. புத்தகம் சிறந்த நண்பன், வழிகாட்டி என்பதை துணையெழுத்து படித்தவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.துணையெழுத்து: எல்லோரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.
(VERY GOOD)

Friday, 27 August 2010

சிவகாமியின் சபதம்

புத்தகம் : சிவகாமியின் சபதம்
ஆசிரியர்: கல்கி

வரலாற்றில் விருப்பமற்றவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் வாசித்த பின் அதே கதைப்பின்னணி கொண்டு எழுதப்பட்ட நாவல்களான வேங்கையின் மைந்தன் (அகிலன்), காவிரி மைந்தன் (அனுஷா வெங்கடேஷ்) நாவல்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டாலும் அடுத்ததாக நான் தெரிவு செய்தது கல்கியின் சிவகாமியின் சபதம் தான். அதற்கு கல்கியின் எழுத்து மீது ஏற்பட்ட ஆர்வமே காரணம். பொன்னியின் செல்வன் தான் கல்கியின் சிறந்த நாவல் என்று ஏற்கனவே அறிந்து இருந்ததால் சிவகாமியின் சபதம் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கவில்லை. வாசித்து முடித்த போது நிச்சயமாக வரலாற்று புனைவுகளில் சிறந்த ஒன்றாக இந் நாவலையும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.இருந்த போதும் பொன்னியின் செல்வன் போல மனதோடு என்றுமே மறக்க முடியாதவாறு ஒன்றிப்போகவில்லை.

பல்லவ மன்னனான மகேந்திரவர்மன், அவனது மகனான நரசிம்ம வர்மன் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கதையின் முன் பகுதி மகேந்திர வர்மனையும் பின் பகுதி நரசிம்ம வர்மனையும் கதை நாயகனாகக்கொண்ட போதும் பொன்னியின் செல்வனின் வந்திய தேவன் போல மனதில் நிற்பது சேனாதிபதி பரஞ்சோதி தான். திருநாவுக்கரசர் மடத்திற்கு படிக்க வரும் பரஞ்சோதி மகேந்திரவர்மனின் சேனாதிபதியாகவும் நரசிம்மவர்மனின் நண்பனாகவும் இருந்து வாதாபி படையெடுப்பை வெற்றிகரமாக்க முன்னின்று செயற்பட்டு இறுதியில் சிறுதொண்டநாயனார் ஆகிறார்.இந்த பரஞ்சோதியே வாதாபியில் இருந்து தமிழகத்துக்கு முதன் முதலில் விநாயகர் வழிபாட்டை கொண்டு வந்தவர்.

பல்லவ இளவரசன் நரசிம்மனும் நடனக்கலையில் சிறந்த ஆயனச்சிற்பியின் மகள் சிவகாமியும் காதலிக்கிறார்கள்.சிற்பியின் மகளை பட்டத்து ராணியாக்க விரும்பாத மகேந்திரவர்மன், சிற்பியின் மகள் இளவரசின் மேல் கொண்ட காதல் வெற்றி பெறுமா என்ற தயக்கத்துடன் வாழும் சிவகாமி, பெற்றோரிடம் தான் சிற்பி மகள் மேல் கொண்ட காதலுக்குரிய சம்மதத்தை பெறுவது சாத்தியமா என்ற தவிர்ப்புடன் வாழும் நரசிம்மன் என கதை ஆரம்பிக்கிறது. கதையினூடு மகேந்திர வர்மன் கலைகள் மீது கொண்ட காதலும் கலைஞர்கள் மேல் கொண்ட மதிப்பும் மாறுவேடம் போடுவதில் சிறந்தவராக இருந்திருக்கிரார் என்பதும் சொல்லப்பட்டிருக்கின்றன. நூற்றாண்டுகள் கடந்தாலும் அழியாத அஜந்தா ஓவியங்கள், மாமல்ல புர சிற்பங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

பெரும் படையுடன் வந்து காஞ்சிக்கோட்டையை முற்றுகையிட்டு போர் புரிந்த வாதாபி அரசன் புலிகேசி கோட்டையை கைப்பற்ற முடியாமல் திரும்பிச்சென்ற போது நகருக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறான். சிவகாமியையும் பிடித்து செல்கிறான்.இப்போரில் காயமடைந்த மகேந்திரவர்மன் இறக்கும் போது நரசிம்ம வர்மனிடம் பல்லவர்களுக்கு ஏற்பட்ட பழியைப்போக்க வேண்டும் என வாக்குறுதி பெறுகிறான்.ஒன்பது வருடங்களின் பின் நரசிம்மன் பரஞ்சோதி துணையுடன் பெரும் படையுடன் சென்று வாதாபியை வெல்கிறான்.

நரசிம்மன் பாண்டிய இளவரசியை திருமணம் செய்கிறான்.அவனுக்கு குந்தவி, மகேந்திரன் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.சிறை வைக்கப்பட்டிருக்கும் சிவகாமி வாதாபிப்போரின் பின் விடுதலை பெற்று காஞ்சி வந்த பின் இவற்றை தெரிந்து கொள்கிறாள். இறைவனுக்கு தன் கலையை அர்ப்பணிக்கிறாள். "தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே" என நடனமாடுகிறாள். பல்லவன் அவளது நடனத்தை பார்த்து சென்றதை கூட அவள் கவனிக்கவில்லை என நாவல் முற்றுப்பெறுகிறது. சிவகாமியின் காதலை ஆசிரியர் நிறைவேற்றி வைக்கவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டாலும் கற்பனை கதாபாத்திரமான‌ சிவகாமியை நரசிம்மவர்மன் திருமணம் செய்ததாகவும் எழுத முடியாது என தேற்றிக்கொள்ளவேண்டி இருக்கிறது.(இந் நாவலில் வரும் சிவகாமி கதாபாத்திரம் கற்பனையானதாக தான் இருக்க கூடும். ஆனால் பார்த்திபன் கனவு என்கிற கல்கியின் முந்தய நாவலிலும் சிவகாமி பற்றிய வருவதால் தீர்மானிக்க முடியவில்லை. வரலாறு அறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.)


சிவகாமியின் சபதம் என்றவுடன் நினைவில் வரும் ஒரு கதாபாத்திரம் வாதாபி ஒற்றன் நாகநந்தி . இவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.இந் நாவலில் வரும் குண்டோதரன் , சத்ருக்னா போன்றவர்கள் சிறந்த ஒற்றர்களாக இருந்தாலும் பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியானின் இடத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. பொன்னியின் செல்வர் தனது நடவடிக்கைகள் மூலம் மனதை கவர்ந்துவிடுகிறார். வந்தியதேவனுடனான அவரது உடையாடல்கள் சிறப்பானதாக அமைக்கப்பட்டிருக்கும். பொன்னியின் செல்வன் வந்தியதேவன் நட்பின் ஆழம் நரசிம்ம வர்மன் பரஞ்சோதியிடம் இல்லை.

திருநாவுக்கரசர், பாண்டியன் நெடுமாறன், மங்கையற்கரசி , இலங்கை இளவரசன் மானவர்மன் போன்ற நிஜ கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறார்கள். இக்காலத்தில் சிற்பம், சித்திரம் , நடனம், சங்கீதம் என தென்னாட்டில் கலை வளர்ச்சி உச்சமாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. பல்லவ அரசர்களான மகேந்திரன், நரசிம்மனின் வீரம், கலை மீது கொண்ட தீராத காதல் , சேனாதிபதி பரஞ்சோதியின் வீரம், சிறப்பு அவர்கள் காலத்தில் காஞ்சியில் எழுந்த கலை வளர்ச்சி, வாதாபிப்போர் போன்ற வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட, தமிழின் குறிப்பிடத்தக்க வரலாற்று புனைவு நாவல்களில் நிச்சயம் சிவகமியின் சபதத்திற்கும் இடம் உள்ளது.

சிவகாமியின் சபதம் - சரித்திர‌ நாவல்களில் விருப்பம் உள்ளவர்களை நிச்சயம் கவரும்.
(GOOD)

Thursday, 19 August 2010

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

புத்தகம்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
பதிப்பகம்: உயிர்மை

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவரது புத்தகங்கள் எப்போது வெளியாகும் என காத்திருந்து வாங்கும் வாசகர்களில் நானும் அடங்குவேன்.சுயசரிதைத்தன்மை கொண்ட இவரது சிறுகதைகள் சுவை மிக்கவை. தான் அவதானித்த சிறு விடயத்தை கூட நுட்பமாக எழுதி வாசகர்களை ஆச்சரியப்பட வைத்துவிடுவார். அவர் கையாளும் உவமைகள் வித்தியாசமானவையாகவும் நகைச்சுவை மிக்கதாகவும் இருக்கும். இவரது கதைகள் எப்போதும் மகிழ்ச்சியைத்தருவதாகவே அமைக்கப்பட்டிருக்கும். தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை கூட நகைச்சுவையாக்கி வாசகர்களை சிரிக்க வைத்துவிடுவது மட்டுமன்றி தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களை உபயோகித்து முகம் சுழிக்க வைப்பதுமில்லை.பிறந்த கொக்குவில், வேலை செய்த நாடுகள் , தற்போது வசிக்கும் கனடா என அவர் வசித்த நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களும் அந்த நாட்டு பழக்க வழக்கங்களுமடங்கிய சுவைமிக்க சுய‌ரிதைத்தன்மை கொண்ட சிறுகதைகளே "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" . ஆரம்பதிலேயே நாவலில் வருபவை அனைத்தும் கற்பனை, அதில் உண்மையை கண்டுபிடித்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என கூறி தப்பித்துக்கொள்கிறார்.
ஒவ்வொரு கதைகளும் தனிக்கதை போல தெரிந்தாலும் தொடர்ச்சியாக வாசிக்கும் போது நாவல் வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 46 தனிக்கதைகளைக்கொண்ட தொகுப்பில் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சிறபானதாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ரசித்து ருசித்து வாசிக்க கூடியவை. பல இடங்களில் எவ்வாறு இப்படி எல்லாம் யோசித்து எழுதுகிறார் என்று அட போட வைக்கிறது.எனக்கு பக்கத்தில் இருந்து சோதனை எழுதினவன் ராஜகோபால். சுகிர்தம் டீச்சர் சரித்திரத்தில் பத்து கேள்விகளில் ஒன்று வலகம்பாகு என்று சொல்லியிருந்ததால் இவன் எல்லாக் கேள்விகளுக்கும் 'வலகம்பாகு ' 'வலகம்பாகு ' என்று ஒரே விடையை எழுதி பத்து மார்க் சம்பாதித்துவிட்டான். இவன் பிற்காலத்தில் படித்து பெரிய டொக்டராக வந்தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே இஞ்செக்ஷன் போட்டிருப்பானோ தெரியாது.

என்னுடையது 'பாலும் தெளிதேனும் ' என்று தொடங்கும். எனக்காகவே அவ்வையார் பாடி வைத்ததுபோல நாலே நாலு மணியான வரிகள். கொக்குவில் ஸ்டேசனில் நிற்காமல் போகும் எக்ஸ்பிரஸ் ரயில்வண்டிபோல ஸ்பீட் எடுத்துப் பாடுவேன். முழுப்பாடலையும் பத்து செக்கண்டுகளுக்குள் பாடி முடித்துவிடுவேன். கடைசி அடியில் 'சங்கத் தமிழ் மூன்றும் ' என்ற இடம் வரும்போது வகுப்பில் மூன்று பேர்தான் மிச்சம் இருப்போம். நான், குணவதி, சுகிர்தம் டீச்சர்.

- நான் பாடகன் ஆனது

பிரச்சினைக்குரிய விடயங்களை அவர் எழுதுவதில்லை என குற்றச்சாடு உண்டு. அரை குறையாக தெரிந்து கொண்டு தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற build up இல் எழுதுவதை விட அவற்றை பற்றி எழுதாமல் விடுவதே நல்லது.அந்த வகையில் அ.மு வில் குற்றம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமூக சீரழிவுகள், பிரச்சினைகளை அவர் கருப்பொருளாக எடுத்துக்கொள்வதில்லை. புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுவதும் இல்லை.ஆனால் தனது கதைகள் மூலம் வாசகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறார். அது எனக்கு பிடித்திருப்பதால் அவரது அடுத்த புத்தகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிற‌து.
உண்மை கலந்த நாட்குறிப்புகள் : மிக இனிய வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய புத்தகம்.
(VERY GOOD)

Wednesday, 18 August 2010

பொன்னியின் செல்வன் - ஒரு இனிய அனுபவம்


எட்டு வயது இருக்கலாம், கிடைத்த சிறுவர் புத்தகங்கள் யாவற்றையும் வாசித்து தீர்த்துவிட்ட நேரத்தில் என் கண்ணில் பட்டது பைண்ட் செய்து வைத்திருந்த "பொன்னியின் செல்வன் ". அந்த வயதில் வாசிக்க முயற்சி செய்து வர்ணனைகளும் தமிழும் பிடிபடாமல் போக இது நமக்கு சரிப்பட்டு வராது என ஒதுக்கி விட்டேன். அதற்கு பின் 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பல புத்தகங்கள் வாசித்திருந்தாலும், சிறுவயதில் ஏற்பட்ட மலைப்பு பொன்னியின் செல்வனை மட்டும் தொடுவதற்கு தைரியத்தை தரவில்லை. வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்களில் மிகச்சிறந்தது பொன்னியின் செல்வன் என்பது நான் அறியாததும் இல்லை.அதன் சிறப்புகளை பல பதிவுகளிலும் படித்திருக்கிறேன். அண்மையில் எனது புத்தக ஆர்வத்தை பார்த்த ஒருவர் பொன்னியின் செல்வன் பற்றி சிலாகிக்கும் போது நான் வாசிக்கவில்லை என்று சொல்லியதற்கு அவர் பார்த்த பார்வை இருக்குதே.எனது கௌரவத்தை காப்பாற்றி கொள்வதற்கு என்றாலும் பொன்னியின் செல்வன் வாசிப்பது என்று முடிவு செய்தேன்.

ஏதோ பள்ளிக்கூட வரலாற்று புத்தகம் வாசிப்பது போன்ற கசப்பான பாவனையில் படிக்க தொடங்கி ஒரு சில பக்கங்கள் படித்ததுமே விளங்கிவிட்டது எத்தனை வருடத்தை வீணாக்கி விட்டேன் என்பது. என்ன அருமையா நாவல். வேறு வேலை எதுவுமே செய்ய தோன்றாதவாறு நாவல் என்னை கட்டிப்போட்டு விட்டது.பல நாட்களாகவே கனவில் வந்தியதேவன், அருண்மொழி தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன்,அழ்வார்க்கடியான், நந்தினி போன்றவர்கள் தான் வருகிறார்கள்.பொன்னியின் செல்வன் வாசித்த எல்லோருக்கும் இந்த அனுபவம் கிடைத்து இருக்கும் என்பது உண்மை. பலரையும் போலவே நானும் ஆதித்த கரிகாலனை கொன்றது யாராக இருக்கும் என அறிய சோழ வரலாற்று நூல்கள் எடுத்து படித்து ஆராய்ச்சி செய்கிறேன்.

சாண்டில்யன் நாவல்களில் வரும் வர்ணனைகள் பல நேரங்களில் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பொன்னியின் செல்வனில் வரும் வர்ணனைக்காகவே மீண்டும் வாசிக்கலாம். அந்த காலத்திற்கு எம்மை அழைத்து சென்று எம்மை மகிழ்விக்கிறார் ஆசிரியர். வந்தியதேவனின் குறும்புகள்,ஆபத்திலிருந்து தப்புவதற்கு கையாளும் வழிகள், ஆழ்வார்க்கடியானுக்கும் வந்தியதேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் போன்றவற்றை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? மணிமேகலை பாடுவதாக வரும் "இனியபுனல் அருவி தவழ் இன்பமலைச் சாரலிலே " என்ற பாடல் மிக நன்றாகஉள்ளது.இப்படிசொல்லிக்கொண்டே போகலாம்.


பொன்னியின்செல்வனில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் வந்திய தேவன். நாவல் முழுவதையும் அவனே ஆக்கிரமித்துக்கொள்கிறான்.குந்தவையின் கணவர் என்பதை தவிர வந்தியதேவனைப்பற்றிய தகவல்கள் வேறு இல்லாத போதும் அவனை முதன்மையான பாத்திரமாக கொண்டு 5 பாக (2000 பக்கங்களுக்கு மேல்) நாவலை சுவையாக எழுதியது ஆசிரியரின் திறமை.அவனை அதிவீர சாகசங்களை செய்பவனாக காட்டவில்லை. ஆபத்து நேரங்களில் ஏதோ வகையில் அவனுக்கு உதவிகள் கிடைக்கிறது. அவசர முடிவுகள் எடுத்து பிரச்சினைகளில் போய் மாட்டிக்கொள்ளும் சாதரண மனிதன் போல இருப்பதால் அவனை எல்லோருக்கும் பிடித்து விடுகிறது.ஆனால் அதற்கும் மேல் அன்பும் மதிப்பும் பொன்னியின் செல்வரில் ஏற்படுகிறது.கதையை வாசித்து முடித்த போது அவரது பெருந்தன்மையும் வீரமும் மனதில் நிறைந்திருப்பது காரணமாக இருக்கலாம்.

சோழ அரசை வீழ்த்த பாண்டிய ஆபத்துதவிகள் செய்யும் முயற்சிகள்,பழுவேட்டையர்கள், கொடும்பாளூர் வேளார், முதன்மந்திரி அநிருத்தர் சோழ அரசில் கொண்டிருந்த விசுவாசம் , ஒற்றர்களின் திறமை , குந்தவையின் செல்வாக்கும், ஆதித்த கரிகாலனின் வீரம் என்பன ஒரளவு விரிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.இந்த நாவலில் கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் சொல்லப்பட்டிருந்தாலும் காதலை முன்னிலைப்படுத்தி நாவல் செல்லவில்லை.காதலையும் அரசியலையும் தேவையான அளவில் கலந்து கொடுக்கப்பட்ட நாவல் என்பதால் தான் பொன்னியின் செல்வன் பெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் ஆசிரியர் நாவலை திடீரென முடித்து விட்டது போன்ற உணர்வு தோன்றியது. பல கதாபாத்திரங்கள் என்ன ஆனார்கள் என்பது நாவலில் சொல்லப்படவில்லை. வாசகர் குழம்பும் வகையில் சில சம்பவங்கள் உள்ளன.

1. நந்தினி : வீரபாண்டியனின் மனைவியா அல்லது மகளா என்பது குழப்பமாகவே சொல்லப்பட்டுள்ளது.

2. சேந்தன் அமுதன் : சேந்தன் அமுதனை உத்தம சோழனாக மாற்றியது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. அருண்மொழிதேவனுக்கு முன் உத்தம சோழன் என்பவன் ஆட்சி செய்ததாக வரலாற்றில் உள்ள போது, ஏதோ ஒரு நந்தவனத்தில் வளர்ந்த (அரச குலத்தில் பிறந்திருந்தாலும்), யுத்தம் பற்றிய அறிவு இல்லாத ஒருவர் தான் உத்தம சோழன் என்ற பெயரில் ஆட்சி செய்ததாக ஆசிரியர் எழுதியதன் காரணம் என்னவாக இருக்கும். அதுவும் சேந்தன் அமுதனை உத்தமச்சோழனாக மாற்றுவது ஆசிரியர் எடுத்த திடீர் முடிவு என ஒரு பதிவில் வாசித்த நினைவு உள்ளது.

ஆதித்த கரிகாலன் கொலை கூட குழப்பமாக இருந்தாலும்,உண்மையில் அங்கே என்ன தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் தான் எழுத முடியும். அவன் கடம்பூரில் மர்மமான முறையில் கொல்லப் பட்டான் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன.கொலை பற்றிய வலுவான அத்தாட்சிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கொலை பற்றி வெவ்வேறு கோணங்களில் எழுதப்படிருப்பதால் வாசகனுக்கு இது பற்றி மேலும் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

பொன்னியின் செல்வன் : மிக இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய நாவல். வரலாற்று பிரியர்களாக இருந்தால் அதற்கும் மேலே.
(VERY GOOD)