Friday, 27 August 2010

சிவகாமியின் சபதம்

புத்தகம் : சிவகாமியின் சபதம்
ஆசிரியர்: கல்கி

வரலாற்றில் விருப்பமற்றவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் வாசித்த பின் அதே கதைப்பின்னணி கொண்டு எழுதப்பட்ட நாவல்களான வேங்கையின் மைந்தன் (அகிலன்), காவிரி மைந்தன் (அனுஷா வெங்கடேஷ்) நாவல்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டாலும் அடுத்ததாக நான் தெரிவு செய்தது கல்கியின் சிவகாமியின் சபதம் தான். அதற்கு கல்கியின் எழுத்து மீது ஏற்பட்ட ஆர்வமே காரணம். பொன்னியின் செல்வன் தான் கல்கியின் சிறந்த நாவல் என்று ஏற்கனவே அறிந்து இருந்ததால் சிவகாமியின் சபதம் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கவில்லை. வாசித்து முடித்த போது நிச்சயமாக வரலாற்று புனைவுகளில் சிறந்த ஒன்றாக இந் நாவலையும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.இருந்த போதும் பொன்னியின் செல்வன் போல மனதோடு என்றுமே மறக்க முடியாதவாறு ஒன்றிப்போகவில்லை.

பல்லவ மன்னனான மகேந்திரவர்மன், அவனது மகனான நரசிம்ம வர்மன் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கதையின் முன் பகுதி மகேந்திர வர்மனையும் பின் பகுதி நரசிம்ம வர்மனையும் கதை நாயகனாகக்கொண்ட போதும் பொன்னியின் செல்வனின் வந்திய தேவன் போல மனதில் நிற்பது சேனாதிபதி பரஞ்சோதி தான். திருநாவுக்கரசர் மடத்திற்கு படிக்க வரும் பரஞ்சோதி மகேந்திரவர்மனின் சேனாதிபதியாகவும் நரசிம்மவர்மனின் நண்பனாகவும் இருந்து வாதாபி படையெடுப்பை வெற்றிகரமாக்க முன்னின்று செயற்பட்டு இறுதியில் சிறுதொண்டநாயனார் ஆகிறார்.இந்த பரஞ்சோதியே வாதாபியில் இருந்து தமிழகத்துக்கு முதன் முதலில் விநாயகர் வழிபாட்டை கொண்டு வந்தவர்.

பல்லவ இளவரசன் நரசிம்மனும் நடனக்கலையில் சிறந்த ஆயனச்சிற்பியின் மகள் சிவகாமியும் காதலிக்கிறார்கள்.சிற்பியின் மகளை பட்டத்து ராணியாக்க விரும்பாத மகேந்திரவர்மன், சிற்பியின் மகள் இளவரசின் மேல் கொண்ட காதல் வெற்றி பெறுமா என்ற தயக்கத்துடன் வாழும் சிவகாமி, பெற்றோரிடம் தான் சிற்பி மகள் மேல் கொண்ட காதலுக்குரிய சம்மதத்தை பெறுவது சாத்தியமா என்ற தவிர்ப்புடன் வாழும் நரசிம்மன் என கதை ஆரம்பிக்கிறது. கதையினூடு மகேந்திர வர்மன் கலைகள் மீது கொண்ட காதலும் கலைஞர்கள் மேல் கொண்ட மதிப்பும் மாறுவேடம் போடுவதில் சிறந்தவராக இருந்திருக்கிரார் என்பதும் சொல்லப்பட்டிருக்கின்றன. நூற்றாண்டுகள் கடந்தாலும் அழியாத அஜந்தா ஓவியங்கள், மாமல்ல புர சிற்பங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

பெரும் படையுடன் வந்து காஞ்சிக்கோட்டையை முற்றுகையிட்டு போர் புரிந்த வாதாபி அரசன் புலிகேசி கோட்டையை கைப்பற்ற முடியாமல் திரும்பிச்சென்ற போது நகருக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறான். சிவகாமியையும் பிடித்து செல்கிறான்.இப்போரில் காயமடைந்த மகேந்திரவர்மன் இறக்கும் போது நரசிம்ம வர்மனிடம் பல்லவர்களுக்கு ஏற்பட்ட பழியைப்போக்க வேண்டும் என வாக்குறுதி பெறுகிறான்.ஒன்பது வருடங்களின் பின் நரசிம்மன் பரஞ்சோதி துணையுடன் பெரும் படையுடன் சென்று வாதாபியை வெல்கிறான்.

நரசிம்மன் பாண்டிய இளவரசியை திருமணம் செய்கிறான்.அவனுக்கு குந்தவி, மகேந்திரன் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.சிறை வைக்கப்பட்டிருக்கும் சிவகாமி வாதாபிப்போரின் பின் விடுதலை பெற்று காஞ்சி வந்த பின் இவற்றை தெரிந்து கொள்கிறாள். இறைவனுக்கு தன் கலையை அர்ப்பணிக்கிறாள். "தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே" என நடனமாடுகிறாள். பல்லவன் அவளது நடனத்தை பார்த்து சென்றதை கூட அவள் கவனிக்கவில்லை என நாவல் முற்றுப்பெறுகிறது. சிவகாமியின் காதலை ஆசிரியர் நிறைவேற்றி வைக்கவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டாலும் கற்பனை கதாபாத்திரமான‌ சிவகாமியை நரசிம்மவர்மன் திருமணம் செய்ததாகவும் எழுத முடியாது என தேற்றிக்கொள்ளவேண்டி இருக்கிறது.(இந் நாவலில் வரும் சிவகாமி கதாபாத்திரம் கற்பனையானதாக தான் இருக்க கூடும். ஆனால் பார்த்திபன் கனவு என்கிற கல்கியின் முந்தய நாவலிலும் சிவகாமி பற்றிய வருவதால் தீர்மானிக்க முடியவில்லை. வரலாறு அறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.)


சிவகாமியின் சபதம் என்றவுடன் நினைவில் வரும் ஒரு கதாபாத்திரம் வாதாபி ஒற்றன் நாகநந்தி . இவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.இந் நாவலில் வரும் குண்டோதரன் , சத்ருக்னா போன்றவர்கள் சிறந்த ஒற்றர்களாக இருந்தாலும் பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியானின் இடத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. பொன்னியின் செல்வர் தனது நடவடிக்கைகள் மூலம் மனதை கவர்ந்துவிடுகிறார். வந்தியதேவனுடனான அவரது உடையாடல்கள் சிறப்பானதாக அமைக்கப்பட்டிருக்கும். பொன்னியின் செல்வன் வந்தியதேவன் நட்பின் ஆழம் நரசிம்ம வர்மன் பரஞ்சோதியிடம் இல்லை.

திருநாவுக்கரசர், பாண்டியன் நெடுமாறன், மங்கையற்கரசி , இலங்கை இளவரசன் மானவர்மன் போன்ற நிஜ கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறார்கள். இக்காலத்தில் சிற்பம், சித்திரம் , நடனம், சங்கீதம் என தென்னாட்டில் கலை வளர்ச்சி உச்சமாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. பல்லவ அரசர்களான மகேந்திரன், நரசிம்மனின் வீரம், கலை மீது கொண்ட தீராத காதல் , சேனாதிபதி பரஞ்சோதியின் வீரம், சிறப்பு அவர்கள் காலத்தில் காஞ்சியில் எழுந்த கலை வளர்ச்சி, வாதாபிப்போர் போன்ற வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட, தமிழின் குறிப்பிடத்தக்க வரலாற்று புனைவு நாவல்களில் நிச்சயம் சிவகமியின் சபதத்திற்கும் இடம் உள்ளது.

சிவகாமியின் சபதம் - சரித்திர‌ நாவல்களில் விருப்பம் உள்ளவர்களை நிச்சயம் கவரும்.
(GOOD)

No comments:

Post a Comment