அ.முவின் எழுத்துக்கள் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் , எப்பொழுதும் எனது விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களில் அவர் இடம்பெறுவார்.எப்படி இப்பிடியெல்லாம் யோசித்து எழுதுகிறார் என பல தடவைகளில் வியந்திருக்கிறேன். அவரது அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி , மகாராஜாவின் ரயில் வண்டி போன்ற சிறுகதைத்தொகுப்புகளை நூலகத்தில் எடுத்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அப்புத்தகங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆவலில் பல கடைகள் ஏறியிறங்கியும் பலன் கிடைக்கவில்லை. புதிய பதிப்புகள் வரவில்லை போல என மனதை தேற்றி விட்டாலும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் போல தோன்றும் சுவை மிக்க அவரது கதைகள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் தீரவில்லை. வேறு வேலையாக புத்தகக்கடைக்கு சென்ற போது தற்செயலாக என் கண்ணில் கண்ட 'அ.முத்துலிங்கம் கதைகள்' என்ற புத்தகத்தை உடனடியாக வாங்கி விட்ட பின் தான் நிம்மதியாக உணர முடிந்தது.
குறிப்பிட்ட சில கதைகளை தேர்ந்தெடுத்து மீள்வாசிப்பு செய்தேன். முன்னுரையில் தொலைந்து போன ஓரிரண்டு கதைகளை தவிர தான் எழுதிய 75 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளது என குறிப்பிட்டிருக்கிறர். உள்ளடக்கத்தில் தேடிய போது நான் மிகவும் எதிர்பார்த்த ஈழப்போராட்டம் பற்றி (?)அவர் எழுதிய கிட்டுவின் குரங்கு, பொற்கொடியும் பார்ப்பாள் ஆகிய இரு கதைகளையும் காணவில்லை. (உண்மையில் போராட்டத்திற்கும் கதையிற்கும் தொடர்பே இல்லை) அவ்விரு கதைகள் மாத்திரம் ஏன் தொலைந்தது என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவரது பூமியின் பாதி வயது என்ற தொகுப்பில் கிட்டுவின் குரங்கு என்ற கதையும் அமெரிக்கக்காரி என்ற தொகுப்பில் பொற்கொடியும் பார்ப்பாள் என்ற கதையும் இடம்பெற்றிருப்பதை அவற்றை வாசித்த போது தான் தெரிந்து கொண்டேன்.
எனக்கு 'அ.முத்துலிங்கம் கதைகள் ' என்ற சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒரு பொக்கிஷம் போல தான். நான் ஒருவருக்கும் அதை இரவல் கொடுக்க விரும்புவதில்லை. அடிக்கடி புத்தகத்தை எடுத்து ஏதாவது ஒரு கதையை வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த விடயம். பல நாடுகளில் பணி புரிய நேர்ந்ததால் அங்கு அவருக்கு கிடைத்த புதிய அனுபவங்கள், அதை எதிர் கொண்ட விதம் என கற்பனைகளையும் சேர்த்து அவரது சுவாரகசியமான எழுத்துக்களில் கதைகளாக்கியுள்ளார்.இவரது கதைகளின் சிறப்பே அவர் கையாளும் நகைச்சுவை தான்.
அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு 'வரவீணாவை' பிரபலப்படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷ’ பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.
- எலுமிச்சை
ஒருவரை அறிமுகப்படுத்தும் போது அவரை வர்ணிக்கும் முறை வித்தியாசமானதாக இருக்கும். இதைபோன்ற நகைச்சுவைத்தன்மையை வேறு எழுத்தாளர்களிடம் நான் கண்டதில்லை.
சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.
-வடக்கு வீதி
விஞ்ஞான, கணித, புவியியல், உயிரினங்கள் தொடர்பான தகவல்களையும் இவர் கதைகளில் கொண்டுவந்துவிடுவார்.
டோடோ, டோடோ என்று ஒரு சாதிப் பறவை. உருண்டையான உடம்பும் சின்ன கால்களுமாய் அந்தப்பறவை லட்சக்கணக்காய் ஒருகாலத்தில் இருந்தது. பறக்கக் கூடத்தெரியாது அந்த அப்பாவிப்பறவைக்கு. அதை மனிதன் விளையாட்டுக்காகச் சுட்டுச்சுட்டே கொன்றுவிட்டான். அந்தப் பறவை இனமே அழிந்துவிட்டது. ஒரு பறவை கூட இல்லை. படங்களில் பார்த்தால் தான் உண்டு.
-குதம்பேயின் தந்திரம்
அத்தொகுப்பில் அறியாமையால் கொல்லப்படும் நாய் பற்றிய 'எலுமிச்சை' என்ற கதை எனக்கு பிடித்தமான ஒன்று. ஊர் மக்கள் விசர் நாயென எண்ணி அடித்து கொன்று விடுவார்கள். அதை தாட்ட இடத்தில் இது வரை காய்க்காமல் இருந்த எலுமிச்சை மரம் அந்த வருடம் முதன் முதலில் காய்த்து தள்ளியது என கதையை முடித்திருப்பார். அக்கதையை வாசித்த போது எமது ஊரிலும் அவ்வாறு கொல்லப்பட்ட நாயின் குரல் தூரத்தில் கேட்டது.
புராணக்கதைகளையும் தேவைக்கு ஏற்றது போல் சொல்ல தவறுவதில்லை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்களாக என்ற குறிப்புடன் எழுதப்பட 'குந்தியின் தந்திரம்' என்ற கதையில் நான்கு கணவர்களை கொண்டவள் என்ற பழிச்சொல்லில் இருந்து தன்னைக்காப்பாற்ற திரௌபதியை தனது ஐந்து மகன்களுக்கும் மணம் செய்விக்க குந்தி செய்த தந்திரம் பற்றி மாற்றுப்பார்வையுடன் எழுதியுள்ளார்.
உயிரினங்கள் மீது அவர் கொண்ட அன்பை அவரது கதைகளில் காணலாம். புத்த்கத்தையே தன் நண்பனால் வேட்டையாடப்பட்ட காகத்திற்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கும் தான் சமர்ப்பிக்கிறார். எஸ்.ரா தனது கதாவிலாசம் என்ற நூலில் முத்துலிங்கம் பற்றி அறிமுகம் செய்யும் போது இத்தொகுப்பில் உள்ள 'துரி' என்ற கதை பற்றி கூறியுள்ளார். வாசித்து சுவைக்க எண்ணற்ற விடயங்களையும் அபூர்வமான தகவல்கலையும் உள்ளடக்கிய சிறுகதைத்தொகுப்பு.
அ.முத்துலிங்கம் கதைகள்: வாசித்து சுவைக்க வேண்டிய புத்தகம்.
(VERY GOOD)
No comments:
Post a Comment