ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
பதிப்பகம்: உயிர்மை
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவரது புத்தகங்கள் எப்போது வெளியாகும் என காத்திருந்து வாங்கும் வாசகர்களில் நானும் அடங்குவேன்.சுயசரிதைத்தன்மை கொண்ட இவரது சிறுகதைகள் சுவை மிக்கவை. தான் அவதானித்த சிறு விடயத்தை கூட நுட்பமாக எழுதி வாசகர்களை ஆச்சரியப்பட வைத்துவிடுவார். அவர் கையாளும் உவமைகள் வித்தியாசமானவையாகவும் நகைச்சுவை மிக்கதாகவும் இருக்கும். இவரது கதைகள் எப்போதும் மகிழ்ச்சியைத்தருவதாகவே அமைக்கப்பட்டிருக்கும். தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை கூட நகைச்சுவையாக்கி வாசகர்களை சிரிக்க வைத்துவிடுவது மட்டுமன்றி தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களை உபயோகித்து முகம் சுழிக்க வைப்பதுமில்லை.
பிறந்த கொக்குவில், வேலை செய்த நாடுகள் , தற்போது வசிக்கும் கனடா என அவர் வசித்த நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களும் அந்த நாட்டு பழக்க வழக்கங்களுமடங்கிய சுவைமிக்க சுயரிதைத்தன்மை கொண்ட சிறுகதைகளே "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" . ஆரம்பதிலேயே நாவலில் வருபவை அனைத்தும் கற்பனை, அதில் உண்மையை கண்டுபிடித்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என கூறி தப்பித்துக்கொள்கிறார்.
ஒவ்வொரு கதைகளும் தனிக்கதை போல தெரிந்தாலும் தொடர்ச்சியாக வாசிக்கும் போது நாவல் வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 46 தனிக்கதைகளைக்கொண்ட தொகுப்பில் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சிறபானதாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ரசித்து ருசித்து வாசிக்க கூடியவை. பல இடங்களில் எவ்வாறு இப்படி எல்லாம் யோசித்து எழுதுகிறார் என்று அட போட வைக்கிறது.
எனக்கு பக்கத்தில் இருந்து சோதனை எழுதினவன் ராஜகோபால். சுகிர்தம் டீச்சர் சரித்திரத்தில் பத்து கேள்விகளில் ஒன்று வலகம்பாகு என்று சொல்லியிருந்ததால் இவன் எல்லாக் கேள்விகளுக்கும் 'வலகம்பாகு ' 'வலகம்பாகு ' என்று ஒரே விடையை எழுதி பத்து மார்க் சம்பாதித்துவிட்டான். இவன் பிற்காலத்தில் படித்து பெரிய டொக்டராக வந்தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே இஞ்செக்ஷன் போட்டிருப்பானோ தெரியாது.
என்னுடையது 'பாலும் தெளிதேனும் ' என்று தொடங்கும். எனக்காகவே அவ்வையார் பாடி வைத்ததுபோல நாலே நாலு மணியான வரிகள். கொக்குவில் ஸ்டேசனில் நிற்காமல் போகும் எக்ஸ்பிரஸ் ரயில்வண்டிபோல ஸ்பீட் எடுத்துப் பாடுவேன். முழுப்பாடலையும் பத்து செக்கண்டுகளுக்குள் பாடி முடித்துவிடுவேன். கடைசி அடியில் 'சங்கத் தமிழ் மூன்றும் ' என்ற இடம் வரும்போது வகுப்பில் மூன்று பேர்தான் மிச்சம் இருப்போம். நான், குணவதி, சுகிர்தம் டீச்சர்.
- நான் பாடகன் ஆனது
பிரச்சினைக்குரிய விடயங்களை அவர் எழுதுவதில்லை என குற்றச்சாடு உண்டு. அரை குறையாக தெரிந்து கொண்டு தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற build up இல் எழுதுவதை விட அவற்றை பற்றி எழுதாமல் விடுவதே நல்லது.அந்த வகையில் அ.மு வில் குற்றம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமூக சீரழிவுகள், பிரச்சினைகளை அவர் கருப்பொருளாக எடுத்துக்கொள்வதில்லை. புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுவதும் இல்லை.ஆனால் தனது கதைகள் மூலம் வாசகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறார். அது எனக்கு பிடித்திருப்பதால் அவரது அடுத்த புத்தகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
உண்மை கலந்த நாட்குறிப்புகள் : மிக இனிய வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய புத்தகம்.
(VERY GOOD)
No comments:
Post a Comment