Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, 7 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 3


ராஜன்

 பஷீரின் " உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது" நாவலில்  குஞ்ஞுபாத்துமாவின் அம்மா தனது அப்பாவிடம் ஆனை இருந்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனையை வைத்து ஒருவரின் சமூக அந்தஸ்த்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனையை வீட்டில் பாசமாக,  ஐஷ்வர்யத்திற்காக  வளர்த்திருக்கிறார்கள்.ஆனை காட்டில் வாழ வேண்டிய மிருகம் அதை வீட்டில் வளர்ப்பது ஒரு வகையில் நாம் ஆனையை வதைப்பதற்கு சமன் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். கோயிலில் நின்றிருக்கும் ஆனையை இன்றும் ஆசையுடன் பார்க்கின்றோம் எனினும் அது காட்டு விலங்காக அறியப்படுவதால் ஆனை பற்றிய புரிதல்கள் குறைந்து விட்டது. அண்மையில்  அன்னாசிப் பழத்தில் சொருகப்பட்ட வெடிவெடித்ததால் இறந்த ஆனை  எல்லோரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. ஆனை மனிதர்களால் ஆபத்து காரணங்கள் கூறி கொல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுவருகிறது. ஜெயமோகனின் யானை டாக்டர் கதை படித்தவர்களுக்கு யானையின் மேல் ஒரு புரிதலும் விருப்பும் வந்துவிடும். அதன் தொடர்ச்சியாக ஆனையில்லா, துளி, ராஜன் போன்ற கதைகளை  படிக்கும் போது ஆனை செல்லப்பிள்ளையாகி தெய்வமாகிவிடுகிறது..

எட்டுக்கட்டு வீட்டின் வலிய சங்கரன் ஆனை இறந்த பின் தம்புரானுக்கு ஐஷ்வர்யம் இல்லை என்ற மனக்குறை. பாறசாலை ஆறாட்டுக்கு சென்ற போது நெல்லுவிளை வீட்டின்( நாலு கட்டு வீடு) ஆனை பர்வதராஜனைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து அதை எப்படியாவது தனது அரண்மனைக்கு கொண்டுவர தம்புரான் நினைக்கிறார்.பர்வதராஜன் 11 அடி உயரம் உடையது,வலிய சங்கரனை விட அரை அடி  அதிகம். எட்டுக்கட்டு, நாலுகட்டு வீடு பற்றிய குறிப்பிலிருந்து செல்வம் கூடிய குடும்பம் எது என்ற அனுமானத்திற்கு வாசகர் வந்துவிடமுடியும். இப்போது இந்த பர்வதராஜனால் கௌரவம் முழுவதும் அந்தக் குடும்பத்திற்கு போகப் போகிறது என்பது தான் தம்புரானின் பிரச்சனை. எட்டு ஆனை விலை சொல்லியும் பர்வதராஜனை கொடுக்க முடியாது என நெல்லுவிளை வீட்டார் சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த ஆனையைக் கொல்வது என்று முடிவெடுத்து பூதத்தான் நாயரை வரவைக்கிறார்கள்.

வலியசங்கரனைப் பார்த்துக்கொண்ட பூதத்தான் நாயர் ஆனையோடே பிறந்து வளர்ந்தவன். ஆனை கடவுள் போல. தம்புரானின் காரியஸ்தன் கோவிந்தன் நாயர், ஆனைக்கு  விசம் வைத்து கொல்லும்படி பூதத்தானிடம் சொல்ல பூதத்தான் மறுத்துவிடுகிறான். அவர்களிருவருக்குமிடையான உரையாடலே இந்தக் கதையின் முக்கிய பகுதியாக நினைக்கிறேன். 
போர் என்றால் ஆனையைக் கொல்வதில்லையா.அது போல தான் இதுவும், எந்த சாபமும் வராது என பூதத்தானுக்கு சமாதானம் சொல்லும் போது,  "யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்பிளையாக்கும்” என்று பூதத்தான் சொல்கிறான்.


கேரளா என்ற தேசம் பரசுராமரால் ஆனைக்காக உருவாக்கப்பட்டது. மனிதன் தனக்கு வாழ இடம் தேவை என ஆனையிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பூதத்தான் சொல்லும் இந்த கதையை ஜெயமோகனின் எழுத்துக்களில் வாசிக்கும் போது நன்றாக உள்ளது. பூதத்தானை குடும்பத்தை கொன்றுவிடுவார்கள் என்று எவ்வளவோ மிரட்டுகிறார்கள்.வாசிப்பவர்களுக்கும் பதட்டம் .

கதையை எப்படி முடிக்கப் போகிறார் என்ற பதட்டம் வந்துவிடுகிறது. பர்வதராஜன் பூதத்தானை தூக்கி ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இருவருமே திரும்பிவரவில்லை என்று கதை கவித்துவமாக முடிகிறது. 


" சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி,  தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது"  என்று ஒரு வரி உள்ளது. ஜெயமோகனது  கதைகளில் விபரிக்கப்படும் துல்லிய வர்ணனை அப்படியே காட்சியாக மனதிலே தங்கிவிடக்கூடியது.

இங்கே ராஜன் என்பது பர்வத ராஜன் மட்டுமல்ல, பூதத்தானும் தான்.

Thursday, 4 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 2

துளி

ஆனையில்லா கதையைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்ய நான் தெரிவு செய்த கதை துளி. இதுவும் ஒரு ஆனை பற்றிய கதை என்பதோடு ஆனையில்லா கதையில் வரும் மனிதர்கள் இக்கதையிலும் வருவதால் ஒரு தொடர்ச்சியாக வாசித்து பார்க்க நினைத்தேன். யானையின் பெயர் கோபாலகிருஷ்ணன். ஆனையில்லா கதையில் ஐயப்பனின் வீட்டிற்குள் புகுந்த யானை.


மகாதேவர் கோயிலின் திருவிழாவுக்கு ஆயத்தமாக வேண்டிய யானை காலையில் இருந்து பிளிறிக்கொண்டிருக்கிறது. அதற்கு நோயுக்கான எந்த அறிகுறியும் இல்லை.நன்றாக சாப்பிட்டும் விட்டது. யானையைப் பார்த்துக்கொள்ளும் ராமன் நாயருக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி யானைக்கு மனசு சரியில்லை என சொல்கிறார்.

திற்பரப்பில் இருந்து கொச்சுகேசவன் என்ற யானை திருவிழாவுக்காக வந்து கொண்டிருக்கிறது. அதை தனது எட்டாவது அறிவால் அறிந்து தான் இந்த யானை படபடத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் நடந்த களியல் கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கொச்சுகேசவனுக்கு மரியாதை அதிகமாக கிடைத்ததால் கோபாலகிருஷ்ணனுக்கு கொச்சுகேசவன் இங்கு வருவது பிடிக்கவில்லை. என்னவாக இருந்தாலும் மகாதேவர் கோயில் யானை  கோபாலகிருஷ்ணன் தானே. திருவிழாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியதும் கொச்சு கேசவன் வரப்போவதை கோபாலகிருஷ்ணன்  உணர்ந்திருப்பான். அதனால தான் படபடப்பு.

இரு யானையைப் பற்றிய விபரங்கள் அழகாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கொச்சுகேசவனின் அப்பா கொச்சு கணபதி திருவோண நட்சத்திரக்காரன் என்பதும் கோபாலகிருஷ்ணனும் குறையில்லை ரோகிணி நட்சத்திரம் என்பதும் என அந்த கால மனிதர்கள் யானையின் நட்சத்திரங்களையும் தெரிந்து கதைப்பது யானையுடன் மனிதனுக்கு இருக்கும் உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

"தலையெடுப்புன்னா அவனாக்கும்… இவனுக்கு ஒரு பம்மலு உண்டு… கிண்ணம் களவாண்டுட்டு போறதுமாதிரி ஒரு நடை” 
என கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி என்பதால் கிண்ணம் களவாடிப் போற நடை என கரடி நாயர் சொல்கிறார். ஜெயமோகன் கதைகளில் யானையை வீட்டுப் பிள்ளை மாதிரி தானே  பார்த்துக் கொள்கிறார்கள்.

"கோபாலா, மரியாதைக்கு இருந்துக்கோ. நாலாளு கூடுத ஸ்தலமாக்கும். உனக்க அப்பன் தென்னிமலை கேசவனுக்க பேரை களையப்பிடாது கேட்டியா?”என்று ராமன் நாயர் யானையிடம் சொல்வதும் "சிவன்  மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?”  மாதவன் பிள்ளை சொல்வதும் என இந்தக் கதையிலும் மனிதர்களின் சின்ன சின்ன உரையாடல்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.

கருப்பன் என்ற நாய் தான் இரு யானைகளையும் சேர்த்து வைக்கிறது. இந்தக்கதையே மனிதனுக்கு புரிந்து கொள்ள முடியாத மிருகங்களின் உலகத்தை அழகாக சொல்வது தான்.

நண்பர்களுக்கிடையிலான சண்டை, கோயில் திருவிழாவுக்கான வேலைகள், அன்னதானம் தொடர்பான தகவல்களென வாசிக்கும் போது அப்படியே ஒரு காட்சியாக கற்பனை விரிந்து கொள்கிறது.

அன்னதானத்தில் கிறிஸ்தவரான டீக்கனாரின் பங்கு இருப்பதும் யானையின் பிரச்சனை முடிந்தவுடன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி ஏற்றுவேண்டும் என கரடி நாயர் சொல்வதும் என மதம் தாண்டிய மனிதர்களை   பார்க்கமுடிகிறது.

ஆனை வரிசையில் சிறப்பான ஒரு கதை.

Sunday, 23 February 2020

(83)காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராவின் கட்டுரைகள், நாவல்கள் விரும்பி வாசித்தாலும் சிறுகதைகள் பெரிதாக வாசித்தது இல்லை. இப் புத்தகத்தில் 13 சிறுகதைகள் உள்ளன. முதல் கதை 'காந்தியோடு பேசுவேன்'. ஏற்கனவே வாசித்ததாக நினைவு. அருமையான கதை. பெண்கள் ஏன் காந்தியை விரும்பினார்கள் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொள்ளலாம். காந்தியையும் புரிந்து கொள்ள உதவும்.காந்தியை நேரில் சென்று சந்தித்த கதை சொல்லியின் அம்மாவினூடாக காந்தி காலத்தையும் தற்காலத்தையும் இணைத்து எழுதப்பட்ட கதை. காந்தி பற்றிய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை.
பாதியில் முடிந்த படம், அருவிக்கு தெரியும், ஷெர்லி அப்படித்தான் போன்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.ராவின் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்க  வேண்டும் என்ற ஆர்வத்தை இப் புத்தகம் தந்துள்ளது.

Sunday, 24 December 2017

(72) உலகப் புகழ் பெற்ற மூக்கு - பஷீர்

பஷீர் மலையாள இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். இவரது நாவல்கள் மட்டுமே இதுவரை வாசித்து இருக்கிறேன். உலகப் புகழ் பெற்ற மூக்கு இவரது தேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பு. அனைத்துக் கதைகளுமே சிறப்பானவை. துயர சம்பவங்களைக்கூட மெல்லிய புன்னகையுடன் வாசிக்க வைக்கும் எழுத்து பஷீருடையது.

Sunday, 20 August 2017

(71) ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயமோகனின் கட்டுரைகள்  எனக்கு மிகவும் பிடிக்கும்.கதைகள் என்று பார்த்தால் அறம் சிறுகதைத் தொகுப்பு, விசும்பு அறிவியல் சிறுகதைகள் விரும்பி  வாசித்து இருக்கிறேன். அவரது  இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகள் சில வாசித்து இருக்கிறேன். எனக்கு அவரது சிறுகதைகளைப் புரிந்து கொள்ள முடியாது என நினைத்திருந்ததால் சிறுகதைகள் பெரிதாகப் படித்தது இல்லை. ஆனால் அண்மையில் அவரது இணையத்தளத்தில் வெளியான  'வெற்றி' என்ற கதை மிகவும் பிடித்து இருந்ததால் அவரது சிறுகதைத் தொகுப்பை முயற்சி செய்வோம் என முடிவு செய்து வாசித்தேன். நிதானமாக வாசித்த போது கதைகள் புரிந்தன போல் தான் இருக்கின்றன. ஆனால் சில வாசகர்களின் கடிதங்களை வாசிக்கும் போது அட நான் இப்படி யோசிக்கவில்லையே, புரிந்து கொள்ள இன்னும் பயிற்சி வேண்டும் எனத் தோன்றுகிறது. மொத்தமாக 57 கதைகள் கொண்ட தொகுப்பு.கட்டாயமாக வாசிக்க வேண்டிய கதைகள் பல உள்ளன.

Monday, 30 August 2010

அ.முத்துலிங்கம் கதைகள்

அ.முவின் எழுத்துக்கள் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் , எப்பொழுதும் எனது விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களில் அவர் இடம்பெறுவார்.எப்படி இப்பிடியெல்லாம் யோசித்து எழுதுகிறார் என பல தடவைகளில் வியந்திருக்கிறேன். அவரது அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி , மகாராஜாவின் ரயில் வண்டி போன்ற சிறுகதைத்தொகுப்புகளை நூலகத்தில் எடுத்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அப்புத்தகங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆவலில் பல கடைகள் ஏறியிறங்கியும் பலன் கிடைக்கவில்லை. புதிய பதிப்புகள் வரவில்லை போல என மனதை தேற்றி விட்டாலும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் போல தோன்றும் சுவை மிக்க அவரது கதைகள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் தீரவில்லை. வேறு வேலையாக புத்தகக்கடைக்கு சென்ற போது தற்செயலாக என் கண்ணில் கண்ட 'அ.முத்துலிங்கம் கதைகள்' என்ற‌ புத்தகத்தை உடனடியாக வாங்கி விட்ட பின் தான் நிம்மதியாக உணர முடிந்தது.

குறிப்பிட்ட சில கதைகளை தேர்ந்தெடுத்து மீள்வாசிப்பு செய்தேன். முன்னுரையில் தொலைந்து போன ஓரிரண்டு கதைகளை தவிர தான் எழுதிய 75 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளது என குறிப்பிட்டிருக்கிறர். உள்ளடக்கத்தில் தேடிய போது நான் மிகவும் எதிர்பார்த்த ஈழப்போராட்டம் பற்றி (?)அவர் எழுதிய கிட்டுவின் குரங்கு, பொற்கொடியும் பார்ப்பாள் ஆகிய இரு கதைகளையும் காணவில்லை. (உண்மையில் போராட்டத்திற்கும் கதையிற்கும் தொடர்பே இல்லை) அவ்விரு கதைகள் மாத்திரம் ஏன் தொலைந்தது என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவரது பூமியின் பாதி வயது என்ற தொகுப்பில் கிட்டுவின் குரங்கு என்ற கதையும் அமெரிக்கக்காரி என்ற தொகுப்பில் பொற்கொடியும் பார்ப்பாள் என்ற கதையும் இடம்பெற்றிருப்பதை அவற்றை வாசித்த போது தான் தெரிந்து கொண்டேன்.

எனக்கு 'அ.முத்துலிங்கம் கதைகள் ' என்ற சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒரு பொக்கிஷம் போல தான். நான் ஒருவருக்கும் அதை இரவல் கொடுக்க விரும்புவதில்லை. அடிக்கடி புத்தகத்தை எடுத்து ஏதாவது ஒரு கதையை வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த விடயம். பல நாடுகளில் பணி புரிய நேர்ந்ததால் அங்கு அவருக்கு கிடைத்த புதிய அனுபவங்கள், அதை எதிர் கொண்ட விதம் என கற்பனைகளையும் சேர்த்து அவரது சுவாரகசியமான எழுத்துக்களில் கதைகளாக்கியுள்ளார்.இவரது கதைகளின் சிறப்பே அவர் கையாளும் நகைச்சுவை தான்.


அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு 'வரவீணாவை' பிரபலப்படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷ’ பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.
- எலுமிச்சை



ஒருவரை அறிமுகப்படுத்தும் போது அவரை வர்ணிக்கும் முறை வித்தியாசமானதாக இருக்கும். இதைபோன்ற நகைச்சுவைத்தன்மையை வேறு எழுத்தாளர்களிடம் நான் கண்டதில்லை.

சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.
-வடக்கு வீதி


விஞ்ஞான, கணித, புவியியல், உயிரினங்கள் தொடர்பான தகவல்களையும் இவர் கதைகளில் கொண்டுவந்துவிடுவார்.

டோடோ, டோடோ என்று ஒரு சாதிப் பறவை. உருண்டையான உடம்பும் சின்ன கால்களுமாய் அந்தப்பறவை லட்சக்கணக்காய் ஒருகாலத்தில் இருந்தது. பறக்கக் கூடத்தெரியாது அந்த அப்பாவிப்பறவைக்கு. அதை மனிதன் விளையாட்டுக்காகச் சுட்டுச்சுட்டே கொன்றுவிட்டான். அந்தப் பறவை இனமே அழிந்துவிட்டது. ஒரு பறவை கூட இல்லை. படங்களில் பார்த்தால் தான் உண்டு.
-குதம்பேயின் தந்திரம்




அத்தொகுப்பில் அறியாமையால் கொல்லப்படும் நாய் பற்றிய 'எலுமிச்சை' என்ற கதை எனக்கு பிடித்தமான ஒன்று. ஊர் மக்கள் விசர் நாயென எண்ணி அடித்து கொன்று விடுவார்கள். அதை தாட்ட இடத்தில் இது வரை காய்க்காமல் இருந்த எலுமிச்சை மரம் அந்த வருடம் முதன் முதலில் காய்த்து தள்ளியது என கதையை முடித்திருப்பார். அக்கதையை வாசித்த போது எமது ஊரிலும் அவ்வாறு கொல்லப்பட்ட நாயின் குரல் தூரத்தில் கேட்டது.

புராணக்கதைகளையும் தேவைக்கு ஏற்றது போல் சொல்ல தவறுவதில்லை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்களாக என்ற குறிப்புடன் எழுதப்பட 'குந்தியின் தந்திரம்' என்ற கதையில் நான்கு கணவர்களை கொண்டவள் என்ற பழிச்சொல்லில் இருந்து தன்னைக்காப்பாற்ற திரௌபதியை தனது ஐந்து மகன்களுக்கும் மணம் செய்விக்க குந்தி செய்த தந்திரம் பற்றி மாற்றுப்பார்வையுடன் எழுதியுள்ளார்.


உயிரினங்கள் மீது அவர் கொண்ட அன்பை அவரது கதைகளில் காணலாம். புத்த்கத்தையே தன் நண்பனால் வேட்டையாடப்பட்ட காகத்திற்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கும் தான் சமர்ப்பிக்கிறார். எஸ்.ரா தனது கதாவிலாசம் என்ற நூலில் முத்துலிங்கம் பற்றி அறிமுகம் செய்யும் போது இத்தொகுப்பில் உள்ள‌ 'துரி' என்ற கதை பற்றி கூறியுள்ளார். வாசித்து சுவைக்க எண்ணற்ற விடயங்களையும் அபூர்வமான தகவல்கலையும் உள்ளடக்கிய சிறுகதைத்தொகுப்பு.



அ.முத்துலிங்கம் கதைகள்: வாசித்து சுவைக்க வேண்டிய புத்தகம்.

(VERY GOOD)

Thursday, 19 August 2010

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

புத்தகம்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
பதிப்பகம்: உயிர்மை

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவரது புத்தகங்கள் எப்போது வெளியாகும் என காத்திருந்து வாங்கும் வாசகர்களில் நானும் அடங்குவேன்.சுயசரிதைத்தன்மை கொண்ட இவரது சிறுகதைகள் சுவை மிக்கவை. தான் அவதானித்த சிறு விடயத்தை கூட நுட்பமாக எழுதி வாசகர்களை ஆச்சரியப்பட வைத்துவிடுவார். அவர் கையாளும் உவமைகள் வித்தியாசமானவையாகவும் நகைச்சுவை மிக்கதாகவும் இருக்கும். இவரது கதைகள் எப்போதும் மகிழ்ச்சியைத்தருவதாகவே அமைக்கப்பட்டிருக்கும். தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை கூட நகைச்சுவையாக்கி வாசகர்களை சிரிக்க வைத்துவிடுவது மட்டுமன்றி தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களை உபயோகித்து முகம் சுழிக்க வைப்பதுமில்லை.



பிறந்த கொக்குவில், வேலை செய்த நாடுகள் , தற்போது வசிக்கும் கனடா என அவர் வசித்த நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களும் அந்த நாட்டு பழக்க வழக்கங்களுமடங்கிய சுவைமிக்க சுய‌ரிதைத்தன்மை கொண்ட சிறுகதைகளே "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" . ஆரம்பதிலேயே நாவலில் வருபவை அனைத்தும் கற்பனை, அதில் உண்மையை கண்டுபிடித்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என கூறி தப்பித்துக்கொள்கிறார்.
ஒவ்வொரு கதைகளும் தனிக்கதை போல தெரிந்தாலும் தொடர்ச்சியாக வாசிக்கும் போது நாவல் வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 46 தனிக்கதைகளைக்கொண்ட தொகுப்பில் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சிறபானதாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ரசித்து ருசித்து வாசிக்க கூடியவை. பல இடங்களில் எவ்வாறு இப்படி எல்லாம் யோசித்து எழுதுகிறார் என்று அட போட வைக்கிறது.



எனக்கு பக்கத்தில் இருந்து சோதனை எழுதினவன் ராஜகோபால். சுகிர்தம் டீச்சர் சரித்திரத்தில் பத்து கேள்விகளில் ஒன்று வலகம்பாகு என்று சொல்லியிருந்ததால் இவன் எல்லாக் கேள்விகளுக்கும் 'வலகம்பாகு ' 'வலகம்பாகு ' என்று ஒரே விடையை எழுதி பத்து மார்க் சம்பாதித்துவிட்டான். இவன் பிற்காலத்தில் படித்து பெரிய டொக்டராக வந்தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே இஞ்செக்ஷன் போட்டிருப்பானோ தெரியாது.

என்னுடையது 'பாலும் தெளிதேனும் ' என்று தொடங்கும். எனக்காகவே அவ்வையார் பாடி வைத்ததுபோல நாலே நாலு மணியான வரிகள். கொக்குவில் ஸ்டேசனில் நிற்காமல் போகும் எக்ஸ்பிரஸ் ரயில்வண்டிபோல ஸ்பீட் எடுத்துப் பாடுவேன். முழுப்பாடலையும் பத்து செக்கண்டுகளுக்குள் பாடி முடித்துவிடுவேன். கடைசி அடியில் 'சங்கத் தமிழ் மூன்றும் ' என்ற இடம் வரும்போது வகுப்பில் மூன்று பேர்தான் மிச்சம் இருப்போம். நான், குணவதி, சுகிர்தம் டீச்சர்.

- நான் பாடகன் ஆனது

பிரச்சினைக்குரிய விடயங்களை அவர் எழுதுவதில்லை என குற்றச்சாடு உண்டு. அரை குறையாக தெரிந்து கொண்டு தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற build up இல் எழுதுவதை விட அவற்றை பற்றி எழுதாமல் விடுவதே நல்லது.அந்த வகையில் அ.மு வில் குற்றம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமூக சீரழிவுகள், பிரச்சினைகளை அவர் கருப்பொருளாக எடுத்துக்கொள்வதில்லை. புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுவதும் இல்லை.ஆனால் தனது கதைகள் மூலம் வாசகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறார். அது எனக்கு பிடித்திருப்பதால் அவரது அடுத்த புத்தகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிற‌து.




உண்மை கலந்த நாட்குறிப்புகள் : மிக இனிய வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய புத்தகம்.
(VERY GOOD)