துளி
ஆனையில்லா கதையைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்ய நான் தெரிவு செய்த கதை துளி. இதுவும் ஒரு ஆனை பற்றிய கதை என்பதோடு ஆனையில்லா கதையில் வரும் மனிதர்கள் இக்கதையிலும் வருவதால் ஒரு தொடர்ச்சியாக வாசித்து பார்க்க நினைத்தேன். யானையின் பெயர் கோபாலகிருஷ்ணன். ஆனையில்லா கதையில் ஐயப்பனின் வீட்டிற்குள் புகுந்த யானை.
மகாதேவர் கோயிலின் திருவிழாவுக்கு ஆயத்தமாக வேண்டிய யானை காலையில் இருந்து பிளிறிக்கொண்டிருக்கிறது. அதற்கு நோயுக்கான எந்த அறிகுறியும் இல்லை.நன்றாக சாப்பிட்டும் விட்டது. யானையைப் பார்த்துக்கொள்ளும் ராமன் நாயருக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி யானைக்கு மனசு சரியில்லை என சொல்கிறார்.
திற்பரப்பில் இருந்து கொச்சுகேசவன் என்ற யானை திருவிழாவுக்காக வந்து கொண்டிருக்கிறது. அதை தனது எட்டாவது அறிவால் அறிந்து தான் இந்த யானை படபடத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் நடந்த களியல் கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கொச்சுகேசவனுக்கு மரியாதை அதிகமாக கிடைத்ததால் கோபாலகிருஷ்ணனுக்கு கொச்சுகேசவன் இங்கு வருவது பிடிக்கவில்லை. என்னவாக இருந்தாலும் மகாதேவர் கோயில் யானை கோபாலகிருஷ்ணன் தானே. திருவிழாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியதும் கொச்சு கேசவன் வரப்போவதை கோபாலகிருஷ்ணன் உணர்ந்திருப்பான். அதனால தான் படபடப்பு.
இரு யானையைப் பற்றிய விபரங்கள் அழகாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கொச்சுகேசவனின் அப்பா கொச்சு கணபதி திருவோண நட்சத்திரக்காரன் என்பதும் கோபாலகிருஷ்ணனும் குறையில்லை ரோகிணி நட்சத்திரம் என்பதும் என அந்த கால மனிதர்கள் யானையின் நட்சத்திரங்களையும் தெரிந்து கதைப்பது யானையுடன் மனிதனுக்கு இருக்கும் உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
"தலையெடுப்புன்னா அவனாக்கும்… இவனுக்கு ஒரு பம்மலு உண்டு… கிண்ணம் களவாண்டுட்டு போறதுமாதிரி ஒரு நடை”
என கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி என்பதால் கிண்ணம் களவாடிப் போற நடை என கரடி நாயர் சொல்கிறார். ஜெயமோகன் கதைகளில் யானையை வீட்டுப் பிள்ளை மாதிரி தானே பார்த்துக் கொள்கிறார்கள்.
"கோபாலா, மரியாதைக்கு இருந்துக்கோ. நாலாளு கூடுத ஸ்தலமாக்கும். உனக்க அப்பன் தென்னிமலை கேசவனுக்க பேரை களையப்பிடாது கேட்டியா?”என்று ராமன் நாயர் யானையிடம் சொல்வதும் "சிவன் மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?” மாதவன் பிள்ளை சொல்வதும் என இந்தக் கதையிலும் மனிதர்களின் சின்ன சின்ன உரையாடல்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.
கருப்பன் என்ற நாய் தான் இரு யானைகளையும் சேர்த்து வைக்கிறது. இந்தக்கதையே மனிதனுக்கு புரிந்து கொள்ள முடியாத மிருகங்களின் உலகத்தை அழகாக சொல்வது தான்.
நண்பர்களுக்கிடையிலான சண்டை, கோயில் திருவிழாவுக்கான வேலைகள், அன்னதானம் தொடர்பான தகவல்களென வாசிக்கும் போது அப்படியே ஒரு காட்சியாக கற்பனை விரிந்து கொள்கிறது.
அன்னதானத்தில் கிறிஸ்தவரான டீக்கனாரின் பங்கு இருப்பதும் யானையின் பிரச்சனை முடிந்தவுடன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி ஏற்றுவேண்டும் என கரடி நாயர் சொல்வதும் என மதம் தாண்டிய மனிதர்களை பார்க்கமுடிகிறது.
ஆனை வரிசையில் சிறப்பான ஒரு கதை.
No comments:
Post a Comment