ராஜன்
பஷீரின் " உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது" நாவலில் குஞ்ஞுபாத்துமாவின் அம்மா தனது அப்பாவிடம் ஆனை இருந்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனையை வைத்து ஒருவரின் சமூக அந்தஸ்த்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனையை வீட்டில் பாசமாக, ஐஷ்வர்யத்திற்காக வளர்த்திருக்கிறார்கள்.ஆனை காட்டில் வாழ வேண்டிய மிருகம் அதை வீட்டில் வளர்ப்பது ஒரு வகையில் நாம் ஆனையை வதைப்பதற்கு சமன் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். கோயிலில் நின்றிருக்கும் ஆனையை இன்றும் ஆசையுடன் பார்க்கின்றோம் எனினும் அது காட்டு விலங்காக அறியப்படுவதால் ஆனை பற்றிய புரிதல்கள் குறைந்து விட்டது. அண்மையில் அன்னாசிப் பழத்தில் சொருகப்பட்ட வெடிவெடித்ததால் இறந்த ஆனை எல்லோரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. ஆனை மனிதர்களால் ஆபத்து காரணங்கள் கூறி கொல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுவருகிறது. ஜெயமோகனின் யானை டாக்டர் கதை படித்தவர்களுக்கு யானையின் மேல் ஒரு புரிதலும் விருப்பும் வந்துவிடும். அதன் தொடர்ச்சியாக ஆனையில்லா, துளி, ராஜன் போன்ற கதைகளை படிக்கும் போது ஆனை செல்லப்பிள்ளையாகி தெய்வமாகிவிடுகிறது..
எட்டுக்கட்டு வீட்டின் வலிய சங்கரன் ஆனை இறந்த பின் தம்புரானுக்கு ஐஷ்வர்யம் இல்லை என்ற மனக்குறை. பாறசாலை ஆறாட்டுக்கு சென்ற போது நெல்லுவிளை வீட்டின்( நாலு கட்டு வீடு) ஆனை பர்வதராஜனைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து அதை எப்படியாவது தனது அரண்மனைக்கு கொண்டுவர தம்புரான் நினைக்கிறார்.பர்வதராஜன் 11 அடி உயரம் உடையது,வலிய சங்கரனை விட அரை அடி அதிகம். எட்டுக்கட்டு, நாலுகட்டு வீடு பற்றிய குறிப்பிலிருந்து செல்வம் கூடிய குடும்பம் எது என்ற அனுமானத்திற்கு வாசகர் வந்துவிடமுடியும். இப்போது இந்த பர்வதராஜனால் கௌரவம் முழுவதும் அந்தக் குடும்பத்திற்கு போகப் போகிறது என்பது தான் தம்புரானின் பிரச்சனை. எட்டு ஆனை விலை சொல்லியும் பர்வதராஜனை கொடுக்க முடியாது என நெல்லுவிளை வீட்டார் சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த ஆனையைக் கொல்வது என்று முடிவெடுத்து பூதத்தான் நாயரை வரவைக்கிறார்கள்.
வலியசங்கரனைப் பார்த்துக்கொண்ட பூதத்தான் நாயர் ஆனையோடே பிறந்து வளர்ந்தவன். ஆனை கடவுள் போல. தம்புரானின் காரியஸ்தன் கோவிந்தன் நாயர், ஆனைக்கு விசம் வைத்து கொல்லும்படி பூதத்தானிடம் சொல்ல பூதத்தான் மறுத்துவிடுகிறான். அவர்களிருவருக்குமிடையான உரையாடலே இந்தக் கதையின் முக்கிய பகுதியாக நினைக்கிறேன்.
போர் என்றால் ஆனையைக் கொல்வதில்லையா.அது போல தான் இதுவும், எந்த சாபமும் வராது என பூதத்தானுக்கு சமாதானம் சொல்லும் போது, "யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்பிளையாக்கும்” என்று பூதத்தான் சொல்கிறான்.
கேரளா என்ற தேசம் பரசுராமரால் ஆனைக்காக உருவாக்கப்பட்டது. மனிதன் தனக்கு வாழ இடம் தேவை என ஆனையிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பூதத்தான் சொல்லும் இந்த கதையை ஜெயமோகனின் எழுத்துக்களில் வாசிக்கும் போது நன்றாக உள்ளது. பூதத்தானை குடும்பத்தை கொன்றுவிடுவார்கள் என்று எவ்வளவோ மிரட்டுகிறார்கள்.வாசிப்பவர்களுக்கும் பதட்டம் .
கதையை எப்படி முடிக்கப் போகிறார் என்ற பதட்டம் வந்துவிடுகிறது. பர்வதராஜன் பூதத்தானை தூக்கி ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இருவருமே திரும்பிவரவில்லை என்று கதை கவித்துவமாக முடிகிறது.
" சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி, தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது" என்று ஒரு வரி உள்ளது. ஜெயமோகனது கதைகளில் விபரிக்கப்படும் துல்லிய வர்ணனை அப்படியே காட்சியாக மனதிலே தங்கிவிடக்கூடியது.
இங்கே ராஜன் என்பது பர்வத ராஜன் மட்டுமல்ல, பூதத்தானும் தான்.
இங்கே ராஜன் என்பது பர்வத ராஜன் மட்டுமல்ல, பூதத்தானும் தான்.
No comments:
Post a Comment