Tuesday 21 August 2012

ஒற்றன்

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் அவரது 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாத‌மி விருது பெற்றவர். எளிமையோடு நகைச்சுவைத்தன்மை கொண்டவை இவரது எழுத்துக்கள்.  ஆங்கில இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்தவர். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். கரைந்த நிழல்கள், தண்ணீர், மானசரோவர், பதினெட்டாவது அட்சக்கோடு, ஆகாசத்தாமரை , ஒற்றன் என்பன இவரது முக்கிய நாவல்களாகும். சினிமாவின் உண்மைத்தன்மையை சொல்லும்  அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்' என்ற சிறுகதையை எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் சிறந்த படைப்பாக சொல்வதுண்டு.

இவரது 'ஒற்றன்' என்ற பயண நூலை அண்மையில் வாசிக்கும் அனுபவம் கிடைத்தது.1973 இல் அயோவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் சந்திப்பிற்கு பல்வேறு நாடுகளிலும் இருந்து முக்கிய எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்ட‌
அசோகமித்திரன் அதில் கலந்துகொண்டு அங்கு தனக்கு ஏற்பட்ட  அனுபவங்களை ' ஒற்றன்' ஆக தந்துள்ளார்.



பாட்டு பாடுமாறு அவரை  கேட்ட போது  அவர்  தமிழ் எழுத்துக்களை  இராகம் போட்டு பாடி பாராட்டு வாங்கிய‌தை கூறி  சிரிப்பை வர வைக்கிறார்.நல்ல சைவ உணவு இல்லாமல் அவதிப்பட்டது,  பனிக்கட்டியில் காலை வைத்து சறுக்கி விழுந்த‌து, கே‍ மார்ட்டில் சப்பாத்து  வாங்கியது, எதியோப்பியாவில் இருந்து கலந்து கொண்ட அபே குபேக்னா, பெரு நாட்டின் பிராவோ போன்ரவர்களுடனான தன் அனுபவங்கள், யப்பானிய பெண்  கஜூகோவின் கவிதை என்று பல விடயங்களை நகைச்சுவையுடன்  கூறுகிறார். கவிதைத்தொகுப்பு நூல் ஒன்றிற்கு அவர் மொழிபெயர்த்து கொடுத்த அம்மாவின் பொய்கள் என்ற ஞானக்கூத்தனின் கவிதையை விக்டோரியா ஹார்ட்மன் தனது நாடகத்தில் சிறப்பாக பயன்படுத்தியது குறித்து கூறியுள்ளார்.

இன்று போன்ற தொலைத்தொடர்பு வசதிகளோ, பிரயாண வசதிகளோ அற்ற 70 களில் ஒரு எழுத்தாளர் எப்படி அமெரிக்காவை தெரிந்து கொண்டார் என்பதற்கு ஒற்றன் ஒரு சிறந்த ஆவணம்.

No comments:

Post a Comment