Wednesday, 23 April 2014

7. குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

இவரது " நா.பாவின் இலக்கியக்கதைகள் " எனும் புத்தகம் வாங்கி வைத்துள்ளேன். அது போன்ற புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து முடிக்கும் பக்குவமும் எனக்கு இல்லை என்பதோடு  அவை தொடர்ச்சியான வாசிப்புக்கு உரியவையும் இல்லை என்பதால் சில கதைகளை மாத்திரம் இதுவரை படித்துள்ளேன். அது தவிர  நா.பார்த்தசாரதியின் புத்தகங்களை வாசித்தது இல்லை. அண்மையில் பலர் 'குறிஞ்சி மலர்' மற்றும் 'பொன்விலங்கு' பற்றி குறிப்பிட்டதால், சரி வாசித்து தான் பார்ப்போம் என்று எடுத்த புத்தகம் தான் குறிஞ்சி மலர்.

நா.பா ஆரம்பத்திலேயே திலகவதியார் - கலிப்பகையார் கதையின் ஒரு வடிவம் தான் கதை என்று  சொல்லிவிடுகிறார்.
பூரணியின் தந்தை  தமிழில் புலமை உள்ளவர். கல்லூரி செல்லாவிட்டாலும் பூரணி தந்தையிடம் இருந்து தமிழ் அறிவை பெற்றுக்கொள்கிறாள். சிறுவயதிலேயே தாயை இழந்த பூரணி  பின் தந்தையையும் இழந்துவிட திர நாவுக்கரசு, சம்பந்தன்,மங்கையர்க்கரசி என்னும் மூன்று இளைய சகோதரர்களை பார்க்கவேண்டிய பொறுப்பும் வந்துவிடுகிறது. பண பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற இலட்சியம் உள்ளவள். மங்களேஸ்வரி என்ற பெண்மணியின் நட்பு கிடைக்கிறது, அதன் மூலம் மங்கையர் கழகத்தில் தமிழ் வகுப்பு எடுக்கும் வேலையும் கிடைக்கிற‌து. தந்தையின் புத்தக மீள் பிர‌சுர  விடயமாக அரவிந்தன் என்பவனது நட்பு கிடைக்கிறது. அது பின் காதலாகிறது.

அரவிந்தன் இலட்சியங்கள் நிறைந்தவன். திருக்குறள் மீது பெரு விருப்பு உள்ளவன்.  ஏழைகள் மீது அக்கறை உள்ளவன்.அநாதையான அவன் மீனாட்சிசுந்தரம் என்பவரது பதிப்பகத்தில் வேலை பார்க்கிறான். மீனாட்சிசுந்தரமும் அரவிந்தன் மேல் அன்புள்ளவர். அரவிந்தனுக்கு முருகானந்தம் என்னும் நண்பன் உள்ளான். பூரணி, அரவிந்தன் இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு நிலவுகிறது. பூரணி சிறந்த பேச்சாளராகி இலங்கை, கல்கத்தா சென்று சொற்பொழிவாற்றுகிறாள். அவளது பேச்சாற்றலை வைத்து நிதி திரட்டி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறார்கள்.அரசியலும் வருகிறது. பர்மாக்காரர் வில்லனாக வருகிறார். நா.பா அரசியலில் உள்ள அழுக்குகளையும் ஒரளவு எழுதியுள்ளர். திலகவதியார் - கலிப்பகையார் கதை என்பதால் முடிவு ம் அதே போல் தான். திலகவதிக்கு  கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க முடிவாகும். ஆனால் திருமணத்திற்கு முன்பே நாட்டுக்காக போரில் ஈடுபட்ட கலிப்பகையார் இறந்து விடுவார். திலகவதியார் திருமணம் செய்யாமல் சேவையில் தனது வாழ்வை அர்ப்பணிப்பார். பூரணியும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

 இதில் நான் ரசித்த இடங்கள் பல உண்டு. இலங்கை பற்றிவரும் இடங்கள். இடங்கள் எல்லாம் சரியாகவே கொடுத்திருப்பார். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் காட்டியது போல சம்பந்தம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை. எந்த இடத்தில் இருந்து எங்கு போவது போன்ற ஒழுங்குகள், எப்படி பிரயாணம் செய்வது போன்றவை எல்லாம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நா.பா இலங்கை வந்திருப்பார் போல. அது போல பூரணி திருப்பரங்குன்றத்தில் ரசிக்கும் நீல நிறத்தில் ஒளிரும் "ஓம்" அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.

இன்றைய காலத்திற்கு இந்த கதை பல இடங்களில் எரிச்சலை வரவைக்க வாய்ப்புள்ளது. தியாகத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது தான் பொருந்தும். இருந்த போதும் பள்ளிக்கூட நாட்களில் வாசிப்பதற்கு  ஒரு சிறந்த நாவல் என்பதே என் கருத்து.  'பொன்விலங்கு' வாசிக்க வேண்டும்.


Sunday, 20 April 2014

6. ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 - சத்யஜித் ரே

 ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 -   சத்யஜித் ரே
( கேங்டாக்கில் வந்த கஷ்டம் )

சத்யஜித் ரே திரையுலகில் பெயர் போனவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா போன்ற திரைப்படங்கள் போதும் அவரது திறைமயை பேச. அதே போல அவர் சிறந்த எழுத்தாளர் என்றும் படித்து இருக்கிறேன். பெலுடாவின் சாகசங்கள்  என்ற தொடரில் ஐந்தாவதாக வெளியான "கேங்டாக்கில் வந்த கஷ்டம்"  என்ற புத்தகத்தை அண்மையில் படித்தேன். வங்காள மொழியில் வெளியான இக்கதையை வீ.பா.கணேசன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

துப்பறியும் கதை என்பது பெயரை பார்த்தாலே தெரிந்துவிடும். கோடை விடுமுறையை களிப்பதற்காக தபேஷும் ஃபெலுடாவும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்  செல்கிறார்கள். அங்கே நடைபெற்ற விபத்து ஒன்றை ஃபெலுடா துப்பறிகிறார். விபத்தில் இறந்த ஷெல்வான்கர் என்பவர் யமன்தக் எனும் ஒன்பது தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய பௌத்த சமய கடவுளின் சிலை வத்திருக்கிறார். விபத்துடன் அச்சிலையும் காணாமல் போய்விடுகிறது. அது விபத்தா அல்லது கொலையா? அதன் பின்னணி என்ன என ஃபெலுடா  துப்பறிகிறார். கதை விறுவிறுப்பாக செல்கிறது.



Thursday, 17 April 2014

5. ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

பாவண்ணனின் எழுத்துக்களை நான் விரும்பி படிப்பதுண்டு. துங்கபத்திரை நதியும் ஜோக் அருவியும் அவரது எழுத்துகளில் ஒன்றிப்போயிருக்கும். வாழ் நாளில் ஒரு தடவை ஜோக் அருவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இவரது "துங்கபத்திரை" என்ற புத்தகம் வாசித்ததில் இருந்து தொடங்கிவிட்டது. அதற்கு பின்  காகா கலேல்கர் எழுதிய "ஜீவன் லீலா" என்ற புத்தகத்தை ஜோக் பற்றி அறிவதற்காகவே வாசித்தேன். கும்கி படத்தில் ஜோக் அருவியின்  அழகை பார்த்த பின் அந்த ஆசை இன்னும் கூடிவிட்டது.

அண்மையில் பாவண்ணன் எழுதிய "ஆழத்தை அறியும் பயணம்" வாசித்தேன். தனது சில அனுபவங்களை  எழுதி அதனுடன் பொருந்தும் சிறுகதைகளை விபரித்து உள்ளார். கிட்டதட்ட எஸ்.ராமகிருஸ்ணனின் "கதாவிலாசம் " போல.
இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள். 43 எழுத்தாளர்களை ஓரளவு புரிந்து கொண்ட திருப்தி கிடைக்கிறது. வேற்று மொழிக் கதைகளில் தாகூர், ஜயதேவன், கே.ஏ.அப்பாஸ், சரத்சந்தர்,தூமகேது, வில்லியம் பாக்னர் போன்ற 10 எழுத்தாளர்களின் சிறுகதையை குறிப்பிட்டுள்ளார்.வாசிக்கும் போதே அவர்களது சிறுகதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. முக்கியமாக ஐல்ஸ் ஐக்கிங்கரின்  'ரகசியக் கடிதம்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த 43 கதைகளில் அ.முத்துலிங்கத்தின் "அக்கா", தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்" தவிர வேறு எதையும் நான் வாசித்ததில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், கல்கி,  நா. பார்த்தசாரதி  போன்றவர்களை மட்டுமே நான் ஓரளவு படித்துள்ளேன். இன்னும் படிக்க நிறைய சிற‌ந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்  என்பதை இந்த புத்தகம் ஞாபகம் ஊட்டி சென்றுள்ளது.

Friday, 21 February 2014

(4) தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி


தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த நாவல்.  இந்துமதியின் எழுத்துக்கள் பெரிதாக நான் வாசித்தது இல்லை. அவரது புத்தகங்களில் சிறந்தது இது தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 நடுத்தர குடும்ப கதை. கதையின் நாயகன் விஸ்வம்,  பெரிய மேற்படிப்பு கனவுகளுடன் வாழ்ந்து கடைசியில் குடும்பத்தை காப்பாற்ற படிப்பை நிறுதிவிட்டு சாதாரண வேலைக்கு செல்லும் அண்ணன் பரசு, அண்ணி ருக்மணி முக்கிய பாத்திரங்கள். ருக்மணியை அனைத்து ஆண்களுக்கும் பிடித்த கதாபாத்திரமாகவே உருவாக்கியிருக்கிறார், அதாவது இன்முகத்துடன் கணவனின் குடும்பத்தை கவனிக்கும் ருக்மணி . அத்துடன் ருக்மணிக்கு இலக்கிய ஆர்வமும் இருக்கிறது.

அப்பாவின் வற்புறுத்தலால் நேர்முகத்தேர்விற்கு  வந்து காத்திருக்கும் விஸ்வம் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. அண்ணனுக்கு பெண் பார்க்க செல்வது, ஜமுனாவுக்கும் விஸ்வத்திற்கும் இடையிலான காதல், அம்மாவுக்கு பின் வீட்டை பொறுப்பாக பார்க்கும் அண்ணி ருக்மணி மற்றும்  பரசு, விஸ்வம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை இயலாமையுடன் சொல்லும் தந்தை என கதை வேகமாக நகருகிறது.
குடும்ப நிலைகாரணமாக இலட்சியம், கனவுகளை தொலைத்து, கிடைத்த வேலைக்கு தம்மை பழக்கி கொண்டு வாழ்ந்து வரும் பலர் தம்மை  விஸ்வம், பரசு பாத்திரத்திற்கு சுலபமாக பொருத்தி பார்க்கக்கூடியதாக இருப்பதால் தான் இன்று வரை பேசப்படும் நாவலாக இருக்கிறது.

Tuesday, 4 February 2014

(3) பிரேம்சந்த் கதைகள்

 பிரேம்சந்த் கதைகள் (இந்தி)
 ஒரு கைப்பிடி கோதுமை மற்றும் சில கதைகள் 
 தமிழ் மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்




பிரேம்சந்த் என்ற பெயரை முதலில் நான் அறிந்து கொண்டது ஜெயமோகன் வலைத்தளம் மூலமாக தான். "இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன" என்ற கட்டுரையில் "லட்டு " என்ற கதையை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை வாசித்ததில் இருந்து பிரேம்சந்த் எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த போதும் அவரது புத்தகங்கள் கிடைக்கவில்லை. கடைசியாக நூலகம் சென்ற போது "பிரேம்சந்த் கதைகள்" லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் அழகான அட்டை படத்துடன் இருந்தது. எடுத்து வந்து விட்டேன். அதன் முதல் வாசகி நான் தான். வந்தவுடன் "லட்டு" என்ற கதை உள்ளதா என்று தான் தேடினேன். இருக்கவில்லை. பரவாயில்லை. இதில் உள்ள  கதைகளும் சிறந்த கதைகள் தான்.  அவரது கதைகள் வாசிப்பதற்கு எளிமையான, உயிரோட்டம் நிறைந்தவை.

பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பிரேம்சந்த்  அப்பணியை விட்டு நீங்கி, சுதந்திர போராட்டத்திற்கு வலு சேர்க்கும் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். 12 புதினங்கள், 2 நாடகங்கள், 200 சிறுகதைகள் எழுதியுள்ளதாக புத்தகத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இவரது கதைகள் ஏழை மக்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது.

வட்டிக்கு வட்டி வாங்கும் குருக்கள் பற்றிய "கையளவு கோதுமை" , சுற்றியிருப்பவர்களை பற்றி எந்த கவலையும் இன்றி எப்பொழுதும் சதுரங்கம் ஆடும் இரு நண்பர்களை பற்றிய "சதுரங்க ஆட்டக்காரர்கள்"  சுதந்திர போராட்ட காலகட்ட ஒரு கிராமத்தை படமாக்கி காட்டும் "போர் அணிவகுப்பு" கிராமப்புற ஏழை சிறுவர்களின் ஈதுப் பண்டிகை கொண்டாட்டத்தை பற்றிய "ஈதுப் பண்டிகை" குடி நீர் எடுக்க நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய பெண்களின் நிலையையும் பணக்காரர்கள் தமது கிணறுகளில் ஏழைகள் நீர் எடுப்பதை மறுக்கும் நிலையையும் விவரிக்கும் "டாகூரின் கிணறு" என மொத்தமாக 15 கதைகள் இப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

Tuesday, 21 January 2014

(2) என் ஜன்னலுக்கு வெளியே -மாலன்

என் ஜன்னலுக்கு வெளியே -மாலன்


இது ஒரு கட்டுரை தொகுப்பு. மாலன் எழுதி வெவ்வேறு இதழ்களில் வெளியானவை.அரசியல், சமூகம்,இலக்கியம்,தமிழ்,இரங்கல் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுளன. இலக்கியம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றவையுடன் ஒப்பிடும் பொழுது அதிக சுவாரசியமாக இருக்கிறது.  யானைக்கு இறக்கை வெட்டப்பட்ட கதையை சொல்லும் " கால் இல்லாத கதைகள்"  நடிகர் நாகேஷ்  பற்றிய "வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல" போன்றவற்றை கூறலாம். அலெக்சாண்டர்   நண்பன் அரிஸ்டிப்பஸ் மூலம் டையோஜெனீஸ் இற்கு கடிதம் எழுதிய ஒரு நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். டையோஜெனீஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் பகுதி கொஞ்சம்  bore ஆக தான் இருந்தது. இந்த வாரிசு அரசியல், காவிரி பிரச்சினை என்று ஏற்கனவே அடிக்கடி வாசிக்கப்பட்ட விடயமாக இருந்ததாலோ தெரியவில்லை.நான் கடைசியில் இருந்து  முன் நோக்கி தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். அப்படி வாசிப்பது இது தான் முதல் தடவை. முதல் சில  கட்டுரைகள் வாசிக்க பெரிதாக நன்றாக இருக்கவில்லை. அதனால் நேராக இலக்கிய பகுதிக்கு தாண்டி,  அப்படியே  பின் முன்னாக நகர்ந்து கடைசியாக‌ அரசியல் பகுதிக்கு வந்தேன்.


அரசியல் பகுதியில் குறிப்பாக சொல்வதென்றால் டொக்டர் வினாயக்(Binayak Sen)பற்றிய "தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?" என்ற கட்டுரை. வங்காளியான வினாயக்  பெரிய இடங்களில் கிடைத்த வேலைகளை விட்டு விட்டு, மருத்துவ வசதி இல்லாத இடம் ஒன்றில் சேவை செய்தவர். அம் மக்களுக்கும்  நிறைய விதங்களில் உதவியவர். கனிம வளம் நிறைந்த பர்சார் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை அகற்றி  அந்த  நிலங்களை  நிறுவனங்களுக்கு கொடுத்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.இது போன்ற வேறு சில நடவடிக்கைகளையும் மக்களுக்காக செய்திருக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.இது 2008 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்று தேடிப் பார்க்க வேண்டும்.

Wednesday, 15 January 2014

(1) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
இது விமர்சனம் அல்ல. விஷ்ணுபுரம் பற்றிய என் அனுபவம் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன் வாசிக்க முயற்சி செய்து எதுவும் விளங்காததால் விட்டுவிட்டேன். இணையத்தில் அதிகமாக கதைக்கப்படும் புத்தகமாக இருப்பதால் இம்முறை எப்படியாவது வாசிப்பது என்ற‌ முடிவுடன்  வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரம்  வாசிக்க முதல்   விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரைகள் சில‌ வாசித்து  ஒரு பயிற்சி செய்து கொண்டேன். 

நாவல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  தென் பகுதியில் உள்ள ஒரு ஊர் விஷ்ணுபுரம். பல வருடங்களுக்கு முன், ஞான சபையில் விவாதத்தில் வென்று அக்னி தத்தன் என்பவன் வைதிக மரபை நிலை நாட்டுகிறான். அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதில் வென்று பௌத்தத்தை நிலை நாட்டுகிறார் அஜிதர். அஜிதரின் கதை இரண்டாம் பாகத்தில் வருகிறது. இரண்டாம் பகுதி சைவர், பௌத்தர், திபேத்தியர்களுடனான வாதங்களாக செல்கிறது. தர்க்கம் நிறைந்த இப்பகுதி வாசிக்க கடினமான பகுதி. சிலர் இப்பகுதி தான் சுவாரசியமானது என்கிறார்கள்.

நாவல் நிறைய கதை மாந்தர்களைக் கொண்டது . முதற்பகுதியில் வாழ்ந்த கதாபாத்திரங்கள்  (சங்கர்ஷணன், திருவடி, சித்திரை ) மூன்றாவது பகுதியிலும் வருகிறார்கள், மக்களின் கதைகளில் வாழ்கிறவர்களாக. மூன்றாவது பகுதியில் விஷ்ணுபுரம் சிதிலமடைந்த நகராக உள்ளது. வறுமை நிலவுகிறது.மக்கள் இப்படி ஒரு பிரமாண்ட  நகரம் உண்மையில் இருந்ததா? இல்லை காவியம் மட்டும் தானா? என்று கதைத்துக் கொள்கிறார்கள். இறுதியில் பிரளயம் ஏற்பட்டு நகர் முற்றிலும் அழிந்துவிடுகிறது. 

முதல் வாசிப்பில் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறு முறை வாசித்தால் ஒரு வேளை கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை வாசிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனக்கு நாவல்  பெரிதாக சிலாகித்து சொல்லும்படி இல்லை. ஆனால்   விஷ்ணுபுரம் வாசித்தது ஒரு சிறந்த வாசிப்பு பயிற்சியாக இருந்தது என்பது மட்டும் உண்மை.