குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
இவரது " நா.பாவின் இலக்கியக்கதைகள் " எனும் புத்தகம் வாங்கி வைத்துள்ளேன். அது போன்ற புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து முடிக்கும் பக்குவமும் எனக்கு இல்லை என்பதோடு அவை தொடர்ச்சியான வாசிப்புக்கு உரியவையும் இல்லை என்பதால் சில கதைகளை மாத்திரம் இதுவரை படித்துள்ளேன். அது தவிர நா.பார்த்தசாரதியின் புத்தகங்களை வாசித்தது இல்லை. அண்மையில் பலர் 'குறிஞ்சி மலர்' மற்றும் 'பொன்விலங்கு' பற்றி குறிப்பிட்டதால், சரி வாசித்து தான் பார்ப்போம் என்று எடுத்த புத்தகம் தான் குறிஞ்சி மலர்.
நா.பா ஆரம்பத்திலேயே திலகவதியார் - கலிப்பகையார் கதையின் ஒரு வடிவம் தான் கதை என்று சொல்லிவிடுகிறார்.
பூரணியின் தந்தை தமிழில் புலமை உள்ளவர். கல்லூரி செல்லாவிட்டாலும் பூரணி தந்தையிடம் இருந்து தமிழ் அறிவை பெற்றுக்கொள்கிறாள். சிறுவயதிலேயே தாயை இழந்த பூரணி பின் தந்தையையும் இழந்துவிட திர நாவுக்கரசு, சம்பந்தன்,மங்கையர்க்கரசி என்னும் மூன்று இளைய சகோதரர்களை பார்க்கவேண்டிய பொறுப்பும் வந்துவிடுகிறது. பண பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற இலட்சியம் உள்ளவள். மங்களேஸ்வரி என்ற பெண்மணியின் நட்பு கிடைக்கிறது, அதன் மூலம் மங்கையர் கழகத்தில் தமிழ் வகுப்பு எடுக்கும் வேலையும் கிடைக்கிறது. தந்தையின் புத்தக மீள் பிரசுர விடயமாக அரவிந்தன் என்பவனது நட்பு கிடைக்கிறது. அது பின் காதலாகிறது.
அரவிந்தன் இலட்சியங்கள் நிறைந்தவன். திருக்குறள் மீது பெரு விருப்பு உள்ளவன். ஏழைகள் மீது அக்கறை உள்ளவன்.அநாதையான அவன் மீனாட்சிசுந்தரம் என்பவரது பதிப்பகத்தில் வேலை பார்க்கிறான். மீனாட்சிசுந்தரமும் அரவிந்தன் மேல் அன்புள்ளவர். அரவிந்தனுக்கு முருகானந்தம் என்னும் நண்பன் உள்ளான். பூரணி, அரவிந்தன் இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு நிலவுகிறது. பூரணி சிறந்த பேச்சாளராகி இலங்கை, கல்கத்தா சென்று சொற்பொழிவாற்றுகிறாள். அவளது பேச்சாற்றலை வைத்து நிதி திரட்டி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறார்கள்.அரசியலும் வருகிறது. பர்மாக்காரர் வில்லனாக வருகிறார். நா.பா அரசியலில் உள்ள அழுக்குகளையும் ஒரளவு எழுதியுள்ளர். திலகவதியார் - கலிப்பகையார் கதை என்பதால் முடிவு ம் அதே போல் தான். திலகவதிக்கு கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க முடிவாகும். ஆனால் திருமணத்திற்கு முன்பே நாட்டுக்காக போரில் ஈடுபட்ட கலிப்பகையார் இறந்து விடுவார். திலகவதியார் திருமணம் செய்யாமல் சேவையில் தனது வாழ்வை அர்ப்பணிப்பார். பூரணியும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.
இதில் நான் ரசித்த இடங்கள் பல உண்டு. இலங்கை பற்றிவரும் இடங்கள். இடங்கள் எல்லாம் சரியாகவே கொடுத்திருப்பார். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் காட்டியது போல சம்பந்தம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை. எந்த இடத்தில் இருந்து எங்கு போவது போன்ற ஒழுங்குகள், எப்படி பிரயாணம் செய்வது போன்றவை எல்லாம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நா.பா இலங்கை வந்திருப்பார் போல. அது போல பூரணி திருப்பரங்குன்றத்தில் ரசிக்கும் நீல நிறத்தில் ஒளிரும் "ஓம்" அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.
இன்றைய காலத்திற்கு இந்த கதை பல இடங்களில் எரிச்சலை வரவைக்க வாய்ப்புள்ளது. தியாகத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது தான் பொருந்தும். இருந்த போதும் பள்ளிக்கூட நாட்களில் வாசிப்பதற்கு ஒரு சிறந்த நாவல் என்பதே என் கருத்து. 'பொன்விலங்கு' வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment