எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பாவண்ணனின் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே பிடித்தவை. இந்த புத்தகம் பல தடவைகள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக நான் நினைக்கின்றேன். அவரது எழுத்துகளில் மூழ்கி விட்டதால் ஒவ்வொரு கட்டுரையுமே ஒவ்வொரு புத்தகத்தை, ஆளுமையைப் பற்றியது என்பதை நான் அரைப் புத்தகம் கடந்த பிறகு தான் உணர்ந்து கொண்டேன்.
ஐந்நூறு வண்டிகளின் சத்தம் என்ற கட்டுரை அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தீகநிகாயம் என்ற புத்தரின் பொன்மொழிகள் என்று சொல்லக்கூடிய ஒரு புத்தகத்தைப் பற்றியது. சாலிம் அலியைப் பற்றிய விரிவான கட்டுரை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற புத்தகம் பற்றியது. அவருடன் எப்போதும் உடனிருக்கும் துங்கபத்திரை,ஜோக் நீர்வீழ்ச்சி உட்பட பல நதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள காகா கலேல்கரின் ஜீவன் லீலா என்ற புத்தகம் பற்றிய கட்டுரையும் உள்ளது. ஜீவன் லீலா எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நதிகளை சென்று தரிசிக்க வேண்டும் என்று பாவண்ணனுக்கு தோன்றியது போலவே எனக்கும் ஆசையை வர வைத்த புத்தகம். நூற்றாண்டுக்கு முற்பட்ட தூய நதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்.
புத்தரின் புனித வாக்கு எனும் பால் காரஸ் எழுதிய புத்தகத்தைப் பற்றிய கட்டுரையில் மீண்டும் புத்தரைப் பற்றி எழுதியுள்ளார்.ஹென்றி தோரோ பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானது.அண்மையில் சாகித்ய அக்கடமி விருது பெற்ற மனோஜ் குரூரின் மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான நிலம் பூத்து மலர்ந்த நாள் எனும் புத்தகத்தை பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.17 கட்டுரைகள் கொண்ட அருமையான புத்தகம் இது.