Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Friday, 5 February 2016

(49) அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

 மனிதர்கள் உணர்வுகளிற்கா அல்லது மனிதர் வகுத்த நியமங்களுக்கா முக்கியம் கொடுக்கிறார்கள் என்பது பதில் கூறமுடியாத சிக்கலான வினாவாக இருக்கிறது. உணர்வுகளுக்கு மிக்கியம் கொடுத்தாலும் கூட அவர்கள் தாம் நியமங்களுக்கு கட்டுப்பட்ட ஒழுக்க சீலர்களாகவே காட்டிக்கொள்கின்றனர். ஜானகிராமனின் நாவல்களில்  மனிதர்கள் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர்.


அப்பு சிறு வயது முதல் காவேரிக்கரையில் உள்ள பவானி அம்மாளின் வேத பாடசாலையில் படித்துவிட்டு ஊருக்கு திரும்ப ஆயத்தமாவதில் இருந்து நாவல் ஆரம்பிக்கிறது. காவேரி ஆறு தான் அவனுக்கு எல்லாமாக இருக்கிறது. இந்து,  பவானி அம்மாளின் உறவுக்கார பெண் .சிறுவயதில் திருமணமாகி கணவனை இழந்த இந்து வேதபாடசாலைக்கு மீண்டும் வந்து பவானி அம்மாள் கூடவே இருக்கிறாள். இந்துவின் காதலை ஏற்றுக்கொள்ள அப்பு மறுக்கிறான். அது மரபை மீறும் செயல் என காரணம் சொல்கிறான்.

சொந்த ஊருக்கு வரும் அப்புவுக்கு தனது அம்மாவின் செய்கைகள் சந்தேகத்தை தருகின்றன. அலங்காரத்தம்மாள் தனது செயல் பிழை என உணர்ந்தும் அதிலிருந்து விடுபடமாட்டாமல் வாழ்ந்து வருகிறாள். வீட்டில் எல்லோருக்குமே விடயம் தெரிந்திருக்கிறது.  அலங்காரத்தம்மாள் அப்புவை வேதம் படிக்க வைத்து அவனை வணங்கி தனது பாவத்தைப் போக்க வேண்டும் என நினைக்கிறாள்.  இறுதியில் அப்புவும் அம்மா பிள்ளை தான் எனக்கூறி காசிக்கு போய் பாவம் கரைக்க  கிளம்புகிறாள். இதிலிருந்து அப்பு , இந்துவின் விடயம்  அலங்காரத்தம்மாளுக்கு தெரிந்திருந்தது என ஊகிக்கமுடியும். பவானியம்மாள் வெளிப்படையாக எதுவும் கூறாவிட்டாலும் அவளது நடவடிக்கைகள் அப்பு , இந்து சேர வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்றே எண்ண வைக்கிறது. இந்த நாவலின் இந்து, அலங்காரத்தம்மாள், பவானியம்மாள் என அல்லோரும் தாம் விரும்பியதை சாதிக்கிறார்கள். பவானியம்மாள் வேதபாடசாலை நிறுவி வேதம் கற்றுகொடுக்கும் தனது ஆசையை நிறைவேற்றுகிறார்.அலங்காரத்தம்மாளும் இந்துவும் சம்பிரதாயமாக மக்களால் பேணப்படும் மரபை துணிந்து மீறுபவர்களாக இருக்கின்றனர்.

  ஜானகிராமன் நாவல்களின்  பெண்கள் தனித்துவமானவர்கள். அவர்களிடம் ஒரு வசீகரம் ஒட்டியிருக்கும்.  மோகமுள் நாவலின் ஜமுனா போல. 

"சரஸ்வதி பூஜை அன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால் அன்று ஒரு நாளும் இல்லாத திரு நாளாக புத்தகத்தின் மேல் வருகிறது ஆசை " 

என்ற‌ நாவலின் முதல் வரியே நாவலின் சாரம்சம் போல இருக்கிறது.



Wednesday, 16 December 2015

(42) அபிதா - லா.ச.ரா

இலக்கிய வாசிப்பினுள்  நுழைந்த ஆரம்ப நாட்களிலேயே "அபிதா" என்ற பெயர் அறிமுகமாகிவிட்டிருந்தது. இருந்த போதும் இப்போது தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அபிதகுசாம்பாள் என்றால் உண்ணாமுலையம்மன். அபிதா - உண்ணா, அதிலிருந்து அபிதா என்றால் ஸ்பரிசிக்க இயலாத என்ற அர்த்தத்தை  தானே எடுத்ததாக லா.ச.ரா (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) குறிப்பிடுகிறார். ஒரு ஆணின் (அம்பி)  வாழ்க்கையில் ஒன்றித்துப்போன மூன்று பெண்களைப் பற்றியே நாவல் பேசுகிறது.



சாவித்திரி-மனைவி, பணக்கார வீட்டு பெண். பணத்தையும் கொடுத்து பெண்ணையும் கொடுக்கிறார் சாவித்திரியின் அப்பா.

சகுந்தலை - சிறுவயது சிநேகிதி , கரடி மலையில், அவனது ஊரில் வாழ்ந்த காலத்தில் சகுந்தலையின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கிறான்.

அபிதா - சகுந்தலையின் மகள். நீண்ட நாட்களுக்கு பின் கரடி மலைக்கு வரும் அவன் சகுந்தலை இறந்துவிட்டதை அறிகிறான். அபிதாவில் சகுந்தலையை காண முயல்கிறான்.

பலரும் சொல்வது போல லா.ச.ராவின் நடை கவித்துவம் உள்ளது என்பதை வாசிக்கும் போது உணரக்கூடியதாக இருந்தது. மீள் வாசிப்பின் போது வேறுவிதமான அனுபவத்தை தரக்கூடியது என்றும் சொல்கிறார்கள். எனது முதல் வாசிப்பில் சில இடங்கள் வாசிக்க அயர்ச்சி தருவதாக இருந்தது. சில இடங்கள் கவித்துவம் மிக்கவையாக இருந்தது. அம்பி என்ற பாத்திரத்தை மையப்படுத்தியே கதை நகர்கிறது. மகள் போன்ற உறவுமுறை உடைய அபிதாவை சக்கு என்னும் சகுந்தலையாகவே அம்பி பார்க்கிறான். அம்பியின் மனவோட்டத்தையே நாவல் சித்தரிக்கிறது.

நாவல் அபிதா இறப்பதுடன்  முடிவடைகிறது .

 ‘‘அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாதகமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர்போல் அபிதா மலைமேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின் - ஒன்று, இரண்டு, மூன்றாவது படிமேல் உதிர்ந்து மலர்ந்தாள்.
இப்போ கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை.
 மரத்திலிருந்து பொன்ன‌ரளி ஒன்று நேரே அவள் மார் மேல் உதிர்ந்தது.
 சற்று எட்ட மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது".
என நாவல் முடிவடைகிறது.

அபிதா ஸ்பரிசிக்க இயலாதவள்.

Sunday, 13 December 2015

(41) நண்டு - சிவசங்கரி

நண்டு மணலில் குறித்த ஒரு இடத்தினூடாக தலையை நீட்டும் நண்டைப் பிடிக்க முயல்கையில் அது உட் சென்று வேறு ஒரு இடத்தினூடாக எட்டிப்பார்க்கும். அதைப்பிடிக்க சுற்றியுள்ள பிரதேசத்தை அப்படியே அகழ்ந்து எடுக்க வேண்டும். சில வேளைகளில் அப்போது கூட அகப்படாமல் போய்விடும். அதன் வளையானது சிக்கல் தன்மையுடையது. நண்டு எவ்வாறு மணலில் வளைகளை உருவாக்கி அகப்பட முடியாமல் வாழ்கிறதோ அதே தன்மையைப் புற்று நோயும் கொண்டுள்ளது.   இதனால் தான் புற்று நோய்க்கான சின்னமாக நண்டு வைக்கப்பட்டுள்ளது. நண்டு இலத்தின் மொழியில் cancer என்று குறிப்பிடப்படுகிறது.


தற்காலத்தில் இலங்கையில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கிருமி நாசினி அதிகம் பாவிக்கப்பட்ட மரக்கறிகள் , யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட த‌டை செய்யப்பட்ட ஆயுதங்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
"நண்டு" நாவலும் அவ்வாறான நோயின் கொடூரத்தை விபரிக்கும் ஒரு நாவல். சீதா என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியும் அவளது வட நாட்டு கணவன் ராம்குமாரின் அன்பு, அன்பான நண்பி சுமித்திரா , சுய நலம் மிக்க அக்கா கணவர் மூர்த்திக்கு இடையில் கதை பின்னப்பட்டுள்ளது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படும் சீதாவின் கதையூடாக நோயின் கொடூரம் , சுற்றியுள்ளவர்கள் அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், அதற்கான சிகிச்சை என்பன பற்றி எழுதப்பட்டுள்ளது. நோயைப்பற்றி ஒருவிதமான பயத்தை, சிறிய விழிப்புணர்வை உருவாக்குமாறு நாவல் எழுதப்பட்டுள்ளது.

Thursday, 15 May 2014

10. பொன் விலங்கு - நா.பார்த்தசாரதி

பொன் விலங்கு  -  நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் 'அரவிந்தன்' போல பொன்விலங்கு சத்தியமூர்த்தியும் கொள்கைகளும் இலட்சியமும் உள்ளவன். அம்மா, அப்பா இரண்டு தங்கைகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். தந்தை ஆசிரியர் என்பதால் சத்திய மூர்த்தி ஆசிரியராவதை அவர் விரும்பவில்லை. ஆசிரியராக இருந்தால் கடைசி வரை ஏழையாகவே வாழ வேண்டும் என்பது அவர் வாதம். ஆசிரியராகும் இலட்சியம் உள்ள சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் என்ற ஊரில் உள்ள கல்லூரிக்கு ஆசிரியராக செல்கிறான். நேர்முகத்தேர்வில் குறுந்தொகையில் உள்ள ' யாயும் ஞாயும் யார் ஆகியரோ' என்ற பாடலுக்கு விளக்கம் சொல்லும் சத்திய மூர்த்தியை கல்லூரி அதிபர் பூபதிக்கும் அவரது மகள் பாரதிக்கும்  பிடித்துவிடுகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாமல் நேருக்கு நேர் பேசும் தன்மை கல்லூரி முதல்வருக்கு பிடிக்கவில்லை. அத்துடன் அவன் படித்த கல்லூரி அரசியல் புரட்சிகளுக்கு பெயர் போனது என்பதால் சத்திய மூர்த்தியும் ஏதாவது புரட்சி செய்து தமது  கல்லூரியை கெடுத்துவிடுவான் என்று நினைக்கிறார். பல இழுபாடுகளுக்கு பின் சத்திய மூர்த்தி மல்லிகை பந்தல் கல்லூரியிலே விரிவுரையாளராகிறான்.

அங்கு அவனது மாணவியாக இருக்கும் பாரதிக்கு சத்தியமூர்த்தி மேல் காதல். ஆனால் சத்தியமூர்த்தியும்   நடனமாடும் மோகினியும் காதலிக்கிறார்கள். அத்துடன் சத்தியமூர்த்தி நண்பனாகவரும் cartoonist குமரப்பன், கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீன் என கதை நகருகிறது. இறுதியில் மோகினி இறந்து போக, சத்தியமூர்த்தி படிப்பதற்காக வெளிநாடு செல்வதோடு நாவல் நிறைவடைகிறது.

நாவலில் பிடித்த சில இடங்களை குறிப்பிட வேண்டும்.

சத்தியமூர்த்தி நேர்முகபரீட்சையில் விளக்கும் பாடல் பிரசித்தமானது. சினிமாவில் பாடல் வந்துவிட்டால் பிரபலமாகிவிடும் தானே. அதற்கு கொடுக்கப்படும் விளக்கம் நன்றாக உள்ளது.

 யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

' செம் புலப் பெயல் நீர் போல  அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'
 செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகிவிடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்துவிட்டனவே .

நாவலில் நவநீத கவி என்பவரது கவிதை பல இடங்களில் நினைவு கூற‌ப்படுகிறது. நவநீதகவி யாரென்று தெரியவில்லை. பொன்விலங்கில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது கவிதைகள், கவிதை பற்றி தெரியாத எனக்கே பிடித்துவிட்டது.

"பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்
பாரா திருந்தே தவித்ததுவும்
யார்க்கும் தெரியா திணைந்ததுவும்
யாரும் அறிந்தே பிரிந்ததுவும்
பேசத் தவித்துப் பேசியதுவும்
பேசாதிருந்தே தவித்ததுவும்
நேசம் தெரிந்து மணந்ததுவும்
நீசர் கலைக்கக் கலைந்தனவே "


"முன்னும் பின்னும் நினைவாகி – அது
முடிவிற் பெரிய கனவாகி
நீயும் நானும் கதையாகி – நம்
கதையும் உலகிற் செலவாகிக்
காலப் படுக்கை யதன்மேலே – முன்
கழிந்த நினைவுகள் கண்ணயர
அழிந்த நினைவுகள் கண்கலங்க – மனம்
அங்கும் இங்கும் அலைபாயும்"


முதல் நாள் பாடமெடுக்கும் சத்தியமூர்த்தி " she walks in beauty" என்ற ஆங்கில கவிதையை பாரதியாரின் "அழகுத்தெய்வம்" என்ற கவிதையுடன் ஒப்பிட்டு சொல்கிறான். "she walks in beauty" என்ற வரி  நாவலில் பல இடங்களில் வருகிறது.



Thursday, 2 September 2010

பார்த்திபன் கனவு

புத்தகம் : பார்த்திபன் கனவு
ஆசிரியர் : கல்கி
கல்கியின் முதலாவது வரலாற்றுப் புதினம் 'பார்த்திபன் கனவு' (1941 ). தமிழ் வரலாற்று புதின ஆசிரியர்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர் கல்கி. ஒப்பீட்டள‌வில் இவர் எழுதிய வரலாற்று புதினங்கள் எண்ணிக்கையில் சிறிது எனினும் தரத்தில் சிறந்தவை. பொன்னியின் செல்வனுக்கு நிகராக தமிழில் வேறு நாவல்கள் இல்லை எனலாம். கல்கியின் நாவல்களில் பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக பார்த்திபன் கனவு தான் சிறந்தது என சொல்வேன். சிவகாமியின் சபதம் இதற்கு பிறகு தான்.

ஒரு காலத்தில் கரிகால் சோழன், கிள்ளிவளவன், என புகழ் பூத்திருந்த சோழ ராட்சியம் பிற்காலத்தில் பல்லவர் ஆட்சி ஓங்க சிற்றரசாகிறது. மீண்டும் விஜயாலய சோழன் காலத்தில் ஓரளவு எழுச்சி பெற்றாலும் இடைப்பட்ட காலத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இந் நாவல் நரசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் சிற்றரசனாக கப்பம் கட்டி அரசாண்ட பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவைப்பற்றியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நுணுக்கமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டிருக்கிறது. இமயம் சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் சோழன் போன்ற புகழ் பூத்த சோழர்கள் பயன் படுத்திய வாளை கப்பம் கட்டி ஆட்சி செய்யும் சிற்றரசனான தான் பயன்படுத்த கூடாதென பத்திரப்படுத்தி வைத்தது மட்டுமல்லாது சோழர்கள் மீண்டும் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறான். தனது ஆசைகளை சித்திரமாகவும் தீட்டி வைக்கிறான். இவனது மனைவி சேர வம்சத்து அருள்மொழி தேவி. இவர்களது மகன் விக்ரமன்.

வாதாபிப்போரில் பல்லவர்களுடன் இணைந்து போரிட சம்மதித்தும் அதற்கு பதிலாக சோழர்களை கப்பம் செலுத்தாத சுதந்திர அரசாக்க வேண்டும் என கோரி நரசிம்ம பல்லவனுக்கு ஓலை அனுப்புகிறான். ஆனால் நரசிம்மபல்லவன் பதிலே அனுப்பவில்லை. இதனால் அவன் போரில் கலந்து கொள்ளாததுடன் கப்பம் செலுத்தவும் மறுக்கிறான். வாதாபியை வென்ற பல்லவப் பெரும் படையுடன் தோல்வி ஏற்படும் என தெரிந்தே சிறு படையுடன் சென்று மோதி வீர மரணம் அடைகிறான். (தென் நாட்டு சிற்றரசர்கள் சிலர் பல்லவர்களை வெறுத்ததால் அவர்கள் வாதாபிப்போரில் புலிகேசி சார்பாக போரிட்டார்கள் என்றும் பார்த்திபன் வட நாட்டவருடன் இணைய விருப்பமில்லாததால் போரில் கலந்துகொள்ளவில்லை எனவும் சிவகாமியின் சபதத்தில் வாதாபிப்போர் பற்றி குறிப்பிடும் போது பார்த்திப சோழன் பற்றிய குறிப்பு வருகிறது.)பல்லவர்கள் தமது எருது கொடியை வாதபி வெற்றியின் பின்னர் சிங்கமாக மாற்றி விட்டார்கள்.பல்லவர்களது கொடியின் சின்னம் எது என்பதில் எனக்கு குழப்பம் நாவல் வாசித்த போது தான் தீர்ந்தது.

இன் நாவலை வாசிப்பவர்களுக்கு பார்த்திபன் மீது பெரு மதிப்பு வரும் என்பது நிச்சயம். புலிக்கொடிக்கு அவமானம் நேரலாகாது என்பதற்காக தோல்வி நிச்சயம் என்று தெரிந்து போரிடுகிறான். சுதந்திர வேட்கை மிக்கவனாக அவனது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இந் நாவலின் முக்கிய பாத்திரங்களாக படகோட்டி பொன்னன், அவனது மனைவி
வள்ளியை சொல்லலாம். இவர்கள் பொன்னியின் செல்வன் பூங்குழலி, மந்தாகினிக்கு ஒப்பானவர்கள். சிவகாமியின் சபதத்தில் வரும் பரஞ்சோதி, நாகநந்தி எனப்படும் நீலகேசி போன்றவர்களையும் காண்லாம்.

தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நரபலி கொடுக்கும் கொடிய சமயக்கொள்கைகளை இல்லாது ஒளித்தமை, நீதி தவறாது ஆட்சி செய்தமை, மாறு வேடம் பூணும் திறமை என பேரரசர் நரசிம்மரின் பெருமைகள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளது. சிவனடியாராக மாறுவேடம் பூண்டு விக்கிரம சோழனுக்கும் உதவுகிறார். விக்ரமனும் தந்தை போலவே சுதந்திர வேட்கை உடையவனாக இருக்கிறான். நரசிம்மரின் மகள் குந்தவியை காதல் மணம் புரிகிறான். சுதந்திர சோழ அரசை சிறப்பாக ஆட்சி செய்கிறான். எனினும் பார்த்திபனின் ஆசையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சூரியனுக்கு முன் மற்றய கிரகங்கள் ஒளி மங்கி விடுவது போல இவனது புகழ் பரவ நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழ் தடையாக இருந்தது. வழி வழியாக சோழ அரசர்கள் தமது புதல்வர்களுக்கு பார்த்திப சோழனின் கனவையும் வீர மரணத்தையும் சொல்லியே வளர்க்கிறார்கள். 300 வருடங்களின் பின் வந்த ராஜராஜர், ராஜேந்திரர் காலத்திலேயே பார்த்திப சோழன் கனவு முழுமையாக நிறைவேறுகிறது.


பார்த்திபன் கனவு: சிறந்த வரலாற்று நாவல்.

(VERY GOOD)

Wednesday, 1 September 2010

வேங்கையின் மைந்தன்

புத்தகம் : வேங்கையின் மைந்தன்
ஆசிரியர்: அகிலன்
பொன்னியின் செல்வன் பாதிப்பால் அதில் வரும் வந்தியதேவன், குந்தவை போன்றவர்களை மீண்டும் காணும் ஆர்வத்தால் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாவல் அகிலனின் 'வேங்கையின் மைந்தன்'. இதன் ஆசிரியர் அகிலனுக்கு இந் நூலுக்காக சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. பொன்னியின் செல்வரின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தை பற்றி பேசுகிறது இந்நாவல். ராஜராஜசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் (பொன்னியின் செல்வனில் வானதி)பிறந்தவரே ராஜேந்திரன். ராஜேந்திர சோழன் 50 வயதளவிலேயே முடி சூடிக்கொண்டதால் அவரது முதுமைக்காலத்தை பற்றியே நாவல் பேசினாலும் அக் காலத்திலேயே ஈழம் சென்று மணிமுடி கைப்பற்றியமை , கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தமை போன்ற அவரது சாதனைகள் இடம்பெற்றமையால் வாசிக்க சுவையாக உள்ளது. இந் நாவலில் வந்தியதேவன் கிழவராக வருகிறார். ராஜேந்திரனுக்கு அரசியலில் ஆலோசனைகள் சொல்வதுடன் இளங்கோவுடன் ஈழம் சென்று மணிமகுடம் கைப்பற்ற உதவுகிறார்.


பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் போல வேங்கையின் மைந்தனில் இளங்கோ என்பவனே நாயகன். சோழப்பேரரசுக்காகவே தம் வாழ் நாட்களை அர்ப்பணித்த கொடும்பாளூர் வேளிர் குலத்தை சேர்ந்தவன். ராஜராஜசோழன் காலத்தில் ஈழப்போரில் மாண்ட பூதி விக்ரமகேசரி இவனது பெரிய பாட்டனார் ஆவார். ராஜேந்திரனுக்கு அருள்மொழி நங்கை, அம்மங்கை தேவி என இரு புதல்விகள். மூத்த புதல்வியான அருண்மொழி நங்கையையும் ரோகண இளவரசி ரோகினியையும் இளங்கோ திருமணம் செய்கிறான். அழகு, அறிவு, ஆற்றலில் சிறந்தவளான அருள்மொழியும் பேரழகியாக ரோகிணியும் என இரு நாயகிகள். பாண்டியர்கள் ஈழ மன்னரிடன் ஒப்படைத்த பாண்டிய மணிமுடியை கைப்பற்ற ராஜராகசோழன் காலத்திலேயே முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. ராஜேந்திரன் ஆட்சியில் இளங்கோ ஈழம் சென்று அம் முடியை கைப்பற்றுகிறான். ஈழ அரசனின் மகளான ரோகினியும் இளங்கோவும் காதலிக்கிறார்கள். ரோகிணி மூலமே மணிமுடி ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரிய வருகிறது. எதிரி நாட்டு வீரனை காதலிக்கும் ரோகிணி, தந்தைக்கும் , தம்பி காசிபனுக்கும் , நாட்டுக்கும் துரோகம் செய்கிறோமோ என துடிப்பதும் இளங்கோ மீது கொண்ட காதலில் இருந்து விடுபட முடியால் தவிப்பதுமாக இருக்கிறாள். ரோகிணி, இளங்கோ காதலே நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது பல இடங்களில் வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது.



ஈழ நாட்டவர்களது உதவி இல்லாது தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் மணிமுடியை கைப்பற்றி இருக்க முடியாது.அதற்கு எதிரி அரசனின் மகளே உதவினாள் என்பது அதீத கற்பனையாகவே தோன்றுகிறது. சிங்கள அரசர்கள் பாண்டியர்களுடன் திருமண தொடர்புகள் வைத்திருந்ததாக வரலாற்றிலுள்ளது. சோழருக்கும் ஈழ மன்னர்களுக்கும் பாண்டிய மணிமுடி தொடர்பான போர் நீண்டகாலம் இருந்து வந்த நிலையில், எதிரி நாட்டு வீரனை ஈழ இளவரசி காதலித்தாள் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் போலவே உள்ளது. பொன்னியின் செல்வனில் சோழ நாட்டுக்காகவே வாழும் குந்தவை மதிப்பு மிக்க பெண்ணாக போற்றப்படுகிறார். அவள் எடுக்கும் முடிவுகள் சோழ சாம்ராட்சியங்களுக்காகவே இருக்கிறது. வேங்கையின் மைந்தனில் கூட அருள்மொழி நங்கை தனது நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய தன்னிகரற்ற பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள். அப்படி இருக்க ஈழ நாட்டு ரோகிணி மட்டும் காதலுக்காக நாட்டையும் தந்தை, தம்பியையும் இழக்க நினைக்கும் பெண்ணாக காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இலங்கை வரலாற்றைப்பொறுத்தவரை, அரச குடும்ப பெண்கள் பல சந்தர்ப்பங்களில் போரில் வெற்றி பெற துணையாக நின்றுள்ளனர். நியாயமற்ற வழியாக இருந்தாலும் கூட . துட்டகைமுனு , எல்லாளன் போரை உதாரணமாக கொள்ளலாம். அப்படியிருக்க மகிந்தரின் மகள் எவ்வாறு எதிரி வீரனை காதலித்து தனது தந்தையின் ஆட்சி வீழ காரணமாக இருந்திருப்பாள். உண்மையில் மணி முடி கைப்பற்ற துணை புரிந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்.

ஈழ அரசன் மகிந்தனின் அமைச்சர் கீர்த்தி பற்றி குறிப்பிட வேண்டும் .சிறந்த ராஜதந்திரியாகவும் தமிழர்களை வெறுப்பவராகவும் இருக்கிறார். அடுத்து சுந்தர பாண்டியன், பாண்டியர்கள் சோழ ராட்சியத்தை வீழ்த்த செய்யும் சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜேந்திரன் இச்சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ராஜ ராஜனின் கனவாக இருந்த பாண்டிய மணிமுடி ராஜேந்திரனாலேயே நிறைவேறுகிறது.ராஜேந்திரர் காலத்தில் சோழ ராட்சிய விரிவாக்கம் அதிகம் இடம்பெறுகிறது. ஈழம் மட்டுமல்லாது கடாரம் வரை சென்று வெல்கிறான்.

இந் நாவல் சோழ ரட்சிய விரிவு, ஈழப்போர்,தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைமை மாறியமை போன்றவற்றை முதன்மையாக பேசுகிறது. பொன்னியின் செல்வன் வந்தியதேவன் போல் அல்லாது இளங்கோ தனியாக நின்று வீர சாகசங்கள் செய்கிறான். அதனால் யதார்த்தத்தன்மை குறைவான உணர்வை தருகிறது. இளங்கோ, ரோகிணி காதல் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. மற்றும்படி ராஜேந்திர சோழன் ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நாவல்.


வேங்கையின் மைந்தன்: வரலாற்று ஆவலர்கள்வாசிக்க வேண்டிய நாவல்.

(GOOD)

Wednesday, 18 August 2010

பொன்னியின் செல்வன் - ஒரு இனிய அனுபவம்


எட்டு வயது இருக்கலாம், கிடைத்த சிறுவர் புத்தகங்கள் யாவற்றையும் வாசித்து தீர்த்துவிட்ட நேரத்தில் என் கண்ணில் பட்டது பைண்ட் செய்து வைத்திருந்த "பொன்னியின் செல்வன் ". அந்த வயதில் வாசிக்க முயற்சி செய்து வர்ணனைகளும் தமிழும் பிடிபடாமல் போக இது நமக்கு சரிப்பட்டு வராது என ஒதுக்கி விட்டேன். அதற்கு பின் 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பல புத்தகங்கள் வாசித்திருந்தாலும், சிறுவயதில் ஏற்பட்ட மலைப்பு பொன்னியின் செல்வனை மட்டும் தொடுவதற்கு தைரியத்தை தரவில்லை. வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்களில் மிகச்சிறந்தது பொன்னியின் செல்வன் என்பது நான் அறியாததும் இல்லை.அதன் சிறப்புகளை பல பதிவுகளிலும் படித்திருக்கிறேன். அண்மையில் எனது புத்தக ஆர்வத்தை பார்த்த ஒருவர் பொன்னியின் செல்வன் பற்றி சிலாகிக்கும் போது நான் வாசிக்கவில்லை என்று சொல்லியதற்கு அவர் பார்த்த பார்வை இருக்குதே.எனது கௌரவத்தை காப்பாற்றி கொள்வதற்கு என்றாலும் பொன்னியின் செல்வன் வாசிப்பது என்று முடிவு செய்தேன்.

ஏதோ பள்ளிக்கூட வரலாற்று புத்தகம் வாசிப்பது போன்ற கசப்பான பாவனையில் படிக்க தொடங்கி ஒரு சில பக்கங்கள் படித்ததுமே விளங்கிவிட்டது எத்தனை வருடத்தை வீணாக்கி விட்டேன் என்பது. என்ன அருமையா நாவல். வேறு வேலை எதுவுமே செய்ய தோன்றாதவாறு நாவல் என்னை கட்டிப்போட்டு விட்டது.பல நாட்களாகவே கனவில் வந்தியதேவன், அருண்மொழி தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன்,அழ்வார்க்கடியான், நந்தினி போன்றவர்கள் தான் வருகிறார்கள்.பொன்னியின் செல்வன் வாசித்த எல்லோருக்கும் இந்த அனுபவம் கிடைத்து இருக்கும் என்பது உண்மை. பலரையும் போலவே நானும் ஆதித்த கரிகாலனை கொன்றது யாராக இருக்கும் என அறிய சோழ வரலாற்று நூல்கள் எடுத்து படித்து ஆராய்ச்சி செய்கிறேன்.

சாண்டில்யன் நாவல்களில் வரும் வர்ணனைகள் பல நேரங்களில் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பொன்னியின் செல்வனில் வரும் வர்ணனைக்காகவே மீண்டும் வாசிக்கலாம். அந்த காலத்திற்கு எம்மை அழைத்து சென்று எம்மை மகிழ்விக்கிறார் ஆசிரியர். வந்தியதேவனின் குறும்புகள்,ஆபத்திலிருந்து தப்புவதற்கு கையாளும் வழிகள், ஆழ்வார்க்கடியானுக்கும் வந்தியதேவனுக்கும் இடையிலான உரையாடல்கள் போன்றவற்றை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா? மணிமேகலை பாடுவதாக வரும் "இனியபுனல் அருவி தவழ் இன்பமலைச் சாரலிலே " என்ற பாடல் மிக நன்றாகஉள்ளது.இப்படிசொல்லிக்கொண்டே போகலாம்.


பொன்னியின்செல்வனில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் வந்திய தேவன். நாவல் முழுவதையும் அவனே ஆக்கிரமித்துக்கொள்கிறான்.குந்தவையின் கணவர் என்பதை தவிர வந்தியதேவனைப்பற்றிய தகவல்கள் வேறு இல்லாத போதும் அவனை முதன்மையான பாத்திரமாக கொண்டு 5 பாக (2000 பக்கங்களுக்கு மேல்) நாவலை சுவையாக எழுதியது ஆசிரியரின் திறமை.அவனை அதிவீர சாகசங்களை செய்பவனாக காட்டவில்லை. ஆபத்து நேரங்களில் ஏதோ வகையில் அவனுக்கு உதவிகள் கிடைக்கிறது. அவசர முடிவுகள் எடுத்து பிரச்சினைகளில் போய் மாட்டிக்கொள்ளும் சாதரண மனிதன் போல இருப்பதால் அவனை எல்லோருக்கும் பிடித்து விடுகிறது.ஆனால் அதற்கும் மேல் அன்பும் மதிப்பும் பொன்னியின் செல்வரில் ஏற்படுகிறது.கதையை வாசித்து முடித்த போது அவரது பெருந்தன்மையும் வீரமும் மனதில் நிறைந்திருப்பது காரணமாக இருக்கலாம்.

சோழ அரசை வீழ்த்த பாண்டிய ஆபத்துதவிகள் செய்யும் முயற்சிகள்,பழுவேட்டையர்கள், கொடும்பாளூர் வேளார், முதன்மந்திரி அநிருத்தர் சோழ அரசில் கொண்டிருந்த விசுவாசம் , ஒற்றர்களின் திறமை , குந்தவையின் செல்வாக்கும், ஆதித்த கரிகாலனின் வீரம் என்பன ஒரளவு விரிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.இந்த நாவலில் கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் சொல்லப்பட்டிருந்தாலும் காதலை முன்னிலைப்படுத்தி நாவல் செல்லவில்லை.காதலையும் அரசியலையும் தேவையான அளவில் கலந்து கொடுக்கப்பட்ட நாவல் என்பதால் தான் பொன்னியின் செல்வன் பெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் ஆசிரியர் நாவலை திடீரென முடித்து விட்டது போன்ற உணர்வு தோன்றியது. பல கதாபாத்திரங்கள் என்ன ஆனார்கள் என்பது நாவலில் சொல்லப்படவில்லை. வாசகர் குழம்பும் வகையில் சில சம்பவங்கள் உள்ளன.

1. நந்தினி : வீரபாண்டியனின் மனைவியா அல்லது மகளா என்பது குழப்பமாகவே சொல்லப்பட்டுள்ளது.

2. சேந்தன் அமுதன் : சேந்தன் அமுதனை உத்தம சோழனாக மாற்றியது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. அருண்மொழிதேவனுக்கு முன் உத்தம சோழன் என்பவன் ஆட்சி செய்ததாக வரலாற்றில் உள்ள போது, ஏதோ ஒரு நந்தவனத்தில் வளர்ந்த (அரச குலத்தில் பிறந்திருந்தாலும்), யுத்தம் பற்றிய அறிவு இல்லாத ஒருவர் தான் உத்தம சோழன் என்ற பெயரில் ஆட்சி செய்ததாக ஆசிரியர் எழுதியதன் காரணம் என்னவாக இருக்கும். அதுவும் சேந்தன் அமுதனை உத்தமச்சோழனாக மாற்றுவது ஆசிரியர் எடுத்த திடீர் முடிவு என ஒரு பதிவில் வாசித்த நினைவு உள்ளது.

ஆதித்த கரிகாலன் கொலை கூட குழப்பமாக இருந்தாலும்,உண்மையில் அங்கே என்ன தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் தான் எழுத முடியும். அவன் கடம்பூரில் மர்மமான முறையில் கொல்லப் பட்டான் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன.கொலை பற்றிய வலுவான அத்தாட்சிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கொலை பற்றி வெவ்வேறு கோணங்களில் எழுதப்படிருப்பதால் வாசகனுக்கு இது பற்றி மேலும் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

பொன்னியின் செல்வன் : மிக இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய நாவல். வரலாற்று பிரியர்களாக இருந்தால் அதற்கும் மேலே.
(VERY GOOD)