
அங்கு அவனது மாணவியாக இருக்கும் பாரதிக்கு சத்தியமூர்த்தி மேல் காதல். ஆனால் சத்தியமூர்த்தியும் நடனமாடும் மோகினியும் காதலிக்கிறார்கள். அத்துடன் சத்தியமூர்த்தி நண்பனாகவரும் cartoonist குமரப்பன், கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீன் என கதை நகருகிறது. இறுதியில் மோகினி இறந்து போக, சத்தியமூர்த்தி படிப்பதற்காக வெளிநாடு செல்வதோடு நாவல் நிறைவடைகிறது.
நாவலில் பிடித்த சில இடங்களை குறிப்பிட வேண்டும்.
சத்தியமூர்த்தி நேர்முகபரீட்சையில் விளக்கும் பாடல் பிரசித்தமானது. சினிமாவில் பாடல் வந்துவிட்டால் பிரபலமாகிவிடும் தானே. அதற்கு கொடுக்கப்படும் விளக்கம் நன்றாக உள்ளது.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
' செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'
செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகிவிடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்துவிட்டனவே .
நாவலில் நவநீத கவி என்பவரது கவிதை பல இடங்களில் நினைவு கூறப்படுகிறது. நவநீதகவி யாரென்று தெரியவில்லை. பொன்விலங்கில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது கவிதைகள், கவிதை பற்றி தெரியாத எனக்கே பிடித்துவிட்டது.
"பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்
பாரா திருந்தே தவித்ததுவும்
யார்க்கும் தெரியா திணைந்ததுவும்
யாரும் அறிந்தே பிரிந்ததுவும்
பேசத் தவித்துப் பேசியதுவும்
பேசாதிருந்தே தவித்ததுவும்
நேசம் தெரிந்து மணந்ததுவும்
நீசர் கலைக்கக் கலைந்தனவே "
"முன்னும் பின்னும் நினைவாகி – அது
முடிவிற் பெரிய கனவாகி
நீயும் நானும் கதையாகி – நம்
கதையும் உலகிற் செலவாகிக்
காலப் படுக்கை யதன்மேலே – முன்
கழிந்த நினைவுகள் கண்ணயர
அழிந்த நினைவுகள் கண்கலங்க – மனம்
அங்கும் இங்கும் அலைபாயும்"
முதல் நாள் பாடமெடுக்கும் சத்தியமூர்த்தி " she walks in beauty" என்ற ஆங்கில கவிதையை பாரதியாரின் "அழகுத்தெய்வம்" என்ற கவிதையுடன் ஒப்பிட்டு சொல்கிறான். "she walks in beauty" என்ற வரி நாவலில் பல இடங்களில் வருகிறது.
No comments:
Post a Comment