ஒரு புளியமரத்தின் வரலாறூடாக ஒரு கிராமத்தின் நகரமயமாக்கலை சொன்ன நாவல் என்று சொல்லலாம். பொதுவாக சினிமாவோ அல்லது நாவலோ ஒரு மனிதனை மையமாக வைத்து தான் உருவாக்கப்படிருக்கும். அந்த வகையில் இந்த நாவலை வித்தியாசமானது என்று சொல்லலாம். இது தான் நான் வாசிக்கும் சுந்தர ராமசாமியின் முதல் நாவல். சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சிலகுறிப்புகள்' வாசிப்பதற்கு எளிமையானது அல்ல என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் 'ஒரு புளியமரத்தின் கதை ' வாசிப்பதற்கு எளிமையாகவும் அப்பப்போ நகைச்சுவையாகவும் இருப்பதால் நாவல் எனக்கு பிடித்துவிட்டது.
ஆரம்பத்தில் தாமோதர ஆசான் புளியமரத்தை பற்றிய கதையை சொல்கிறார். எழுத்தாளர் தாமோதர ஆசானிடம் கதை கேட்கும் சிறுவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆசான் கிளை ஒன்றை வெட்டியதன் மூலம் அந்த புளியமரம் வெட்டப்படுவதை தான் தடுத்ததை பெருமையாக சொல்கிறார். பூரம் திருநாள் மகாராஜா வருடத்திற்கு இருதடவை கன்னியாகுமரி வந்து நீராடுவார். அதற்கான ஏற்பாடுகள் ஆறுமாதத்திற்கு முதலே தொடங்கிவிடும். ஒரு தடவை அவர் வரும் போது புளியமர குட்டையில் இருந்த அசுத்த நீரால் துர் நாற்றம் வீசியதாகவும், அதனால் கோபம் கொண்ட மகாராஜா ஏற்பாடுகளுக்கு பொறுப்பான முத்தம்பெருமாள் என்பவரை வேலையை விட்டு நீக்கியதாகவும், ஒரு வாரம் கழித்து திரும்பி செல்லும் போது மீண்டும் அதே பாதையால் தான் மகாராஜா போவார் என்று தீர்மானித்ததால் புளியங்குளத்தை வற்ற வைத்து மண்ணிட்டு நிரப்ப எப்படி திட்டம் போடப்பட்டது என்றும் ஆசான் சொல்கிறார். பல வருடங்களுக்கு முன் நடந்த புளியமரம் தொடர்பான கதைகள் தாமோதர ஆசானால் சொல்லப்படுகிறது.
அதன் பின்னான கதை எழுத்தாளர் பார்வையில் சொல்லப்படுகிறது. புளியங்குளத்திற்கு அருகில் இருந்த காற்றாடி மரத்தோப்பு பூங்காக மாறிய கதை அதில் ஒன்று. பூங்காவின் கதை ஒரு கிண்டலுன் அமைக்கப்படிருக்கும்.
காதர், தாமுவுக்கு இடையிலான பிரச்சினைகள் நாவலின் முக்கிய இடங்களில் ஒன்று. காதர் தனது வியாபாரத்தை பெருக்கிய முறையும் தாமுவின் குண நலமும் கேலி ஒலிக்கும் தொனியில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மக்களுக்கு சுதந்திர தியாகி என்றால் அது தாமு தான். தாமு பற்றி மிகைப்படுத்தப்பட்ட கதையையே அங்குள்ள மக்கள் கதைக்கிறார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது அவ்வளவாக தாமுவுக்கு பிடிக்கவில்லை, இனி தன்னை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறான். தாமு, காதர், திருவிதாங்கூர் நேசன் பத்திரகையில் எழுதும் இசக்கி, முனிசிப்பல் தலைவர் ஜோசப், கடலைத்தாத்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.
புளியமரத்தின் தாய்த்தடியிலிருந்து கிளைகள் வெடித்து செல்லும் இடத்தில் கத்தியால் ஒரு பள்ளம் தோண்டி, நாட்டு வைத்தியரிடம் பெறப்பட்ட பாதரசம் கலந்த விஷம் விடப்படுகிறது. அதன் மூலம் புளியமரத்தில் ஏற்பட்ட மாற்றம் ஐந்து வசனங்களில் தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் மனதை அப்படி ஏதோ போல ஆக்கிவிடும். புளியமரம் காய்ந்து கருகி பட்டுவிடும். புளியமரம் அழிந்த பின்னரும் இன்றுவரை அந்த இடம் புளியமர ஜங்ஷன் என்ற பெயரால் தான் அழைக்கப்படுகிறது.
தமிழில் எழுதப்பட்ட முக்கியமா நாவல்களில் ஒன்றாக இந் நாவல் கருதப்படுகிறது. இந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ,ஹீப்ரு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று நாவலின் முன்னுரை, மதிப்புரைகளில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment