Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Sunday, 7 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 3


ராஜன்

 பஷீரின் " உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது" நாவலில்  குஞ்ஞுபாத்துமாவின் அம்மா தனது அப்பாவிடம் ஆனை இருந்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனையை வைத்து ஒருவரின் சமூக அந்தஸ்த்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனையை வீட்டில் பாசமாக,  ஐஷ்வர்யத்திற்காக  வளர்த்திருக்கிறார்கள்.ஆனை காட்டில் வாழ வேண்டிய மிருகம் அதை வீட்டில் வளர்ப்பது ஒரு வகையில் நாம் ஆனையை வதைப்பதற்கு சமன் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். கோயிலில் நின்றிருக்கும் ஆனையை இன்றும் ஆசையுடன் பார்க்கின்றோம் எனினும் அது காட்டு விலங்காக அறியப்படுவதால் ஆனை பற்றிய புரிதல்கள் குறைந்து விட்டது. அண்மையில்  அன்னாசிப் பழத்தில் சொருகப்பட்ட வெடிவெடித்ததால் இறந்த ஆனை  எல்லோரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. ஆனை மனிதர்களால் ஆபத்து காரணங்கள் கூறி கொல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுவருகிறது. ஜெயமோகனின் யானை டாக்டர் கதை படித்தவர்களுக்கு யானையின் மேல் ஒரு புரிதலும் விருப்பும் வந்துவிடும். அதன் தொடர்ச்சியாக ஆனையில்லா, துளி, ராஜன் போன்ற கதைகளை  படிக்கும் போது ஆனை செல்லப்பிள்ளையாகி தெய்வமாகிவிடுகிறது..

எட்டுக்கட்டு வீட்டின் வலிய சங்கரன் ஆனை இறந்த பின் தம்புரானுக்கு ஐஷ்வர்யம் இல்லை என்ற மனக்குறை. பாறசாலை ஆறாட்டுக்கு சென்ற போது நெல்லுவிளை வீட்டின்( நாலு கட்டு வீடு) ஆனை பர்வதராஜனைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து அதை எப்படியாவது தனது அரண்மனைக்கு கொண்டுவர தம்புரான் நினைக்கிறார்.பர்வதராஜன் 11 அடி உயரம் உடையது,வலிய சங்கரனை விட அரை அடி  அதிகம். எட்டுக்கட்டு, நாலுகட்டு வீடு பற்றிய குறிப்பிலிருந்து செல்வம் கூடிய குடும்பம் எது என்ற அனுமானத்திற்கு வாசகர் வந்துவிடமுடியும். இப்போது இந்த பர்வதராஜனால் கௌரவம் முழுவதும் அந்தக் குடும்பத்திற்கு போகப் போகிறது என்பது தான் தம்புரானின் பிரச்சனை. எட்டு ஆனை விலை சொல்லியும் பர்வதராஜனை கொடுக்க முடியாது என நெல்லுவிளை வீட்டார் சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த ஆனையைக் கொல்வது என்று முடிவெடுத்து பூதத்தான் நாயரை வரவைக்கிறார்கள்.

வலியசங்கரனைப் பார்த்துக்கொண்ட பூதத்தான் நாயர் ஆனையோடே பிறந்து வளர்ந்தவன். ஆனை கடவுள் போல. தம்புரானின் காரியஸ்தன் கோவிந்தன் நாயர், ஆனைக்கு  விசம் வைத்து கொல்லும்படி பூதத்தானிடம் சொல்ல பூதத்தான் மறுத்துவிடுகிறான். அவர்களிருவருக்குமிடையான உரையாடலே இந்தக் கதையின் முக்கிய பகுதியாக நினைக்கிறேன். 
போர் என்றால் ஆனையைக் கொல்வதில்லையா.அது போல தான் இதுவும், எந்த சாபமும் வராது என பூதத்தானுக்கு சமாதானம் சொல்லும் போது,  "யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்பிளையாக்கும்” என்று பூதத்தான் சொல்கிறான்.


கேரளா என்ற தேசம் பரசுராமரால் ஆனைக்காக உருவாக்கப்பட்டது. மனிதன் தனக்கு வாழ இடம் தேவை என ஆனையிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பூதத்தான் சொல்லும் இந்த கதையை ஜெயமோகனின் எழுத்துக்களில் வாசிக்கும் போது நன்றாக உள்ளது. பூதத்தானை குடும்பத்தை கொன்றுவிடுவார்கள் என்று எவ்வளவோ மிரட்டுகிறார்கள்.வாசிப்பவர்களுக்கும் பதட்டம் .

கதையை எப்படி முடிக்கப் போகிறார் என்ற பதட்டம் வந்துவிடுகிறது. பர்வதராஜன் பூதத்தானை தூக்கி ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இருவருமே திரும்பிவரவில்லை என்று கதை கவித்துவமாக முடிகிறது. 


" சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி,  தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது"  என்று ஒரு வரி உள்ளது. ஜெயமோகனது  கதைகளில் விபரிக்கப்படும் துல்லிய வர்ணனை அப்படியே காட்சியாக மனதிலே தங்கிவிடக்கூடியது.

இங்கே ராஜன் என்பது பர்வத ராஜன் மட்டுமல்ல, பூதத்தானும் தான்.

Thursday, 4 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 2

துளி

ஆனையில்லா கதையைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்ய நான் தெரிவு செய்த கதை துளி. இதுவும் ஒரு ஆனை பற்றிய கதை என்பதோடு ஆனையில்லா கதையில் வரும் மனிதர்கள் இக்கதையிலும் வருவதால் ஒரு தொடர்ச்சியாக வாசித்து பார்க்க நினைத்தேன். யானையின் பெயர் கோபாலகிருஷ்ணன். ஆனையில்லா கதையில் ஐயப்பனின் வீட்டிற்குள் புகுந்த யானை.


மகாதேவர் கோயிலின் திருவிழாவுக்கு ஆயத்தமாக வேண்டிய யானை காலையில் இருந்து பிளிறிக்கொண்டிருக்கிறது. அதற்கு நோயுக்கான எந்த அறிகுறியும் இல்லை.நன்றாக சாப்பிட்டும் விட்டது. யானையைப் பார்த்துக்கொள்ளும் ராமன் நாயருக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி யானைக்கு மனசு சரியில்லை என சொல்கிறார்.

திற்பரப்பில் இருந்து கொச்சுகேசவன் என்ற யானை திருவிழாவுக்காக வந்து கொண்டிருக்கிறது. அதை தனது எட்டாவது அறிவால் அறிந்து தான் இந்த யானை படபடத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் நடந்த களியல் கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கொச்சுகேசவனுக்கு மரியாதை அதிகமாக கிடைத்ததால் கோபாலகிருஷ்ணனுக்கு கொச்சுகேசவன் இங்கு வருவது பிடிக்கவில்லை. என்னவாக இருந்தாலும் மகாதேவர் கோயில் யானை  கோபாலகிருஷ்ணன் தானே. திருவிழாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியதும் கொச்சு கேசவன் வரப்போவதை கோபாலகிருஷ்ணன்  உணர்ந்திருப்பான். அதனால தான் படபடப்பு.

இரு யானையைப் பற்றிய விபரங்கள் அழகாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கொச்சுகேசவனின் அப்பா கொச்சு கணபதி திருவோண நட்சத்திரக்காரன் என்பதும் கோபாலகிருஷ்ணனும் குறையில்லை ரோகிணி நட்சத்திரம் என்பதும் என அந்த கால மனிதர்கள் யானையின் நட்சத்திரங்களையும் தெரிந்து கதைப்பது யானையுடன் மனிதனுக்கு இருக்கும் உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

"தலையெடுப்புன்னா அவனாக்கும்… இவனுக்கு ஒரு பம்மலு உண்டு… கிண்ணம் களவாண்டுட்டு போறதுமாதிரி ஒரு நடை” 
என கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி என்பதால் கிண்ணம் களவாடிப் போற நடை என கரடி நாயர் சொல்கிறார். ஜெயமோகன் கதைகளில் யானையை வீட்டுப் பிள்ளை மாதிரி தானே  பார்த்துக் கொள்கிறார்கள்.

"கோபாலா, மரியாதைக்கு இருந்துக்கோ. நாலாளு கூடுத ஸ்தலமாக்கும். உனக்க அப்பன் தென்னிமலை கேசவனுக்க பேரை களையப்பிடாது கேட்டியா?”என்று ராமன் நாயர் யானையிடம் சொல்வதும் "சிவன்  மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?”  மாதவன் பிள்ளை சொல்வதும் என இந்தக் கதையிலும் மனிதர்களின் சின்ன சின்ன உரையாடல்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.

கருப்பன் என்ற நாய் தான் இரு யானைகளையும் சேர்த்து வைக்கிறது. இந்தக்கதையே மனிதனுக்கு புரிந்து கொள்ள முடியாத மிருகங்களின் உலகத்தை அழகாக சொல்வது தான்.

நண்பர்களுக்கிடையிலான சண்டை, கோயில் திருவிழாவுக்கான வேலைகள், அன்னதானம் தொடர்பான தகவல்களென வாசிக்கும் போது அப்படியே ஒரு காட்சியாக கற்பனை விரிந்து கொள்கிறது.

அன்னதானத்தில் கிறிஸ்தவரான டீக்கனாரின் பங்கு இருப்பதும் யானையின் பிரச்சனை முடிந்தவுடன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி ஏற்றுவேண்டும் என கரடி நாயர் சொல்வதும் என மதம் தாண்டிய மனிதர்களை   பார்க்கமுடிகிறது.

ஆனை வரிசையில் சிறப்பான ஒரு கதை.

Wednesday, 3 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 1

"ஆனையில்லா "

ஆரம்பத்தில் சாதாரணமாக வாசித்துக்கொண்டிருந்த கதைகளில், எனக்கு தீவிரமான பிடிப்பு ஏற்பட காரணமான முதல் கதை இது. அதனால் மறுவாசிப்புக்கு முதலில் இக்கதையையே தெரிவு செய்தேன்.

எராளி ஐயப்பனின் வீட்டிற்குள் ஆனை புகுந்து விட்டது. ஆனையால் வெளியில் வரமுடியவில்லை. ஆனையை மீண்டும் வெளியே கொண்டுவர வேண்டும்.

இதற்கு பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதில் ஒன்று சிறுவனான கதைசொல்லி  குடையை மடக்குவது போல ஆனையை மடக்கினால் வெளியே எடுக்கலாம் என சொல்வது. தந்தையின் திட்டு மூலமும் டீக்கனாரின் சிரிப்பு மூலமும் அது நிராகரிக்கப்படுகிறது. அடுத்து கிரீஸ் பூசுவது. அது தொடர்பான உரையாடல்கள் சுவையின் உச்சம். இறுதியாக  பூசாரியை வர வைக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, ஐயப்பனின் மனைவி தன்  மகள் நாராயணியை திட்டுவதும் அதற்கு அவள் தன்னுடன் கூடப் படிக்கும் கதை சொல்லியைப் பார்த்து நெளிவதும் அத்துடன் அவளது முகத்தைப் பார்க்கும் போது ஆனை வீட்டிற்குள் சென்றது பள்ளிக்கூடத்தில் தனக்கு பெருமையா அல்லது இழிவா என அவள் இன்னும் முடிவெடுக்க‌வில்லை என தெரிந்தது என சொல்வதும்.


இந்தச் கதையை அழகூட்டுவது சின்ன சின்ன உரையாடல்கள். ஆனைக்கு அபமிருத்யூ வந்த நாட்டில் கஜலக்ஷ்மி போய்விடுவா.கஜலக்ஷ்மி பின்னால் மற்ற லக்ஷ்மிகளும் போய்விடுவார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக்கும்  என ஒருவர் சொல்லும் போது ஸ்டீபன் மேரியும் ஒரு லக்ஷ்மியாக்கும், ஒன்பதாம் லக்ஷ்மி என சொல்வது அதில் ஒன்று. இக்கதையில் வரும் ஸ்டீபன் , கரடி நாயர் குழாமை கடுப்படிக்க கதைப்பவர்.

ஆனை வீட்டிற்குள் நுழைந்ததற்காக சொல்லப்படும் காரணம், ஆனை வெளியே வரும் வரை வீட்டிற்குள் இருந்த கிழவியைப் பற்றி யாருமே நினைக்காமல் இருந்தமை, பூசாரியைப் பற்றி அங்கு இருப்பவர்கள் கதைப்பது, பூசாரி கரடி நாயரை வம்புக்கு இழுப்பது,ஆனையை வெளியே கொண்டு வர பூசாரி கையாண்ட முறை  என எல்லாமே ரசிக்கும் படி உள்ளது.

 மொத்தக்கதையையே ஒரு உருவகமாகவும் கொள்ளலாம்.

Monday, 1 June 2020

அன்புள்ள ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனது  புனைவுக் களியாட்டு சிறுகதைகள் வாசித்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன். புனைவுகள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. இந்த 69 கதைகள் புனைவு இலக்கியம் மீது எனக்கு தீராத ஆசையை உருவாக்கியுள்ளது. நாலைந்து கதைகள் தவிர மீதி அனைத்துக் கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன. 25 கதைகளுக்கு மேல் சிறப்பானவை(வேற level )என சொல்லலாம்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.அது எனது அன்றாட கடமைகளில் ஒன்று. கட்டுரைகளையே விரும்பி வாசிப்பேன். அதுவும் பயணக் கட்டுரைகள். அடுத்ததாக நாவல் ஒன்று வாசிப்போம் என நான் தொடங்கியது விஷ்ணுபுரம். அந்த மொழியை, தத்துவத்தை  என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் முழுவதும் வாசித்து முடித்தேன்.(அவரது நாவல்களில் இறுதியாக வாசிக்க வேண்டியது விஷ்ணுபுரம் என அவர் எழுதியிருந்ததை பின்னரே வாசித்தேன்.)இவரது நாவல்கள் எனக்கு சரிப்பட்டு வராது என விட்டுவிட்டேன். பின் அ.முத்துலிங்கம் சிறந்த கதை என்று எழுதியதால் ஊமைச்செந்நாய் வாசித்தேன். வாசிக்கவே பிடிக்கவில்லை. ஒரு சில பந்திகளுடன் நிறுத்திவிட்டேன். ஆனால் அவரது அறம், விசும்பு, பனிமனிதன் போன்றவை என் விருப்பத்துக்குரியவை. அதன் பின் வெற்றி என்ற சிறுகதை இணையத்தில் பலமாக விவாதிக்கப்பட்டதால் வாசித்தேன். நான் இது வரை வாசித்த கதைகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருந்த கதை.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். பெருமளவிலான கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதன் பின் காடு நாவல். இந்த வாசிப்பினால் வந்த பயிற்சியினால் அவரது எழுத்துக்கள் எனக்கு பழக்கமாகியிருந்தது. புனைவுக் களியாட்டுக் கதைகளை கூர்மையாக புரிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவியது என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு நாளும் காலையிலேயே அவரது புனைவுக் களியாட்டு கதைகளை வாசித்து வந்தேன். இதற்காக காலை 5.30 மணிக்கு alarm  வைத்து எழும்பினேன். அன்று முழுவதும் அக்கதைகளே என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும். கொரோனா கால மன அழுத்தத்தை இக் கதைகள் குறைத்தது என்று சொல்லலாம். அவர் இக்கதைகளில் உருவாக்கிய கேரளா, குமரி, லடாக்,திபெத் போன்ற நிலங்களில் வாழ்ந்தேன். சில நேரங்களில் எது உண்மையான வாழ்க்கை என்ற குழப்பம் கூட வந்தது. இமய நிலத்தில் வாழ்வது போலவே தொன்றியது. ‌

ஜெயமோகன் நிறைவு என அறிவித்தது கவலை தந்தாலும் அதுவும் தேவை போல இன்னொரு வகையில் தோன்றியது. எனது கோவிட் காலத்தை நான் சரியாக பயன்படுத்தினேன் என்ற நிறைவு எனக்கு இருக்கிறது. அதிகாலையிலேயே எழும்பியதால் வேறு புத்தகங்கள் வாசிக்கக்கூடியதாகவும் இருந்தது. அத்துடன் முக்கியமாக 4000 திவ்ய பிரபந்தம் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் 20 பாட‌ல்களாக‌  தொடர்ந்து படித்து வருகிறேன்.

சமையலிலும் பாத்திரம் கழுவுவதிலும் பிள்ளை பார்ப்பதிலுமாக கழிந்து சென்றிருக்க வேண்டிய இக்காலத்தை அர்த்தம் உள்ளதாக மாற்றியதற்காக எனது அன்புக்குரிய எழுத்தாளருக்கு நன்றி .சூழ்திரு கதை வாசித்த நாட்களில் என்று நினைக்கின்றேன், அவரது வீட்டிற்கு சென்று அவருடன் அக்கதையைப் பற்றி கதைப்பது போல கனவு கூட கண்டேன்.அவர் பெரிதாக எதுவும் கதைக்கவில்லை. அப்படியா என்பது போல கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மனைவி சிறந்த உணவு ஒன்றும் உண்பதற்கு தந்தார், கனவில்.

இலக்கியத்தின் பயன் என்ன என்பதற்கு , ஒரு வாழ்க்கையே நான் வாழ்வதற்கு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இலக்கியம் மூலம் நான் தாகூருடன் வங்கக் கடலில் அலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன், சாள்ஸ் டிக்கன்ஸ் லண்டன் தெருவில் எனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்.அரேபிய மணல் தெரிந்திருக்கிறது. பல வாழ்க்கை வாழ்வதற்கு இலக்கியம் உதவுகிறது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். புனைவுக் களியாட்டு கதைகள் வாசித்தபோது தான் அந்த வரிகளின் உண்மையை உணர்ந்தேன். இம‌ய மலையடுக்குகளில்  இருந்த டான்லே மடாலயத்தில் அசிதருடனும் காகத்துடனும் அந்த பனிக் குளிரில் வாழ்ந்தேன், கரடி நாயருடனும் அவரது நண்பர்களுடனும் அசல் கிராம வாழ்க்கை வாழ்ந்தேன், ஔசேப்பச்சன்,குமரன் மாஸ்ரர் குழுவுடன் அந்த மேசைக்கு அருகில் அமர்ந்து அந்த உரையாடல்களைக் கேட்டேன், உமையம்மை ராணியின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுவதை பார்த்து நெஞ்சம் நடுங்க அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தித்தேன்.இசக்கியம்மைக்கு ஏன் இப்படி ஒரு துயரம் என்று புரியாமல் விடைதேடினேன்.திபெத்,இமைய நிலம் எனக்கு இப்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருக்கிறது.



எனக்கு மிகவும் பிடித்த கதை எது என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கரு,இறைவன்,பலிபீடம், பத்து லட்ஷம் காலடிகள்,நற்றுணை, நிழல்காகம்,சூழ்திரு, பொலிவதும் கலைவதும், ஓநாயின் மூக்கு ஆகிய கதைகளில் ஒன்றாக இருக்கலாம். மறுவாசிப்புக்கு பின் தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அறம்,விசும்பு கதைத் தொகுதிகள் போல ஜெயமோகன் எப்போது கதை எழுதுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். கோவிட் காலத்தில் அது நிறைவேறியிருக்கிறது. உண்மையில் இத்தொகுதியில் உள்ள பல கதைகள் அதைவிட சிறந்தவை. புத்தகமாக வரும் போது வாங்குவதற்காக காத்திருக்கின்றேன்.

Sunday, 20 August 2017

(71) ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயமோகனின் கட்டுரைகள்  எனக்கு மிகவும் பிடிக்கும்.கதைகள் என்று பார்த்தால் அறம் சிறுகதைத் தொகுப்பு, விசும்பு அறிவியல் சிறுகதைகள் விரும்பி  வாசித்து இருக்கிறேன். அவரது  இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகள் சில வாசித்து இருக்கிறேன். எனக்கு அவரது சிறுகதைகளைப் புரிந்து கொள்ள முடியாது என நினைத்திருந்ததால் சிறுகதைகள் பெரிதாகப் படித்தது இல்லை. ஆனால் அண்மையில் அவரது இணையத்தளத்தில் வெளியான  'வெற்றி' என்ற கதை மிகவும் பிடித்து இருந்ததால் அவரது சிறுகதைத் தொகுப்பை முயற்சி செய்வோம் என முடிவு செய்து வாசித்தேன். நிதானமாக வாசித்த போது கதைகள் புரிந்தன போல் தான் இருக்கின்றன. ஆனால் சில வாசகர்களின் கடிதங்களை வாசிக்கும் போது அட நான் இப்படி யோசிக்கவில்லையே, புரிந்து கொள்ள இன்னும் பயிற்சி வேண்டும் எனத் தோன்றுகிறது. மொத்தமாக 57 கதைகள் கொண்ட தொகுப்பு.கட்டாயமாக வாசிக்க வேண்டிய கதைகள் பல உள்ளன.

Sunday, 25 June 2017

(70)பனிமனிதன்- ஜெயமோகன்

பனிமனிதன் சிறுவர்களுக்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட நாவல். பெரியவர்களுக்கும் ஏற்றது. இயற்கை, புத்தமதம், சாகசம் பலதும் நிறைந்து கற்பனைக்கு இடம் கொடுத்து எழுதப்பட்ட நாவல்.
இமையமலையில் அவதானிக்கப்பட்ட மிகப் பெரிய காலடித்தடம் தொடர்பாக ஆராயச் செல்லும் இராணுவ வீரன் பாண்டியன், Doctor திவாகர் மற்றும் இமையமலையை இருப்பிடமாகக் கொண்ட பௌத்த மதத்தை பின்பற்றும் கிம், மூவரும் காலடித்தடத்துக்கு உரிய பனிமனிதனைத் தேடிச் செல்கிறார்கள். இமையமலைப் பனிப் பகுதியில் அவர்களது பயணம் ஒரு சாகசப் பயணமாக இருக்கிறது.
பனிமனிதன் வாழும் பகுதி அவதார் படத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.பனிமனிதன் 2001 இல் எழுதப்பட்டது. அவதார் திரைப்படம் 2009 இல் வெளியானது. அவதார் படம் வெளியாக பல வருடங்கள் முன்னரே எழுதப்பட்ட பனிமனிதன் கதையில் அவதாரை மிஞ்சும் கற்பனை மிருகங்களை உருவாக்கி இருக்கிறார் ஜெயமோகன். சீனாவின் டிராகன், கோயில் சிற்பங்களில் காணப்படும் யாளி உட்பட பல கற்பனை விலங்குகள் பிரமிக்க வைக்கின்றன.பனிமனிதர்களும் அவதார் பட வேற்றுக் கிரக மனிதர்களை நினைவூட்டுகின்றனர்.

அனைத்து தகவல்களுக்கும் விஞ்ஞான, மனவியல் ரீதியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.காளிதாசரின் ரகுவம்சம் தொடர்பான தகவலில் இமையமலையில் ஒரு தாவரம் இரவில் விள‌க்கு போல ஒளி வீசியதாகவும் அந்த ஒளியில் ரகுவின் யானைகளின் சங்கிலிகள் மின்னியதாகவும் ஒரு குறிப்பு உள்ளதாக எழுதியுள்ளார். காளிதாசர் பிறபகுதிகளைப் பற்றிக் கூறியவை சரியாக இருப்பதால் அப்படி ஒரு தாவரம் இருந்திருக்கக் கூடும் எனக் குறிப்பிடுகின்றார்.

திபெத்திய லமாய் பற்றிய தகவல்கள், திபெத்திய மக்களின் ஆயுட்காலம், அவர்கள் புதிய தலைவரைத் தெரிந்து கொள்ளும் முறை என்பன திபெத்திய பௌத்தம் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலை உருவாக்கி விட்டது.

Sunday, 18 September 2016

(60) அறம் - ஜெயமோகன்

அறம் புத்தகம் வெளியான நாட்களில் இருந்து இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தேடியிருக்கிறேன். இலங்கையில் மட்டுமல்ல, 2014 இல் இந்தியா சென்ற போது திருச்சியில் சில கடைகளில் விசாரித்தேன். புத்தகம் கிடைக்கவில்லை. இனியும் பொறுக்க முடியாது என்று தற்போது  உடுமலை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொண்டேன். கதைகள் ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தில் வெளியான போது வாசித்தவை தான், இருந்தாலும் பிடித்த கதைகள் எப்போதும் புத்தகமாக பக்கத்தில் இருக்கும் போது ஒரு சந்தோசம் தான்.

அறத்துடன் வாழும்/வாழ்ந்த‌ தற்கால மனிதர்கள் சிலரது கதைகள். அறம் என்பது இதிகாசங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் இந்த காலகட்டத்தில், தற்போது கூட சிறந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று இக்கதைகள் காட்டுகின்றன. அரிச்சந்திரன் போல வாழ முடியாவிட்டாலும் கூட ஒரு சில நல்ல குணங்களையாவது எம்மில் வளர்த்துக்கொள்ளலாம். இக்கதைகளை வாசித்த பின் நான் சிறிதாவது மாறியுள்ளேன் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக இது மற்றவர்களைத் திருத்த எழுதப்பட்ட அறிவுரை கூறும் புத்தக வகை அல்ல.

இக்கதைகளைப் பற்றி ஏற்கனவே பலர் தேவையான அளவு சிறப்பாக‌ எழுதிவிட்டார்கள்.

அறம் - முதலாவது கதை. ஒரு எழுத்தாளர் பற்றிய கதை.கதை சொல்லி அவ் எழுத்தாளருடன் உரையாடுவது போல அமைக்கப்பட்ட கதை. எழுத்தாளர் தனது பணத்தேவைக்காக  ஒரு வருடத்திற்குள் 100 புத்தகங்கள் எழுதுவதாக ஒரு பதிப்பகத்திற்கு வாக்கு கொடுக்கிறார். அவ்வாறே எழுதி முடிக்கிறார்.(இன்று வரை பதிப்புகள் வந்து கொண்டிருக்கின்ற புத்தகங்கள்) அவருக்கு வர வேண்டிய பணத்தை பதிப்பாளரிடமே சேர்த்து வைக்கிறார்.  பணத்தைக் கேட்ட போது பதிப்பாளர் துரத்தி விடுகிறார். பதிப்பாளரின் மனைவி அப்பணத்தை எப்படி எழுத்தாளருக்கு பெற்றுக் கொடுக்கிறார் என்பது தான் கதையின் உச்சம்.

வணங்கான் -   மார்ஷல் ஏ.நேசமணி பற்றிய கதை. சாதியடுக்குகள் நிறைந்த சமூகத்தில் கீழ்சாதி மக்கள் எவ்வாறு அவமானப்படுத்தப்படுகிறார்கள், ஜமீன்கள் மக்களை எப்படித் துன்புறுத்துகிறார்கள், படித்து நல்ல வேலையில் இருந்தால் கூட உயர் ஜாதியனர் முன் எப்படியெல்லாம் கூனிக்குறுகி நிற்க வேண்டியிருக்கிறது போன்ற அந்தக் கால சித்திரத்தை கொண்ட கதை.

தாயார் பாதம் -  குடும்ப அமைப்புக்குள் சிக்கி தன் சுயத்தை இழந்த பெண்ணின் கதை. ராமன் என்பவர் தனது பாட்டியைப் பற்றி சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். அக்குடும்பத்தில் பாட்டியை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பாட்டி எப்பவுமே வேலை செய்து கொண்டு இருப்பார். பாட்டி நன்றாக பாடக்கூடியவர். ஆனால் சிறு வயதில் அந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவர் பாடி யாரும் கேட்டதில்லை. தாத்தாவுக்கு தான் பாட மட்டுமே தெரியும். மற்றவர்கள் பாடுவதைக் கேட்கத் தெரியாது. மிகச் சிறந்த கதை.

 யானை டாக்டர்- எனக்கு மிகவும் பிடித்த கதை. டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிய கதை. மனிதர்களின் பொறுப்பற்ற வேலையால் காயத்துக்கு உள்ளாகும் யானைக்கு  வைத்தியம் செய்யும் டாக்டர் ஊடாக பல விடயங்கள் இக்கதையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காடுகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களது பொறுப்பற்ற செயற்பாடுகளால் காட்டு மிருகங்கள் காயங்களுக்கு உள்ளாகின்றன. சுற்றுலா செல்பவர்கள் கண்ணாடிப் போத்தில்களை வீசுதல், பொலித்தீன்களை கண்டபடி வீசுதல் போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமாக நடப்பவை. வீதிகளில் எதையாவது குடித்துக்கொண்டு செல்பவர்கள் முடிந்தவுடன் அப்போத்தில்களை வீதியில் எறிந்து விட்டு செல்வார்கள். பிறகு அவர்களே எமது நாடு குப்பை என்று எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாது கதைப்பதை வெகு சாதாரணமாக காணலாம். 


நூறு நாற்காலிகள் - நாடோடிக் குடும்பத்தில் பிறந்து நாராயணகுருவின் சீடர் பிரஜானந்தர் உதவியால்  படித்து நல்ல பதவியில் இருக்கும் ஒருவரின் கதை. அவர் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டமைக்கு காரணம் தேர்வாளர்கள் தம்மை முற்போக்காளர்கள் எனக் காட்டிக்கொள்ளவே. காப்பானின் தாயால் தனது உலகத்தை விட்டு வெளிவரமுடியவில்லை. தாயை நினைத்து காப்பானின் மனப்போராட்டங்கள் நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.

பெருவலி - கோமல் சுவாமிநாதன் பற்றிய கதை. இறுதிக்காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளை இமயமலைக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டு செல்கிறார். அதற்கு காரணமாக பல வருடங்களுக்கு முன் புத்தகம் ஒன்றில் வந்த ஒரு படம் இருக்கிறது.

ஓலைச்சிலுவை - டாக்டர் சாமர்வெல் பற்றியது. இராணுவத்தில் இருந்து உலகப்போரில் பங்குபற்றியவர். போரின் பயங்கரம் அவரை மிகவும் பாதிக்கிறது. மலையேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர். நெய்யூரில் ஒரு மருத்துவமனையின் நிலை அவரைப் பாதித்துவிட அங்கேயே தங்கிவிடுகிறார்.

கோட்டி - தன்னலம் என்பது சிறிதுமே இல்லாத சமூகப் போராளியான பூமேடை ராமைய்யா பற்றிய கதை. இது தவிர குரு-சிஷ்ய உறவை சொல்லும் மத்துறு தயிர் மற்றும் மயில் கழுத்து,உலகம் யாவையும் உள்ளடங்கிய பதின்மூன்று கதைகள் உள்ளடங்கிய புத்தகம்அறம்.

இக்கதைகள் பற்றிய விவாதங்கள் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அவை கதைகளை  மேலும் புரிந்து கொள்ள உதவியாக உள்ளது.




Tuesday, 11 August 2015

(38) விசும்பு - ஜெயமோகன்


எனக்கு தெரிந்து தமிழில் அறிவியல் கதைகள் எழுதுபவர் எழுத்தாளர் சுஜாதா தான்.  அறிவியல் புனைகதைகள் எனும் போது விண்வெளி , இயந்திர மனிதர் , வேற்றுக்கிரக வாசிகள் போன்றவையே  நினைவுக்கு வருவது சுஜாதாவின் தாக்கமாக இருக்கலாம்.


ஜெயமோகன் நமது பண்பாடு , ரசவாதம் , சித்த மருத்துவம் தொடர்பாக அறிவியல் கதை எழுதியிருக்கிறார் என்று தெரிந்த போது வாசிக்க வேண்டும் என நினைத்தேன். அண்மையில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிச்சயமாக புதுவித அனுபவமாக இருந்தது. அத்துடன் இக்கதைகள் நகைச்சுவை உணர்வு மிக்கதாகவும் இருக்கின்றன. பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.


ஐந்தாவது மருந்து
 எயிட்ஸ் இற்கு மருந்து கண்டுபிடித்த தளவாய் ராஜாவை பார்க்க அவனது நண்பர்  இருவர் அவனது ஊருக்கு வருகின்றனர். அவர்களுக்கு இடையே நடை பெறும் உரையாடலாக கதை அமைக்கப்பட்டுள்ளது. பரிணாமக்கொள்கை , சித்த மருந்து , சுவடிகள் , வரலாற்றில்  இதே அறிகுறி உடைய நோய் பற்றிய தகவல் என கதை அவ்வளவு நன்றாக இருக்கும்.

இங்கே , இங்கேயே..
வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களது  வாகனத்தின்தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படும் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கல்லன்மலை உச்சியில் உள்ள தடம் விண்வெளி ஊர்தியின் தடமாக இருக்க வேண்டும் என நம்புகிறார்  நாராயணன் .  இல்லை அது அவ்வாறு இருக்க முடியாது என பத்மநாபன் கூறும் காரணங்கள்  விஞ்ஞான ரீதியானவை.

விசும்பு
இது பறவைகள் வலசை போவது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பறவைகள் வலசை போவது பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலையும் இக்கதை தரும்.  நஞ்சுண்டராவ் , அவரது மனைவி , அவரது தந்தை கருணாகரராவ் எல்லோரும் interesting characters.

பித்தம் -
இது ரசவாதம் தொடர்பான கதை. சில சித்தர்கள் இக்கலை பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள் என நம்பப்படுகிற‌து. செம்பை  தங்கமாக்கும்  முயற்சி இன்றும் பலர் செய்துபார்க்கிறார்கள்.

உற்று நோக்கும் பறவை:
இக்கதையை வாசித்த போது துவாத்மர்கள் என்பவர்கள் உண்மையில் இருந்தவர்கள் தான் என நான் நம்பி இணையத்தில் தேடினேன். ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய பதி  கடிதத்தில் அது கற்பனையாது எனக் கூறியிருந்தார். இது உளவியல் , மனப்பிளவு தொடர்பான கதை.

 மூளையின் இயக்கம்  தொடர்பான பூர்ணம்  மற்றும் நாக்கு , நம்பிக்கையாளன் போன்ற கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கடைசி இரு கதைகளும் பேச்சு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.  "குரல்" என்ற கடைசி பேச்சு வடிவ சிறுகதை என்னைப் பொறுத்தவரை சிறந்த நகைச்சுவை கதையாகவும் இருந்தது.

எழுத்தாளர் விசும்பு , அறம் போன்ற கதைகளையும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்காக இடைக்கிடை எழுதினால் பலர் பயன் பெறுவார்கள்.


Wednesday, 15 January 2014

(1) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
இது விமர்சனம் அல்ல. விஷ்ணுபுரம் பற்றிய என் அனுபவம் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன் வாசிக்க முயற்சி செய்து எதுவும் விளங்காததால் விட்டுவிட்டேன். இணையத்தில் அதிகமாக கதைக்கப்படும் புத்தகமாக இருப்பதால் இம்முறை எப்படியாவது வாசிப்பது என்ற‌ முடிவுடன்  வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரம்  வாசிக்க முதல்   விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரைகள் சில‌ வாசித்து  ஒரு பயிற்சி செய்து கொண்டேன். 

நாவல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  தென் பகுதியில் உள்ள ஒரு ஊர் விஷ்ணுபுரம். பல வருடங்களுக்கு முன், ஞான சபையில் விவாதத்தில் வென்று அக்னி தத்தன் என்பவன் வைதிக மரபை நிலை நாட்டுகிறான். அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதில் வென்று பௌத்தத்தை நிலை நாட்டுகிறார் அஜிதர். அஜிதரின் கதை இரண்டாம் பாகத்தில் வருகிறது. இரண்டாம் பகுதி சைவர், பௌத்தர், திபேத்தியர்களுடனான வாதங்களாக செல்கிறது. தர்க்கம் நிறைந்த இப்பகுதி வாசிக்க கடினமான பகுதி. சிலர் இப்பகுதி தான் சுவாரசியமானது என்கிறார்கள்.

நாவல் நிறைய கதை மாந்தர்களைக் கொண்டது . முதற்பகுதியில் வாழ்ந்த கதாபாத்திரங்கள்  (சங்கர்ஷணன், திருவடி, சித்திரை ) மூன்றாவது பகுதியிலும் வருகிறார்கள், மக்களின் கதைகளில் வாழ்கிறவர்களாக. மூன்றாவது பகுதியில் விஷ்ணுபுரம் சிதிலமடைந்த நகராக உள்ளது. வறுமை நிலவுகிறது.மக்கள் இப்படி ஒரு பிரமாண்ட  நகரம் உண்மையில் இருந்ததா? இல்லை காவியம் மட்டும் தானா? என்று கதைத்துக் கொள்கிறார்கள். இறுதியில் பிரளயம் ஏற்பட்டு நகர் முற்றிலும் அழிந்துவிடுகிறது. 

முதல் வாசிப்பில் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறு முறை வாசித்தால் ஒரு வேளை கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை வாசிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனக்கு நாவல்  பெரிதாக சிலாகித்து சொல்லும்படி இல்லை. ஆனால்   விஷ்ணுபுரம் வாசித்தது ஒரு சிறந்த வாசிப்பு பயிற்சியாக இருந்தது என்பது மட்டும் உண்மை.