எழுத்தாளர் ஜெயமோகனது புனைவுக் களியாட்டு சிறுகதைகள் வாசித்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன். புனைவுகள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. இந்த 69 கதைகள் புனைவு இலக்கியம் மீது எனக்கு தீராத ஆசையை உருவாக்கியுள்ளது. நாலைந்து கதைகள் தவிர மீதி அனைத்துக் கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன. 25 கதைகளுக்கு மேல் சிறப்பானவை(வேற level )என சொல்லலாம்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.அது எனது அன்றாட கடமைகளில் ஒன்று. கட்டுரைகளையே விரும்பி வாசிப்பேன். அதுவும் பயணக் கட்டுரைகள். அடுத்ததாக நாவல் ஒன்று வாசிப்போம் என நான் தொடங்கியது விஷ்ணுபுரம். அந்த மொழியை, தத்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் முழுவதும் வாசித்து முடித்தேன்.(அவரது நாவல்களில் இறுதியாக வாசிக்க வேண்டியது விஷ்ணுபுரம் என அவர் எழுதியிருந்ததை பின்னரே வாசித்தேன்.)இவரது நாவல்கள் எனக்கு சரிப்பட்டு வராது என விட்டுவிட்டேன். பின் அ.முத்துலிங்கம் சிறந்த கதை என்று எழுதியதால் ஊமைச்செந்நாய் வாசித்தேன். வாசிக்கவே பிடிக்கவில்லை. ஒரு சில பந்திகளுடன் நிறுத்திவிட்டேன். ஆனால் அவரது அறம், விசும்பு, பனிமனிதன் போன்றவை என் விருப்பத்துக்குரியவை. அதன் பின் வெற்றி என்ற சிறுகதை இணையத்தில் பலமாக விவாதிக்கப்பட்டதால் வாசித்தேன். நான் இது வரை வாசித்த கதைகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருந்த கதை.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். பெருமளவிலான கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதன் பின் காடு நாவல். இந்த வாசிப்பினால் வந்த பயிற்சியினால் அவரது எழுத்துக்கள் எனக்கு பழக்கமாகியிருந்தது. புனைவுக் களியாட்டுக் கதைகளை கூர்மையாக புரிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவியது என நினைக்கின்றேன்.
ஒவ்வொரு நாளும் காலையிலேயே அவரது புனைவுக் களியாட்டு கதைகளை வாசித்து வந்தேன். இதற்காக காலை 5.30 மணிக்கு alarm வைத்து எழும்பினேன். அன்று முழுவதும் அக்கதைகளே என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும். கொரோனா கால மன அழுத்தத்தை இக் கதைகள் குறைத்தது என்று சொல்லலாம். அவர் இக்கதைகளில் உருவாக்கிய கேரளா, குமரி, லடாக்,திபெத் போன்ற நிலங்களில் வாழ்ந்தேன். சில நேரங்களில் எது உண்மையான வாழ்க்கை என்ற குழப்பம் கூட வந்தது. இமய நிலத்தில் வாழ்வது போலவே தொன்றியது.
ஜெயமோகன் நிறைவு என அறிவித்தது கவலை தந்தாலும் அதுவும் தேவை போல இன்னொரு வகையில் தோன்றியது. எனது கோவிட் காலத்தை நான் சரியாக பயன்படுத்தினேன் என்ற நிறைவு எனக்கு இருக்கிறது. அதிகாலையிலேயே எழும்பியதால் வேறு புத்தகங்கள் வாசிக்கக்கூடியதாகவும் இருந்தது. அத்துடன் முக்கியமாக 4000 திவ்ய பிரபந்தம் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் 20 பாடல்களாக தொடர்ந்து படித்து வருகிறேன்.
சமையலிலும் பாத்திரம் கழுவுவதிலும் பிள்ளை பார்ப்பதிலுமாக கழிந்து சென்றிருக்க வேண்டிய இக்காலத்தை அர்த்தம் உள்ளதாக மாற்றியதற்காக எனது அன்புக்குரிய எழுத்தாளருக்கு நன்றி .சூழ்திரு கதை வாசித்த நாட்களில் என்று நினைக்கின்றேன், அவரது வீட்டிற்கு சென்று அவருடன் அக்கதையைப் பற்றி கதைப்பது போல கனவு கூட கண்டேன்.அவர் பெரிதாக எதுவும் கதைக்கவில்லை. அப்படியா என்பது போல கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மனைவி சிறந்த உணவு ஒன்றும் உண்பதற்கு தந்தார், கனவில்.
இலக்கியத்தின் பயன் என்ன என்பதற்கு , ஒரு வாழ்க்கையே நான் வாழ்வதற்கு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இலக்கியம் மூலம் நான் தாகூருடன் வங்கக் கடலில் அலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன், சாள்ஸ் டிக்கன்ஸ் லண்டன் தெருவில் எனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்.அரேபிய மணல் தெரிந்திருக்கிறது. பல வாழ்க்கை வாழ்வதற்கு இலக்கியம் உதவுகிறது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். புனைவுக் களியாட்டு கதைகள் வாசித்தபோது தான் அந்த வரிகளின் உண்மையை உணர்ந்தேன். இமய மலையடுக்குகளில் இருந்த டான்லே மடாலயத்தில் அசிதருடனும் காகத்துடனும் அந்த பனிக் குளிரில் வாழ்ந்தேன், கரடி நாயருடனும் அவரது நண்பர்களுடனும் அசல் கிராம வாழ்க்கை வாழ்ந்தேன், ஔசேப்பச்சன்,குமரன் மாஸ்ரர் குழுவுடன் அந்த மேசைக்கு அருகில் அமர்ந்து அந்த உரையாடல்களைக் கேட்டேன், உமையம்மை ராணியின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுவதை பார்த்து நெஞ்சம் நடுங்க அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தித்தேன்.இசக்கியம்மைக்கு ஏன் இப்படி ஒரு துயரம் என்று புரியாமல் விடைதேடினேன்.திபெத்,இமைய நிலம் எனக்கு இப்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த கதை எது என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கரு,இறைவன்,பலிபீடம், பத்து லட்ஷம் காலடிகள்,நற்றுணை, நிழல்காகம்,சூழ்திரு, பொலிவதும் கலைவதும், ஓநாயின் மூக்கு ஆகிய கதைகளில் ஒன்றாக இருக்கலாம். மறுவாசிப்புக்கு பின் தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
அறம்,விசும்பு கதைத் தொகுதிகள் போல ஜெயமோகன் எப்போது கதை எழுதுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். கோவிட் காலத்தில் அது நிறைவேறியிருக்கிறது. உண்மையில் இத்தொகுதியில் உள்ள பல கதைகள் அதைவிட சிறந்தவை. புத்தகமாக வரும் போது வாங்குவதற்காக காத்திருக்கின்றேன்.
அறம்,விசும்பு கதைத் தொகுதிகள் போல ஜெயமோகன் எப்போது கதை எழுதுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். கோவிட் காலத்தில் அது நிறைவேறியிருக்கிறது. உண்மையில் இத்தொகுதியில் உள்ள பல கதைகள் அதைவிட சிறந்தவை. புத்தகமாக வரும் போது வாங்குவதற்காக காத்திருக்கின்றேன்.
No comments:
Post a Comment