ஏற்கனவே ஒரு தடவை வாசித்த புத்தகம் தான். புத்தகங்களை ஒழங்குபடுத்தும் போது கண்ணில் பட மீள் வாசிப்பு செய்தேன். வாழ்வு அனுபவங்களைக் சுவாரகசியமாக கூறும் புத்தகம் என்பதால் மூளையால் கண்டபடி யோசிக்கத்தேவை இல்லை. திருநெல்வேலி பற்றிய நினைவுகள், இயக்குனர் பாலு மகேந்திராவுடனான அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் எனப் பலவற்றை சுவைபட எழுதியுள்ளார். எழுத்தாளரது நண்பர் ஒரு சுவையான கதா பாத்திரம்.
Sunday 18 September 2016
(60) அறம் - ஜெயமோகன்
அறம் புத்தகம் வெளியான நாட்களில் இருந்து இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தேடியிருக்கிறேன். இலங்கையில் மட்டுமல்ல, 2014 இல் இந்தியா சென்ற போது திருச்சியில் சில கடைகளில் விசாரித்தேன். புத்தகம் கிடைக்கவில்லை. இனியும் பொறுக்க முடியாது என்று தற்போது உடுமலை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொண்டேன். கதைகள் ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தில் வெளியான போது வாசித்தவை தான், இருந்தாலும் பிடித்த கதைகள் எப்போதும் புத்தகமாக பக்கத்தில் இருக்கும் போது ஒரு சந்தோசம் தான்.
அறத்துடன் வாழும்/வாழ்ந்த தற்கால மனிதர்கள் சிலரது கதைகள். அறம் என்பது இதிகாசங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் இந்த காலகட்டத்தில், தற்போது கூட சிறந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று இக்கதைகள் காட்டுகின்றன. அரிச்சந்திரன் போல வாழ முடியாவிட்டாலும் கூட ஒரு சில நல்ல குணங்களையாவது எம்மில் வளர்த்துக்கொள்ளலாம். இக்கதைகளை வாசித்த பின் நான் சிறிதாவது மாறியுள்ளேன் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக இது மற்றவர்களைத் திருத்த எழுதப்பட்ட அறிவுரை கூறும் புத்தக வகை அல்ல.
இக்கதைகளைப் பற்றி ஏற்கனவே பலர் தேவையான அளவு சிறப்பாக எழுதிவிட்டார்கள்.
அறம் - முதலாவது கதை. ஒரு எழுத்தாளர் பற்றிய கதை.கதை சொல்லி அவ் எழுத்தாளருடன் உரையாடுவது போல அமைக்கப்பட்ட கதை. எழுத்தாளர் தனது பணத்தேவைக்காக ஒரு வருடத்திற்குள் 100 புத்தகங்கள் எழுதுவதாக ஒரு பதிப்பகத்திற்கு வாக்கு கொடுக்கிறார். அவ்வாறே எழுதி முடிக்கிறார்.(இன்று வரை பதிப்புகள் வந்து கொண்டிருக்கின்ற புத்தகங்கள்) அவருக்கு வர வேண்டிய பணத்தை பதிப்பாளரிடமே சேர்த்து வைக்கிறார். பணத்தைக் கேட்ட போது பதிப்பாளர் துரத்தி விடுகிறார். பதிப்பாளரின் மனைவி அப்பணத்தை எப்படி எழுத்தாளருக்கு பெற்றுக் கொடுக்கிறார் என்பது தான் கதையின் உச்சம்.
வணங்கான் - மார்ஷல் ஏ.நேசமணி பற்றிய கதை. சாதியடுக்குகள் நிறைந்த சமூகத்தில் கீழ்சாதி மக்கள் எவ்வாறு அவமானப்படுத்தப்படுகிறார்கள், ஜமீன்கள் மக்களை எப்படித் துன்புறுத்துகிறார்கள், படித்து நல்ல வேலையில் இருந்தால் கூட உயர் ஜாதியனர் முன் எப்படியெல்லாம் கூனிக்குறுகி நிற்க வேண்டியிருக்கிறது போன்ற அந்தக் கால சித்திரத்தை கொண்ட கதை.
தாயார் பாதம் - குடும்ப அமைப்புக்குள் சிக்கி தன் சுயத்தை இழந்த பெண்ணின் கதை. ராமன் என்பவர் தனது பாட்டியைப் பற்றி சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். அக்குடும்பத்தில் பாட்டியை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பாட்டி எப்பவுமே வேலை செய்து கொண்டு இருப்பார். பாட்டி நன்றாக பாடக்கூடியவர். ஆனால் சிறு வயதில் அந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவர் பாடி யாரும் கேட்டதில்லை. தாத்தாவுக்கு தான் பாட மட்டுமே தெரியும். மற்றவர்கள் பாடுவதைக் கேட்கத் தெரியாது. மிகச் சிறந்த கதை.
யானை டாக்டர்- எனக்கு மிகவும் பிடித்த கதை. டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிய கதை. மனிதர்களின் பொறுப்பற்ற வேலையால்
காயத்துக்கு உள்ளாகும் யானைக்கு வைத்தியம் செய்யும் டாக்டர் ஊடாக பல
விடயங்கள் இக்கதையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
காடுகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களது பொறுப்பற்ற செயற்பாடுகளால் காட்டு மிருகங்கள் காயங்களுக்கு உள்ளாகின்றன. சுற்றுலா செல்பவர்கள் கண்ணாடிப் போத்தில்களை வீசுதல், பொலித்தீன்களை கண்டபடி வீசுதல் போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமாக நடப்பவை. வீதிகளில் எதையாவது குடித்துக்கொண்டு செல்பவர்கள் முடிந்தவுடன் அப்போத்தில்களை வீதியில் எறிந்து விட்டு செல்வார்கள். பிறகு அவர்களே எமது நாடு குப்பை என்று எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாது கதைப்பதை வெகு சாதாரணமாக காணலாம்.
காடுகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களது பொறுப்பற்ற செயற்பாடுகளால் காட்டு மிருகங்கள் காயங்களுக்கு உள்ளாகின்றன. சுற்றுலா செல்பவர்கள் கண்ணாடிப் போத்தில்களை வீசுதல், பொலித்தீன்களை கண்டபடி வீசுதல் போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமாக நடப்பவை. வீதிகளில் எதையாவது குடித்துக்கொண்டு செல்பவர்கள் முடிந்தவுடன் அப்போத்தில்களை வீதியில் எறிந்து விட்டு செல்வார்கள். பிறகு அவர்களே எமது நாடு குப்பை என்று எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாது கதைப்பதை வெகு சாதாரணமாக காணலாம்.
நூறு நாற்காலிகள் - நாடோடிக் குடும்பத்தில் பிறந்து நாராயணகுருவின் சீடர் பிரஜானந்தர் உதவியால் படித்து நல்ல பதவியில் இருக்கும் ஒருவரின் கதை. அவர் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டமைக்கு காரணம் தேர்வாளர்கள் தம்மை முற்போக்காளர்கள் எனக் காட்டிக்கொள்ளவே. காப்பானின் தாயால் தனது உலகத்தை விட்டு வெளிவரமுடியவில்லை. தாயை நினைத்து காப்பானின் மனப்போராட்டங்கள் நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.
பெருவலி - கோமல் சுவாமிநாதன் பற்றிய கதை. இறுதிக்காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளை இமயமலைக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டு செல்கிறார். அதற்கு காரணமாக பல வருடங்களுக்கு முன் புத்தகம் ஒன்றில் வந்த ஒரு படம் இருக்கிறது.
ஓலைச்சிலுவை - டாக்டர் சாமர்வெல் பற்றியது. இராணுவத்தில் இருந்து உலகப்போரில் பங்குபற்றியவர். போரின் பயங்கரம் அவரை மிகவும் பாதிக்கிறது. மலையேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர். நெய்யூரில் ஒரு மருத்துவமனையின் நிலை அவரைப் பாதித்துவிட அங்கேயே தங்கிவிடுகிறார்.
கோட்டி - தன்னலம் என்பது சிறிதுமே இல்லாத சமூகப் போராளியான பூமேடை ராமைய்யா பற்றிய கதை. இது தவிர குரு-சிஷ்ய உறவை சொல்லும் மத்துறு தயிர் மற்றும் மயில் கழுத்து,உலகம் யாவையும் உள்ளடங்கிய பதின்மூன்று கதைகள் உள்ளடங்கிய புத்தகம்அறம்.
இக்கதைகள் பற்றிய விவாதங்கள் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அவை கதைகளை மேலும் புரிந்து கொள்ள உதவியாக உள்ளது.
Thursday 1 September 2016
(59) தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்
எனது விருப்ப்பத்திற்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம். அவரது கதைகளில் வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். சோகத்தைக்கூட ஒரு வித சுவையுடன் சொல்லிவிடுவார். 'தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை' என்ற புத்தகத்தில் அவரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயமோகன் உட்பட ஏழு பேர் அவரிடம் பெற்ற நேர்காணல்கள் உள்ளன. அவரது பரந்த வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மோனலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற தலைப்பில் அமைந்த மதுமிதாவால் எடுக்கப்பட்ட நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவரது சிறு வயது அனுபவங்கள், கதைகள், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அனுபவங்கள், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களது முக்கிய புத்தகங்கள், எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள் என பல விடயங்களை இந்த நேர்காணல்கள் மூலம் அறிய முடியும். சிறந்த புத்தகம் ஒன்றை வாசித்த திருப்தி கிடைத்தது.
Subscribe to:
Posts (Atom)