விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
இது விமர்சனம் அல்ல. விஷ்ணுபுரம் பற்றிய என் அனுபவம் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன் வாசிக்க முயற்சி செய்து எதுவும் விளங்காததால் விட்டுவிட்டேன். இணையத்தில் அதிகமாக கதைக்கப்படும் புத்தகமாக இருப்பதால் இம்முறை எப்படியாவது வாசிப்பது என்ற முடிவுடன் வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்க முதல் விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரைகள் சில வாசித்து ஒரு பயிற்சி செய்து கொண்டேன்.
நாவல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தென் பகுதியில் உள்ள ஒரு ஊர் விஷ்ணுபுரம். பல வருடங்களுக்கு முன், ஞான சபையில் விவாதத்தில் வென்று அக்னி தத்தன் என்பவன் வைதிக மரபை நிலை நாட்டுகிறான். அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதில் வென்று பௌத்தத்தை நிலை நாட்டுகிறார் அஜிதர். அஜிதரின் கதை இரண்டாம் பாகத்தில் வருகிறது. இரண்டாம் பகுதி சைவர், பௌத்தர், திபேத்தியர்களுடனான வாதங்களாக செல்கிறது. தர்க்கம் நிறைந்த இப்பகுதி வாசிக்க கடினமான பகுதி. சிலர் இப்பகுதி தான் சுவாரசியமானது என்கிறார்கள்.
நாவல் நிறைய கதை மாந்தர்களைக் கொண்டது . முதற்பகுதியில் வாழ்ந்த கதாபாத்திரங்கள் (சங்கர்ஷணன், திருவடி, சித்திரை ) மூன்றாவது பகுதியிலும் வருகிறார்கள், மக்களின் கதைகளில் வாழ்கிறவர்களாக. மூன்றாவது பகுதியில் விஷ்ணுபுரம் சிதிலமடைந்த நகராக உள்ளது. வறுமை நிலவுகிறது.மக்கள் இப்படி ஒரு பிரமாண்ட நகரம் உண்மையில் இருந்ததா? இல்லை காவியம் மட்டும் தானா? என்று கதைத்துக் கொள்கிறார்கள். இறுதியில் பிரளயம் ஏற்பட்டு நகர் முற்றிலும் அழிந்துவிடுகிறது.
முதல் வாசிப்பில் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறு முறை வாசித்தால் ஒரு வேளை கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை வாசிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனக்கு நாவல் பெரிதாக சிலாகித்து சொல்லும்படி இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் வாசித்தது ஒரு சிறந்த வாசிப்பு பயிற்சியாக இருந்தது என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment