ஒரு கைப்பிடி கோதுமை மற்றும் சில கதைகள்
தமிழ் மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்
பிரேம்சந்த் என்ற பெயரை முதலில் நான் அறிந்து கொண்டது ஜெயமோகன் வலைத்தளம் மூலமாக தான். "இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன" என்ற கட்டுரையில் "லட்டு " என்ற கதையை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை வாசித்ததில் இருந்து பிரேம்சந்த் எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த போதும் அவரது புத்தகங்கள் கிடைக்கவில்லை. கடைசியாக நூலகம் சென்ற போது "பிரேம்சந்த் கதைகள்" லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் அழகான அட்டை படத்துடன் இருந்தது. எடுத்து வந்து விட்டேன். அதன் முதல் வாசகி நான் தான். வந்தவுடன் "லட்டு" என்ற கதை உள்ளதா என்று தான் தேடினேன். இருக்கவில்லை. பரவாயில்லை. இதில் உள்ள கதைகளும் சிறந்த கதைகள் தான். அவரது கதைகள் வாசிப்பதற்கு எளிமையான, உயிரோட்டம் நிறைந்தவை.
பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பிரேம்சந்த் அப்பணியை விட்டு நீங்கி, சுதந்திர போராட்டத்திற்கு வலு சேர்க்கும் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். 12 புதினங்கள், 2 நாடகங்கள், 200 சிறுகதைகள் எழுதியுள்ளதாக புத்தகத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இவரது கதைகள் ஏழை மக்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது.
வட்டிக்கு வட்டி வாங்கும் குருக்கள் பற்றிய "கையளவு கோதுமை" , சுற்றியிருப்பவர்களை பற்றி எந்த கவலையும் இன்றி எப்பொழுதும் சதுரங்கம் ஆடும் இரு நண்பர்களை பற்றிய "சதுரங்க ஆட்டக்காரர்கள்" சுதந்திர போராட்ட காலகட்ட ஒரு கிராமத்தை படமாக்கி காட்டும் "போர் அணிவகுப்பு" கிராமப்புற ஏழை சிறுவர்களின் ஈதுப் பண்டிகை கொண்டாட்டத்தை பற்றிய "ஈதுப் பண்டிகை" குடி நீர் எடுக்க நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய பெண்களின் நிலையையும் பணக்காரர்கள் தமது கிணறுகளில் ஏழைகள் நீர் எடுப்பதை மறுக்கும் நிலையையும் விவரிக்கும் "டாகூரின் கிணறு" என மொத்தமாக 15 கதைகள் இப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment