Saturday, 17 May 2014

11. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தின் கதை -  சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தின் வரலாறூடாக ஒரு கிராமத்தின் நகரமயமாக்கலை சொன்ன நாவல் என்று சொல்லலாம். பொதுவாக சினிமாவோ அல்லது நாவலோ ஒரு மனிதனை மையமாக வைத்து தான் உருவாக்கப்படிருக்கும். அந்த வகையில் இந்த நாவலை வித்தியாசமானது என்று சொல்லலாம். இது தான் நான் வாசிக்கும் சுந்தர ராமசாமியின் முதல் நாவல். சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சிலகுறிப்புகள்' வாசிப்பதற்கு எளிமையானது அல்ல என்று  கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால்  'ஒரு புளியமரத்தின் கதை ' வாசிப்பதற்கு எளிமையாகவும் அப்பப்போ நகைச்சுவையாகவும் இருப்ப‌தால் நாவல் எனக்கு பிடித்துவிட்டது.

ஆரம்பத்தில் தாமோதர ஆசான் புளியமரத்தை பற்றிய கதையை சொல்கிறார். எழுத்தாளர் தாமோதர ஆசானிடம் கதை கேட்கும் சிறுவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆசான் கிளை ஒன்றை வெட்டியதன் மூலம் அந்த புளியமரம் வெட்டப்படுவதை தான் தடுத்ததை பெருமையாக சொல்கிறார்.  பூரம் திருநாள் மகாராஜா வருடத்திற்கு இருதடவை கன்னியாகுமரி வந்து நீராடுவார். அதற்கான ஏற்பாடுகள் ஆறுமாதத்திற்கு முதலே தொடங்கிவிடும். ஒரு தடவை அவர் வரும் போது புளியமர குட்டையில் இருந்த அசுத்த நீரால் துர் நாற்றம் வீசியதாகவும், அதனால் கோபம் கொண்ட மகாராஜா  ஏற்பாடுகளுக்கு பொறுப்பான முத்தம்பெருமாள் என்பவரை வேலையை விட்டு நீக்கியதாகவும்,  ஒரு வாரம் கழித்து திரும்பி செல்லும் போது மீண்டும் அதே பாதையால் தான் மகாராஜா போவார் என்று தீர்மானித்ததால் புளியங்குளத்தை வற்ற வைத்து மண்ணிட்டு நிரப்ப எப்படி திட்டம் போடப்பட்டது என்றும் ஆசான் சொல்கிறார். பல வருடங்களுக்கு முன் நடந்த புளியமர
ம் தொடர்பான கதைகள் தாமோதர ஆசானால் சொல்லப்படுகிறது.

அதன் பின்னான கதை எழுத்தாளர் பார்வையில் சொல்லப்படுகிறது. புளியங்குளத்திற்கு அருகில் இருந்த காற்றாடி மரத்தோப்பு பூங்காக மாறிய கதை அதில் ஒன்று. பூங்காவின் கதை ஒரு கிண்டலுன் அமைக்கப்படிருக்கும்.

காதர், தாமுவுக்கு இடையிலான பிரச்சினைகள் நாவலின் முக்கிய இடங்களில் ஒன்று. காதர் தனது வியாபாரத்தை பெருக்கிய முறையும் தாமுவின் குண நலமும் கேலி ஒலிக்கும் தொனியில் சொல்லப்பட்டிருக்கிறது.  அந்த மக்களுக்கு சுதந்திர தியாகி என்றால் அது தாமு தான். தாமு பற்றி மிகைப்படுத்தப்பட்ட கதையையே அங்குள்ள மக்கள் கதைக்கிறார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது அவ்வளவாக தாமுவுக்கு பிடிக்கவில்லை, இனி தன்னை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறான். தாமு, காதர், திருவிதாங்கூர் நேசன் பத்திரகையில் எழுதும் இசக்கி, முனிசிப்பல் தலைவர் ஜோசப், கடலைத்தாத்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள். 


புளியமரத்தின் தாய்த்தடியிலிருந்து கிளைகள்  வெடித்து செல்லும் இடத்தில் கத்தியால் ஒரு பள்ளம் தோண்டி, நாட்டு வைத்தியரிடம் பெறப்பட்ட பாதரசம் கலந்த விஷம் விடப்படுகிறது. அதன் மூலம் புளியமரத்தில் ஏற்பட்ட மாற்றம்  ஐந்து வசனங்களில் தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் மனதை அப்படி ஏதோ போல ஆக்கிவிடும். புளியமரம் காய்ந்து கருகி பட்டுவிடும். புளியமரம் அழிந்த பின்னரும்  இன்றுவரை  அந்த இடம் புளியமர ஜங்ஷன் என்ற‌ பெயரால் தான் அழைக்கப்படுகிறது.

தமிழில் எழுதப்பட்ட முக்கியமா நாவல்களில் ஒன்றாக இந் நாவல் கருதப்படுகிற‌து. இந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ,ஹீப்ரு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று நாவலின் முன்னுரை, மதிப்புரைகளில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 15 May 2014

10. பொன் விலங்கு - நா.பார்த்தசாரதி

பொன் விலங்கு  -  நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் 'அரவிந்தன்' போல பொன்விலங்கு சத்தியமூர்த்தியும் கொள்கைகளும் இலட்சியமும் உள்ளவன். அம்மா, அப்பா இரண்டு தங்கைகள் கொண்ட ஏழ்மையான குடும்பம். தந்தை ஆசிரியர் என்பதால் சத்திய மூர்த்தி ஆசிரியராவதை அவர் விரும்பவில்லை. ஆசிரியராக இருந்தால் கடைசி வரை ஏழையாகவே வாழ வேண்டும் என்பது அவர் வாதம். ஆசிரியராகும் இலட்சியம் உள்ள சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் என்ற ஊரில் உள்ள கல்லூரிக்கு ஆசிரியராக செல்கிறான். நேர்முகத்தேர்வில் குறுந்தொகையில் உள்ள ' யாயும் ஞாயும் யார் ஆகியரோ' என்ற பாடலுக்கு விளக்கம் சொல்லும் சத்திய மூர்த்தியை கல்லூரி அதிபர் பூபதிக்கும் அவரது மகள் பாரதிக்கும்  பிடித்துவிடுகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாமல் நேருக்கு நேர் பேசும் தன்மை கல்லூரி முதல்வருக்கு பிடிக்கவில்லை. அத்துடன் அவன் படித்த கல்லூரி அரசியல் புரட்சிகளுக்கு பெயர் போனது என்பதால் சத்திய மூர்த்தியும் ஏதாவது புரட்சி செய்து தமது  கல்லூரியை கெடுத்துவிடுவான் என்று நினைக்கிறார். பல இழுபாடுகளுக்கு பின் சத்திய மூர்த்தி மல்லிகை பந்தல் கல்லூரியிலே விரிவுரையாளராகிறான்.

அங்கு அவனது மாணவியாக இருக்கும் பாரதிக்கு சத்தியமூர்த்தி மேல் காதல். ஆனால் சத்தியமூர்த்தியும்   நடனமாடும் மோகினியும் காதலிக்கிறார்கள். அத்துடன் சத்தியமூர்த்தி நண்பனாகவரும் cartoonist குமரப்பன், கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீன் என கதை நகருகிறது. இறுதியில் மோகினி இறந்து போக, சத்தியமூர்த்தி படிப்பதற்காக வெளிநாடு செல்வதோடு நாவல் நிறைவடைகிறது.

நாவலில் பிடித்த சில இடங்களை குறிப்பிட வேண்டும்.

சத்தியமூர்த்தி நேர்முகபரீட்சையில் விளக்கும் பாடல் பிரசித்தமானது. சினிமாவில் பாடல் வந்துவிட்டால் பிரபலமாகிவிடும் தானே. அதற்கு கொடுக்கப்படும் விளக்கம் நன்றாக உள்ளது.

 யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

' செம் புலப் பெயல் நீர் போல  அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'
 செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகிவிடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்துவிட்டனவே .

நாவலில் நவநீத கவி என்பவரது கவிதை பல இடங்களில் நினைவு கூற‌ப்படுகிறது. நவநீதகவி யாரென்று தெரியவில்லை. பொன்விலங்கில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது கவிதைகள், கவிதை பற்றி தெரியாத எனக்கே பிடித்துவிட்டது.

"பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்
பாரா திருந்தே தவித்ததுவும்
யார்க்கும் தெரியா திணைந்ததுவும்
யாரும் அறிந்தே பிரிந்ததுவும்
பேசத் தவித்துப் பேசியதுவும்
பேசாதிருந்தே தவித்ததுவும்
நேசம் தெரிந்து மணந்ததுவும்
நீசர் கலைக்கக் கலைந்தனவே "


"முன்னும் பின்னும் நினைவாகி – அது
முடிவிற் பெரிய கனவாகி
நீயும் நானும் கதையாகி – நம்
கதையும் உலகிற் செலவாகிக்
காலப் படுக்கை யதன்மேலே – முன்
கழிந்த நினைவுகள் கண்ணயர
அழிந்த நினைவுகள் கண்கலங்க – மனம்
அங்கும் இங்கும் அலைபாயும்"


முதல் நாள் பாடமெடுக்கும் சத்தியமூர்த்தி " she walks in beauty" என்ற ஆங்கில கவிதையை பாரதியாரின் "அழகுத்தெய்வம்" என்ற கவிதையுடன் ஒப்பிட்டு சொல்கிறான். "she walks in beauty" என்ற வரி  நாவலில் பல இடங்களில் வருகிறது.



Wednesday, 14 May 2014

9. வெட்டுப்புலி - தமிழ்மகன்

 வெட்டுப்புலி -  தமிழ்மகன்


'வெட்டு புலி' தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் புலியை வெட்டுவது போன்ற ஒரு  படம் இருக்கும். அது தனது தாத்தா வழி உறவினர் என்று தெரிந்து கொள்ளும் ஒருவன் தனது அமெரிக்க நண்பர்களுடன் அது பற்றிய மேலதிக தகவல்களை தேடி பயணிக்கிறான்.  வெட்டுப்புலி தீப்பெட்டி பற்றிய தேடலினூடு  1930 இல் இருந்து 2010 வரையான திராவிட அரசியல், திராவிட கட்சி சார்ந்த குடும்பங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் பற்றி நாவலில் தெரிந்து கொள்ளலாம்.

லட்சுமண ரெட்டி திராவிட சார்புள்ளவராக இருந்தாலும் தேவை ஏற்படின் சமரசம் செய்து கொள்பவராக இருப்பவர் என்பதால் குடும்பத்தில் பிரச்சினை பெரிதாக இல்லை.  தியாகராசன், நடராஜன் போன்றவர்கள் கொள்கை பிடிவாதம் உள்ளவர்கள் . இதனால் வீட்டில் எப்போதும் பிரச்சினை தான். பிரச்சினை அதிகரிக்க ஒரு கட்டத்தில் தியாகராஜனின் மனைவி  தனது கையில் அதிமுக சின்னத்தை பச்சை குத்தி கொள்கிறாள்.பெரும்பாலான திராவிடக் கட்சிக்காரர் மேடையில் பேசும் தமது கொள்கைகளை தமது வீட்டிலே கூட அமுல் படுத்த முடிவதில்லை. கடவுள் இல்லை, தாலி இல்லை என்பார்கள், ஆனால் அவர்களது வீட்டில் மனைவி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போற‌வராக இருப்பார். வீட்டு கல்யாணம் மந்திரம் சொல்லி  தாலி கட்டி தான் நடக்கும். தியாகராசன் குடும்பம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கடைசியில் அவன் சாமியாரிடம் சென்றுவிடுகிறான். மனைவியும் மகிழ்ச்சி அடைகிறாள். அவனது சகோதரன், அவன் அதிமுகவில் சேராமல் சாமியாரிடம் சென்றது எவ்வளவோ பரவாயில்லை என்று நிம்மதி அடைகிறான்.

பிராமண எதிர்ப்பு, சாதி பிரச்சினைகள் பெரியாரின் போராட்டம், சினிமா, இலங்கை தமிழர் பிரச்சினை என பலவற்றை பற்றி ஓரளவு விரிவான சித்திரத்தை நாவல் தருகிறது.

முக்கியமாக சினிமா. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் புராண படங்களே எடுக்கப்பட்டன. ஒரே கதையை பலர் எடுப்பதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சினிமாவில் திராவிடக் கட்சியின் தாக்கம் அதிகம் இருக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்கும் ஆசையில் சினிமா  பற்றி தெரிந்து கொள்ள சென்னை வருகிறார். பின் தனது ஆசையை மாற்றி ஊரில் ஒரு சினிமா கொட்டகை போட்டு திருப்தி அடைந்துவிடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா எடுத்து அழிந்து போகிறான்.

 நடராசனுக்கும், கிருஷ்ணபிரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் முக்கியமானது. நடராசனுக்கு கிருஷ்ணபிரியா மீது விருப்பம் இருந்தும் அவன் கொள்கை காரணமாக அவளை திருமணம் செய்யவில்லை. நடராசனின் கல்லுரியில் திராவிட  ஆதரவு அதிகமாக உள்ளது. அவன் ஈழ ஆதரவு உள்ளவனாக இருக்கிறான். இறுதியில் அதுவே அவனுக்கு துயராகிறது.

 2010 இல் புதிய தலைமுறை இளைஞர்கள் நியூயோக்கில் உரையாயாடுவதோடு நாவல் நிறைவடைகிறது. திராவிடக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். திராவிடக் கட்சி சார்பான நாவல் என்றும் இதை கூற முடியாது. ஆனால் திராவிடக் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் தம்மை ஏதோ ஒரு கதாபாத்திரத்துடன் பொருத்தி பார்க்க முடியும்.

Tuesday, 6 May 2014

8. இனியவை இனியவை இறையன்பு

இனியவை இனியவை இறையன்பு


 இறையன்பு ஐ.ஏ.எஸ்  எழுதிய  கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவரது நண்பர் ஆவுடையப்பன் தொகுத்த புத்தகமே "இனியவை இனியவை இறையன்பு". peppers TV யில் புத்தகம் பற்றிய இறையன்புவின் கலந்துரையாடல் பார்த்த பின் அவர் எழுதிய புத்தகம் படித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்தது. அண்மையில் நூலகத்தில் இறையன்பு என்ற பெயருடன் இப்புத்தகத்தை கண்டவுடன் எடுத்து வந்து வாசித்தேன்.

சிந்தனை உலகம், ரசனை உலகம், சித்திரவிசித்திரங்கள்,படைப்ப்புலகம் என்ற பிரிவுகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் வாசிக்க எளிமையாக உள்ளது.சிறிய கதைகளை சொல்வதன் மூலமோ சம்பவங்களை சொல்வதன் மூலமோ கட்டுரையை மேலும் சுவாரசியமாக்கும் திறன் அவரிடம் உள்ளது.

பொதுவாக மொட்டை கடிதங்கள் எனப்படும் முகவரியிடாத கடிதங்களை தாம் பெரிதாக எடுத்துக்கொளவதில்லை என்றும் ஆனால் சில கடிதங்கள் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு, கள்ள சாராயம் காய்ச்சுவது பற்றி ஒருவர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டிருந்தார். நேரடியாக  விடயத்தை சொல்லாமல் 'பானை தன் சுயசரிதை கூறல்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கடிதம் வித்தியாசமாக நகைச்சுவை உணர்வுமிக்கதாக இருந்தது.

அதே போல கையெழுத்து பற்றிய  கட்டுரையில் சொன்ன கதையும் சிரிப்பை வரவைத்தது. நவீன ஓவிய கண்காட்சியின் போது ஒருவர் தனது ஓவிய‌த்தை மட்டும் ஏன் தலைகீழாக மாட்டியிருப்பதாக கேட்டிருக்கிறார். அதற்கு  அவர் தனக்கு எது சரியான பக்கம் என்று குழப்பமாக இருந்ததால்  கையெழுத்து நேராக உள்ளவாறு  பார்த்து  மாட்டியதாக கூற அந்த ஓவியர் தான் எப்போதும் தலைகீழாக தான் கையெழுத்து போடுவதாக கூறியிருக்கிறார்.

படைப்புலகம் என்னும் பகுதியில் தொகுக்கப்படுள்ள கதைகளில் 'தலைமாணாக்கன்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அக்கதை துரோணர், ஏகலைவன் உறவை பற்றியது . ஏகலைவனின் கட்டைவிரலை குரு தட்சணையாகயாக பெற்றுக்கொண்டதால் துரோணருக்கு ஏற்பட்ட தீராத பழியை போக்கும் வகையில் அக்கதையை வடிவமைத்திருப்பார்.

 இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும்  பணிவாக நடந்துகொள்ளும் இறையன்பு  சிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் தான்.






Wednesday, 23 April 2014

7. குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

இவரது " நா.பாவின் இலக்கியக்கதைகள் " எனும் புத்தகம் வாங்கி வைத்துள்ளேன். அது போன்ற புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து முடிக்கும் பக்குவமும் எனக்கு இல்லை என்பதோடு  அவை தொடர்ச்சியான வாசிப்புக்கு உரியவையும் இல்லை என்பதால் சில கதைகளை மாத்திரம் இதுவரை படித்துள்ளேன். அது தவிர  நா.பார்த்தசாரதியின் புத்தகங்களை வாசித்தது இல்லை. அண்மையில் பலர் 'குறிஞ்சி மலர்' மற்றும் 'பொன்விலங்கு' பற்றி குறிப்பிட்டதால், சரி வாசித்து தான் பார்ப்போம் என்று எடுத்த புத்தகம் தான் குறிஞ்சி மலர்.

நா.பா ஆரம்பத்திலேயே திலகவதியார் - கலிப்பகையார் கதையின் ஒரு வடிவம் தான் கதை என்று  சொல்லிவிடுகிறார்.
பூரணியின் தந்தை  தமிழில் புலமை உள்ளவர். கல்லூரி செல்லாவிட்டாலும் பூரணி தந்தையிடம் இருந்து தமிழ் அறிவை பெற்றுக்கொள்கிறாள். சிறுவயதிலேயே தாயை இழந்த பூரணி  பின் தந்தையையும் இழந்துவிட திர நாவுக்கரசு, சம்பந்தன்,மங்கையர்க்கரசி என்னும் மூன்று இளைய சகோதரர்களை பார்க்கவேண்டிய பொறுப்பும் வந்துவிடுகிறது. பண பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற இலட்சியம் உள்ளவள். மங்களேஸ்வரி என்ற பெண்மணியின் நட்பு கிடைக்கிறது, அதன் மூலம் மங்கையர் கழகத்தில் தமிழ் வகுப்பு எடுக்கும் வேலையும் கிடைக்கிற‌து. தந்தையின் புத்தக மீள் பிர‌சுர  விடயமாக அரவிந்தன் என்பவனது நட்பு கிடைக்கிறது. அது பின் காதலாகிறது.

அரவிந்தன் இலட்சியங்கள் நிறைந்தவன். திருக்குறள் மீது பெரு விருப்பு உள்ளவன்.  ஏழைகள் மீது அக்கறை உள்ளவன்.அநாதையான அவன் மீனாட்சிசுந்தரம் என்பவரது பதிப்பகத்தில் வேலை பார்க்கிறான். மீனாட்சிசுந்தரமும் அரவிந்தன் மேல் அன்புள்ளவர். அரவிந்தனுக்கு முருகானந்தம் என்னும் நண்பன் உள்ளான். பூரணி, அரவிந்தன் இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு நிலவுகிறது. பூரணி சிறந்த பேச்சாளராகி இலங்கை, கல்கத்தா சென்று சொற்பொழிவாற்றுகிறாள். அவளது பேச்சாற்றலை வைத்து நிதி திரட்டி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறார்கள்.அரசியலும் வருகிறது. பர்மாக்காரர் வில்லனாக வருகிறார். நா.பா அரசியலில் உள்ள அழுக்குகளையும் ஒரளவு எழுதியுள்ளர். திலகவதியார் - கலிப்பகையார் கதை என்பதால் முடிவு ம் அதே போல் தான். திலகவதிக்கு  கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க முடிவாகும். ஆனால் திருமணத்திற்கு முன்பே நாட்டுக்காக போரில் ஈடுபட்ட கலிப்பகையார் இறந்து விடுவார். திலகவதியார் திருமணம் செய்யாமல் சேவையில் தனது வாழ்வை அர்ப்பணிப்பார். பூரணியும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

 இதில் நான் ரசித்த இடங்கள் பல உண்டு. இலங்கை பற்றிவரும் இடங்கள். இடங்கள் எல்லாம் சரியாகவே கொடுத்திருப்பார். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் காட்டியது போல சம்பந்தம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை. எந்த இடத்தில் இருந்து எங்கு போவது போன்ற ஒழுங்குகள், எப்படி பிரயாணம் செய்வது போன்றவை எல்லாம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நா.பா இலங்கை வந்திருப்பார் போல. அது போல பூரணி திருப்பரங்குன்றத்தில் ரசிக்கும் நீல நிறத்தில் ஒளிரும் "ஓம்" அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.

இன்றைய காலத்திற்கு இந்த கதை பல இடங்களில் எரிச்சலை வரவைக்க வாய்ப்புள்ளது. தியாகத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது தான் பொருந்தும். இருந்த போதும் பள்ளிக்கூட நாட்களில் வாசிப்பதற்கு  ஒரு சிறந்த நாவல் என்பதே என் கருத்து.  'பொன்விலங்கு' வாசிக்க வேண்டும்.


Sunday, 20 April 2014

6. ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 - சத்யஜித் ரே

 ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 -   சத்யஜித் ரே
( கேங்டாக்கில் வந்த கஷ்டம் )

சத்யஜித் ரே திரையுலகில் பெயர் போனவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா போன்ற திரைப்படங்கள் போதும் அவரது திறைமயை பேச. அதே போல அவர் சிறந்த எழுத்தாளர் என்றும் படித்து இருக்கிறேன். பெலுடாவின் சாகசங்கள்  என்ற தொடரில் ஐந்தாவதாக வெளியான "கேங்டாக்கில் வந்த கஷ்டம்"  என்ற புத்தகத்தை அண்மையில் படித்தேன். வங்காள மொழியில் வெளியான இக்கதையை வீ.பா.கணேசன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

துப்பறியும் கதை என்பது பெயரை பார்த்தாலே தெரிந்துவிடும். கோடை விடுமுறையை களிப்பதற்காக தபேஷும் ஃபெலுடாவும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்  செல்கிறார்கள். அங்கே நடைபெற்ற விபத்து ஒன்றை ஃபெலுடா துப்பறிகிறார். விபத்தில் இறந்த ஷெல்வான்கர் என்பவர் யமன்தக் எனும் ஒன்பது தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய பௌத்த சமய கடவுளின் சிலை வத்திருக்கிறார். விபத்துடன் அச்சிலையும் காணாமல் போய்விடுகிறது. அது விபத்தா அல்லது கொலையா? அதன் பின்னணி என்ன என ஃபெலுடா  துப்பறிகிறார். கதை விறுவிறுப்பாக செல்கிறது.



Thursday, 17 April 2014

5. ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

பாவண்ணனின் எழுத்துக்களை நான் விரும்பி படிப்பதுண்டு. துங்கபத்திரை நதியும் ஜோக் அருவியும் அவரது எழுத்துகளில் ஒன்றிப்போயிருக்கும். வாழ் நாளில் ஒரு தடவை ஜோக் அருவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இவரது "துங்கபத்திரை" என்ற புத்தகம் வாசித்ததில் இருந்து தொடங்கிவிட்டது. அதற்கு பின்  காகா கலேல்கர் எழுதிய "ஜீவன் லீலா" என்ற புத்தகத்தை ஜோக் பற்றி அறிவதற்காகவே வாசித்தேன். கும்கி படத்தில் ஜோக் அருவியின்  அழகை பார்த்த பின் அந்த ஆசை இன்னும் கூடிவிட்டது.

அண்மையில் பாவண்ணன் எழுதிய "ஆழத்தை அறியும் பயணம்" வாசித்தேன். தனது சில அனுபவங்களை  எழுதி அதனுடன் பொருந்தும் சிறுகதைகளை விபரித்து உள்ளார். கிட்டதட்ட எஸ்.ராமகிருஸ்ணனின் "கதாவிலாசம் " போல.
இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள். 43 எழுத்தாளர்களை ஓரளவு புரிந்து கொண்ட திருப்தி கிடைக்கிறது. வேற்று மொழிக் கதைகளில் தாகூர், ஜயதேவன், கே.ஏ.அப்பாஸ், சரத்சந்தர்,தூமகேது, வில்லியம் பாக்னர் போன்ற 10 எழுத்தாளர்களின் சிறுகதையை குறிப்பிட்டுள்ளார்.வாசிக்கும் போதே அவர்களது சிறுகதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. முக்கியமாக ஐல்ஸ் ஐக்கிங்கரின்  'ரகசியக் கடிதம்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த 43 கதைகளில் அ.முத்துலிங்கத்தின் "அக்கா", தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்" தவிர வேறு எதையும் நான் வாசித்ததில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், கல்கி,  நா. பார்த்தசாரதி  போன்றவர்களை மட்டுமே நான் ஓரளவு படித்துள்ளேன். இன்னும் படிக்க நிறைய சிற‌ந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்  என்பதை இந்த புத்தகம் ஞாபகம் ஊட்டி சென்றுள்ளது.