Tuesday, 21 January 2014

(2) என் ஜன்னலுக்கு வெளியே -மாலன்

என் ஜன்னலுக்கு வெளியே -மாலன்


இது ஒரு கட்டுரை தொகுப்பு. மாலன் எழுதி வெவ்வேறு இதழ்களில் வெளியானவை.அரசியல், சமூகம்,இலக்கியம்,தமிழ்,இரங்கல் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுளன. இலக்கியம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றவையுடன் ஒப்பிடும் பொழுது அதிக சுவாரசியமாக இருக்கிறது.  யானைக்கு இறக்கை வெட்டப்பட்ட கதையை சொல்லும் " கால் இல்லாத கதைகள்"  நடிகர் நாகேஷ்  பற்றிய "வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல" போன்றவற்றை கூறலாம். அலெக்சாண்டர்   நண்பன் அரிஸ்டிப்பஸ் மூலம் டையோஜெனீஸ் இற்கு கடிதம் எழுதிய ஒரு நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். டையோஜெனீஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் பகுதி கொஞ்சம்  bore ஆக தான் இருந்தது. இந்த வாரிசு அரசியல், காவிரி பிரச்சினை என்று ஏற்கனவே அடிக்கடி வாசிக்கப்பட்ட விடயமாக இருந்ததாலோ தெரியவில்லை.நான் கடைசியில் இருந்து  முன் நோக்கி தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். அப்படி வாசிப்பது இது தான் முதல் தடவை. முதல் சில  கட்டுரைகள் வாசிக்க பெரிதாக நன்றாக இருக்கவில்லை. அதனால் நேராக இலக்கிய பகுதிக்கு தாண்டி,  அப்படியே  பின் முன்னாக நகர்ந்து கடைசியாக‌ அரசியல் பகுதிக்கு வந்தேன்.


அரசியல் பகுதியில் குறிப்பாக சொல்வதென்றால் டொக்டர் வினாயக்(Binayak Sen)பற்றிய "தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?" என்ற கட்டுரை. வங்காளியான வினாயக்  பெரிய இடங்களில் கிடைத்த வேலைகளை விட்டு விட்டு, மருத்துவ வசதி இல்லாத இடம் ஒன்றில் சேவை செய்தவர். அம் மக்களுக்கும்  நிறைய விதங்களில் உதவியவர். கனிம வளம் நிறைந்த பர்சார் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை அகற்றி  அந்த  நிலங்களை  நிறுவனங்களுக்கு கொடுத்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.இது போன்ற வேறு சில நடவடிக்கைகளையும் மக்களுக்காக செய்திருக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.இது 2008 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்று தேடிப் பார்க்க வேண்டும்.

Wednesday, 15 January 2014

(1) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
இது விமர்சனம் அல்ல. விஷ்ணுபுரம் பற்றிய என் அனுபவம் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன் வாசிக்க முயற்சி செய்து எதுவும் விளங்காததால் விட்டுவிட்டேன். இணையத்தில் அதிகமாக கதைக்கப்படும் புத்தகமாக இருப்பதால் இம்முறை எப்படியாவது வாசிப்பது என்ற‌ முடிவுடன்  வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரம்  வாசிக்க முதல்   விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரைகள் சில‌ வாசித்து  ஒரு பயிற்சி செய்து கொண்டேன். 

நாவல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  தென் பகுதியில் உள்ள ஒரு ஊர் விஷ்ணுபுரம். பல வருடங்களுக்கு முன், ஞான சபையில் விவாதத்தில் வென்று அக்னி தத்தன் என்பவன் வைதிக மரபை நிலை நாட்டுகிறான். அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதில் வென்று பௌத்தத்தை நிலை நாட்டுகிறார் அஜிதர். அஜிதரின் கதை இரண்டாம் பாகத்தில் வருகிறது. இரண்டாம் பகுதி சைவர், பௌத்தர், திபேத்தியர்களுடனான வாதங்களாக செல்கிறது. தர்க்கம் நிறைந்த இப்பகுதி வாசிக்க கடினமான பகுதி. சிலர் இப்பகுதி தான் சுவாரசியமானது என்கிறார்கள்.

நாவல் நிறைய கதை மாந்தர்களைக் கொண்டது . முதற்பகுதியில் வாழ்ந்த கதாபாத்திரங்கள்  (சங்கர்ஷணன், திருவடி, சித்திரை ) மூன்றாவது பகுதியிலும் வருகிறார்கள், மக்களின் கதைகளில் வாழ்கிறவர்களாக. மூன்றாவது பகுதியில் விஷ்ணுபுரம் சிதிலமடைந்த நகராக உள்ளது. வறுமை நிலவுகிறது.மக்கள் இப்படி ஒரு பிரமாண்ட  நகரம் உண்மையில் இருந்ததா? இல்லை காவியம் மட்டும் தானா? என்று கதைத்துக் கொள்கிறார்கள். இறுதியில் பிரளயம் ஏற்பட்டு நகர் முற்றிலும் அழிந்துவிடுகிறது. 

முதல் வாசிப்பில் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறு முறை வாசித்தால் ஒரு வேளை கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை வாசிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனக்கு நாவல்  பெரிதாக சிலாகித்து சொல்லும்படி இல்லை. ஆனால்   விஷ்ணுபுரம் வாசித்தது ஒரு சிறந்த வாசிப்பு பயிற்சியாக இருந்தது என்பது மட்டும் உண்மை.  

Friday, 13 September 2013

இரண்டாம் இடம்

                 எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளத்தில் எழுதிய 
இரண்டாம் இடம் என்ற நாவலை குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.மகாபாரதக்கதையின் மறுவாசிப்பே இந்த நாவல். கதை பீமனின் பார்வையில் சொல்லப்படுகிறது.


முதன் முதலில் மறு ஆக்க நாவல் வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. நாம் கதாபாத்திரங்கள் மீது வைத்திருக்கும் புனித விம்பங்கள் எல்லாம் ஆட்டம் கண்டுவிடும். இதற்கு முன்னர் மறுவாசிப்புகளான உபபாண்டவம், யயாதி வாசித்திருக்கிறேன். அதனால் ஓரளவு பயிற்சி உண்டு. புனித தன்மையை நீக்கினால் தான் பாரத கதையின் பாத்திரப்படைப்புகளின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளலாம்.



பாண்டவர்கள் இறுதியில்  சொர்க்கதிற்கு இமயம் வழியாக நடக்கிறார்கள். முதலில் தருமர், பின் சகோதரர்கள் கடைசியாக திரௌபதி.
ஒரு கட்டத்தில் திரௌபதி மயங்கி விழுகிறாள். பீமனை தவிர யாருமே அவளுக்காக காத்திருக்கவில்லை.இரண்டாம் இடம்  கதை இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.பீமன் நடந்த  சம்பவங்களை நினைத்து பார்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களுள் திரௌபதியிடம் அதிக அன்பு , அக்கறை கொண்டவன் பீமன் தான். மலர் பறித்து கொடுத்தல், கீசக வதம், திரௌபதிக்காக சபதம் எடுத்தல் போன்றவை போதும் அதை உணர. வீரத்திலும் பீமன் தான் உயர்ந்து நிற்கிறான். கௌரவ படைகளை பெருமளவு அழித்ததுடன் முக்கியவர்களான துரியோதனன் , துச்சாதனன் பீமனால் தான் கொல்லப்படுகிறார்கள்.
போர் முடிந்த பின் தருமன், பீமனை அரசனாகுமாறு சொல்கிறான். ஆனால் பீமன் அரசன் என்றால் அவன் மனைவி பலந்தரை தான் பட்டத்தரசியாவாள், தனது நிலை என்ன என்று கவலையடைகிறாள் திரௌபதி. அத்துடன்  தருமன் அனைத்தையும் துறந்து காடு சென்றால் தானும் போகவேண்டி வருமே.  விதுரன், குந்தி போன்றவர்களும் தருமன் தான் அரசாள வேண்டும் என்று கூறுகிறார்கள். பீமனின் அரசனாகும் குறுகிய கால ஆசையும் முடிந்து விடுகிறது. அதனால்  அவனது இடம் எப்போதும்  இரண்டாம் இடம் தான்.



அங்கு எப்போதுமே பெண்கள்  கர்ப்பத்தை சுமக்கும் கருவி தான். திரௌபதி அளவுக்கு இது வரை யாராவது துன்பம் அனுபவித்திருப்பார்களா? ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு புருஷன். குழந்தை பிறந்தவுடன் அவள் சகோதரனிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். யுத்த இறுதியில் அவள் பிள்ளைகள் வஞ்சகமாக கொல்லப்படும் போது கூட யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. தருமனின் சூதாட்டத்தால் சபையில் அவமானம். காட்டுக்கு சென்றால் அங்கும் பிரச்சனை. மொத்தத்தில் திருமணம் செய்ததில் இருந்து சாகும் வரை துன்பம் தான்.

குந்தி ஒருவித ராஜதந்திரத்துடன் தான் செயற்படுவாள். பாண்டவர்கள் வந்தது ஒரு பெண்ணுடன் என்று தெரிந்தும் ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வது எவ்வளவு கபடத்தனம். பீமனுக்கு தாய் எப்போது புரியாத புதிராக இருக்கிறார். கர்ணன் தேரோட்டிக்கு பிறந்த மகன், தருமன் விதுரருக்கு , அப்படியென்றால் தன் தந்தை யார் என அறிய முயல்கிறான். கடைசியில் தான் ஒரு காட்டுவாசியின் மகன் தான் என அறிகிறான்.

அபிமன்யுவுக்கும் பீமனுக்கும் உள்ள நெருக்கம் சொல்லப்படுகிறது. அபிமன்யு இறந்த போது கிருஷ்ணன் கவலையடைகிறான். இரத்த பாசம் என்று வரும்(அபிமன்யு கிருஷ்ணனின் சகோதரியின் மகன்) போது கீதைக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறான். பீமன் மகன் கடோத்கஜன் இறந்த போது அதை கிருஷ்ணன் கொண்டாடுகிறான். அர்ச்சுனனை கொல்ல வைத்திருந்த ஆயுத்தத்தை கர்ணன் கடோத்கஜன் மீது பாவித்து விட்டதால் அர்ச்சுனன் தப்பித்தான். கடோத்கஜன் அரக்கன் தானே அவன் இறப்புக்காக கவலை கொள்ளத்தேவையில்லை என்று சொல்கிறான். இது பீமனை கவலையடையச் செய்கிறது.யுதிஷ்ரனை காப்பாற்ற வேண்டும் என கர்ணனுக்கு எதிரில் தன் மகனை அனுப்பியது கிருஷ்ணனின் சூழ்ச்சியென எண்ணுகிறான். அன்றைய நாளில் யுத்த தர்மத்தை மீறி நடந்த இரவு யுத்தத்தில் தான் கடோத்கஜன் கொல்லப்படுகிறான். இறக்கும் போது கூட கௌரவ படைக்கு தன்னால் முடிந்த இழப்பை ஏற்படுத்திவிட்டே இறக்கிறான். அப்படிப்பட்ட வீரனுக்கு அவன் ஷத்திரியன் இல்லை என்பதால் எந்த மரியாதையும் செய்யவில்லை.

கிருஷ்ணன் பாண்டவருடன் சேர்ந்த‌தே தன் யாதவ படைக்கு பலம் சேர்க்க தான் என்கிறார் ஆசிரியர். திரௌபதிக்கு சேலை கொடுத்தது எல்லாம் பாரதத்தில் இல்லை . அது இடைச்செருகல் என்கிறார். அதை ஏற்றுக்கொள்ள தான் மனம் விரும்பவில்லை. "பாஞ்சாலி புகழ் காக்க சேலை கொடுத்தான்" என்று பரவசத்துடன் பாடி வந்த எனக்கு,  இப்படி ஒரு சம்பவமே பாரத கதையில் இல்லை என்றால் எப்படி இருக்கும். இந்நாவலின் படி கிருஷ்ணன் ஒரு தந்திரவாதி, கபடதாரி...மகாபாரதத்தில் அவனது தந்திரங்கள் ரசிக்கும்படியாக இருக்கும். இந் நாவலை வாசித்தால் "இவ்வளவு கெட்டவனா நீ" என்று கேட்க தோன்றும். கிருஷ்ணனை பற்றி ஏராளமான ரசிக்கும்படியான கதைகள் உண்டு. அவை எதுவுமே மகாபாரதத்தில் இல்லை. அது வேறு ஒரு கவியின் கற்பனை என்கிறார்.ஆசிரியர் சொல்வது போல்   கிருஷ்ணன் ஒரு சாதாரண அரசனாகவும் சூழ்ச்சி நிறைந்தவனாகவும் இருந்தவன் எனில் எவ்வாறு இத்தனை பரவச‌மூட்டும் கதைகள் அவனைப்பற்றி உருவாகின.ஒரு வேளை 23ஆம் புலிகேசி படத்தில் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பது போல, கிருஷ்ணனும் காசு கொடுத்து தன்னை பாட வைத்திருப்பானோ. :)))


மகாபாரதத்தில் கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவன் தான் எங்கும் நிறந்து நிற்கிறான். யுத்தம் முழுவதும் அவனாலேயே வடிவமைக்கப்படிருக்கிறது. அவன் நினைத்தது போல நடக்கிறது. இந்த நாவல் நிச்சயமாக வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தந்தாலும் கிருஷ்ணனை பொறுத்தவரையில், பாஞ்சாலிக்கு சேலை சேலையாக வாரிக்கொடுத்த, அஸ்வத்தாமன் பாண்டவ வம்சத்தையே நாசம் செய்வேன் என சபதம் எடுத்து விட்ட பிரம்மாஸ்திரம் உத்தரையின் வயிற்றில் உள்ள குழந்தையை அழிக்க சென்ற போது காப்பாற்றிய அந்த கிருஷ்ணன் உள்ள கதையே என்னுடன் கூடுதல் நெருக்கமாக இருக்கிறது.

தமிழருக்கு மகாபாரதத்தில் நெருக்கமானவன் கர்ணன் என்பார்கள். அப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கென்று  ஒவ்வொரு கதாபாத்திரம் நெருக்கமாக இருக்கலாம். அப்படி எனில் கிருஷ்ணனை தெய்வமாக வழிபடும் மாநிலத்தில் கிருஷ்ணன் நெருக்கமானவனாக‌ இருப்பான். அம்  மாநிலத்தவர்கள் மகாபாரதக்கதையை மறுவாசிப்பு செய்து எழுதியிருந்தால்  வாசித்து பார்க்க வேண்டும். இந்திரா பார்த்தசாரதி  எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா" ஓரளவு அவனை பற்றி அலசுகிறது.அத்துடன் பாரத கதையை வைத்து எழுதப்பட்ட  பருவம் , இனி நான் உறங்கட்டும் போன்றவற்றை வாசிக்க வேண்டும்.





Wednesday, 12 December 2012

12-12-12 என்கிற இந்த அரிய நாளில் பிறந்த நாளை கொண்டாடும் Superstar ரஜினிகாந்த்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Friday, 31 August 2012

பிடித்த 10 தமிழ் திரைப்படங்கள்

சினிமா என்பது எப்போதுமே எனக்கு பிடித்த ஒன்று. பொதுவாக பெரும்பாலான தமிழர்களுடன் சினிமா  இரண்டற கலந்திருக்கும்.சினிமா பற்றி பேசாத அல்லது பார்க்காத நாளை கண்டுபிடிப்பதே சிரமம். எப்ப என்ன திரைப்படம் வெளிவரும், யாருடைய பாடல் ....இப்படி எல்லா விடயங்களும் தெரிந்திருப்பார்கள். எனக்கு சினிமா பற்றிய அறிவு பெரிதாக இல்லாத போதும் சினிமா பார்ப்பது அல்லது அதை பற்றிய புத்தகங்கள் படிப்பது என்பது மிகவும் பிடித்தது.எனக்கு பிடித்த திரைப்படங்கள்  என்ன என யோசித்து பார்த்தால் நிறைய திரைப்படங்கள் மனதுக்குள் வந்து செல்கிறது. இருந்த போதும் எனது All time favorite திரைப்படம் எனின் அது 'மௌனராகம்' தான்.  தற்போது நினைவில் வரும் 10 பிடித்த திரைப்படங்கள் .

1. மௌனராகம்

மணிரத்னம் படம். இப்படத்தை பற்றி தனி பதிவு எழுதலாம். அவ்வளவு பிடிக்கும். கார்த்திக் ரேவதி இணையும்காட்சியாகட்டும் மோகன் ரேவதி காட்சியாகட்டும் இரண்டுமே இரண்டு விதமாக நன்றாக இருக்கும். இதில் எனக்கு கூடுதலான பிடிப்பு மோகன் ரேவதி இணைந்து நடிக்கும் பகுதி தான்.  கார்த்திக் வரும் பகுதி இல்லாமல்  இருந்திருக்கலாம் என்றும்  யோசிப்பதுண்டு.ரேவதியின் சுட்டித்தனம் படத்துக்கு  இன்னொரு பலம். படத்தில்  இளைய ராஜாவின் பின்னணி இசை பின்னும். பாடல்களும் ஒவ்வொரு முத்துக்கள் தான்.

2. ரோஜா


மணிரத்னம் திரைப்படம். கதை சத்தியவான் சாவித்திரி கதையின் நவீன வடிவம் என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். அதை அழகியலுடன் சொன்னது தான் ம‌ணிரத்னம் குழுவின் சிறப்பு. மணிரத்னம் கதாநாயகியை எப்போதுமே அழகாக காட்டுவார் ஒரு தேவதை போல.இதில் மதுபாலா ஒரு தேவதை. அரவிந்தசாமி நாயகன். ரஹ்மான் இசை.
பாடல்கள் படத்திற்கு பெரும் பலம்.

3. இதயத்தை திருடாதே


இதுவும் மணிரத்னம் படம். தெலுங்குத் திரைப்படமான கீதாஞ்சலியின் தமிழ் வடிவம். நாகர்ஜுன் , கிரிஜா நடித்திருப்பார்கள். இதன் நாயகி கிரிஜாவும் சுட்டித்தனமான பெண். இருவருமே எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நோயாளர்கள். இருவரும் காதலிப்பார்கள். இது தான் கதை. இளையராஜாவின் இசை. எழுத வார்த்தை இல்லை. ஒளிப்பதிவு பட‌த்திற்கு பெரிய பலம். நகைச்சுவை என்ற‌ பெயரில் செருகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் தான் படத்தின் பலவீனம். கிரிஜா  ஒரு சில படங்களில் தான்  நடித்திருக்கிறார்.வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அழகான
திறமையான நடிகை.

4. அன்பே சிவம்
கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண்  நடிப்பில் உருவான படம். திரைக்கதை கமலஹாசன். வசனம் மதன். இயக்கம் சுந்தர்.சி. வித்யாசாகர் இசை.
அறிவு ஜீவிகளால் விமர்சிக்கப்பட்ட படம். ஆனால் சாதாரணமாக எல்லோருக்கும் பிடித்த படம். மனித நேயம், கடவுள்,கம்யூனிசம் என எல்லாமும் உண்டு. கமலுக்கும் மாதவனுக்கும் இடையிலான உரையாடல்கள் முக்கியமானவை. மனம் ஒரு மாதிரியாக இருந்தால் நான் அன்பே சிவம் பார்ப்பது தான் வழக்கம்.


5. தில்லுமுல்லு
ரஜனிகாந்த் படம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜனி தான். பாட்ஷா, படையப்பா,முத்து, ஆறிலிருந்து அறுபது வரை .....இப்படி இப்படி நிறைய பிடித்த படம் இருந்தாலும் தில்லு முல்லு அதன் நகைச்சுவையில் முன்னுக்கு நிற்கிறது. படத்திற்கு தேங்காய் சிறீனிவாசன் ஒரு பலம். குறிப்பாக interview நடக்கும் காட்சி பிரமாதம்.



6. எங்கேயும் எப்போதும்
சமீபத்திய படங்களில் மிகவும் பிடித்தது. பேருந்து விபத்து பற்றிய விழிப்புணர்வு கொடுத்திருப்பார்கள். M. சரவணன் இயக்கம். இரு காதல் ஜோடிகள் ஒன்று  ஜெய், அஞ்சலி  மற்றயது சர்வானந்த், அனன்யா . நால்வரும் பேருந்தில்
பயணிக்கின்றனர்.  இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்து அப்பிடியே கண்ணுக்கு முன் நடப்பது போல இருக்கும். படம் பார்த்த பின் நெடுந்தூர பயணம் என்றால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு.

7.  சதிலீலாவதி

பாலு மகேந்திராவின் படம். கிரேசி மோகனுடைய வசனம்.கமல், கோவை சரளா இணைந்து நடித்திருப்பார்கள். அப்பிடி ஒரு நகைச்சுவை.குண்டாக‌ இருக்கும்  கல்பனா,  ஹீராவுடன் செல்லும் தன் கணவன் ரமேஷ் அரவிந்தை  தன் வழிக்கு கொண்டு வருவது தான்கதை.





8.   உண்மை


மம்முட்டியின் படம். பொதுவாக மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி  நடித்த மலையாளத் திரைப்படங்கள் சிறந்த கதையமைப்பு உடையதாக இருக்கும்.  'உண்மை ' திரைப்படம் மலையாலப் படத்தின் dabbing ஆக தான் இருக்க வேண்டும். ஒரு கொலையை துப்பறிபவராக மம்முட்டி நடித்திருப்பார். பாடல்களே இல்லாத படம். ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதை உடைய படம்.



9. மைக்கல் மதன காம ராஜன்

கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த படம். கிரேசி மோகன் வசனம். சிறு வயதில் பிரிந்த  ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகள் இறுதியில் சேருவது தான் கதை. அதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள். நாயகிகள் ஊர்வசி, குஷ்பு மற்றும் ரூபினி . ஊர்வசி கலக்கி இருப்பார். இளைய ராஜாவின் இசை வழமை போல கலக்கல்.




10. மறுபடியும்


ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த சாமி, ரோகினி நடித்த திரைப்படம். பாலுமகேந்திராவின் இயக்கம். ரேவதியின் கணவர் நிழல்கள் ரவிக்கு ரோகினியுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ரேவதி  தன்னுடைய வழியை எப்படி அமைக்கிறார் என்பது தான் கதை. அரவிந்த சாமி ரேவதியின் நண்பராக நடித்திருப்பார். இளைய ராஜா இசையமைத்த  படம்.


இது தவிர ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி,  அன்புள்ள ரஜினிகாந்த் ......என்று சில பிடித்த படங்களும்  உண்டு.




Sunday, 26 August 2012

தேசாந்திரி

நான் வாசிக்க வேண்டும் என் அதிகமாக விரும்பிய எஸ்.ரா வின் புத்தகம் தேசாந்திரி. ஆனால் இலங்கையில் அப்புத்தகத்தை பெறுவது கஸ்ரமாகவே இருந்தது. எப்ப கடைக்கு போனாலும் தேசாந்திரியை தேடி தோல்வியடைவததே என் வேலை. இந்த தடவை இன்ப அதிர்ச்சியாக தேசாந்திரியை கண்டடைந்தேன்.அப்பிடி ஒரு சந்தோசம்.வீட்டிற்கு வந்ததுமே வாசிக்க தொடங்கிவிட்டேன்.ஆனால் ஒரே மூச்சாக வாசிக்க விரும்பவில்லை. அணுஅணுவாக ரசித்து நீண்ட‌ நாள் அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் எவ்வளவு ரசித்தாலும் இரு நாட்களில் முடிந்துவிட்டது. மீண்டும் வாசிக்க வேண்டும்.எஸ்.ரா தான் பயணம் செய்த ஊர்களில் பெற்ற அனுபவங்கள் மற்றும் அவ் இடங்களின் வரலாறு  போன்றவற்றை  சுவைபட எழுதியுள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சென்றது, நல்லதங்காள் கிணறு பார்க்க சென்றது,சமண படுகைகள் பார்க்க சென்றது,காந்தள் மலர் பாக்க சென்றது என தன் எழுத்து மூலம் அவ் இடங்களுக்கு எம்மையும் அழைத்து செல்கிறார்.
நாகப்பட்டினம் சென்ற அனுபவத்தை அழகாக எழுதியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய கட்டுரையில் அக்கோயிலை பார்க்க வரும் உள் நாட்டினரை விட வெளி நாட்டினரே அதிகம் என்று கூறி சிற்பங்களில் நமக்கு இருக்கும் அக்கறையின்மை பற்றி ஆதங்கப்படுகிறார்.  ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமானதாக ஆரம்பத்தில் பல கவிஞர்களின் கவிதைகள் அழகூட்டுகின்றன. இப்படி  41 கட்டுரைகள்.

வாசிக்கும் போதே அவ்விடங்களுக்கு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அத்தோடு நமக்கு முன்னால் இருக்கும் எவ்வளவு அழகான விடயங்களை நாம் கவனிப்பதே இல்லை என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது. 

Tuesday, 21 August 2012

வால்காவிலிருந்து கங்கை வரை


மனித  நாகரிக‌  தோற்றம், வளர்ச்சி போன்றவற்றை தெரிந்து கொள்ள பலராலும் பரிந்துறைக்கப்படுவது  ராகுல் சங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற புத்தகமே.1942 இல் சிறையில் இருந்த போது ராகுல்ஜியால் எழுதப்பட்ட  இந்த நூலை,  1945 இல் பர்மாவில் யுத்த‌க்கைதியாக இருந்த கண.முத்தையா என்பவர் ராகுல்ஜியின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1949  இல்  முதற்பதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து    27 பதிப்புகள் (27ம் பதிப்பு 2007) கண்ட அரிய நூலாக கொள்ளப்படுகிறது. 20 கதைகளை உள்ளடக்கிய இப்புத்தகத்தின் ஒவ்வொரு கதைகளும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள்.


நூலைப்பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் குறிப்பிடும் போது ஒவ்வொரு கதைக்கும் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளார்.

 நிஷா, திவா, அமிதாஸ்வன், புருகூதன் ஆகிய முதல் நான்கு கதைகளும் சரித்திரத்திற்கு முந்திய காலமான கி.மு 6000 தொடக்கம் 2500 வரையான சமூதாயத்தை பற்றி சொல்கின்றன. இந்து ஐரோப்பிய , இந்து ஈரானிய மொழிகளையும் அவற்றின் மூலங்களையும் ஆராய்ந்து கற்பனையும் கலந்து எழுதப்பட்டதே  இந் நான்கு கதைகளும்.

அடுத்த நான்கு கதைகளான புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்பன வேதம், மகாபாரதம், பௌத்த கிரந்தமான அட்டகதா போன்றவற்றை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. கி.மு 2000 முதல் கி.மு 700 வரையான சமுதாய வளர்ச்சியை இக்கதைகள் சித்தரிக்கின்றன.

 கி.மு 490 ஐ சித்தரிக்கும் ஒன்பதாவது கதையான 'பந்துலமல்லன்' பௌத்த நூல்களில் உள்ள செய்திகளை கொண்டு எழுதப்பட்டது. பத்தாவது நாகதத்தன் கதைக்கு சாணாக்கியனின் அர்த்த சாத்திரமும் கிரேக்கர்களின் யாத்திரைக் குறிப்புகளும் ஆதாரமாக உள்ளன. அடுத்த கதை அஸ்வகோஷ் எழுதிய புத்தசரித்திரத்தையும் சௌந்தரியானத்தையும் ஆதாரமாக கொண்ட  'பிரபா'. அடுத்தது சுபர்ணயௌதேயன் என்ற குப்த கால கதை. ரகுவம்சம், சாகுந்தலம், குமாரசம்பவம் போன்றவை இதற்கு ஆதாரமாக உள்ளது. பதின்மூன்றாவது  துர்முகன் என்ற கதைக்கு ஹர்ஷ சரிதிரமும் காதம்பரியும் சீன யாதிரிகரான இத்சிங்கின் யாத்திரை வரலாறும் ஆதாரமாக உள்ளது. கி.பி 1200 ஐ கதைக்காலமாக சக்கரபாணி கதையின் அஸ்திவாரத்தை நைடதத்திலும், அக்கால சிலாசாசனன்ஹ்களிலும் காணலாம்.  12 முதல் 20 வரையான நூற்றாண்டை சேர்ந்த அடுத்த ஆறு கதைகளுக்கும் தெளிவான சரித்திர ஆதாரம் ஊள்ளது.

 புருதானன் என்ற கதையில் தான் முதலில் ஆரியர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் தெற்கில் இருப்பவர்களை கரிய நிறம் கொண்ட அழகற்ற அசுர இனத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கதைகளில் ஆரியர்களை உயர்வாகவும் ஒழுக்கமானவர்களாகவும் காட்டி அசுரர்களை கெட்டவர்களாக, ஏமாற்றுபவர்களாக காட்டப்படுவது வாசிக்கும் போது எரிச்சலை தருவதை தடுக்கமுடியவில்லை.இவ்விரு இனங்களுக்கிடையிலான போரையே தேவாசுர யுத்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும் அசுரர்களின் இடம் சொர்க்க பூமியாக இருந்தது என்பதையும் அசுரர்களிடையே இருந்த எழுத்துகள் பற்றிய அறிவு பல காலங்களுக்கு பின் தான் ஆரியரிடம் வந்தது பற்றியும் சொல்ல தவறவில்லை.

36 மொழிகள் தெரிந்திருந்த ராகுல்ஜி  150 புத்தகங்கள் படைத்தவர்.