அது அந்தக் காலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்
1930 - 1940 ஆண்டு பகுதிகளை படம் பிடித்துக் காட்டும் கட்டுரைத்தொகுப்பு. எழுத்தாளருக்கு தமிழ் ஆண்டுகளில் நல்ல ஆர்வம் இருக்கிறது போல.தமிழ் ஆண்டுகள் 60 வருட காலச்சக்கரத்தை கொண்டவை. அவ்வாண்டுகளின் பெயரை சொல்லி அந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையும் சொல்கிறார்.
ஓகஸ்ட் புரட்சியை ஒட்டி கைது செய்யப்பட்ட காந்தி சிறை வைக்கப்பட்ட புனே அகாகான் மாளிகை இன்று காந்தி நினைவு இல்லமாக இருக்கிறது. எழுத்தாளர் அங்கு சென்ற போது, காந்தி சிறை வைக்கப்பட்ட போது அங்கு பணி செய்த ரகுநாத் என்பவருடன் கதைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். காந்தியை அங்கு கொண்டு வருவதற்கு முன்னரே ஆட்டுப்பாலுக்கும் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அங்கு தான் காந்தியின் செயலர் மகாதேவ தேசாய் மாரடைப்பால் இறந்திருக்கிறார். காந்தியின் மனைவி கஸ்தூரிபாவின் மரணமும் அங்கே தான் நடந்திருக்கிறது.
கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்ட பின் சாம்பலில் இரு வலையல்கள் மாத்திரம் நிறம் மாறாமல் அப்படியே இருந்ததாகவும் முதலில் அதை காந்தி நம்ப மறுத்ததாகவும், பின் அவர் சென்று பார்த்த போது அவ்வாறே இருந்ததால் கஸ்தூரிபா சிறந்த பதிவிரதை என்பதால் அவ்வாறு நடந்திருக்கலாம் என்று கருதிய காந்தி அவற்றை பத்திரமாக வைத்திருந்ததாகவும் ரகுநாத் கூறியிருக்கிறார். முதலில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அதை நம்பவில்லை. ஆனால் பின்னர் Robert Payne எழுதிய 'The Life and Death of Mahatma Gandhi' எனும் புத்தகத்திலும் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் எழுதியுள்ளார்.
இன்னொரு கட்டுரையில் மகாத்மா காந்தி மறைந்த தினத்தன்று மக்களின் உணர்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்து விட்டது போல் அழுதிருக்கிறார்கள். 'ரெடி.. ஸ்மைல்..' எனும் கட்டுரையில் அன்று Photo எடுப்பதில் இருந்த சுவாரசியங்களை குறிப்பிடுகிறார்.
இது தவிர அன்றைய கால சினிமா, பேனையின் பரிணாமம், ரயில் பிரயாணம், குடும்ப டாக்டர் என பல விடயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment