Saturday, 19 July 2014

(20) சூடிய பூ சூடற்க‌ - நாஞ்சில் நாடன்

சூடிய பூ சூடற்க‌ - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் 2005 வரை எழுதியவை 'நாஞ்சில் நாடன் கதைகள்' என்ற பெயரில் வெளியாகி உள்ளன.  'சூடிய பூ சூடற்க' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள புதிய  17 சிறுகதைகளைக் கொண்ட‌  இந்த புத்தகத்திற்காக  நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்தது.   உயிர்மை, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், ஓம் சக்தி, ரசனை, தினமணி, யுகமாயினி  போன்ற இதழ்களில் வெளியான  சிறுகதைகள் இவை. ஆரம்பத்தில் இச்சிறுகதைகளின் நாஞ்சில் நாட்டு மண்ணின்  மொழி சிறிது புரிவதற்கு கடினமாக இருந்தது. அப்பப்ப நக்கல் தொனியில் எழுதப்பட்ட நிறைய வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளன.

உணவின்மையின் கொடுமை பற்றிய 'யாம் உண்பேம்' எனும் கதை நெஞ்சை தொடுவதாக இருந்தது. கூர்க்காவின் வாழ்வு முறையை கூறும்  'தன்ராம்சிங்' கதை சிறப்பானது.  சிறு விடுப்புகள்  எடுக்காது  தொடர்ந்து பணி செய்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். அவர்களது பிரயாணக் கடினங்களை வாசிக்கும் போது கவலை வராமல் இருக்க முடியாது. 'சூடிய பூ சூடற்க' என்ற தலைப்பில் உள்ள கதை  அலுவலகம் ஒன்றில் கடை நிலை ஊழியராக பணிபுரியும் பூமிநாதன் பற்றியது. தேர்தல் முறைகேடுகளைப் பற்றிய நக்கல் நிறைந்த கதை 'தேர்தல் ஆணையத்திற்கு திறந்த வெளிக்க்கடிதம்'.
'சங்கிலிப் பூதத்தான்' கதை சுவாரசியமானது. இருபத்தேழு நாட்டார் தெய்வங்களில் ஒருவரான சங்கிலிப் பூதத்தான் சிவனிடம் பெரு நிதியம் வரமாக பெற்றதால் படும் பாடு பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இது தவிர‌  'செம்பொருள் அங்கதம்' , 'பழி கரப்பு அங்கதம்' போன்றவையும் முக்கிய கதைகள் ஆகும்.

No comments:

Post a Comment