Saturday, 5 July 2014

(17) ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

 ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

இந்த புத்தகத்தை முதல் தடவை  வாசிப்பவர்களுக்கு  கட்டாயம் இது நாவலா அல்லது எவ்வகையினை சேர்ந்தது என்ற குழப்பம் வரும் என நினைக்கிறேன்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரே சமயம் கொண்ட நாவல்’ என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவலின் முதல் பகுதியில் நாவலின் ஆசிரியர்,  ஜே.ஜே உடனான தனது அனுபவங்கள், பிறர் மூலம் தெரிந்து கொண்ட விடயங்களை குறிப்பிடுகிறார். இரண்டாம் பகுதி ஜே.ஜே இன் நாட்குறிப்புகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் ஜே.ஜே யின் புத்தகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஜோசப் ஜேம்ஸ்   1960 ஜனவரி 5 ஆம் திகதி, தனது 39 ஆவது வயதில், ஆல்பெர் கம்யு விபத்தில் மாண்டதற்கு மறு நாள் இறந்தான்." இது தான் நாவலின் முதலாவது வரி. இந்த நாவலுக்கு ஆழ்ந்த வாசிப்பு தேவை என முதலே அறிந்து இருந்ததால், ஆல்பெர் கம்யு (Albert Camus) யார் என தேடிப்பார்க்க வேண்டியது  கட்டாயம். எழுத்தாளர்,தத்துவவியலாளர்  French-Algerian நோபல் பரிசு வெற்றியாளர். Albert Camus போலவே ஜே.ஜே யும் கால்பந்தாட்டம் விளையாடுபவனாகவும் நாடகங்களில் ஈடுபாடு உள்ளவனாகவும் இருக்கிறான்.

ஜே.ஜே எனப்படும் ஜோசப் ஜேம்ஸ் எனும் மலையாள எழுத்தாளனைப் பற்றிய நினைவுகளாக கதை ஆரம்பிக்கிறது. (ஜே.ஜே என்பது ஒரு கற்பனையான பாத்திரமே) புத்தக ஆசிரியர் ஒரு தடவை மட்டுமே நேரில் ஜே.ஜே யை சந்தித்து இருக்கிறார். அப்போதும் அவன் " சிவகாமி அம்மாள் சபதத்தை நிறைவேற்றி விட்டாரா " என தமிழ் எழுத்தாளர்களை கிண்டலடிப்பது மட்டும் தான் அவனுடனான நேரடி அனுபவம். ஆனால் ஜே.ஜே யின் ரசிகனான ஆசிரியர் தொலைவில் நின்றே அவனை பல தடவைகள் ரசிக்கிறார்.  ஜே.ஜே யின் மறைவிற்கு பின்னர் அவனை குறித்த நாவல் ஒன்றினை எழுத அவனது  மனைவி, நண்பர்கள்,அவனோடு எதிர்மறை கருத்து கொண்டவர்கள், அவனது சமகால எழுத்தாளர்கள் என பலரை  சந்தித்து ஜே ஜே நினைவுகளை நம்மோடு பகிர்கிறார் எழுத்தாளர்.

ஜே.ஜே யை புரிந்து கொள்ள நாட்குறிப்பு பகுதி முக்கியம்.நாவலில் முல்லைக்கல் மாதவன், அரவிந்தாட்ச மேனன் , சம்பத்  போன்றவர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஜே.ஜே யின் குண நலன்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தான் சரியாக நடக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறான். பலருக்கு அவனை பிடிக்கிறது. பல எதிரிகளையும் சம்பாதிக்கிறான். இயற்கையை மிகவும் ரசிக்கிறான், கூர்ந்து கவனிப்பவனாக இருக்கிறான்.

ஆழமான கருத்துக்கள் கொண்ட நாவல். மறு வாசிப்பு செய்யும் போது ஜே.ஜே பற்றி மேலும் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.




No comments:

Post a Comment