
எனக்கு ஈழம் தொடர்பான சோவின் கருத்துகளுடன் முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவரது திரைப்பட நகைச்சுவைகள் , எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மூப்பனார், காமராஜர் , இந்திய பிரதமர் மோடி , M.G.R, சிவாஜி , கருணாநிதி உட்பட அரசியலில் முக்கியமானவர்கள் , சினிமாவில் முக்கியமானவர்கள் பலரைப்பற்றி சுவையான விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.M.G.R இன் அரசியல் தொடர்பாக அவரது துக்ளக் பத்திரிகையில் விமர்சனம் செய்து வந்தாலும் திரைப்படங்களில் அவருடன் தொடர்ந்து நடித்திருக்கிறார்.
துக்ளக் பத்திரிகை தொடங்கப்பட்ட சம்பவத்தை சுவையாகக் குறிப்பிடுகிறார். துக்ளக்கில் பணி புரிபவர்கள் பற்றிய அறிமுகம் சிரிப்பை வரவைக்கும். சோவின் குடும்பத்தவர்கள், நண்பர்களுடனான மறக்க முடியாத சில அனுபவங்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அவரது அம்மா அவரை சோழன் பிரம்மஹத்தி என்ற பட்டப் பெயரில் அழைத்து, அதுவே பின்னர் சோழன் ஆகி சோ ஆகிவிட்டது என்று தனது பெயருக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.உயர்ந்த மனிதர்களுடனான நட்பு என்பது எல்லாருக்கும் எழிதில் கிடைப்பதில்லை. சோவுக்கு அது கிடைத்திருக்கிறது. இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் இந்தியாவின் முக்கியஸ்தர் பலரைப்பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment