Friday 25 July 2014

(23) கடல்புரத்தில் - வண்ணநிலவன்

கடல்புரத்தில் -  வண்ணநிலவன்

கடலுடன் ஒட்டிய கிராமத்தின் கதையை சொல்லும் சிறிய நாவல் தான் 'கடல்புரத்தில்'. இதற்கு முன் இவரது 'ரெயினீஸ் ஐயர் தெரு'  வாசித்திருக்கிறேன். இரு நாவல்களுமே தமிழ் நாவல்களில் முக்கியமானவையாக கருதப்படுபவை.


கடலோர கிராம மக்களின் ஏமாற்றம், ஆசை, காதல், வன்மம் என்பவற்றை நாவலூடாக சொல்லிச் செல்கிறார். நாவலில்  பிலோமி, அவள் அப்பச்சி குரூஸ் மிக்கேல் , அம்மை  மரியம்மை , அண்ணன்  செபஸ்தியான், தோழி ரஞ்சி, சாமிதாஸ், வாத்தி என்பவர்கள் முக்கியமான பாத்திரங்களாக‌ இருந்த போதும் பிலோமியையும்   அவள் அப்பச்சி குரூஸ் மிக்கேலையும் சுற்றியே கதை செல்கிறது. குரூஸ் மிக்கேல் கோபக்காரன், கடலம்மை மீது பற்று வைத்துள்ளவன். வல்லத்தை உயிராக நினைக்கிறான். வல்லமும் வீடும் அவனை விட்டு போனதும் மனநிலை பாதிப்படைகிறான்.

 பிலோமியின் அம்மை இறந்து விடுகிறாள்.  அப்பச்சியின் மன நிலை பாதிப்படைந்து விடுகிறது. அவள்  விரும்பிய சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.  தனியே நிற்கும் பிலோமிக் குட்டி, இந்த மாற்றங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறாள்.



கிறிஸ்மஸ் தினத்தை கிராம மக்கள்  கொண்டாடும் முறையை கண்முன் கொண்டு வருகிறார் எழுத்தாளர். இந்த நாவலில் கிராமத்தின் வாழ்க்கை மட்டுமல்லாமல் மீன்பிடித்தொழிலில் ஏற்பட்ட மாற்றமும்  அதனால் மக்களிடம் ஏற்பட்ட மாற்றமும் சொல்லப்படுகிறது. லாபத்தைக் மட்டும் நோக்கி மீன் பிடிக்கும் லாஞ்சுகள் வந்தபோது ஊர்க்கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதிக்கும் மனப்பான்மையும்,  போட்டியும்  முரண்பாடும் வந்து சேர்கின்றன.
ஒரு கடல் கிராமத்திற்கு வாசிப்பவர்களை அழைத்துச்செல்ல இந்த நாவல் தவறவில்லை.

No comments:

Post a Comment