Thursday 24 July 2014

(22) காட்டில் நடந்த கதை - விபூதிபூஷண் பந்தோபாத்யாய

காட்டில் நடந்த கதை - விபூதிபூஷண் பந்தோபாத்யாய (வங்காளம்)
தமிழில்: புவனா நடராஜன்


 'பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம்  புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான கதைகள் காட்டுடன் சம்பத்தப்பட்டவை. இல்லையெனில் ஒரு மரமாவது இருக்கும். பெரும்பாலான தமிழ் சிறுகதைகளில் உள்ளது போன்ற ஆபாசம், கொடூரம் எதுவுமற்ற சிறந்த சிறுகதைகள் இவை.

 சுஜாதாவின் 'நகரம்' பிரேம்சந்த்தின் 'லட்டு' சிறுகதைகளுக்கு ஒப்பானதாக மனத்தை நெகிழ வைத்த சிறுகதை  'கூப்பி'. தலை முடிகள் சில நரைத்த மனிதன் ஒருவனையும் அவனது ஐந்து வயது மகளையும் காட்டுப்பிரதேசத்தில் சந்திக்கிறார் எழுத்தாளர். கிராமத்த்தை விட்டு புரூலியா எனும் டவுனுக்கு சென்ற கதையை சொல்கிறான் அவன். அந்த சிறுமியின் அம்மா இறந்து இரண்டு வருடமாகிறது. அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு விறகு வெட்ட போவது கடினம் என்பதால் புரூலியா சென்று இரண்டு வருடமாக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் என்று சொல்கிறான் அவன்.  புரூலியாவில் இருக்கும் அவனுக்கு தெரிந்த ஒருவன் இரவு நேரத்‌தில் அவன் வீட்டு வராந்தாவில், படுக்க மட்டும் இடம் கொடுக்கிறான். அந்த நேரத்த்தில் பஞ்சம் ஏற்படுகிறது. யாரும் பிச்சை போட விரும்பவில்லை. தங்க இடம் கொடுத்த வீட்‌டுகாரர்களும் வீட்டை காலி செய்ய சொல்லி தகராறு செய்கிறார்கள். அதனால் டவுனை விட்‌டு கிளம்பி சொந்த ஊரான தோடாங் கிராமத்திற்கு சென்று கொண்டிருப்பதாக சொல்கிறான்.அவன் தன் மகளை தோளில் தூக்கி வைத்து நடந்து செல்வதை பார்த்தபடி இருக்கிறார் எழுத்தாளர்.
               
இது நடந்து பல நாட்களுக்கு பின் ஒரு நாள் ஏதோ ஒரு ஊரில் ஆஸ்பத்திரிக்கு முன்பாக கூட்டம் நிற்பதை பார்க்கிறார். ஒரு கூலி ஆள் படுத்து கிடந்தான். முதுகில் bandage  போட்டிருந்தார்கள். இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. டைனமைட் வைத்து பாறைகளை பிளக்கும் வேலை நடக்கும் இடம் அது. கல் தெறித்து வந்து அடித்து முதுகெலும்பை பாதித்துவிட்டது  என்று சொல்கிறார்கள். முகத்தில் சலனமில்லாமல் உட்கார்ந்தபடி கீழே கிடந்த வைக்கோலை வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்த சிறுமியை கூப்பி என அடையாளம் காண்கிறார். அருகில் இருந்தவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்த போது கூலியாக அரிசி கிடைக்கும் என்பதற்காக தூர இடத்தில் இருந்து இங்கு வேலைக்கு வந்திருந்தார்கள் என்று சொல்கிறார்கள். Ambulance  வந்தது. எல்லோரும் அவனை தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். அவனிடம் இருந்து முனகல்கள் மட்டுமே வெளிப்பட்டன. அவனுக்கு பிரியமான, அவனது கர்வத்திற்கு காரணமான கூப்பியின் பெயரைக்கூட அவனால் சொல்லமுடியவில்லை. அங்கிருந்து எழுபத்தொரு மைல்கள் பயணம் செய்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வண்டியின் குலுக்கல் காரணமாகவே அவன் இறந்து போய்விடக்கூடும். 'அன்புக்குரிய மகள் கூப்பியை யாரிடம் விட்டு விட்டு போவது என்பதை தீர்மானிக்க நேரமே இல்லாமல் அவன் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தான்.' என கதையை முடித்திருப்பார். 

இது தவிர ராஜா அமானுல்லா பற்றிய 'சாலாராம் சொன்ன கதை' , பாசம், காட்டில் நடந்த கதை என்பனவும் முக்கியமானவை.
 

No comments:

Post a Comment