Sunday, 7 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 3


ராஜன்

 பஷீரின் " உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது" நாவலில்  குஞ்ஞுபாத்துமாவின் அம்மா தனது அப்பாவிடம் ஆனை இருந்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனையை வைத்து ஒருவரின் சமூக அந்தஸ்த்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனையை வீட்டில் பாசமாக,  ஐஷ்வர்யத்திற்காக  வளர்த்திருக்கிறார்கள்.ஆனை காட்டில் வாழ வேண்டிய மிருகம் அதை வீட்டில் வளர்ப்பது ஒரு வகையில் நாம் ஆனையை வதைப்பதற்கு சமன் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். கோயிலில் நின்றிருக்கும் ஆனையை இன்றும் ஆசையுடன் பார்க்கின்றோம் எனினும் அது காட்டு விலங்காக அறியப்படுவதால் ஆனை பற்றிய புரிதல்கள் குறைந்து விட்டது. அண்மையில்  அன்னாசிப் பழத்தில் சொருகப்பட்ட வெடிவெடித்ததால் இறந்த ஆனை  எல்லோரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. ஆனை மனிதர்களால் ஆபத்து காரணங்கள் கூறி கொல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுவருகிறது. ஜெயமோகனின் யானை டாக்டர் கதை படித்தவர்களுக்கு யானையின் மேல் ஒரு புரிதலும் விருப்பும் வந்துவிடும். அதன் தொடர்ச்சியாக ஆனையில்லா, துளி, ராஜன் போன்ற கதைகளை  படிக்கும் போது ஆனை செல்லப்பிள்ளையாகி தெய்வமாகிவிடுகிறது..

எட்டுக்கட்டு வீட்டின் வலிய சங்கரன் ஆனை இறந்த பின் தம்புரானுக்கு ஐஷ்வர்யம் இல்லை என்ற மனக்குறை. பாறசாலை ஆறாட்டுக்கு சென்ற போது நெல்லுவிளை வீட்டின்( நாலு கட்டு வீடு) ஆனை பர்வதராஜனைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து அதை எப்படியாவது தனது அரண்மனைக்கு கொண்டுவர தம்புரான் நினைக்கிறார்.பர்வதராஜன் 11 அடி உயரம் உடையது,வலிய சங்கரனை விட அரை அடி  அதிகம். எட்டுக்கட்டு, நாலுகட்டு வீடு பற்றிய குறிப்பிலிருந்து செல்வம் கூடிய குடும்பம் எது என்ற அனுமானத்திற்கு வாசகர் வந்துவிடமுடியும். இப்போது இந்த பர்வதராஜனால் கௌரவம் முழுவதும் அந்தக் குடும்பத்திற்கு போகப் போகிறது என்பது தான் தம்புரானின் பிரச்சனை. எட்டு ஆனை விலை சொல்லியும் பர்வதராஜனை கொடுக்க முடியாது என நெல்லுவிளை வீட்டார் சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த ஆனையைக் கொல்வது என்று முடிவெடுத்து பூதத்தான் நாயரை வரவைக்கிறார்கள்.

வலியசங்கரனைப் பார்த்துக்கொண்ட பூதத்தான் நாயர் ஆனையோடே பிறந்து வளர்ந்தவன். ஆனை கடவுள் போல. தம்புரானின் காரியஸ்தன் கோவிந்தன் நாயர், ஆனைக்கு  விசம் வைத்து கொல்லும்படி பூதத்தானிடம் சொல்ல பூதத்தான் மறுத்துவிடுகிறான். அவர்களிருவருக்குமிடையான உரையாடலே இந்தக் கதையின் முக்கிய பகுதியாக நினைக்கிறேன். 
போர் என்றால் ஆனையைக் கொல்வதில்லையா.அது போல தான் இதுவும், எந்த சாபமும் வராது என பூதத்தானுக்கு சமாதானம் சொல்லும் போது,  "யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்பிளையாக்கும்” என்று பூதத்தான் சொல்கிறான்.


கேரளா என்ற தேசம் பரசுராமரால் ஆனைக்காக உருவாக்கப்பட்டது. மனிதன் தனக்கு வாழ இடம் தேவை என ஆனையிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பூதத்தான் சொல்லும் இந்த கதையை ஜெயமோகனின் எழுத்துக்களில் வாசிக்கும் போது நன்றாக உள்ளது. பூதத்தானை குடும்பத்தை கொன்றுவிடுவார்கள் என்று எவ்வளவோ மிரட்டுகிறார்கள்.வாசிப்பவர்களுக்கும் பதட்டம் .

கதையை எப்படி முடிக்கப் போகிறார் என்ற பதட்டம் வந்துவிடுகிறது. பர்வதராஜன் பூதத்தானை தூக்கி ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இருவருமே திரும்பிவரவில்லை என்று கதை கவித்துவமாக முடிகிறது. 


" சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி,  தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது"  என்று ஒரு வரி உள்ளது. ஜெயமோகனது  கதைகளில் விபரிக்கப்படும் துல்லிய வர்ணனை அப்படியே காட்சியாக மனதிலே தங்கிவிடக்கூடியது.

இங்கே ராஜன் என்பது பர்வத ராஜன் மட்டுமல்ல, பூதத்தானும் தான்.

Thursday, 4 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 2

துளி

ஆனையில்லா கதையைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்ய நான் தெரிவு செய்த கதை துளி. இதுவும் ஒரு ஆனை பற்றிய கதை என்பதோடு ஆனையில்லா கதையில் வரும் மனிதர்கள் இக்கதையிலும் வருவதால் ஒரு தொடர்ச்சியாக வாசித்து பார்க்க நினைத்தேன். யானையின் பெயர் கோபாலகிருஷ்ணன். ஆனையில்லா கதையில் ஐயப்பனின் வீட்டிற்குள் புகுந்த யானை.


மகாதேவர் கோயிலின் திருவிழாவுக்கு ஆயத்தமாக வேண்டிய யானை காலையில் இருந்து பிளிறிக்கொண்டிருக்கிறது. அதற்கு நோயுக்கான எந்த அறிகுறியும் இல்லை.நன்றாக சாப்பிட்டும் விட்டது. யானையைப் பார்த்துக்கொள்ளும் ராமன் நாயருக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி யானைக்கு மனசு சரியில்லை என சொல்கிறார்.

திற்பரப்பில் இருந்து கொச்சுகேசவன் என்ற யானை திருவிழாவுக்காக வந்து கொண்டிருக்கிறது. அதை தனது எட்டாவது அறிவால் அறிந்து தான் இந்த யானை படபடத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் நடந்த களியல் கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கொச்சுகேசவனுக்கு மரியாதை அதிகமாக கிடைத்ததால் கோபாலகிருஷ்ணனுக்கு கொச்சுகேசவன் இங்கு வருவது பிடிக்கவில்லை. என்னவாக இருந்தாலும் மகாதேவர் கோயில் யானை  கோபாலகிருஷ்ணன் தானே. திருவிழாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியதும் கொச்சு கேசவன் வரப்போவதை கோபாலகிருஷ்ணன்  உணர்ந்திருப்பான். அதனால தான் படபடப்பு.

இரு யானையைப் பற்றிய விபரங்கள் அழகாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கொச்சுகேசவனின் அப்பா கொச்சு கணபதி திருவோண நட்சத்திரக்காரன் என்பதும் கோபாலகிருஷ்ணனும் குறையில்லை ரோகிணி நட்சத்திரம் என்பதும் என அந்த கால மனிதர்கள் யானையின் நட்சத்திரங்களையும் தெரிந்து கதைப்பது யானையுடன் மனிதனுக்கு இருக்கும் உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

"தலையெடுப்புன்னா அவனாக்கும்… இவனுக்கு ஒரு பம்மலு உண்டு… கிண்ணம் களவாண்டுட்டு போறதுமாதிரி ஒரு நடை” 
என கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி என்பதால் கிண்ணம் களவாடிப் போற நடை என கரடி நாயர் சொல்கிறார். ஜெயமோகன் கதைகளில் யானையை வீட்டுப் பிள்ளை மாதிரி தானே  பார்த்துக் கொள்கிறார்கள்.

"கோபாலா, மரியாதைக்கு இருந்துக்கோ. நாலாளு கூடுத ஸ்தலமாக்கும். உனக்க அப்பன் தென்னிமலை கேசவனுக்க பேரை களையப்பிடாது கேட்டியா?”என்று ராமன் நாயர் யானையிடம் சொல்வதும் "சிவன்  மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?”  மாதவன் பிள்ளை சொல்வதும் என இந்தக் கதையிலும் மனிதர்களின் சின்ன சின்ன உரையாடல்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.

கருப்பன் என்ற நாய் தான் இரு யானைகளையும் சேர்த்து வைக்கிறது. இந்தக்கதையே மனிதனுக்கு புரிந்து கொள்ள முடியாத மிருகங்களின் உலகத்தை அழகாக சொல்வது தான்.

நண்பர்களுக்கிடையிலான சண்டை, கோயில் திருவிழாவுக்கான வேலைகள், அன்னதானம் தொடர்பான தகவல்களென வாசிக்கும் போது அப்படியே ஒரு காட்சியாக கற்பனை விரிந்து கொள்கிறது.

அன்னதானத்தில் கிறிஸ்தவரான டீக்கனாரின் பங்கு இருப்பதும் யானையின் பிரச்சனை முடிந்தவுடன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி ஏற்றுவேண்டும் என கரடி நாயர் சொல்வதும் என மதம் தாண்டிய மனிதர்களை   பார்க்கமுடிகிறது.

ஆனை வரிசையில் சிறப்பான ஒரு கதை.

Wednesday, 3 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 1

"ஆனையில்லா "

ஆரம்பத்தில் சாதாரணமாக வாசித்துக்கொண்டிருந்த கதைகளில், எனக்கு தீவிரமான பிடிப்பு ஏற்பட காரணமான முதல் கதை இது. அதனால் மறுவாசிப்புக்கு முதலில் இக்கதையையே தெரிவு செய்தேன்.

எராளி ஐயப்பனின் வீட்டிற்குள் ஆனை புகுந்து விட்டது. ஆனையால் வெளியில் வரமுடியவில்லை. ஆனையை மீண்டும் வெளியே கொண்டுவர வேண்டும்.

இதற்கு பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதில் ஒன்று சிறுவனான கதைசொல்லி  குடையை மடக்குவது போல ஆனையை மடக்கினால் வெளியே எடுக்கலாம் என சொல்வது. தந்தையின் திட்டு மூலமும் டீக்கனாரின் சிரிப்பு மூலமும் அது நிராகரிக்கப்படுகிறது. அடுத்து கிரீஸ் பூசுவது. அது தொடர்பான உரையாடல்கள் சுவையின் உச்சம். இறுதியாக  பூசாரியை வர வைக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, ஐயப்பனின் மனைவி தன்  மகள் நாராயணியை திட்டுவதும் அதற்கு அவள் தன்னுடன் கூடப் படிக்கும் கதை சொல்லியைப் பார்த்து நெளிவதும் அத்துடன் அவளது முகத்தைப் பார்க்கும் போது ஆனை வீட்டிற்குள் சென்றது பள்ளிக்கூடத்தில் தனக்கு பெருமையா அல்லது இழிவா என அவள் இன்னும் முடிவெடுக்க‌வில்லை என தெரிந்தது என சொல்வதும்.


இந்தச் கதையை அழகூட்டுவது சின்ன சின்ன உரையாடல்கள். ஆனைக்கு அபமிருத்யூ வந்த நாட்டில் கஜலக்ஷ்மி போய்விடுவா.கஜலக்ஷ்மி பின்னால் மற்ற லக்ஷ்மிகளும் போய்விடுவார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக்கும்  என ஒருவர் சொல்லும் போது ஸ்டீபன் மேரியும் ஒரு லக்ஷ்மியாக்கும், ஒன்பதாம் லக்ஷ்மி என சொல்வது அதில் ஒன்று. இக்கதையில் வரும் ஸ்டீபன் , கரடி நாயர் குழாமை கடுப்படிக்க கதைப்பவர்.

ஆனை வீட்டிற்குள் நுழைந்ததற்காக சொல்லப்படும் காரணம், ஆனை வெளியே வரும் வரை வீட்டிற்குள் இருந்த கிழவியைப் பற்றி யாருமே நினைக்காமல் இருந்தமை, பூசாரியைப் பற்றி அங்கு இருப்பவர்கள் கதைப்பது, பூசாரி கரடி நாயரை வம்புக்கு இழுப்பது,ஆனையை வெளியே கொண்டு வர பூசாரி கையாண்ட முறை  என எல்லாமே ரசிக்கும் படி உள்ளது.

 மொத்தக்கதையையே ஒரு உருவகமாகவும் கொள்ளலாம்.

Monday, 1 June 2020

அன்புள்ள ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனது  புனைவுக் களியாட்டு சிறுகதைகள் வாசித்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன். புனைவுகள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. இந்த 69 கதைகள் புனைவு இலக்கியம் மீது எனக்கு தீராத ஆசையை உருவாக்கியுள்ளது. நாலைந்து கதைகள் தவிர மீதி அனைத்துக் கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன. 25 கதைகளுக்கு மேல் சிறப்பானவை(வேற level )என சொல்லலாம்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.அது எனது அன்றாட கடமைகளில் ஒன்று. கட்டுரைகளையே விரும்பி வாசிப்பேன். அதுவும் பயணக் கட்டுரைகள். அடுத்ததாக நாவல் ஒன்று வாசிப்போம் என நான் தொடங்கியது விஷ்ணுபுரம். அந்த மொழியை, தத்துவத்தை  என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் முழுவதும் வாசித்து முடித்தேன்.(அவரது நாவல்களில் இறுதியாக வாசிக்க வேண்டியது விஷ்ணுபுரம் என அவர் எழுதியிருந்ததை பின்னரே வாசித்தேன்.)இவரது நாவல்கள் எனக்கு சரிப்பட்டு வராது என விட்டுவிட்டேன். பின் அ.முத்துலிங்கம் சிறந்த கதை என்று எழுதியதால் ஊமைச்செந்நாய் வாசித்தேன். வாசிக்கவே பிடிக்கவில்லை. ஒரு சில பந்திகளுடன் நிறுத்திவிட்டேன். ஆனால் அவரது அறம், விசும்பு, பனிமனிதன் போன்றவை என் விருப்பத்துக்குரியவை. அதன் பின் வெற்றி என்ற சிறுகதை இணையத்தில் பலமாக விவாதிக்கப்பட்டதால் வாசித்தேன். நான் இது வரை வாசித்த கதைகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருந்த கதை.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். பெருமளவிலான கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதன் பின் காடு நாவல். இந்த வாசிப்பினால் வந்த பயிற்சியினால் அவரது எழுத்துக்கள் எனக்கு பழக்கமாகியிருந்தது. புனைவுக் களியாட்டுக் கதைகளை கூர்மையாக புரிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவியது என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு நாளும் காலையிலேயே அவரது புனைவுக் களியாட்டு கதைகளை வாசித்து வந்தேன். இதற்காக காலை 5.30 மணிக்கு alarm  வைத்து எழும்பினேன். அன்று முழுவதும் அக்கதைகளே என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும். கொரோனா கால மன அழுத்தத்தை இக் கதைகள் குறைத்தது என்று சொல்லலாம். அவர் இக்கதைகளில் உருவாக்கிய கேரளா, குமரி, லடாக்,திபெத் போன்ற நிலங்களில் வாழ்ந்தேன். சில நேரங்களில் எது உண்மையான வாழ்க்கை என்ற குழப்பம் கூட வந்தது. இமய நிலத்தில் வாழ்வது போலவே தொன்றியது. ‌

ஜெயமோகன் நிறைவு என அறிவித்தது கவலை தந்தாலும் அதுவும் தேவை போல இன்னொரு வகையில் தோன்றியது. எனது கோவிட் காலத்தை நான் சரியாக பயன்படுத்தினேன் என்ற நிறைவு எனக்கு இருக்கிறது. அதிகாலையிலேயே எழும்பியதால் வேறு புத்தகங்கள் வாசிக்கக்கூடியதாகவும் இருந்தது. அத்துடன் முக்கியமாக 4000 திவ்ய பிரபந்தம் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் 20 பாட‌ல்களாக‌  தொடர்ந்து படித்து வருகிறேன்.

சமையலிலும் பாத்திரம் கழுவுவதிலும் பிள்ளை பார்ப்பதிலுமாக கழிந்து சென்றிருக்க வேண்டிய இக்காலத்தை அர்த்தம் உள்ளதாக மாற்றியதற்காக எனது அன்புக்குரிய எழுத்தாளருக்கு நன்றி .சூழ்திரு கதை வாசித்த நாட்களில் என்று நினைக்கின்றேன், அவரது வீட்டிற்கு சென்று அவருடன் அக்கதையைப் பற்றி கதைப்பது போல கனவு கூட கண்டேன்.அவர் பெரிதாக எதுவும் கதைக்கவில்லை. அப்படியா என்பது போல கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மனைவி சிறந்த உணவு ஒன்றும் உண்பதற்கு தந்தார், கனவில்.

இலக்கியத்தின் பயன் என்ன என்பதற்கு , ஒரு வாழ்க்கையே நான் வாழ்வதற்கு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இலக்கியம் மூலம் நான் தாகூருடன் வங்கக் கடலில் அலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன், சாள்ஸ் டிக்கன்ஸ் லண்டன் தெருவில் எனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்.அரேபிய மணல் தெரிந்திருக்கிறது. பல வாழ்க்கை வாழ்வதற்கு இலக்கியம் உதவுகிறது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். புனைவுக் களியாட்டு கதைகள் வாசித்தபோது தான் அந்த வரிகளின் உண்மையை உணர்ந்தேன். இம‌ய மலையடுக்குகளில்  இருந்த டான்லே மடாலயத்தில் அசிதருடனும் காகத்துடனும் அந்த பனிக் குளிரில் வாழ்ந்தேன், கரடி நாயருடனும் அவரது நண்பர்களுடனும் அசல் கிராம வாழ்க்கை வாழ்ந்தேன், ஔசேப்பச்சன்,குமரன் மாஸ்ரர் குழுவுடன் அந்த மேசைக்கு அருகில் அமர்ந்து அந்த உரையாடல்களைக் கேட்டேன், உமையம்மை ராணியின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுவதை பார்த்து நெஞ்சம் நடுங்க அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தித்தேன்.இசக்கியம்மைக்கு ஏன் இப்படி ஒரு துயரம் என்று புரியாமல் விடைதேடினேன்.திபெத்,இமைய நிலம் எனக்கு இப்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருக்கிறது.



எனக்கு மிகவும் பிடித்த கதை எது என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கரு,இறைவன்,பலிபீடம், பத்து லட்ஷம் காலடிகள்,நற்றுணை, நிழல்காகம்,சூழ்திரு, பொலிவதும் கலைவதும், ஓநாயின் மூக்கு ஆகிய கதைகளில் ஒன்றாக இருக்கலாம். மறுவாசிப்புக்கு பின் தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அறம்,விசும்பு கதைத் தொகுதிகள் போல ஜெயமோகன் எப்போது கதை எழுதுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். கோவிட் காலத்தில் அது நிறைவேறியிருக்கிறது. உண்மையில் இத்தொகுதியில் உள்ள பல கதைகள் அதைவிட சிறந்தவை. புத்தகமாக வரும் போது வாங்குவதற்காக காத்திருக்கின்றேன்.

Monday, 11 May 2020

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார் பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி என அழைக்கப்படுகிறது. 4000 திவ்ய பிரபந்தத்தில் 647 ஆவது பாடல் தொடக்கம் 751 ஆவது பாடல் வரை இவர் பாடிய 105 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

எனக்கு பிடித்த  பல பிரபந்த பாடல்கள்  குலசேகர ஆழ்வார் பாடியவையாகவே இருக்கின்றன. அவன் அடியார்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் அவன் மேல் உள்ள அன்பு குறைவதில்லை. 


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!


என்று குலசேகர ஆழ்வார் பாடுகின்றார். இறைவன் மேல் அவர் கொண்ட அன்புக்கு இந்த ஒரு பாட்டே போதும்.

"மன்னு புகழ் கோசலை தன்" எனத் தொடங்கும் ராமன் மீதான  தாலாட்டுப் பாடலும் இவர் பாடியதே.இவை கண்ணபுரத்து இறைவனை நோக்கிப்பாடப்பட்டவை. இப்பாடல்களில் சிலவற்றை தெரிவு செய்து சஞ்சய் சுப்ரமணியம் ராகமாலிகையாகப் பாடியதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 

 " செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே" என்ற திருமலையைப் பாடிய 10 பாடல்களும் இவரால் பாடப்பட்டவையே.இப்பாடல்கள் நான்காம் திருமொழியில் வகுக்கப்பட்டுள்ளன. திருவேங்கடப் பெருமானை பார்த்துக் கொண்டே இருப்பதற்காக திருமலையில் மீனாக, குருகாக, ஆறாக ,படியாக என்று பாடி  இறுதியாக திருமலை மேல் ஏதேனும்  ஒன்றாக பிறப்பேன் என வேண்டுகிறார். திருவேங்கடப் பெருமானின் கீர்த்தனைகளுக்கு முன் விருத்தமாக பெரும்பாலும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. படியாக இருந்து உன் பவள வாய் காண்பேனே என வேங்கப் பெருமானைப் பாடியதால் வேங்கடப் படி குலசேகரப் படி என அழைக்கப்படுகிறது.


அரங்கன் மேல் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமொழிகளிலும் வேங்கடவன் மேல்  பாடியவை நான்காம் திருமொழியாகவும் வித்துவக்கோடு என்ற தலத்தில் பாடிய பாடல்கள் ஐந்தாம் திருமொழியாகவும் திருக்கண்ணபுரம் மீது பாடிய இராமன் மீதான தாலாட்டு எட்டாம் திருமொழியாகவும்  சிதம்பர திருச்சித்திர கூடப் பெருமானை இராமனாக நினைத்து  இராமன் மீது  பாடிய பாடல்கள் பத்தாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. முழு இராமாயணத்தையுமே சுருக்கமாக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அயோத்தி, திருவாழித்திரு நகரி, திருப்பாற்கடல் ஆகியவை மீதும் பாடல்களைப் பாடியுள்ளார். 


குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்களத்தில் சேரர் அரச குலத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமாயணம் கேட்பதில் சிறுவயது முதலே ஆர்வமானவர். இராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு இராமருக்கு துணையாக போருக்கு புறப்பட தயாரானவர். அரண்மனையில்  இறைவன் அடியார் மீது போலி திருட்டுப்பட்ட சுமத்தியதால் மனம் வருந்தி, தனது பதவியை மகனிடம் கொடுத்துவிட்டு திருமாலை தரிசிக்க துறவறம் பூண்டார்.திருமாலின் மார்பில் இருக்கும் கௌஸ்துப அம்சம் பொருந்தியவராக கருதப்படுகிறார்.இவர் தனது மகளை அரங்கனுக்கு மணம் முடித்து கொடுத்து அரங்கனுக்கு மாமனாக விளங்குகின்றார்.



x

Saturday, 18 April 2020

(87) கதவு திறந்தே இருக்கிறது - பாவண்ணன்

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பாவண்ணனின் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே பிடித்தவை. இந்த புத்தகம் பல தடவைகள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக நான் நினைக்கின்றேன். அவரது எழுத்துகளில் மூழ்கி விட்டதால் ஒவ்வொரு கட்டுரையுமே ஒவ்வொரு புத்தகத்தை, ஆளுமையைப் பற்றியது என்பதை நான் அரைப் புத்தகம் கடந்த பிறகு தான் உணர்ந்து கொண்டேன்.
ஐந்நூறு வண்டிகளின் சத்தம் என்ற கட்டுரை அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த  பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தீகநிகாயம் என்ற புத்தரின் பொன்மொழிகள் என்று சொல்லக்கூடிய ஒரு புத்தகத்தைப் பற்றியது. சாலிம் அலியைப் பற்றிய விரிவான கட்டுரை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற புத்தகம் பற்றியது. அவருடன் எப்போதும் உடனிருக்கும் துங்கபத்திரை,ஜோக் நீர்வீழ்ச்சி உட்பட பல நதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள காகா கலேல்கரின் ஜீவன் லீலா என்ற புத்தகம் பற்றிய கட்டுரையும் உள்ளது. ஜீவன் லீலா எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நதிகளை சென்று தரிசிக்க வேண்டும் என்று பாவண்ணனுக்கு தோன்றியது போலவே எனக்கும் ஆசையை வர வைத்த புத்தகம். நூற்றாண்டுக்கு முற்பட்ட தூய நதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்.

புத்தரின் புனித வாக்கு எனும் பால் காரஸ் எழுதிய புத்தகத்தைப் பற்றிய கட்டுரையில் மீண்டும் புத்தரைப் பற்றி எழுதியுள்ளார்.ஹென்றி தோரோ பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானது.அண்மையில் சாகித்ய அக்கடமி விருது பெற்ற மனோஜ் குரூரின் மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான நிலம் பூத்து மலர்ந்த நாள் எனும் புத்தகத்தை பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.17 கட்டுரைகள் கொண்ட அருமையான புத்தகம் இது.

(86) எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா இந்த புத்தகத்தில் தனது குடும்பம், நண்பர்கள், பள்ளி நாட்கள் என சிறு வயது முதல் தனது அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார்.பழைய புத்தகக்கடை பற்றி அவரது எழுத்துக்களில் எப்போதுமே வாசிக்கலாம். அவருக்கு பிடித்த இடங்களில் ஒன்று அது. வாழ்வில் சில உன்னதங்கள் என்ற கட்டுரையில் பழையபுத்தகக் கடையுடனான தனது அனுபவங்களை எழுதியுள்ளார். அந்த தலைப்பே ஒரு புத்தகத்தைப்பற்றியது தான்.விட்டல் ராவ் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாசித்து இருக்கின்றேன். இளையராஜாவின் பாடல்களுக்கு தான் மிகவும் ரசிகன் என்பதையும் இளையராஜாவை சந்தித்த அனுபவங்களையும் இளையராஜாவின் ரசிகன் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். நயகரா முன்னால் என்ற கட்டுரையில் நயகராவை சென்று பார்த்ததை அங்கு ரசித்தவற்றை பற்றி எழுதியுள்ளார். ஜப்பானில் சில நாட்கள் என்ற ஜப்பானைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரையும் உண்டு. பார்த்தவற்றை மட்டும் எழுதுவது சிறந்த பயணக் கட்டுரையாக அமையாது. அவர் ஜப்பானின் பண்பாடு, வரலாற்றுடன் எழுதியவற்றை வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரது ஏனைய கட்டுரைகள் போலவே இந்த தொகுப்பும் மிக முக்கியமானது.மொத்தமாக 30 கட்டுரைகள் கொண்ட சிறந்த புத்தகம்.

(85) வாழும் நல்லிணக்கம் - சபா நக்வி

தமிழில் முடவன் குட்டி முகம்மது அலி

இந்த புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா ஒரு உரையில் ஒரு முறை சொல்லியதால் வாங்கினேன். ஆசிரியர் இந்தியாவில் சமய நல்லிணக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என ஆராய்ந்து எழுதியிருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார்(முஸ்லிம் பெண்)வழிபாடு, பூரி ஜெக நாதர் ரத யாத்திரையில் முஸ்லிம் கவிக்கு மரியாதை செலுத்த ரதம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றது போன்ற முக்கிய செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

(84) எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

உயிரினங்கள் மேல் ஈடுபாடுள்ள ராமும் அவர் மனைவி ஜானகியும் பெரும்பாலும் காடுகளில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது வீடும் காட்டுக்கு அருகில் தான் இருக்கிறது.பாம்பு, முதலை,சிறுத்தை கூடவே வாழ்ந்த அவர்களது வாழ்க்கை பிரமிப்பாக இருக்கிறது. இந்த புத்தகத்தை ஜானகி தான் எழுதியுள்ளார். ராம் ஒரு அமெரிக்கர். ஆனால் இந்தியாவில் தான் சிறு வயது முதல் அவரது தாயாருடன் வாழ்ந்திருக்கின்றார். இந்தியக் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்திருக்கின்றார். பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார். 


அவர்களுக்கு பாம்பு, முதலைகளைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கின்றது. பாம்புகளை எவ்வாறு இனம் காண்பது, எந்த வகைப் பாம்புகள் எங்கு இருக்கும் என எல்லாமே விரிவாக பதிவு செய்துள்ளார். இருவருமே ஒரு சாகச வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள்.முள்ளம்பன்றியை , பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார்கள் என்றால் சும்மாவா. அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் மிருகங்களுடனும் பறவைகளுடனும் தான் மனிதர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. விலங்குகளால் ஏற்பட்ட தொல்லைகளையும் சுவைபடக் கூறியுள்ளார். ராம் இந்தியாவின் முதலைகள், பாம்புகளின் பாதுகாப்புக்காக நிறைய பாடுபட்டுள்ளார். இந்திய அரசின்  பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.எமக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகம் இருக்கின்றது என வியக்க வைத்த புத்தகம்

Sunday, 23 February 2020

(83)காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராவின் கட்டுரைகள், நாவல்கள் விரும்பி வாசித்தாலும் சிறுகதைகள் பெரிதாக வாசித்தது இல்லை. இப் புத்தகத்தில் 13 சிறுகதைகள் உள்ளன. முதல் கதை 'காந்தியோடு பேசுவேன்'. ஏற்கனவே வாசித்ததாக நினைவு. அருமையான கதை. பெண்கள் ஏன் காந்தியை விரும்பினார்கள் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொள்ளலாம். காந்தியையும் புரிந்து கொள்ள உதவும்.காந்தியை நேரில் சென்று சந்தித்த கதை சொல்லியின் அம்மாவினூடாக காந்தி காலத்தையும் தற்காலத்தையும் இணைத்து எழுதப்பட்ட கதை. காந்தி பற்றிய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை.
பாதியில் முடிந்த படம், அருவிக்கு தெரியும், ஷெர்லி அப்படித்தான் போன்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.ராவின் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்க  வேண்டும் என்ற ஆர்வத்தை இப் புத்தகம் தந்துள்ளது.

Monday, 30 December 2019

(82) மனம் கொத்திப் பறவை - சாரு நிவேதிதா

விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வணிக எழுத்தின் வாசகர்கள் சிலரையாவது அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் சென்றிருக்கும் இந்தக் கட்டுரைகள்.பல விடயங்களை கலந்து விகடன் வாசகர்களுக்கும் ஏற்றது போல் எழுதியுள்ளார். அவருக்குப் பிடித்த லத்தீன் அமெரிக்கா, உணவு , புத்தகங்கள், திரைப்படங்க
ள்,இசை , அரசியல் எல்லாமே உள்ளது.

(81) காடு - ஜெயமோகன்

ஜெயமோகனின் இணையத்தளம் நான் தவறாமல் ஒவ்வொரு நாளும் வாசிப்பேன். ஒவ்வொரு நாளும் முதன் முதலில் செல்லும் தளம் அது தான். புதிதாக வரும் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து விடுவேன். (வெண்முரசு தவிர. வெண்முரசு ஆரம்பித்த காலங்களில் ஒவ்வொரு நாளும் வாசித்தாலும் இடையில் வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் அப்படியே விடுபட்டுவிட்டது. கட்டாயம் வாசிக்க வேண்டும்)
விஷ்ணுபுரம் தவிர்ந்த அவரது நாவல்களை வாசித்ததில்லை. வாசிக்க கடினமாக இருக்கும் என்ற தயக்கத்தினால் தான். காடு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவமாக இருந்தது. அடுத்த வருடம் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

Sunday, 12 May 2019

(81) குறுகிய வழி - ஆந்த்ரே ழீடு

மொழிபெயர்ப்பு - க. நா.சு

காவ்யா பதிப்பகம் தொகுத்த  க. நா.சு மொழிபெயர்ப்பு நாவல்கள் அடங்கிய தொகுதியில் மொத்தம் 6 நாவல்கள் உள்ளன. விலங்குப் பண்ணை நாவல் தந்த உற்சாகத்தில் அதே எழுத்தாளரின் மற்றொரு நாவலான 1984 வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் கால்ப்பகுதி கூட என்னால் வாசிக்க முடியவில்லை. நாவல் எனக்கு அந்நியமாகவே இருந்தது.அதனால் நிறுத்தி விட்டு ஆந்த்ரே ழீடுவின் 'குறுகிய வழி' நாவலை வாசித்தேன். 

ஜெரோமின் நிறைவேறாக் காதலை சொல்லும் நாவல் என்று மட்டும் தட்டையாக  சொல்ல முடியாது. ஜூலியட்டின் காதலும் கூட நிறைவேறவில்லை. ஜெரோமும் அலிஸாவும் காதலிக்கிறார்கள். ஆனால் அலிஸா ஜெரோமைத் திருமணம் செய்து கொள்வதை விட  மதத்தை தீவிரமாக விரும்புகிறாள். உண்மையான மகிழ்ச்சி என்பது மதத்தில் சொன்னவற்றை பின்பற்றுவதே என எண்ணும் அலிஸா தனது தங்கை ஜெரோமை விரும்புவது தெரிந்து தான் தனது காதலை தியாகம் செய்ய விரும்புகிறாள். ஆனால் தங்கை ஜூலியட் வேறு ஒருவரைத் திருமணம் செய்து தனது காதலைத் தியாகம் செய்கிறாள். நாவலின் இறுதிப் பகுதி அலிஸாவின் நாட்குறிப்புகளினூடாக‌ சொல்லப்படுகிறது.அலிஸா இறந்து 10 வருடங்களின் பின் ஜெரோமும் ஜூலியட்டும் சந்திப்பதில் நாவல் நிறைவடைகிறது. அப்போது ஜூலியட்டுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்து இருக்கிறது. பெண் குழந்தை. பெயர் அலிஸா.

Saturday, 11 May 2019

(80) விலங்குப் பண்ணை- George Orwell

தமிழ் மொழிபெயர்ப்பு - க. நா.சு

புரட்சியைக்(ரஷ்ய‌) கிண்டல் செய்து  எழுதப்பட்ட நாவல். க. நா.சு மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது. மூல நாவலை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது கிடைக்காத இன்பம் க. நா.சு வின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.பல வசனங்களைத் தமிழில் ரசித்து வாசித்து விட்டு, பின் ஆங்கிலத்தில் அவ்வசனங்களை வாசிக்கும் போது  தமிழ் மொழிபெயர்ப்பின் தரத்தை உணர முடிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், நாவலை உயிர்ப்புடன் தமிழில் தந்திருக்கும் க. நா.சு உண்மையிலேயே தமிழுக்கு கிடைத்த ஒரு கொடை தான். காவ்யா பதிப்பகம் அவரது படைப்புகளைத் தொகுத்துள்ளது. அவரது விமர்சனங்கள் மூலமே நான் பல நாவல்களை அறிந்திருக்கிறேன்.


திரு. ஜோன்ஸ் இன் பண்ணையிலேயே புரட்சி நடக்கிறது.  கிழ‌ட்டுத்தளபதி என மற்ற மிருகங்களால் அழைக்கப்படும் பன்றி ஒரு நாள் புரட்சி பற்றி தான் கண்ட கனவை மற்ற விலங்குகளுக்கு விளக்கிவிட்டு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது. புரட்சி எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே ஒரு நாள் புரட்சியும் நடந்து விடுகிறது. நெப்போலியன், ஸ்னோபால் ஆகிய இரு பன்றியும் தான் ஏனைய விலங்குகளை வழி நடத்துகிறது.  குதிரைகளான பாக்சர், க்ளோவர், கழுதை பெஞ்சமின், Mollie என்ற தற்பெருமையுடைய குதிரை, ஸ்குவீலர் என்ற பேச்சாற்றல் மிக்க பன்றி(இது கறுப்பையே வெள்ளை என்று தன் பேச்சால் நிரூபித்து விடும்) மோசஸ் என்ற காகம் , கோழிகள் , பூனைகள் என பண்ணையின் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. 


புரட்சியின் பின் ஏழு விதிகளை உருவாக்கும் புரட்சிக்கு தலைமை வகிக்கும் பன்றி நெப்போலியன் இறுதியில் ஒவ்வொன்றாக விதிகளை மீறி வருவதை அழகாக நாவலில் விபரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 'எல்லா மிருகங்களும் சமம்' என்ற விதியை ' எல்லா மிருகங்களும் சமனானவை ஆனால் சில மிருகங்கள் வேறு சில மிருகங்களை விட அதிக சமனானவை' என மாற்றிவிட்டது. ஸ்னோபால் பன்றிக்கு துரோகி பட்டம் கொடுத்து பண்ணையை விட்டுத் துரத்திவிடும் நெப்போலியன் பின்னர் நடக்கும் அநீதி முழுவதையும் ஸ்னோபால் தலையிலேயே கட்டிவிட்டுவிடும். இறுதியில் புரட்சியால் எந்த பலனும் கிடைப்பதில்லை. முன்னர் இருந்த நிலையை விட கீழ் நிலைக்கே உழைப்பாளர்கள் தள்ளப்படுவார்கள்,புரட்சியாளர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வசனம் பேசி, நியாயப்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை நாவல் சொல்கிறது.அந்தப் பண்ணையில் நடப்பவற்றை இன்று கூட நாம் அரசியலில், நமது தொழில் புரியும் இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.




Monday, 22 April 2019

(79) மணிரத்னம் - படைப்புகள் ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்

           A.R.ரஹ்மானின் முன்னுரையுடன் வெளியாகியுள்ளது. 'ஸ்ப்ரெசதூரா'  என்ற இத்தாலிய வார்த்தையை தன் நண்பனிடம் கற்றதாகவும் , மிகவும் சிக்கலான விடயத்தை மிகவும் எளிதாக செய்து முடிக்க கூடிய விஷயமாக முன் வைத்தல் என்ற அர்த்தமுடைய அந்த வார்த்தை, மணிரத்னத்திற்கு பொருத்தமானது என எழுதியுள்ளார். தன்னுடைய வேலை மிகவும் எளிமையானது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தோற்றத்தை உருவாக்குபவர் என்றும் உண்மையில் அவரது வேலை சுலபமானது அல்ல, அதற்கு பின் கடுமையான உழைப்பு, செய் நேர்த்தி இருக்கிறது என்று ரஹ்மான் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.

மணிரத்தினம் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அல்ல. M.B.A படித்தவர். மூன்று நண்பர்கள் சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அது மிகவும் பிடித்ததாக இருக்க சினிமாவுக்குள் நுழைந்தார்.பல்லவி அனுபல்லவி,உணரு, பகல் நிலவு, இதயக்கோயில் போன்ற ஆரம்ப காலப் படங்களில் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். இதயக்கோயில் படத்தில் இளையராஜாவின் பாட்டை தவிர வேறு எதையும் தான் நினைவு வைத்திருக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார். பல்லவி அனுபல்லவி 1980 இல் எழுதி 1983 இல் வெளியானது. கன்னடத்தில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.அதற்குப் பின் தான் விரும்பியபடி எடுத்த படம் மௌனராகம் எனக் குறிப்பிடுகிறார். 

மௌனராகத்தில் பெண் விவாகரத்து கோருவதால் A சான்றிதழ் வழங்க வேண்டும் , அது வழக்கத்திற்கு மாறான காட்சி என சென்சார் சொன்னதால் அதிலிருந்து அவர்கள் என்ன சொன்னாலும் தான் ஆச்சரியப்படுவதில்லை என மணிரத்னம் கூறியிருப்பது சிரிப்பைத் தந்தாலும் ஒவ்வொரு இயக்குனர்களும் எவ்வளவு திண்டாடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. பிலிப்பைன்ஸ் - அமெரிக்கா இடையிலான Readers digest இல் வந்த ஒரு கட்டுரையே கன்னத்தில் முத்தமிட்டால் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறுகிறார். அது குழந்தையின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். முதலில் குடை என்றே அந்தப் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். குடை என்பது குடும்பம், உறைவிடம் எனப் பொருள் தரக் கூடியது. படத்திலும் குடை  முக்கிய காட்சியில் இடம் பெறுகிறது.அவரது ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனியான தலைப்புகளில் உரையாடல் இடம்பெற்றிருப்பது வாசிப்பதற்கு நன்றாகவும் படங்களை இன்னும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவியாகவும் இருந்தது. அனைத்துப் படங்களையும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும்.

(78) கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் - சு.கி . ஜெயகரன்

சு.கி . ஜெயகரன் எழுதிய இந்த நூல் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று. ஆராய்ந்து நுண்ணிய தகவல்களுடன் இந்த நூலை எழுதியுள்ளார். 
ஹிபாகுஷாக்கள் எனப்படும் அணுக்குண்டு தாக்குதலால் யப்பானில் பாதிக்கபட்டவர்கள் பற்றிய கட்டுரையில் இன்று வரையில் அவர்கள், அவர்களது  சந்ததிகள் அடைந்து வரும் துன்பங்கள் என்பவற்றை வாசிக்கும் போது இரண்டாம் உலகப்போரில் அணுக்குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடு என்பதைத்தவிர  பாடப்புத்தகத்திற்கு அப்பால் பெரிதும் தெரிந்து கொள்ளாமல் இருந்ததையிட்டு குற்ற உணர்வாக இருந்தது. ஒரு தம்பதியினர் 2 வயது பெண் குழந்தையுடன் ஒன்றரை கிலோமீற்றர் தள்ளி இருந்ததால் உயிர் பிழைத்தனர். 12 வயதானபோது  கழுத்திலும் காலைச்சுற்றியும் வீகமும் உடலில் நீலப்புள்ளிகளும் தோன்ற, கதிர் வீச்சால் உண்டான புற்று நோய் எனக்கண்டறியப்பட்டது.அவரின் மீது அக்கறை கொண்ட ஒருவர் 1000 நாரை மாலை (யப்பான் மொழியில் சென்பாசுரு)செய்யும் படி கூறியுள்ளார். நாரை நீண்ட ஆயுளின் சின்னமாக யப்பானில் நம்பப்படுவதால் ஒரிகாமி முறையில் நாரைகள் செய்து மாலையாக கோர்த்தால் பிணியுள்ளவர் குணமடைவார் என நம்பப்படுகிறது. சதாகோ என்ற அச்சிறுமி தானும் தன் போன்ற இளம் ஹிபாகுஷாக்களும் குணமாக வேண்டி காகித நாரைகளை உருவாக்கும் போது 644 ஆவது நாரை செய்து முடித்த அன்று அவர் இறந்தார்.அவரது நினைவிடத்தில் பல சென்பாசுரு குவிந்திருக்கின்றன. தன்னை மிகவும் பாதித்த நினைவுச் சின்னம் அது என எழுதுகிறார்.

அந்தமான் - நிகோபார் தீவுகளில் உள்ள பூர்வ குடிகள், எரிமலை வெடிப்பு ,சாவுப்பள்ளத்தாக்கு, சித்திரக்கதைகளில் காணப்படும் இனவெறி, ஆவுங் சான் சூசி, வங்காரி மாதய் போன்ற சமூகப் போராளிகள் பற்றி பல முக்கிய நிகழ்வுகளை இந்த நூலில் படிக்கலாம்.

(77) இஸ்தான்புல் - ஓரான் பாமுக்

"இஸ்தான்புல் -  ஒரு நகரத்தின் நினைவுகள்" துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் இன் புத்தகம். இது வரையில் அவர் எழுதியவற்றுள்  நாவல் அல்லாத அபுனைவு வகையைச் சேர்ந்த ஒரே ஒரு நூல் இதுவே. ஜி.குப்புசாமி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். பாமுக் தான் பிறந்து வளர்ந்த நகரத்தில் தனது நினைவுகளை அந் நகரின் வரலாற்றுடன் இணைத்து எழுதியுள்ளார். அவரது  சிறு வயது ஞாபங்கள் முதல் அவர் எழுத்தாளராவது என முடிவெடுத்த தருணம் வரை பயணிக்கும் கதையை மிகவும்  ரசிக்கும் படி எழுதியுள்ளார்.

பொதுவாக நான் இந்திய நாவல்கள் தவிர்த்து வேறு நாவல்கள் வாசிப்பதில்லை. இந்திய கலாச்சாரம் நான் மிகவும் அறிந்த, சிறு வயது முதலே படித்த , எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்பதால் இந்திய நாவல்கள் , கட்டுரைகள் விரும்பி வாசிப்பேன். வேற்று நாட்டு நூல்களை முயற்சிப்பது கூட நான் விரும்பாத ஒன்றாக இருந்தது. இணைய யுகத்தில் வாழ்வதால் வாசிப்பிற்கான பல வாசல்களை அதுவே திறந்து வைப்பது இன்றைய காலத்தில் ஒரு வரம். இணையத்தில் எங்கோ பாமுக் பற்றி படித்த‌ நினைவிலேயே நூலகத்தில் இருந்து 'பனி' என்ற அவரது நாவலை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பாதிப்பிலேயே 'இஸ்தான்புல்' என்ற இந்த புத்தகத்தையும் எடுத்து வந்தேன். ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு என்பது கூடுதல் நம்பிக்கையைத் தந்தது. புத்தகம் அவ்வளவு பிடித்துவிட்டது. இதில் மொழிபெயர்ப்பின் பணி முக்கியம் என நினைக்கிறேன். எந்த ஒரு இடத்திலும் வேற்று மொழி நூல் வாசிப்பது போன்ற உணர்வே வரவில்லை. மூலத்தில் கூட இவ்வளவு நன்றாக இருக்குமோ என பல வசனங்களை வாசிக்கும் போது சந்தேகம் வந்தது. 

வாசித்து முடித்த பின் துருக்கி, இஸ்தான்புல், பாஸ்ஃபரஸ் (Bosporus), ஆட்டமன் பேரரசு என இணையத்தில் தேடிப் படித்தேன். அதன் பின் புத்தகம் இன்னும் நெருக்கமாகியது.  பாஸ்ஃபரஸ் நீரிணை பாமுக்கோடு கலந்துவிட்ட ஒன்று. பாஸ்ஃபரஸில் வந்து செல்லும் கப்பல்களை ஜன்னலூடு பார்ப்பது இஸ்தான்புல் வாசிகளின் வேலைகளில் ஒன்று. பொஸ்போரஸ் நீரிணையானது  ஐரோப்பாவையும் ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருக்கிறது. இஸ்தான்புல் நகரானது  பொஸ்போரஸ் கடலால் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இஸ்தான்புல் இரு கண்டங்களில் அமைந்துள்ள  நகரமாக விளங்குகின்றது.இதனால் இஸ்தான்புல் வாசிகளிடம் இருந்து  பொஸ்போரஸ் நீரிணையை பிரித்து பார்க்க முடியாது.சர்வதேசக் கப்பல்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்த நீரிணை உள்ளதால் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 


  உலக வரலாற்றில், நான்கு பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமை இஸ்தான்புல் இற்கு இருக்கிறது.  1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, துருக்கியின் தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.  ரோமப் பேரரசு,  பைசண்டைன் பேரரசு, இலத்தீன் பேரரசு  ஓட்டோமான் பேரரசு ஆகியவற்றிற்கு தலைநகரமாக விளங்கிய நகரின் வீழ்ச்சி எவ்வளவு துயரானது. 


மிகப்பெரிய ஆட்டமன் பேரரசின் வீழ்ச்சியைப் பற்றிய துயரை இந்த நூலைப் படிப்பவர்கள் உணர முடியும். மேலைத்தேய மயமாக்கல் தொடர்பான பிரச்சினைகள் , மொழிச்சீர்திருத்தம், பழைய பாழடைந்த கட்டடங்கள் என இஸ்தான்புல் நகரம் சந்தித்த பிரச்சினைகளை தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.



Sunday, 30 December 2018

(76) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் முக்கிய நாவல்களில் ஒன்று. இதில் வரும் ஹென்றி பாத்திரம் மிகவும் புகழ் பெற்றது. எந்த வித வன்மமோ எதிர்பார்ப்போ இல்லாதவன் ஹென்றி. அன்பு நிறைந்தவன். பாடசாலைக்கு சென்று படிக்கவுமில்லை. தொழிலும் இல்லை. ஆனால் இந்த உலகில் அவனால் மகிழ்ச்சியாக வாழமுடியும். ஒரு இலட்சிய கதாபாத்திரம்.
நான் ஜெயகாந்தனை அவ்வளவாக வாசித்ததில்லை. அடுத்த வருடம் கட்டாயம் சில புத்தகங்களாவது வாசிக்க வேண்டும்.

(75) பனி - ஓரான் பாமுக்

சம காலத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த ஓரான் பாமுக்கின் 'பனி' துருக்கி பற்றிய அரசியல் நாவல். மொழிபெயர்ப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும். ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த அனைத்து புத்தகங்களும்  வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. ஓரான் பாமுக்கின் புத்தகங்களும்  வாசிக்க வேண்டும்.எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் 'பனி' யும் இணைந்து விட்டது. 

Tuesday, 26 December 2017

(74)காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

இலக்கியம், கலை, திரைப்படம், அனுபவம், பொது என்ற வகைகளில் மொத்தமாக‌ 50 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய வாசிப்புக்கு புதிதாக நுழைபவர்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டியாக அமையும். அந்த  வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த புத்தகத்தினூடாக பல முக்கிய புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கிறது. 
வங்காள எழுத்தாளர் போதி சத்வ மைத்ரேய 1980 இல் எழுதிய Jhinuker Peter Mukto என்ற நாவலைப் பற்றியதே முதலாவது கட்டுரையான சிப்பியின் வயிற்றில் முத்து. இந்த நாவலை எஸ். கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாக கொண்டது.
தொடர்ந்து வரும் கட்டுரைகளில் மௌனி, அழகிரிசாமி பற்றியும் எரியும் பனிக்காடு, இடைவெளி ஆகிய நாவல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். இதிகாசங்களை வாசிப்பது எப்படி என்ற கட்டுரை மிக முக்கியமானது. 'சித்திரப் புலி' என்ற comics புத்தகங்கள் பற்றிய கட்டுரையில் தனக்கு மிகவும் பிடித்த comic book ஆன Calvin and hobbes பற்றி எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முக்கியமானவை.