தமிழ் மொழிபெயர்ப்பு - க. நா.சு
புரட்சியைக்(ரஷ்ய) கிண்டல் செய்து எழுதப்பட்ட நாவல். க. நா.சு மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது. மூல நாவலை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது கிடைக்காத இன்பம் க. நா.சு வின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.பல வசனங்களைத் தமிழில் ரசித்து வாசித்து விட்டு, பின் ஆங்கிலத்தில் அவ்வசனங்களை வாசிக்கும் போது தமிழ் மொழிபெயர்ப்பின் தரத்தை உணர முடிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், நாவலை உயிர்ப்புடன் தமிழில் தந்திருக்கும் க. நா.சு உண்மையிலேயே தமிழுக்கு கிடைத்த ஒரு கொடை தான். காவ்யா பதிப்பகம் அவரது படைப்புகளைத் தொகுத்துள்ளது. அவரது விமர்சனங்கள் மூலமே நான் பல நாவல்களை அறிந்திருக்கிறேன்.
திரு. ஜோன்ஸ் இன் பண்ணையிலேயே புரட்சி நடக்கிறது. கிழட்டுத்தளபதி என மற்ற மிருகங்களால் அழைக்கப்படும் பன்றி ஒரு நாள் புரட்சி பற்றி தான் கண்ட கனவை மற்ற விலங்குகளுக்கு விளக்கிவிட்டு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது. புரட்சி எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே ஒரு நாள் புரட்சியும் நடந்து விடுகிறது. நெப்போலியன், ஸ்னோபால் ஆகிய இரு பன்றியும் தான் ஏனைய விலங்குகளை வழி நடத்துகிறது. குதிரைகளான பாக்சர், க்ளோவர், கழுதை பெஞ்சமின், Mollie என்ற தற்பெருமையுடைய குதிரை, ஸ்குவீலர் என்ற பேச்சாற்றல் மிக்க பன்றி(இது கறுப்பையே வெள்ளை என்று தன் பேச்சால் நிரூபித்து விடும்) மோசஸ் என்ற காகம் , கோழிகள் , பூனைகள் என பண்ணையின் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை.
புரட்சியின் பின் ஏழு விதிகளை உருவாக்கும் புரட்சிக்கு தலைமை வகிக்கும் பன்றி நெப்போலியன் இறுதியில் ஒவ்வொன்றாக விதிகளை மீறி வருவதை அழகாக நாவலில் விபரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 'எல்லா மிருகங்களும் சமம்' என்ற விதியை ' எல்லா மிருகங்களும் சமனானவை ஆனால் சில மிருகங்கள் வேறு சில மிருகங்களை விட அதிக சமனானவை' என மாற்றிவிட்டது. ஸ்னோபால் பன்றிக்கு துரோகி பட்டம் கொடுத்து பண்ணையை விட்டுத் துரத்திவிடும் நெப்போலியன் பின்னர் நடக்கும் அநீதி முழுவதையும் ஸ்னோபால் தலையிலேயே கட்டிவிட்டுவிடும். இறுதியில் புரட்சியால் எந்த பலனும் கிடைப்பதில்லை. முன்னர் இருந்த நிலையை விட கீழ் நிலைக்கே உழைப்பாளர்கள் தள்ளப்படுவார்கள்,புரட்சியாளர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வசனம் பேசி, நியாயப்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை நாவல் சொல்கிறது.அந்தப் பண்ணையில் நடப்பவற்றை இன்று கூட நாம் அரசியலில், நமது தொழில் புரியும் இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment