பாரதிமணி ஐயாவின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகத்தைப் பற்றிய ஒரு சில விமர்சனங்கள் வாசித்த நாட்களில் இருந்து அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் கடை செல்லும் போது தேடுவது உண்டு. இலங்கையில் நினைத்த புத்தகத்தைப் பெறுவது கடினம். பின்னர் அப்புத்தகம் இப்போது விற்பனையில் இல்லை என இணையம் மூலம் தற்செயலாக தெரிந்து கொண்டேன். சமீபமாக 'புள்ளிகள் கோடுகள் கோலங்கள்' என்ற பாரதிமணி ஐயாவின் புத்தக விமர்சனம் காண நேர்ந்தது. அது அவர் இதுவரை எழுதிய கட்டுரைகள், அவரைப்பற்றி பிறர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுப்பு என அறிந்து இணையம் மூலமாக (உடுமலை) பெற்றுக்கொண்டேன். இதுவே நான் இணையம் மூலம் இந்தியாவில் இருந்து வாங்கிய முதல்ப் புத்தகம். பத்து நாட்களில் புத்தகம் வரும் என்று சொன்னார்கள். சொன்னது போலவே வந்தடைந்த புத்தகத்தைப் பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம். (தற்போது ஜெயமோகனின் 'அறம்' புத்தகமும் order பண்ணி உள்ளேன். நெடு நாளாக தேடிக் கிடைக்காத மற்றைய புத்தகம்.)
சுவையான எழுத்து. தனது நீண்ட கால அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். டெல்லி வாழ்க்கை , நாடக அனுபவங்கள், சிறு வயது நினைவுகள், பல பெரியவர்களுடன் பழகிய நினைவுகள் போன்றவற்றை தன்னுடைய பாணியில் எழுதியுள்ளார். நேரு, அன்னை தெரேசா போன்றவர்களை சந்தித்த அனுபவங்களையும் எழுதியுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய கட்டுரை பல புதிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய கட்டுரை. தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு என்ற கட்டுரை அவர் ஒரு சிறந்த மனிதர் என்று உணர வைக்கிறது. அமிதாப் பச்சனிடம் கா. நா.சு கேட்ட கேள்வி என்ற கட்டுரையை நான் விரும்பி படித்தேன். புத்தகம் முடிந்துவிட்டதே என்று எண்ண வைக்கக்கூடிய எழுத்து இவருடையது. மீண்டும் ரசித்து வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment