என் ஜன்னலுக்கு வெளியே -மாலன் இது ஒரு கட்டுரை தொகுப்பு. மாலன் எழுதி வெவ்வேறு இதழ்களில் வெளியானவை.அரசியல், சமூகம்,இலக்கியம்,தமிழ்,இரங்கல் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுளன. இலக்கியம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றவையுடன் ஒப்பிடும் பொழுது அதிக சுவாரசியமாக இருக்கிறது. யானைக்கு இறக்கை வெட்டப்பட்ட கதையை சொல்லும் " கால் இல்லாத கதைகள்" நடிகர் நாகேஷ் பற்றிய "வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல" போன்றவற்றை கூறலாம். அலெக்சாண்டர் நண்பன் அரிஸ்டிப்பஸ் மூலம் டையோஜெனீஸ் இற்கு கடிதம் எழுதிய ஒரு நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். டையோஜெனீஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் பகுதி கொஞ்சம் bore ஆக தான் இருந்தது. இந்த வாரிசு அரசியல், காவிரி பிரச்சினை என்று ஏற்கனவே அடிக்கடி வாசிக்கப்பட்ட விடயமாக இருந்ததாலோ தெரியவில்லை.நான் கடைசியில் இருந்து முன் நோக்கி தான் இந்த புத்தகத்தை வாசித்தேன். அப்படி வாசிப்பது இது தான் முதல் தடவை. முதல் சில கட்டுரைகள் வாசிக்க பெரிதாக நன்றாக இருக்கவில்லை. அதனால் நேராக இலக்கிய பகுதிக்கு தாண்டி, அப்படியே பின் முன்னாக நகர்ந்து கடைசியாக அரசியல் பகுதிக்கு வந்தேன்.
அரசியல் பகுதியில் குறிப்பாக சொல்வதென்றால் டொக்டர் வினாயக்(Binayak Sen)பற்றிய "தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?" என்ற கட்டுரை. வங்காளியான வினாயக் பெரிய இடங்களில் கிடைத்த வேலைகளை விட்டு விட்டு, மருத்துவ வசதி இல்லாத இடம் ஒன்றில் சேவை செய்தவர். அம் மக்களுக்கும் நிறைய விதங்களில் உதவியவர். கனிம வளம் நிறைந்த பர்சார் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை அகற்றி அந்த நிலங்களை நிறுவனங்களுக்கு கொடுத்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.இது போன்ற வேறு சில நடவடிக்கைகளையும் மக்களுக்காக செய்திருக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.இது 2008 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்று தேடிப் பார்க்க வேண்டும்.
இது விமர்சனம் அல்ல. விஷ்ணுபுரம் பற்றிய என் அனுபவம் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன் வாசிக்க முயற்சி செய்து எதுவும் விளங்காததால் விட்டுவிட்டேன். இணையத்தில் அதிகமாக கதைக்கப்படும் புத்தகமாக இருப்பதால் இம்முறை எப்படியாவது வாசிப்பது என்ற முடிவுடன் வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்க முதல் விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரைகள் சில வாசித்து ஒரு பயிற்சி செய்து கொண்டேன்.
நாவல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தென் பகுதியில் உள்ள ஒரு ஊர் விஷ்ணுபுரம். பல வருடங்களுக்கு முன், ஞான சபையில் விவாதத்தில் வென்று அக்னி தத்தன் என்பவன் வைதிக மரபை நிலை நாட்டுகிறான். அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதில் வென்று பௌத்தத்தை நிலை நாட்டுகிறார் அஜிதர். அஜிதரின் கதை இரண்டாம் பாகத்தில் வருகிறது. இரண்டாம் பகுதி சைவர், பௌத்தர், திபேத்தியர்களுடனான வாதங்களாக செல்கிறது. தர்க்கம் நிறைந்த இப்பகுதி வாசிக்க கடினமான பகுதி. சிலர் இப்பகுதி தான் சுவாரசியமானது என்கிறார்கள்.
நாவல் நிறைய கதை மாந்தர்களைக் கொண்டது . முதற்பகுதியில் வாழ்ந்த கதாபாத்திரங்கள் (சங்கர்ஷணன், திருவடி, சித்திரை ) மூன்றாவது பகுதியிலும் வருகிறார்கள், மக்களின் கதைகளில் வாழ்கிறவர்களாக. மூன்றாவது பகுதியில் விஷ்ணுபுரம் சிதிலமடைந்த நகராக உள்ளது. வறுமை நிலவுகிறது.மக்கள் இப்படி ஒரு பிரமாண்ட நகரம் உண்மையில் இருந்ததா? இல்லை காவியம் மட்டும் தானா? என்று கதைத்துக் கொள்கிறார்கள். இறுதியில் பிரளயம் ஏற்பட்டு நகர் முற்றிலும் அழிந்துவிடுகிறது.
முதல் வாசிப்பில் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறு முறை வாசித்தால் ஒரு வேளை கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை வாசிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனக்கு நாவல் பெரிதாக சிலாகித்து சொல்லும்படி இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் வாசித்தது ஒரு சிறந்த வாசிப்பு பயிற்சியாக இருந்தது என்பது மட்டும் உண்மை.