குலசேகர ஆழ்வார் பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி என அழைக்கப்படுகிறது. 4000 திவ்ய பிரபந்தத்தில் 647 ஆவது பாடல் தொடக்கம் 751 ஆவது பாடல் வரை இவர் பாடிய 105 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
எனக்கு பிடித்த பல பிரபந்த பாடல்கள் குலசேகர ஆழ்வார் பாடியவையாகவே இருக்கின்றன. அவன் அடியார்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் அவன் மேல் உள்ள அன்பு குறைவதில்லை.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!
என்று குலசேகர ஆழ்வார் பாடுகின்றார். இறைவன் மேல் அவர் கொண்ட அன்புக்கு இந்த ஒரு பாட்டே போதும்.
"மன்னு புகழ் கோசலை தன்" எனத் தொடங்கும் ராமன் மீதான தாலாட்டுப் பாடலும் இவர் பாடியதே.இவை கண்ணபுரத்து இறைவனை நோக்கிப்பாடப்பட்டவை. இப்பாடல்களில் சிலவற்றை தெரிவு செய்து சஞ்சய் சுப்ரமணியம் ராகமாலிகையாகப் பாடியதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
" செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே" என்ற திருமலையைப் பாடிய 10 பாடல்களும் இவரால் பாடப்பட்டவையே.இப்பாடல்கள் நான்காம் திருமொழியில் வகுக்கப்பட்டுள்ளன. திருவேங்கடப் பெருமானை பார்த்துக் கொண்டே இருப்பதற்காக திருமலையில் மீனாக, குருகாக, ஆறாக ,படியாக என்று பாடி இறுதியாக திருமலை மேல் ஏதேனும் ஒன்றாக பிறப்பேன் என வேண்டுகிறார். திருவேங்கடப் பெருமானின் கீர்த்தனைகளுக்கு முன் விருத்தமாக பெரும்பாலும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. படியாக இருந்து உன் பவள வாய் காண்பேனே என வேங்கப் பெருமானைப் பாடியதால் வேங்கடப் படி குலசேகரப் படி என அழைக்கப்படுகிறது.
அரங்கன் மேல் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமொழிகளிலும் வேங்கடவன் மேல் பாடியவை நான்காம் திருமொழியாகவும் வித்துவக்கோடு என்ற தலத்தில் பாடிய பாடல்கள் ஐந்தாம் திருமொழியாகவும் திருக்கண்ணபுரம் மீது பாடிய இராமன் மீதான தாலாட்டு எட்டாம் திருமொழியாகவும் சிதம்பர திருச்சித்திர கூடப் பெருமானை இராமனாக நினைத்து இராமன் மீது பாடிய பாடல்கள் பத்தாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. முழு இராமாயணத்தையுமே சுருக்கமாக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அயோத்தி, திருவாழித்திரு நகரி, திருப்பாற்கடல் ஆகியவை மீதும் பாடல்களைப் பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்களத்தில் சேரர் அரச குலத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமாயணம் கேட்பதில் சிறுவயது முதலே ஆர்வமானவர். இராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு இராமருக்கு துணையாக போருக்கு புறப்பட தயாரானவர். அரண்மனையில் இறைவன் அடியார் மீது போலி திருட்டுப்பட்ட சுமத்தியதால் மனம் வருந்தி, தனது பதவியை மகனிடம் கொடுத்துவிட்டு திருமாலை தரிசிக்க துறவறம் பூண்டார்.திருமாலின் மார்பில் இருக்கும் கௌஸ்துப அம்சம் பொருந்தியவராக கருதப்படுகிறார்.இவர் தனது மகளை அரங்கனுக்கு மணம் முடித்து கொடுத்து அரங்கனுக்கு மாமனாக விளங்குகின்றார்.
x
No comments:
Post a Comment