எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளத்தில் எழுதிய
இரண்டாம் இடம் என்ற நாவலை குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.மகாபாரதக்கதையின் மறுவாசிப்பே இந்த நாவல். கதை பீமனின் பார்வையில் சொல்லப்படுகிறது.
முதன் முதலில் மறு ஆக்க நாவல் வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. நாம் கதாபாத்திரங்கள் மீது வைத்திருக்கும் புனித விம்பங்கள் எல்லாம் ஆட்டம் கண்டுவிடும். இதற்கு முன்னர் மறுவாசிப்புகளான உபபாண்டவம், யயாதி வாசித்திருக்கிறேன். அதனால் ஓரளவு பயிற்சி உண்டு. புனித தன்மையை நீக்கினால் தான் பாரத கதையின் பாத்திரப்படைப்புகளின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளலாம்.
பாண்டவர்கள் இறுதியில் சொர்க்கதிற்கு இமயம் வழியாக நடக்கிறார்கள். முதலில் தருமர், பின் சகோதரர்கள் கடைசியாக திரௌபதி.
ஒரு கட்டத்தில் திரௌபதி மயங்கி விழுகிறாள். பீமனை தவிர யாருமே அவளுக்காக காத்திருக்கவில்லை.இரண்டாம் இடம் கதை இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.பீமன் நடந்த சம்பவங்களை நினைத்து பார்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.
பாண்டவர்களுள் திரௌபதியிடம் அதிக அன்பு , அக்கறை கொண்டவன் பீமன் தான். மலர் பறித்து கொடுத்தல், கீசக வதம், திரௌபதிக்காக சபதம் எடுத்தல் போன்றவை போதும் அதை உணர. வீரத்திலும் பீமன் தான் உயர்ந்து நிற்கிறான். கௌரவ படைகளை பெருமளவு அழித்ததுடன் முக்கியவர்களான துரியோதனன் , துச்சாதனன் பீமனால் தான் கொல்லப்படுகிறார்கள்.
போர் முடிந்த பின் தருமன், பீமனை அரசனாகுமாறு சொல்கிறான். ஆனால் பீமன் அரசன் என்றால் அவன் மனைவி பலந்தரை தான் பட்டத்தரசியாவாள், தனது நிலை என்ன என்று கவலையடைகிறாள் திரௌபதி. அத்துடன் தருமன் அனைத்தையும் துறந்து காடு சென்றால் தானும் போகவேண்டி வருமே. விதுரன், குந்தி போன்றவர்களும் தருமன் தான் அரசாள வேண்டும் என்று கூறுகிறார்கள். பீமனின் அரசனாகும் குறுகிய கால ஆசையும் முடிந்து விடுகிறது. அதனால் அவனது இடம் எப்போதும் இரண்டாம் இடம் தான்.
அங்கு எப்போதுமே பெண்கள் கர்ப்பத்தை சுமக்கும் கருவி தான். திரௌபதி அளவுக்கு இது வரை யாராவது துன்பம் அனுபவித்திருப்பார்களா? ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு புருஷன். குழந்தை பிறந்தவுடன் அவள் சகோதரனிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். யுத்த இறுதியில் அவள் பிள்ளைகள் வஞ்சகமாக கொல்லப்படும் போது கூட யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. தருமனின் சூதாட்டத்தால் சபையில் அவமானம். காட்டுக்கு சென்றால் அங்கும் பிரச்சனை. மொத்தத்தில் திருமணம் செய்ததில் இருந்து சாகும் வரை துன்பம் தான்.
குந்தி ஒருவித ராஜதந்திரத்துடன் தான் செயற்படுவாள். பாண்டவர்கள் வந்தது ஒரு பெண்ணுடன் என்று தெரிந்தும் ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வது எவ்வளவு கபடத்தனம். பீமனுக்கு தாய் எப்போது புரியாத புதிராக இருக்கிறார். கர்ணன் தேரோட்டிக்கு பிறந்த மகன், தருமன் விதுரருக்கு , அப்படியென்றால் தன் தந்தை யார் என அறிய முயல்கிறான். கடைசியில் தான் ஒரு காட்டுவாசியின் மகன் தான் என அறிகிறான்.
அபிமன்யுவுக்கும் பீமனுக்கும் உள்ள நெருக்கம் சொல்லப்படுகிறது. அபிமன்யு இறந்த போது கிருஷ்ணன் கவலையடைகிறான். இரத்த பாசம் என்று வரும்(அபிமன்யு கிருஷ்ணனின் சகோதரியின் மகன்) போது கீதைக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறான். பீமன் மகன் கடோத்கஜன் இறந்த போது அதை கிருஷ்ணன் கொண்டாடுகிறான். அர்ச்சுனனை கொல்ல வைத்திருந்த ஆயுத்தத்தை கர்ணன் கடோத்கஜன் மீது பாவித்து விட்டதால் அர்ச்சுனன் தப்பித்தான். கடோத்கஜன் அரக்கன் தானே அவன் இறப்புக்காக கவலை கொள்ளத்தேவையில்லை என்று சொல்கிறான். இது பீமனை கவலையடையச் செய்கிறது.யுதிஷ்ரனை காப்பாற்ற வேண்டும் என கர்ணனுக்கு எதிரில் தன் மகனை அனுப்பியது கிருஷ்ணனின் சூழ்ச்சியென எண்ணுகிறான். அன்றைய நாளில் யுத்த தர்மத்தை மீறி நடந்த இரவு யுத்தத்தில் தான் கடோத்கஜன் கொல்லப்படுகிறான். இறக்கும் போது கூட கௌரவ படைக்கு தன்னால் முடிந்த இழப்பை ஏற்படுத்திவிட்டே இறக்கிறான். அப்படிப்பட்ட வீரனுக்கு அவன் ஷத்திரியன் இல்லை என்பதால் எந்த மரியாதையும் செய்யவில்லை.
கிருஷ்ணன் பாண்டவருடன் சேர்ந்ததே தன் யாதவ படைக்கு பலம் சேர்க்க தான் என்கிறார் ஆசிரியர். திரௌபதிக்கு சேலை கொடுத்தது எல்லாம் பாரதத்தில் இல்லை . அது இடைச்செருகல் என்கிறார். அதை ஏற்றுக்கொள்ள தான் மனம் விரும்பவில்லை. "பாஞ்சாலி புகழ் காக்க சேலை கொடுத்தான்" என்று பரவசத்துடன் பாடி வந்த எனக்கு, இப்படி ஒரு சம்பவமே பாரத கதையில் இல்லை என்றால் எப்படி இருக்கும். இந்நாவலின் படி கிருஷ்ணன் ஒரு தந்திரவாதி, கபடதாரி...மகாபாரதத்தில் அவனது தந்திரங்கள் ரசிக்கும்படியாக இருக்கும். இந் நாவலை வாசித்தால் "இவ்வளவு கெட்டவனா நீ" என்று கேட்க தோன்றும். கிருஷ்ணனை பற்றி ஏராளமான ரசிக்கும்படியான கதைகள் உண்டு. அவை எதுவுமே மகாபாரதத்தில் இல்லை. அது வேறு ஒரு கவியின் கற்பனை என்கிறார்.ஆசிரியர் சொல்வது போல் கிருஷ்ணன் ஒரு சாதாரண அரசனாகவும் சூழ்ச்சி நிறைந்தவனாகவும் இருந்தவன் எனில் எவ்வாறு இத்தனை பரவசமூட்டும் கதைகள் அவனைப்பற்றி உருவாகின.ஒரு வேளை 23ஆம் புலிகேசி படத்தில் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பது போல, கிருஷ்ணனும் காசு கொடுத்து தன்னை பாட வைத்திருப்பானோ. :)))
மகாபாரதத்தில் கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவன் தான் எங்கும் நிறந்து நிற்கிறான். யுத்தம் முழுவதும் அவனாலேயே வடிவமைக்கப்படிருக்கிறது. அவன் நினைத்தது போல நடக்கிறது. இந்த நாவல் நிச்சயமாக வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தந்தாலும் கிருஷ்ணனை பொறுத்தவரையில், பாஞ்சாலிக்கு சேலை சேலையாக வாரிக்கொடுத்த, அஸ்வத்தாமன் பாண்டவ வம்சத்தையே நாசம் செய்வேன் என சபதம் எடுத்து விட்ட பிரம்மாஸ்திரம் உத்தரையின் வயிற்றில் உள்ள குழந்தையை அழிக்க சென்ற போது காப்பாற்றிய அந்த கிருஷ்ணன் உள்ள கதையே என்னுடன் கூடுதல் நெருக்கமாக இருக்கிறது.
தமிழருக்கு மகாபாரதத்தில் நெருக்கமானவன் கர்ணன் என்பார்கள். அப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒவ்வொரு கதாபாத்திரம் நெருக்கமாக இருக்கலாம். அப்படி எனில் கிருஷ்ணனை தெய்வமாக வழிபடும் மாநிலத்தில் கிருஷ்ணன் நெருக்கமானவனாக இருப்பான். அம் மாநிலத்தவர்கள் மகாபாரதக்கதையை மறுவாசிப்பு செய்து எழுதியிருந்தால் வாசித்து பார்க்க வேண்டும். இந்திரா பார்த்தசாரதி எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா" ஓரளவு அவனை பற்றி அலசுகிறது.அத்துடன் பாரத கதையை வைத்து எழுதப்பட்ட பருவம் , இனி நான் உறங்கட்டும் போன்றவற்றை வாசிக்க வேண்டும்.
கிருஷ்ணன் என்றோர் மானுடன் படிக்கவும் இதுவும் சிறந்த மீள்வசிப்பு புத்தகம்..உங்கள் நூல் அறிமுகம் நன்று
ReplyDeleteநன்றி. நீங்கள் குறிப்பிட்ட "கிருஷ்ணன் என்றோர் மானுடன்" புத்தகம் நான் இது வரை வாசிக்கவில்லை. நிச்சயம் வாசிக்கிறேன்.
Delete