தமிழில் பயணக் கட்டுரைகளை சிறப்பாக
எழுதுபவர்களாக எஸ்.ரா, ஜெயமோகனை சொல்லலாம். ஜெயமோகன் அவரது இணையத்தளத்தில் எழுதியுள்ள பயணக்கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதே போல எஸ். ராமகிருஷ்ணனும் பயணம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார். பயணத்தில் மிகுந்த விருப்பம் உடையவர். அவரது தேசாந்த்திரி அவ்வாறான ஒரு புத்தகம். அது மட்டும் அல்லாது அவரது கட்டுரைகளில் அவரது பயண அனுபவங்களை யும் பல வேளைகளில் இணைத்திருப்பார். அவரது பயண அனுபவங்களை கூறும் இன்னொரு புத்தகம் "இலக்கற்ற பயணி" .
கனடாவில் ஒன்டாரியோ, சிம்கோ ஏரிகளையும் நயகரா நீர்வீழ்ச்சியையும் பார்த்த அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். தனியாக பயண அனுபவங்களை மட்டும் எழுதாமல் அதனுடன் தொடர்பான கதைகள், சம்பவங்களை எழுதும் போது அக்கட்டுரைகள் இன்னும் அழகுறுகின்றன. திருக்கோகர்ணத்து ரதி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் முக்கிய ரதி, மன்மதன் சிலைகளைப் பற்றி எழுதியுள்ளார். நானும் இந்தியக்கோயில்களில் ரதி மன்மதன் சிலைகளைப் பார்த்திருந்தாலும் எஸ். ராமகிருஷ்ணனைப் போல இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பார்க்கவில்லை. இந்த புத்தகம் வாசித்த பின் இனி நான் பார்க்கப் போகும் சிலைகளை அணுகும் முறை நிச்சயமாக வேறாகத்தான் இருக்கும்.
போர்ஹே சொற்பொழிவாற்றிய இடத்திற்கு சென்றதையும் ,ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே விசேட அரங்கு அமைத்து நடாத்தப்படும் அவரது நாடகத்தை கனடாவில் பார்த்ததையும் பற்றிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவுக்கு சிலப்பதிகாரத்தில் நிறைய ஈடுபாடு இருக்கிறது .கண்ணகி நடந்த பாதையில் நடந்த அனுபவத்தை "கொற்கையில் கடல் இல்லை" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். கபிலர் , மருதனார் பற்றிய கட்டுரை அருமையான ஒன்று. அடுத்த தடவை இந்தியா போகும் போது கபிலர் குன்று பார்க்க வேண்டும்.
பழையகாலத்தில் தமிழ் மரபில் இருந்த நவகண்டம் என்ற முறை பற்றி ஒரு கட்டுரை உள்ளது. நவகண்டம் என்பது தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் நிகழ்வு ஆகும். ஜெயமோகனும் இது பற்றி எழுதியுள்ளார்.
தனுஷ்கோடி , கோடைக்கானல் , ஸ்ரீரங்கப்பட்டின ஆறு, தயா ஆறு, ஹம்பி பற்றிய கட்டுரைகளும் வாசிக்க இன்பம் தருவன. கூட்ஸ் வண்டிப் பயண அனுபவமும் லொறியில் (3000 km ) பயணம் செய்த அனுபவங்களும் நாமும் அவருடன் கூடவே பயணம் செய்த அனுபவத்தை தருகின்றன. மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment