Sunday, 25 June 2017

(70)பனிமனிதன்- ஜெயமோகன்

பனிமனிதன் சிறுவர்களுக்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட நாவல். பெரியவர்களுக்கும் ஏற்றது. இயற்கை, புத்தமதம், சாகசம் பலதும் நிறைந்து கற்பனைக்கு இடம் கொடுத்து எழுதப்பட்ட நாவல்.
இமையமலையில் அவதானிக்கப்பட்ட மிகப் பெரிய காலடித்தடம் தொடர்பாக ஆராயச் செல்லும் இராணுவ வீரன் பாண்டியன், Doctor திவாகர் மற்றும் இமையமலையை இருப்பிடமாகக் கொண்ட பௌத்த மதத்தை பின்பற்றும் கிம், மூவரும் காலடித்தடத்துக்கு உரிய பனிமனிதனைத் தேடிச் செல்கிறார்கள். இமையமலைப் பனிப் பகுதியில் அவர்களது பயணம் ஒரு சாகசப் பயணமாக இருக்கிறது.
பனிமனிதன் வாழும் பகுதி அவதார் படத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.பனிமனிதன் 2001 இல் எழுதப்பட்டது. அவதார் திரைப்படம் 2009 இல் வெளியானது. அவதார் படம் வெளியாக பல வருடங்கள் முன்னரே எழுதப்பட்ட பனிமனிதன் கதையில் அவதாரை மிஞ்சும் கற்பனை மிருகங்களை உருவாக்கி இருக்கிறார் ஜெயமோகன். சீனாவின் டிராகன், கோயில் சிற்பங்களில் காணப்படும் யாளி உட்பட பல கற்பனை விலங்குகள் பிரமிக்க வைக்கின்றன.பனிமனிதர்களும் அவதார் பட வேற்றுக் கிரக மனிதர்களை நினைவூட்டுகின்றனர்.

அனைத்து தகவல்களுக்கும் விஞ்ஞான, மனவியல் ரீதியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.காளிதாசரின் ரகுவம்சம் தொடர்பான தகவலில் இமையமலையில் ஒரு தாவரம் இரவில் விள‌க்கு போல ஒளி வீசியதாகவும் அந்த ஒளியில் ரகுவின் யானைகளின் சங்கிலிகள் மின்னியதாகவும் ஒரு குறிப்பு உள்ளதாக எழுதியுள்ளார். காளிதாசர் பிறபகுதிகளைப் பற்றிக் கூறியவை சரியாக இருப்பதால் அப்படி ஒரு தாவரம் இருந்திருக்கக் கூடும் எனக் குறிப்பிடுகின்றார்.

திபெத்திய லமாய் பற்றிய தகவல்கள், திபெத்திய மக்களின் ஆயுட்காலம், அவர்கள் புதிய தலைவரைத் தெரிந்து கொள்ளும் முறை என்பன திபெத்திய பௌத்தம் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலை உருவாக்கி விட்டது.

(69) ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி

கு. அழகிரிசாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு. கு. அழகிரிசாமியின் எழுத்துக்கள் அழகுணர்வு உடையவை.
ராஜா வந்திருக்கிறார் என்ற சிறுகதையை முக்கிய கதைகளில் ஒன்றாக சொல்வார்கள்.இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளுமே சிறப்பானவை.
 'அன்பளிப்பு' என்ற சிறுகதை மனதை நெகிழ வைக்கக்கூடியது. புத்தகங்களின் காரணமாக பக்கத்துவீட்டுப் பிள்ளைகள் ஒரு இளைஞனுடன் அன்பாகப் பழகுகிறார்கள்.அவர்களில் சாரங்கன் என்ற சிறுவனை மையமாக வைத்து நகரும் கதையில், அந்த இளைஞன் அறியாமல் செய்யும் புறக்கணிப்பு அச்சிறுவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எளிய நடையில் வாசிப்பவர்கள் மனதைத் தொடுமாறு  எழுதியிருக்கிறார்.

அனைத்துக் கதைகளுமே அருமை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை புராணப் பின்னணியில் எழுதப்பட்ட 'வெந்தழலால் வேகாது' என்ற கதை. இதற்கு திருவிளையாடல் தருமி கதை தெரிந்து இருக்க வேண்டும். நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த கதை தற்கால அரசியலையும் நகையாடுவது போலவே இருக்கிறது. தமிழ்ச் சங்கத்திற்கு சங்கப்பலகை செய்து தருமாறு சுந்தரரிடம் (மீனாஷி சுந்தரேஷ்வரர்) புலவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். அதன் பின் சங்க விடயங்களில் எல்லாம் சுந்தரர் தலையிடத் தொடங்குகிறார். சிறப்பான கதை.

Saturday, 10 June 2017

(68)மரங்கள் - நினைவிலும் புனைவிலும்

மதுமிதா தொகுத்துள்ள இந்த நூலில் நஞ்சில்நாடன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம், பாவண்ணன், பிரபஞ்சன் உட்பட பல எழுத்தாளர்கள் மரங்கள் பற்றிய தமது நினைவுகளை எழுதியுள்ளனர். Apartment வாழ்க்கையுடன் ஒன்றிப்போன நகர வாழ்க்கையில் சாத்தியமற்ற மரங்களை எல்லோரும் தமது இளம்பிராய கிராமிய வாழ்க்கையின் எஞ்சிய நினைவுகளுடன் மீட்டிப் பார்க்கத் தவறுவது இல்லை. இந்த நூலில் எழுதப்பட்ட கட்டுரைகள், அவற்றை எழுதியவர்களால் மறக்க முடியாத மரங்களின் நினைவுகளை சொல்கின்றன.

Thursday, 8 June 2017

(67) இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு(தென்னிந்திய மொழிகள்) - சிவசங்கரி

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற நூல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதல்ப் பாகமான இந்தப் புத்தகத்தில் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கிய சில‌ எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களைப் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அவர்களது பேட்டி முடிவில் அவ் எழுத்தாளர்களது படைப்பு ஒன்றும் மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்ள ஒரு ஆரம்ப புள்ளியாக அது அமையும். இந்தியா முழுவதும் பயணித்து பேட்டியெடுத்துள்ள சிவசங்கரியின் பணி மிகவும் முக்கியமானது.முக்கிய எழுத்தாளர்களுடன் சந்தித்து உரையாடக் கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பும் இல்லை.

முதலில் மலையாள இலக்கிய அறிமுகத்துடன் புத்தகம் தொடங்குகிறது. கேரளாவைப் பற்றிய அறிமுகக் கட்டுரை கேரளக் கிராமங்களை அழகாக அறிமுகம் செய்கிறது.இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப் பெற்றவர்கள் மட்டுமல்ல இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பவர்களும் கூட. 

முதலில் எம்.டி. வாசுதேவன் நாயரின் பேட்டி. மலையாள இலக்கிய உலகை அவர் அறிமுகம் செய்கிறார். மலையாள இலக்கிய உலகின் முக்கியமானவரான துஞ்சத்து எழுத்தச்சன் ராமாயணம், மகாபாரதம், பாகவதத்தை மலையாள மொழியில் எழுதி அது வரையில் இருந்த சமஸ்கிருத ஆதிக்கத்தைக் குறைத்து வைக்கிறார் எனக் கூறும் எம்.டி, ஆரம்பகால மலையாள இலக்கியங்கள் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகிறார். குஞ்சிராமன் நாயர் எழுதிய வாஸனவிக்ருதி மலையாள மொழியின் முதல் சிறுகதை எனவும் சந்துமேனன் எழுதிய இந்துலேகா முதல் நாவல் எனவும் குறிப்பிடுகிறார்.தனது ஊரான கூடலூரினூடாக ஓடும் பரதப்புழா ஆற்றை அதிகமாக நேசிப்பவராக இருக்கிறார்.

அடுத்து கமலாதஸ் இன் பேட்டி.மூன்று மொழிகளைப் பேசி இரண்டில் எழுதி ஒன்றில் கனவு காண்பவளாக தன்னைக் கூறும் கமலாதாஸ் கவிதை, கதை என்பவற்றால் புகழ் பெற்றார். பாராட்டுக்களையும் அதே நேரத்தில் பலரின் வசைகளையும் பெற்றுக் கொண்டவர்.அடுத்து தகழி சிவசங்கரன் பிள்ளை. இவர் தமிழ் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.பேட்டியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள‌  வெள்ளம் என்ற சிறுகதை முக்கியமானது. அடுத்து மலையாள இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமான ஒருவராக நினைவுகூரப்படும் வைக்கம் முகமது பஷீர் பற்றிய அ
றிமுகத்துடன் அவரது பேட்டி. இவரது பாத்திமாவின் ஆடு, பால்யகால சகி போன்ற நாவல்கள் முக்கியமானவை. சமூக சேவகியும் கவிதாயினியுமான சுகதகுமாரி, பாண்டவபுரம் என்ற நூலுக்காக கேரள சாகித்ய அக்கடமி விருது பெற்ற சேது மற்றும் நவீன கவிதை மூலம் புகழ் பெற்ற பாலச்சந்திரன் சுள்ளிக்காட் என்பவர்களது பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

அடுத்து கர்நாடக மாநிலம் பற்றிய சிறிய அறிமுகத்துடன் கன்னட இலக்கிய ஆளுமைகளின் பேட்டி இடம்பெற்றுள்ளன.மைசூர், ஹம்பி, துங்கபத்ரா நதி, கொல்லூர் மூகம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணர் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி போன்றவற்றால் புகழ் பெற்ற மாநிலம் கர்நாடகா. முதலில் ஸம்ஸ்காரா நாவலின் ஆசிரியரான யூ.ஆர். அனந்தமூர்த்தியின் பேட்டியும் தொடர்ந்து அவரது 'மயில்கள்' சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.சிவராம் கரந்த்,  'பர்வ' (மகாபாரதத்தின் புது ஆக்கம்) என்ற நாவலின் ஆசிரியர் பைரப்பா,தேவநூரு மஹாதேவா, சதுரங்க, எல்.எஸ்.சேஷகிரிராவ் போன்றவர்களின் அறிமுகம் கிடைக்கிறது.

அடுத்து ஆந்திர தேசத்தின் தெலுங்கு இலக்கியம். தெலுங்கில் கவிஞர்களுக்கு உரை நடை ஆசிரியர்களை விட மரியாதை அதிகம் என்பது அந்த நில எழுத்தாளர்களின் பேட்டிகளை வாசிக்கும் போது தெரிகிறது.  ஸி. நாரயண ரெட்டி , வாஸிரெட்டி சீதாதேவி,ஆருத்ரா, ராவூரி பரத்வாஜா, மாலதி செந்தூர் , சேஷேந்திர சர்மா ஆகியோர் தெலுங்கு இலக்கியத்தை அறிமுகம் செய்கின்றனர். ஆனால் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் என்னவோ வணிக எழுத்தாளரான எண்டமுரி வீரேந்திரநாத் தான்.

இறுதியாக தமிழ் இலக்கிய எழுத்தாளர்களது பேட்டி தமிழ் மொழி பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது. அப்துல்ரகுமான், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன்,ராஜம்கிருஷ்ணன்,சு.சமுத்திரம்,பிரபஞ்சன்,பொன்னீலன்,மு.தமிழ்க்குடிமகன் போன்றவர்களது பேட்டி இடம்பெற்றுள்ளது. ஜெயகாந்தனின் பேட்டியில் அவரது பதில்களும் அதைத்தொடர்ந்து அவரது அக்கினிப்பிரவேசம் என்ற கதையும் ஜெயகாந்தன் என்ற ஆளுமையை முழுமையாக அறிய அவரது படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற‌ ஆர்வத்தை அதிகரித்தது.பொன்னீலனின் தேன்சிட்டு என்ற கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரது சிறுகதைகளை வாசிக்க வேண்டும். திராவிட இயக்கம், பெரியார், பெண் எழுத்தாளர்கள் தொடர்பான கேள்விகள் பொதுவாக அனைத்து தமிழ் எழுத்தாளர்களிடமும் கேட்கப்பட்டு, அவர்களது பார்வை வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

தென் இந்திய இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகம்.

Sunday, 4 June 2017

(66)தாலி - பிரேம்சந்த்

இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் 'மங்கள் சூத்ரா' என்ற பெயரில் எழுதிய நாவலை சுரா தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.இது பிரேம்சந்த்தின் இறுதி நாவல். குறைந்த அளவு பாத்திரப்படைப்புகளுடன் புனையப்பட்ட சிறிய நாவல்.
 நேர்மையான எழுத்தாளரான தேவகுமாரனுக்கு சந்தகுமாரன்,சாதுகுமாரன் பங்கஜா என மூன்று பிள்ளைகள். மூத்தவன் சந்தகுமாரன் தந்தையின் குணங்கள் சிறிது கூட இல்லாது பணத்தாசை பிடித்தவனாக இருக்கிறான். பூர்வீக சொத்தை முட்டாள்த்தனமாக தன் தந்தை இழந்துவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டபடியே இருக்கும் சந்தகுமாரன் தன் நண்பனுடன் சேர்ந்து அந்த சொத்தை மீண்டும் பெறுவதற்காக முயற்சி செய்கிறான். அது நேர்மையற்ற செயல் என வாதாடும் தந்தையை தன் வழிக்கு கொண்டுவர முடியாமல்ப் போக இறுதியில் அவர் சுயநினைவு அற்றவர் என்பதை கோர்ட்டில் கூறுவதன் மூலம் அந்த வழக்கை வெல்ல முடியும் எனத் திட்டம் தீட்டுகிறான்.

தேவகுமாரனோ பணம் எதனையும் பெரிதாக சம்பாதித்து வைக்கவில்லை. இருக்கிற‌ கௌரவமும் தன் மகனால் போகப் போகிறது என நினைக்கிறார். தன் மனத்திலேயே ஆழ்ந்த உரையாடலை மேற்கொள்கிறார்.பூர்வீகச் சொத்து இன்றைய மதிப்பில் இரண்டு லட்சம் ஆக உள்ள போதும் கிரிதரதாசனிடம்  பெற்றுக்கொண்ட கடனுக்காக அவன்  சொத்தை எழுதி வாங்கிய போது அதன் விலை பத்தாயிரம் தான்.அதற்காக இன்று அச்சொத்தைத் திருப்பித்தருமாறு கேட்க முடியுமா? ஆனால் அவர் மனம் சமாதானம் செய்கிறது. பூர்வீக சொத்தில் தனக்கு அனுபவிக்க உரிமை உள்ளது போல தன் மகனுக்கும் உரிமை உள்ளது. அவன் சொல்வதிலும் பிழை இல்லை என முடிவுக்கு வந்து கிரிதரதாசனிடம் சென்று வாதாடுகிறார். கோர்ட்டிற்கு போகாமல் இந்தப் பிரச்சினையை முடிக்குமாறு வாதாடுகிறார். தன் பக்கம் நியாயம்  உள்ளதாக கருதும் கிரிதரதாசனோ  அவரது பேச்சைக் கேட்கவில்லை.

வீட்டிற்கு வரும் தேவகுமாரன் மகனிடம் வழக்கை தாக்கல் செய்யுமாறு சொல்கிறார். இதுவரை தனக்கு முட்டுக்கட்டையாக இருந்த தந்தையின் ஆதரவால் உற்சாகம் அடையும் அவன் அதற்கான பணத்தை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பாக ஆலோசிக்கிறான். அதற்கும் இதுவரை எந்த நன்கொடை பெறுவதையும் கௌரவத்திற்கு பொருத்தம் அற்றது என நினைக்கும் தேவகுமாரன் தனது பாராட்டு விழாவிற்கு சம்மதிக்கிறார். பண முடிப்பை மன்னனிடம் இருந்து பெறும் போது இதை தான் ஏன் தானமாக‌ நினைக்க வேண்டும், இதுவரை தான் செய்த வேலைக்கு கிடைத்த provident fund போல தானே இப்பணம் என நினைக்கும் போது குற்ற உணர்வில் இருந்து மீள்கிறார். 
தான் நேர்மையானவன் எனத் தனக்குத் தானே நிரூபிப்பதற்காக அவர் காரணங்களைத் தேடிக் கொள்கிறார்.

Saturday, 3 June 2017

திருப்புகழ் - 6

 கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
   கப்பிய கரிமுக                      னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை                கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
   மற்பொரு திரள்புய                    மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
   மட்டவிழ் மலர்கொடு                  பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய                     முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
   அச்சது பொடிசெய்த                  அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை                   இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
   அக்கண மணமருள்                  பெருமாளே.


இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே கதிர்காமப் ...... பெருமாளே.

இறுதி வரியை நாம் கதிர்காமப் பெருமாளே என்று தான் பாடுவோம். ஆனால்  இணையத்தில் அவிநாசிப் பெருமாளே என்று தான் பாடல் உள்ளது.


காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.

இதுவரை எழுதிய பாடல்கள் எனக்கு மனப்பாடமானவை. தொடர்ந்து புதிய திருப்புகழைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்ய இருக்கிறேன்.

திருப்புகழ் - 5

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் --பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் --பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் --பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் --பெருமாள்காண்

அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் --பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் --பெருமாள்காண்

இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் --பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் --பெருமாளே.

திருப்புகழ் - 4

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

திருப்புகழ் - 3

 பத்தியால் யானுனைப்  பலகாலும்
   பற்றியே மா திருப்புகழ் பாடி   
முத்தனா மாறெனைப்   பெருவாழ்வின்   
   முத்தியே சேர்வதற்   கருள்வாயே    
உத்தமா தானசற்   குணர்நேயா   
   ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா   
வித்தகா ஞானசத்    திநிபாதா   
   வெற்றிவே லாயுதப் பெருமாளே


ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே!

இருவினையின் மதிமயங்கித்    திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற்    றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட்    டுணர்வாலே
பரவு தரிசனையை யென்றெற்    கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப்     புலவோனே
சிவனருளு முருக செம்பொற்     கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க்     கெளியோனே
கனகசபை மருவு கந்தப்     பெருமாளே.

துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத்  தெளிவோனே
செய்யகும ரேசத்  திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளி மணவாளப்  பெருமாளே.

 மாதர்வச மாயுற்           றுழல்வாரும்
   மாதவமெ ணாமற்        றிரிவாரும்
தீதகல வோதிப்            பணியாரும்
   தீநரக மீதிற்              றிகழ்வாரே
நாதவொளி யேநற்            குணசீலா
   நாரியிரு வோரைப்      புணர்வேலா
சோதிசிவ ஞானக்              குமரேசா
   தோமில் கதிர்காமப்     பெருமாளே.

Thursday, 1 June 2017

தமிழ்ப் பாடல்கள் - 1

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தான் குதித்தனன் உலகம் உய்ய. - கந்தபுராணம்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. -கந்தர் அனுபூதி


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. - கந்தரலங்காரம்

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே – யொருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.-திருமுருகாற்றுப்படை


அஞ்சுமுகந்தோன்றில் ஆறுமுகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேலென வேல்தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந்தோன்றும்
முருகா வென்றோதுவார் முன். -திருமுருகாற்றுப்படை


நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும் குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! - கந்தர் அலங்காரம்

விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே- கந்தர் அலங்காரம்

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க  குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியாரெல்லாம் - கந்தபுராணம்

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்க ளாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய -  கந்தபுராணம்

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி -  கந்தபுராணம்

உலகம்  யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகி லா விளை யாட்டுடை யார், அவர்
தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே! - கம்பராமாயணம்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
 தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் - கம்பராமாயணம்

அரியணை அனுமன் தாங்க,
    அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
    இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
    வசிட்டனே புனைந்தான் மௌலி.- கம்பராமாயணம்

நாற் குணமும் நாற்படையாம ஐம்புலனும் நல் அமைச்சர்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசாம், வேற்படையும்
வாளுமே கண்ணாம் வதனமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.  - நளவெண்பா

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. - நாலடியார்