Thursday, 14 April 2016

(53) உன்னைச் சரணடைந்தேன் - கம்பவாரிதி ஜெயராஜ்

கம்பவாரிதியால் எழுதப்பட்ட,   கம்பன் கழகம் ஆரம்பித்ததிலிருந்து யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட காலப்பகுதி வரையான ( 1950 - 1995 ) கழக வரலாறு  " உன்னைச் சரண‌டைந்தேன் - யாழில் கம்பன்" என்ற நூல்,  இந்த வருட கம்பன் விழாவில் (2016)  வெளியிடப்பட்டது. அவரது பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை விழா இறுதி நாள் அன்று வாங்கினேன். புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தொடங்கவில்லை எனினும் வாசிக்கத்தொடங்கிய பின் முழு மூச்சாக வாசித்து முடித்தேன். கம்பன் கழக செயற்பாடுகள், அதற்காக உதவியவர்கள், இடையூறு செய்தவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியுள்ளார்.

கம்பன் விழாவுடன் எனக்கு நீண்ட நாள் தொடர்பு எல்லாம் இல்லை. சிறு வயதிலே வீட்டில் இருந்த கம்பன் விழா அழைப்பிதழ் மூலமே (சிறு புத்தகம் போன்ற ) கம்பன் விழா பற்றி முதலில்  தெரிந்து கொண்டேன். அழகான அவ் அழைப்பிதழை திரும்ப திரும்ப வாசித்த நினைவு இருக்கிறது. வருடத்திற்கு ஒரு தடவை நல்லூர் முருகன் திருவிழாவின் போது மட்டுமே ஊரை விட்டு வெளியில் சென்ற அனுபவம் உள்ள எனக்கு அவ்விழாவுக்கு அழைத்துச் செல்லும் படி வீட்டில் கேட்கக் கூட துணிவு வந்ததாக நினைவில் இல்லை. எமது சொந்த இடமான சாவகச்சேரியில் கம்பவாரிதியின் பேச்சு இடம்பெற்றதாக நினைவும் இல்லை. அப்படி நடக்க இருந்த பேச்சையும் சரியான நேர முகாமைத்துவம் இல்லாமையால் நிறுத்தியதாக அவரே புத்த‌கத்தில் எழுதியுள்ளார்.

கொழும்பில் பல காலமாக கம்பன் விழா நடைபெற்று வருகின்ற போதும் நான் முதன் முதலில் 2015 விழாவின் போதே சென்றேன். சில நேரங்களில் விழா முடிந்த பின்பே எனக்கு தெரிய வரும். அப்படித் தெரிந்து இருந்தாலும் கூட்டிச் செல்ல துணைக்கு ஆள் கிடைக்காது , அதனால் போக தயக்கம். ஆனால் இப்போது யாரையும் எதிர்பார்க்காமல் தனியவே போகப் பழகி விட்டேன். இரவு 9.30 இற்கு விழா முடிந்தாலும் auto  ஒன்றைப் பிடித்து வீடு வந்து சேர தைரியம் வந்துவிட்டதால் விழாவை நன்றாக ரசிக்க முடிகிறது.  கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் கம்பவாரிதியின் பேச்சுகளையும் ஒன்றுவிடாமல் கேட்பேன். நான் தமிழ்ப் பாடல்களை  நன்றாக ரசித்துப் படிக்க கம்பன் விழாவும் ஒரு காரணமாக இருக்கிறது.  


    இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இறுதிப் பகுதியாகும்.  தன்னை உருவாக்கிய ஆசிரியர்களைப் பற்றி அவர் எழுதியவை எல்லோரும் வாசிக்க வேண்டியவை. சிவராமலிங்கம்  ஆசிரியர், வித்துவான் வேலன் , வித்துவான் ஆறுமுகம்  போன்ற சிறந்த ஆளுமை மிக்க மனிதர்களை அறிய முடிந்தது. அம்மூவரும் உரையாடும் போது அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பு கம்பவாரிதி ஐயாவுக்கு கிடைத்திருக்கிறது. அது உண்மையிலேயே பெரும் பேறு தான். இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் , நாடாக நடிகர் அருமை நாயகம் , புதுவை போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் சுவையானவை.


கம்பவாரிதியின் குருநாதரான பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களுடனான உறவை அழகாகப் பதிவு செய்துள்ளார்.அவரது குடும்ப அங்கத்தவர்கள் பாசமாக பழகியிருக்கிறார்கள். வானொலியில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களது குரலைக் கேட்டு, அதன் பின் அவரைக் கண்டடைந்து அவர் ஆசி பெற்றது  , அவரைப் போல குடுமி போட்டது , அவரது திருவடிகளைப் பெற்று வந்தது போன்ற விடயங்களைப் பதிவு செய்துள்ளார்.  கம்பன் அடிப்பொடி பற்றிய பகிர்வு மூலம்  காரைக்குடி கம்பன் விழா பற்றி அறிய முடிந்தது. பேராசிரியர் இராதாகிருஷ்ணன் , கம்பன் அடிப்பொடி போன்ற சுய நலமற்ற சிற‌ந்த மனிதர்களை அறிய முடிந்ததே மகிழ்ச்சியாக இருந்தது.

கம்பன் கழகத்தைப் பற்றி பதிவுகளில் கழகத்துக்கு துணையாகப் பாடுபட்டவர்கள், எதிர்த்தரப்பினர் என்று பெரிய பட்டியல் புத்தகத்தில் உண்டு.  எத்தனையோ பேர் கழகத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதற்கு அதிகமாக பகையுடனும் பலர் செயற்பட்டிருக்கிறார்கள். பகைமை கொண்டவர்களில் பொன்.சுந்தரலிங்கம் அவர்களை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு தனிப்பட்ட ரீதியில் பொன்.சுந்தரலிங்கத்தின் பாடல்கள் பிடிக்கும். கம்பவாரிதி எப்போதும் ஒருவரது குறையையோ/ நிறையையோ  வெளிப்படையாக   சொல்பவர். அவரது உரைகளின் போது சில நேரங்களில் இது வெளிப்படும். நிறையை எல்லோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். குறையை அப்படி யாராவது ஏற்றுக் கொள்வார்களா தெரியவில்லை.

 ஆரியனான ராமனுக்கு எடுக்கப்படும் விழாவிற்கு எதற்காக செல்ல வேண்டும் என்றும்  இராமாயணமே ஒரு பொய்க் கதை எங்களுக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்றும் கம்பன் விழாவிற்கு எதிரானவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். அவர்கள் நிச்சயமாக எந்த ஒரு கம்பன் விழா நிகழ்ச்சியையும் பார்க்காதவர்கள். நான் கம்பன் விழாவை கம்பனின் தமிழுக்கான  விழாவாகவே காண்கிறேன். அங்கு இராவணனின் பெருமையும் பேசப்படுகிறது. ராமனின்  சிறுமையும் பேசப்படுகிறது. இராமாயணம் உண்மையாக இருந்தால் என்ன, பொய்யாக இருந்தால் என்ன? அழகான கம்பனின் பாடல்களை இழக்கவே முடியாது.  ராமனின் கதை மூலம் எத்தனையோ விழுமியங்கள் பேசப்படுகின்றன. நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.


இலங்கை கம்பன் கழகத்தை நேர முகாமைத்துவம், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு, அடுத்த தலைமுறையை உருவாக்கியமை போன்ற விடயங்களுக்காக எல்லோரும் பாராட்டுவார்கள். கம்பன் விழா மேடையே அழகாக இருக்கும். அழைப்பிதழுக்கு தனி மரியாதை உண்டு. தற்போது இலங்கையில் தமிழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை சரியாக செய்வது என்னைப் பொறுத்த வரை கம்பன் கழகம் மட்டுமே. கம்பன் விழா காலை நிகழ்ச்சிகள் கூடிய இலக்கிய தரம் உள்ளதாக அமைவதுண்டு. இலக்கியம் மட்டுமல்லாது இசை , நாட்டிய நிகழ்ச்சியும் தனியாக நடைபெறும்.  நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற  கழகத்தாரின் அயராத உழைப்பே காரணம். பல நல்லவர்கள் அதற்கு உதவுகிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. கழகத்தை உண்மையாக வளர்த்தவர்கள் ஒதுங்கி நிற்க, கழக வளர்ச்சியுடன் தொடர்பற்ற பலர், கழகம் வளர தாமே காரணம் என சொல்லித்திரிவதால், கழகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை தொடர்புடைய ஒருவர் என்ற வகையில், உண்மையை எழுத வேண்டியிருந்ததாலேயே தான் இந்த நூலை எழுதியதாக கம்பவாரிதி  குறிப்பிட்டுள்ளார்.

Sunday, 10 April 2016

(52) திருவரங்கன் உலா

  சுல்தானிய படையெடுப்புக் காலத்தில், அவர்களிடம் இருந்து காப்பாற்ற  ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரை வேறு இடத்திற்கு மறைத்து எடுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 40 வருடங்கள் அஞ்ஞாத வாசம் இருந்த ரங்கநாதரின் உலா பற்றி  ஸ்ரீவேணுகோபாலன்  எழுதிய வரலாற்று நாவலே "திருவரங்கன் உலா".  


முகம்மது பின் துக்ளக்  என பின்னாளில் பெயர் பெற்ற உலுக்கான் , டில்லி சுல்த்தானான கியாசுத்தீன் துக்ளக்கின் மகன். ஸ்ரீரங்கம் கோயிலைக் கொள்ளையிட முற்பட்டான். இக்கொள்ளையில் இருந்து அரங்கன் சிலை , நகைகளைக் காக்க ஒரு பகுதி மக்கள் அரங்கனைத் தம்முடன் எடுத்து செல்கின்றனர். ஒரு பகுதி மக்கள் கோயில் மதிலை அரனாக வைத்து சண்டையிடுகின்றனர். மூலவர் சிலைக்கு முன்னால் கல்லால் தூண் எழுப்பி மறைத்துவிடுகின்றனர்.அச்சண்டை தோல்வியில் முடிகிறது.  


ஸ்ரீரங்கத்தில் ஒரு படையை நிறுத்தி அரங்க‌ன் சிலையைத்தேடுமாறு கூறி சுல்தானியர் படை மதுரை நோக்கி செல்கிறது. மதுரையை சுல்தானியர் முற்றுகை இட்டதால் அழகர் கோயிலில் இருந்த அரங்கன் சிலைக்கு பாதிப்பு என எண்ணி அச்சிலையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தென் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர். அங்கிருந்து சேர நாடு சென்று கோழிக்கோடு (Calicut)  வழியாக மேல்க் கோட்டை , சத்தியமங்கலம் செல்கின்றனர்.  இப் பயணத்தின் போது அரங்கனின் நகைககள் களவாடப்படுகின்றது. அரங்கன் மேல் கொண்ட அன்பால்,  தமது குடும்பங்களைக்  பிரிந்து அரங்கனுடன் மக்கள் செல்கின்றனர். எப்படியாவது அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வரவேண்டும் எனப் பாடுபடுகின்றனர்.


இக் கதையில் முக்கிய கதாபாத்திரமாக குலசேகரன் இருக்கிறான். அரங்கனை சுல்தானியர் கண்ணில் படாமல் எடுத்துச்செல்வதிலும் சுல்தானியர்களுக்கு எதிராக சண்டை செய்வதிலும் முன் நிற்கிறான். இறுதியில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன் துணையுடன் நடந்த சுல்தானியர்களுக்கு எதிரான போரில் இறந்து விடுகிறான்.

முதலில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன்,  சண்டையால் இழப்பு மட்டுமே வரும் என எண்ணி சுல்தானியர்களுக்கு எதிராகச் சண்டையிடாது கப்பம் கட்டி ஆட்சி செய்தான்.  பின் சுல்தானியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டான்.  முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வீர வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டான். இதன் பிறகு வல்லாளனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தனர். ( இபன் பதூதா தனது நூலில் இச் செய்தியைக்  குறிப்பிட்டுளார்)   மன்னன் மதுரை சுல்தான்களால் பிடிபட்டு கொல்லப்பட்டதால், போரின் முடிவு துக்ககரமாக மாறியது. வீர வல்லாளன் இறப்பின் பின் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு வரலாம் என்ற‌ நம்பிக்கை போய்விடுகிறது.
சுல்த்தானியர் அரங்கன் சிலையைத் தேடி  அலைந்தமைக்கு இதற்கு முன்னைய சுல்தானிய படையெடுப்பில் இச்சிலை கொள்ளையடிக்கப்பட்டமை ஒரு காரணமாக இருந்தது. இதனுடன் தொடர்புடையதே துலுக்க நாச்சியார் கதை.


சுல்தான் அலாவுதீன் கில்சி டில்லியில் ஆட்சி செய்ய தொடங்கியதும் தனது தளபதி மாலிக் காபூரை அழைத்து தெற்கு நாடுகளுக்கு படையெடுப்பை மேற்கொள்ளுமாறு சொன்னார். மாலக்காபூர் படை கார்த்திகை மாதம் டில்லியில் இருந்து புறப்பட்டு சித்திரை மாதம் வீரதாவளப் பட்டினத்தை அடைந்தது. பாண்டிய அரசர் சண்டை போடாமல் ஓடிச்செல்ல அவரைத்துரத்தி சென்ற படைகள் வழியில் அகப்பட்ட நகரங்களைக் கொள்ளை அடித்து சென்றனர். காஞ்சிபுரம், கண்ணனூர் , ஸ்ரீரங்கம் என்பன சூறையாடப்பட்டன. கடைசியில் மதுரை சென்ற போது அங்கு இருந்த பாண்டிய  மன்னர் விக்கிரம பாண்டியர் தடுத்து நிறுத்திவிட்டார். திரும்பும் போது  சூறையாடப்பட்ட தென்னாட்டின் திரவியங்கள்  எல்லாம் எடுத்து செல்லப்பட்டன. பொருட்களை அலாவுத்தீன் டில்லி பிரபுக்களுக்கு பிரித்து கொடுத்தார்.  திருவரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரங்கன் சிலை அப்துல்லா உசேன் பாதுஷா என்பவரிடம் செல்கிறது.

அவரது பெண் சுரதாணி  (கிழக்கிந்திய கம்பனி காலத்தில் செஞ்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் எழுதிய கர் நாடக ராஜாக்களின் சவிஸ்தார சரித்திரம் என்ற நூலில் இப்பெயர் காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ) கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பார்வையிட , அங்கிருந்த அரங்கன் சிலை அவளை வசீகரித்துக் கொள்கிறது. ஆண்டாளை ஆட்கொண்டவன் அல்லவா? . சுரதாணி அச்சிலையை எடுத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். மறுபுறம் அரங்கன் மேல் மாறாத காதல் கொண்ட மக்கள் கொள்ளையிட்ட படையின் பின்னாலேயே சென்று அரங்கன் சிலை எங்கு உள்ளது என அறிகின்றனர். பாதுஷா முன்னால்  'ஜக்கிந்தி' நடனம் ஆடி அவரை மகிழ்விக்கின்றனர்.  பல வெகுமதிகளைக் கொடுத்த பாதுஷாவிடம் அதை மறுத்து அரங்கனின் சிலையைத்தரும்படி கேட்கின்றனர். அரங்கனின் சிலையை சுரதாணிக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு திருவரங்கம் வருகின்றனர். 


அரங்கன் சிலை இ
ல்லாததைக்கண்டு சுரதாணி துடித்துப் போகிறாள். ஒரு விக்கிரகத்திற்காக மகள் துடிப்பதைப் பார்த்து பாதுஷா ஆச்சரியப்படுகிறார். மகளுக்காக ஒரு சிறுபடையை அனுப்பி அவ்விக்கிரகத்தை மீண்டும் கொண்டு வருமாறு அனுப்புகிறார். சுரதாணியும் அப்படையுடன்திருவரங்கம் வருகிறாள். டில்லிப் டை பின் தொடர்ந்து வருவதை அறிந்த மக்கள் அரங்கன் விக்கிரகத்துடன் ஸ்ரீரங்கம் செல்லாது வேறு வழியில் சென்றனர். திருவரங்கத்தில் விக்கிரகத்தை காணாத சுரதாணி அங்கேயே மரணம் அடைகிறாள். சுரதாணி தான்  துலுக்க நாச்சியார் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் வட கீழ் மூலையில் சுரதாணியின் உருவம் சித்திரமாக உள்ளது. தினமும் காலையில் கோதுமை ரொட்டி , மதுரப்பருப்பும் படைக்கும் வழக்கம் இன்று வரை  தொடர்கிறது.


அரங்கன் மேல் பக்தர்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என்று கதையை வாசிக்கும் போதே  புல்லரிக்கும். மூன்று கொடவர்கள் அரங்கன் சிலையுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மேல்க் கோட்டை செல்வதுடன் கதை முடிகிறது. இச்சிலை பின் திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  இது தொடர்பான கதையை இதன் இரண்டாம் பாகமான 'மதுரா விஜயம்' என்ற நூலில் வாசிக்க முடியும் என நினைக்கிறேன். அரங்கனை கண்ணார தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை இந்த நூல் ஏற்படுத்திவிட்டது.